ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 3 தேதி ‘பாலஸ்தீன் நடவடிக்கை குழு’ (palastine action group)நடத்திய “March for humanity” பேரணி ஆஸ்திரேலியா அரசை நடுங்க வைத்துள்ளது.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் காசா மக்களின் துயரங்களை காணாமல் இருக்க வாய்ப்பில்லை. ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல்வற்றி, எலும்பும் தோலுமாக குழந்தைகளை பார்க்கும்போது இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவம் எவ்வளவு கொடூரமானது என்பதை உணர முடியும். நெஞ்சை உலுக்கும் இந்த காணொளிகளை பார்ப்பவர்கள் அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட மாட்டார்கள்.
உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மிக பழைய புகைப்படம் ஒன்று நினைவில் வருகிறது. வறுமையில் உடல்வற்றிய ஆப்பிரிக்க குழந்தையை உணவாக்க காத்திருக்கும் பிணந்தின்னி கழுகு. இந்த புகைப்படம் 1993 பஞ்சத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட சூடானில், கெவின் கார்டர் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்திருந்தார். இது உலக அளவில் ஆப்பிரிக்காவில் வறுமையின் பக்கத்தை படம் பிடித்து காட்டியது. இதற்கு காரணமும் ஏகாதிபத்தியம் தான்.
இதே போன்ற நிலைமையை தான் காசாவில் ஏற்படுத்தியுள்ளன இரண்டு பிணந்தின்னிக் கழுகுகளான அமெரிக்காவும் இஸ்ரேலும். 66,000 பேர் போரினால் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்கள். மீதமிருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்காமல் கொன்றுக் கொண்டிருக்கிறது இஸ்ரேல் அரசு. ஆயிரக்கணக்கான குழந்தைகள் மரணத்தின் விளிம்பில் இருக்கின்றார்கள். அப்படி இருந்தும் இன வெறியர்களின் போர்வெறி அடங்கவில்லை. உலகம் முழுவதும் மக்கள் எதிர்ப்பு இருந்தாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் நர வேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலின் போர்வெறியை ஆதரிக்கும் நாடுகளும் உண்டு. அமெரிக்கா பில்லியன் டாலர் இராணுவ நிதி உதவி அளிப்பதுடன் ஐநா மன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை ஓட்டோ பவரை பயன்படுத்திக் கொண்டு தடுக்கிறது. கிட்டத்தட்ட இந்த இன அழிப்பு போரை சேர்ந்தே நடத்துகிறது எனலாம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றன.
இந்தியா, பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள்கென்யா, உகாண்டா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகள் பகுதியளவில் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கின்றன.
பாசிச மோடி ஆளும் இந்தியாவில் இஸ்ரேல் இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் இந்துமதவெறி குண்டர் படைகளால் ஒடுக்கப்படுகின்றன. காவல்துறையும் இந்த கும்பலுக்கு பக்கபலமாய் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பாசிச கோமாளிகளால் ஆளப்படும் நாடுகளில் மக்கள் போராட்டங்கள் அரசு வன்முறையால் ஒடுக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். காசாவில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் உறுதியாக நிற்கிறார்கள்.
அப்படியான மாபெரும் போராட்டம் தான் ஆஸ்திரேலியாவின் மக்களால் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசு இஸ்ரேல் இனப் படுகொலையாளர்கள் பக்கம் நின்றாலும் மக்கள் பாதிக்கப்பட்ட காசா பக்கமே நிற்கிறார்கள் என்பதை இப்போராட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார்கள்.
Hundreds of thousands of people marched across the Sydney Harbour Bridge to protest Israel’s genocide on Gaza.
This was the first time the Palestine Action Group Sydney has held its protest on the iconic bridge. pic.twitter.com/cwzXAyGeRZ
— AJ+ (@ajplus) August 8, 2025
சிட்னி நகரில் துறைமுக பாலத்தின் குறுக்கே பாலஸ்தீனத்தை ஆதரித்து காசா மக்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியிருந்த மக்கள் மழையிலும் கூடியிருந்தது இஸ்ரேல் ஆதரவு ஆஸ்திரேலியா அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி 90 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக தெரிவித்தனர். பேரணி ஏற்பாட்டாளர்களான பாலஸ்தீன நடவடிக்கை குழுவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் “ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டதாக போலீசார் தங்களுக்கு தெரிவித்தனர், ஆனால் குழு அந்த எண்ணிக்கையை மூன்று லட்சம் நெருங்கி இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது” என்றார்.
படிக்க:
♦ காசாவை நோக்கிய உலகளாவிய மக்கள் பேரணி வெல்லட்டும்!
♦ காசாவில் சாவின் விளிம்பில் 14,000 குழந்தைகள்!
உதவி போலீஸ் கமிஷனர் ஆடம் ஜான்சன் தன்னுடைய பணி காலத்தில் கண்ட மிகப்பெரிய போராட்டம் இது என்று கூறினார். 2003 ஆம் ஆண்டு ஈரான் போர் எதிர்ப்பு போராட்டத்தை விட பெரிய போராட்டம் என்கிறார்கள் பேரணியை ஒருங்கிணைத்தவர்கள்.
சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி நிறுவனம் “3 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த போராட்டம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் திரளின் மிகப்பெரிய போராட்டம் இஸ்ரேல் ஆதரவு ஆஸ்திரேலியா அரசையும் நிலைகுலைய செய்துள்ளது. ஏற்கனவே, அடுத்த மாதம் நடைபெறும் ஐநா பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் கனடா நிபந்தனையுடன் பாலஸ்தீன் அரசை அங்கீகரிக்க உறுதியளித்துள்ளனர். இப்போது நடந்த மக்கள் போராட்டத்தின் காரணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மீதும் அழுத்தம் அதிகரித்துள்ளது.
கடந்த திங்களன்று சிட்னி துறைமுக மக்கள் போராட்டத்திற்குப் பிறகு அல்பானீஸ் எந்த நாட்டுப் பக்கமும் நிற்காத நிலையை எடுத்துள்ளார். இது ஒரு வகையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே அமையும். ஏனென்றால் கடந்த காலங்களில் இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரித்து வந்த அல்பானீஸை மக்கள் போராட்டம் பின்வாங்க வைத்துள்ளது எனலாம்.
ஏகாதிபத்தியமோ, பாசிசக் கும்பலோ இருக்கின்ற விதிமுறைகளையோ, ஏற்றுக் கொண்ட ஒப்பந்தத்தையோ மதிக்காமல் போகலாம். ஆனால் மக்கள் போராட்டத்தின் முன் பணிந்து போக வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் மக்கள் போராட்டம் நிரூபித்துள்ளது.
- சுவாதி
பாலஸ்தீன அரசை அங்கீகரி ஆஸ்திரேலியாவை அசைத்த சிட்னி ஹேர்பர் போராட்டம்
அமெரிக்கா இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயத்தை பிணம் தின்னி கழுகுகள் அமெரிக்கா இஸ்ரேல் சித்தரிக்கப்பட்டு
3 லட்சம் பேர் கூடி சிட்னி போராட்டத்தில் உலகத்தில் இதுவரை நடந்திராத ஒரு மிகப்பெரிய போராட்டத்தை கட்டியமைத்து ஆஸ்திரேலியா அரசை பணிய வைத்துள்ளது என்ற இந்த கட்டுரையை மிகச் சிறப்பாக வடிவமைத்த ஆசிரியர் சுவாதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்