மிழ்நாட்டில் சமூக அமைதியை குலைக்கும் விதமாக பொய் பேசிய மதுரை ஆதீனத்தை காப்பாற்றும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ள கருத்து ஆபத்தானது. ஆபத்தை விளைவிக்கும் பொய் பேசுபவர்களுக்கு ஆதரவானதும் கூட.

இந்தியாவில் ஆர். எஸ். எஸ் – பாஜக உருவாக்கிய மதக் கலவரங்களுக்கு பின்னால் ஆபத்தான பொய் மட்டுமே காரணமாக இருக்கும். குஜராத் கலவரம், முசாபர் நகர் கலவரம் உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வகையில் தான் மதுரை ஆதீனத்தின் ஆபத்தான பொய்யையும் சேர்க்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் வாழ்வு என்பது இஸ்லாமிய வெறுப்பு அரசியலால் சூழப்பட்டது. இந்த மத வெறுப்பை பேசாமல் அவர்களால் எந்த மாநிலத்திலும் அரசின் செல்வாக்கை பெற்றிருக்க முடியாது. அதேநேரம் வட மாநிலங்களைப் போல் தென் மாநிலங்களில் அவர்களின் வெறுப்பு அரசியல் அவ்வளவாய் எடுபடவில்லை.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பார்ப்பன எதிர்ப்பு மரபும் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை இடதுசாரி முற்போக்கு அமைப்புகளின் கருத்து பிரச்சாரங்களினால் கால் பதிக்க முடியாமல் தவித்து வருகிறது. ஏ 1 குற்றவாளி ஜெயாவின் இறப்பை பயன்படுத்திக் கொண்டு அதிமுகவை விழுங்கியும், பாமக உள்ள சாதி வெறியர்களை தன் வலைக்குள் வீழ்த்தியும் வளர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மறுபுறம் தனது ‘பாரம்பரிய’ மதவெறுப்பு அரசியலையும் செய்யத் தயங்காமல் இல்லை. பாஜகவின் தலைவராக எல்.முருகன் இருந்த நேரத்தில் வேல் யாத்திரை நடத்திய பாஜக தற்போது மதுரையை மையமாக வைத்து தனது அரசியலை தீவிரப்படுத்தி வருகிறது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடுகளை பலி கொடுப்பதன் மூலம் இந்து தெய்வங்களை இந்து மதத்தையும் அவமதிப்பதாக கூறி தனது கீழ்த்தரமான மதவெறி அரசியலை தொடங்கியது. இதனை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாகியதுடன் ‘இந்துக்களே குன்றம் காக்க மதுரையில் ஒன்று கூடுங்கள்’ என மக்களை மதவெறி அரசியலுக்குள் இழுக்க முயன்றது. மதுரையில் முருகன் மாநாடு நடத்தியது.  அமித்ஷாவை  அழைத்து பாஜக மத வெறியர்களை உசுப்பேத்தியது. இதன் தொடர்ச்சியாகத்தான் மதுரை ஆதீனத்தின் பேச்சையும் இணைத்து பார்க்க வேண்டும்.

கடந்த மே 5 ஆம் தேதி சென்னையில் கல்வி கொள்ளையன் பச்சைமுத்துவின்  SRM பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி தன்னை கொல்ல முயற்சித்ததாகவும் அந்த காரில் தன்னை கொல்ல வந்தவர்கள் குல்லாவும் நீண்ட தாடியும் வைத்திருந்ததாகவும் இது பாகிஸ்தான் நாட்டின் சதி என்றும் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் சங்பரிவார் இணைய கும்பலால் வைரலானது. இதனை அறிந்து மதுரை ஆதீனத்தின் குற்றச்சாட்டை ஆய்வு செய்த காவல்துறை அவர் சொல்வது போல் நடக்கவில்லை என்றும் ஆதீனத்தின் கார் குறுக்கு சாலையை கடக்கும் போது அதிர்ச்சியில்  மற்றொரு கார் நின்றதும் CCTV கேமராவில் பதிவாகி இருந்து. மேலும் அந்த காரில் உள்ளவர்களை மதுரை ஆதீனம் பார்ப்பதற்கான வாய்ப்பு அங்கு இல்லை என்பதை உண்மை.

மதுரை ஆதீனத்தின் மீது நீதிபதிகளின் கரிசனம் ஆபத்தானது!

ஆனால் திட்டமிட்டு மத கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடனேயே இப்படியான பொய்யை மீடியாவில் தெரிவித்து இருந்தார். அவர் பேட்டி அளித்த மறுகணமே “மதுரை ஆதீனம் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது”‌ என்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். மற்ற பாஜக தலைவர்களும் இந்த பிரச்சனையை ஊதி பெருக்கினர். இவை அனைத்தும் கலவரத்திற்கான ஏற்பாடுகளே. இதை அறிந்து தான் தமிழக காவல்துறை நான்கு பிரிவுகளின் கீழ் மதுரை ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்தது. போலீசாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் போக்கு காட்டிய ஆதீனத்திற்கு சாதகமாக 60 வயதை தாண்டியவர் என வழக்கில் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் போலீசாரே நேரில் சென்று விசாரிக்க உத்தரவும் இடப்பட்டது. நீதிபதிகளுக்கு வயது முதிர்ந்தோர் மீது எவ்வளவு கரிசனம் என்று எண்ணி விட வேண்டாம்.

பழங்குடி மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்தவர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. இவரை பொய் வழக்கில் கைது செய்த பாசிச மோடி கும்பல் சிறையில் சித்திரவதைகளை கொடுத்தது. 84 வயதானவர் தனக்குள்ள உடல்நல பிரச்சனையால் (நடுக்கு வாதம்) பலமுறை ஜாமீன் கேட்டும் கொடுக்காமல் நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்தது. கடைசியில் டம்ளரில் உள்ள தண்ணீரை உறிஞ்சி குடிக்க ஸ்ட்ரா கேட்டார். அதைக் கூட கொடுக்காமல் அவரை தாகத்தில் சாக அனுமதித்த நீதிமன்றம் தான் 60 வயதான சொகுசான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் மதுரை ஆதீனத்திற்கு சலுகை வழங்கியது. ஸ்டேன் ஸ்வாமி ஒரு உதாரணம் தான்.

மேலும் படிக்க: 

 மதுரை ஆதீனம்: குற்றச் செயலும் நிர்வாகத் துறையின் விசாரணை கேவலங்களும்!

♦ தருமபுரம் ஆதீனம் இறைவனுக்குச் சமமானவரா?

ஏற்கனவே மதுரை ஆதீனம் முன் ஜாமீன் பெற்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. காவல்துறை தரப்பில் மதுரை ஆதீனம் சட்ட ஒழுங்கை பாதிக்கும் விதமாக சர்ச்சையாக பேசியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை ஆதீனம் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று கூறினர். ஆனால் நீதிமன்றமோ மதுரை ஆதீனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவை அக்டோபர் 27 வரை  நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த விசாரணையில் நீதிபதி சதீஷ்குமார் கூறிய கருத்துதான் ஆபத்தானது. “நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது மதுரை ஆதீனம் பேசியதாக அரசியல் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்து பெரிதுபடுத்தி உள்ளது காவல்துறை. அவர் பேசியதை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அப்படியே முடிந்து போயிருக்கும்” என தெரிவித்துள்ளார்.

கருத்து சுதந்திரத்தை முடக்கி தனக்கு எதிராக பேசியவர்களை எல்லாம் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறது பாசிச மோடி அரசு. இவையெல்லாம் நீதிபதி கண்ணுக்கு தெரிவதில்லை. இவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதும் இல்லை. குற்றம் நிரூபிக்கப்படாமல் 5 வருடங்களாக உமர்காலித் சிறை வைக்கப்பட்டுள்ளார். இவரைப் போன்று பலரும் சிறையில் உள்ளனர். இதைப் பற்றி எல்லாம் நீதிபதிகளுக்கு கவலை இல்லை. மாறாக கலவரம் நடக்க வேண்டும் என்ற திட்டத்தோடு பேசிய மதுரை ஆதீனத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டுமாம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் ஆர்எஸ்எஸ்- பாஜகவின் காலடியில் விழுந்து கிடப்பது தெளிவாக தெரிகிறது. தர்மஸ்தலா, ஜக்கி வாசுதேவ், யதிநரசிங்கானந் மற்றும் ஆதீனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதும் உறுதியாகி உள்ளது. இவர்களின் அடித்தளத்தை நொறுக்குவது அவசியமாகியுள்ளது.   இவர்கள் குறிப்பிட்ட மடங்கள் அவற்றின் சொத்துக்கள் மூலமே தங்களை விளம்பரம் படுத்திக் கொள்கிறார்கள். இவை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலும் மக்களின் கண்காணிப்பிலும் கொண்டு வரப்பட வேண்டும். தங்களை துறவிகளாக அறிவித்துக் கொள்பவர்களை காவியுடையுடன் யாசகம் கேட்டு பிழைத்துக் கொள் என துரத்த வேண்டும். மதவெறி பேச்சுக்களுக்கு இடமளிக்காமல் மக்கள் மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதற்கான வேகத்தை அதிகப்படுத்துவோம்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here