
தஞ்சாவூர், டிசம்பர்-23.
100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை எடுத்தது, மானிய நிதியை குறைத்தது உள்ளிட்ட கோரிக்கைகளில் ஒன்றிய அரசை கண்டித்து தாளாண்மை உழவர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.
ஒன்றிய மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பெயரை எடுத்தது, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை குறைத்து மாநிலங்களுக்கு நிதிச் சுமையை அதிகப்படுத்தியதை கண்டித்தும் இன்று (டிசம்பர் 23) மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தாளாண்மை உழவர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் இயக்கத்தின் தலைவர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் துவக்கி வைத்தார். மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய மோடி அரசு 100 நாள் வேலைத்திட்டத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மகாத்மா காந்தி பெயரை எடுத்து விட்டு வளர்ச்சி அடைந்த பாரதத்தின் கிராமப்புற வேலை மற்றும் வாழ்வாதார உத்திரவாத திட்டம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதை தாளாண்மை உழவர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இப்போதைய சட்டத்தில் நூறு நாள் வேலைக்கான மொத்த நிதியையும் ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. ஆனால் மாற்றிய சட்டத்தின் படி மொத்த செலவில் ஒன்றிய அரசு அறுபது சதவீதம் என்றும்,மாநில அரசு 40 சதவீதம் மானியத்தை குறைத்து மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரித்து வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றது. தமிழ்நாட்டிற்கு மட்டும் சுமார் 4500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.
இச்சட்டத்தின் படி கிராமம் என்பது எது? என்ன மாதிரியான வேலைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்? ஒரு மாநிலத்தின் எந்தெந்த பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என அனைத்தையும் ஒன்றிய அரசே தீர்மானிக்கும்.
படிக்க:
♦ பொருளாதார ஆய்வறிக்கை 2021-22 (Economic Survey):
♦ தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2022-23
இதன் மூலம் அனைத்து கிராம ஏழைகளுக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதை தற்போதைய புதிய சட்டம் மறுக்கிறது. மேலும் ஒன்றிய அரசு இத்திட்டத்தின் மொத்த அதிகாரத்தையும் எடுத்துக் கொள்கிறது, இது மாநில உரிமைகளுக்கு எதிரான கூட்டாட்சி கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கையாகும்.
ஒன்றிய அரசின் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரு முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வரிச் சலுகை,ஊக்கத்தொகை என வாரி கொடுத்து விட்டு சுமார் 30 லட்சம் கோடி கடனையும் தள்ளுபடி செய்திருக்கின்றது.
ஆனால் அன்றாடம் வயிற்று பிழைப்புக்காக அல்லல்படும் ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்களுடைய வயிற்றில் மண்ணை அள்ளி போடுகிறது ஒன்றிய அரசு.இது மக்கள் மீதான கொடிய பொருளாதார பயங்கரவாத தாக்குதலாகும்.
எனவே ஒன்றிய மோடி அரசு புதிய சட்டத்தை திரும்ப பெற்று பழைய மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்திற்கு கூடுதல் நிதி அளித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் விசிக மைய மாவட்ட செயலாளர் கோ.ஜெயசங்கர், நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.நாராயணன், சி பி எம் எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர், ஜனநாயக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.ஜோதிவேல், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலாளர் ராவணன், தாளாண்மை உழவர் இயக்க மாவட்ட செயலாளர் கோ.கல்யாணசுந்தரம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர். அழகு. தியாகராஜன், பொறியாளர் ஜோ.ஜான்கென்னடி, என்டிஎல்எப் மாவட்ட செயலாளர் த.தாமஸ் மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் க.தமிழ்முதல்வன், அ.யோகராஜ், தேவா, எழுத்தாளர் சாம்பான், ஆர்.லெட்சுமணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
முடிவில் இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.
தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி






