கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 28) அன்று டெல்லி விமான நிலையத்தில் ஒரு மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயம் அடைந்துள்ளார். இந்த மேற்கூரை இடிந்து விழுவதற்கு மேற்கூரை பராமரிப்பு பணிகள் சரிவர செய்யப்படாததே காரணம்.
டெல்லி விமான நிலையத்தை GMR Airports Infrastructure Limited குழுமம் பராமரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த GMR குழுமத்தில் இருந்து தொடர்ச்சியாக பிஜேபிக்கு மறைமுக வழியில் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, மோசமாக செயலாற்றும் GMR நிறுவனத்திற்கு விமான நிலையத்தை பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை பாஜக கொடுத்துள்ளது என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் (Prudent Electoral Trust) என்ற ஒரு தேர்தல் அறக்கட்டளைக்கு GMR குழுமம் பல கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளது. குறிப்பாக சொல்வதானால், டெல்லி விமான நிலையத்தில் ஒரு முனையத்தை மோடி துவக்கிவைத்த ஒரு மாதத்தில் ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட்-ல் இருந்து பாஜக -க்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரூடென்ட் அறக்கட்டளை 2013ம் ஆண்டு நிறுவப்பட்டலிருந்து இந்த ஆண்டு மார்ச் வரை $272 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. அதில் சுமார் 75% பாஜகவுக்கு வழங்கப்பட்டது.
உதாரணமாக, 2017-18 நிதியாண்டில் ரூ.154.30 கோடியும்
2018-19 ஆம் ஆண்டில் ரூ.67.25 கோடியும் ப்ரூடென்ட் அறக்கட்டளை பாஜகவிற்கு நன்கொடை அளித்துள்ளது.
இந்த அறக்கட்டளை 2019-20 ஆம் ஆண்டில் பிஜேபிக்கு
ரூ 217.75 கோடி நன்கொடை அளித்துள்ளது.
2021-2022 ல் ப்ரூடென்ட்டின் ரூ.336.509 கோடி நிதியானது நன்கொடையாக BJPக்கு சென்றது. 2022-23 ஆம் ஆண்டிலும் ப்ரூடென்ட் அறக்கட்டளையிடம் இருந்து ரூ.360 கோடி நிதியை பாஜக பெற்றுள்ளது.
அவ்வளவு ஏன், ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் அறக்கட்டளையானது பாஜகவின் முக்கியமான நன்கொடையாளராக உள்ளதாக பாஜக -வே 2019 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் என்ற அறக்கட்டளைக்கு ஜிஎம்ஆர் குழுமம், பார்தி ஏர்டெல், டிஎல்எஃப் மற்றும் அப்பல்லோ டயர்ஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து பணம் வந்துள்ளது.
இந்த நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பாஜக நிதி வாங்கினால், ஊழல் செய்வதற்காகத்தான் இந்த நிறுவனங்களிடமிருந்து பாஜக பணம் பெற்றுள்ளது என்பது மக்களுக்கு தெரிய வந்துவிடும். அப்படி வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு அறக்கட்டளை மூலமாக பாஜக இந்த நிறுவனங்களிடமிருந்து நன்கொடையை பெற்றுள்ளது என்பது இப்பொழுது மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
உத்தமர் மோடியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் இடிந்து விழுகின்றன. ஒரு சிறிய அளவிற்கு மழை அதிகமாக பெய்தாலே பாஜக ஆட்சியில் கட்டப்பட்ட சுரங்கம் நீரால் நிரம்பி வழிகிறது. தகுதியில்லாத நிறுவனத்திற்கு சுரங்கம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பாஜக அரசு கொடுத்ததால் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கம் கட்டும் பொழுதே சுரங்கம் இடிந்து விழுந்தது.
படிக்க: குஜராத் தொங்கு பாலம் விபத்து பாஜக அரசின் அலட்சியமே காரணம்!
அயோத்தி ராமனின் பெயரைச் சொல்லிச் சொல்லியே ஆட்சியைப் பிடித்த பாஜக, அந்த அயோத்தி ராமனுக்கு கட்டிய கோயிலைக் கூட ஒழுங்காக கட்டவில்லை. அயோத்தியில் கட்டப்பட்ட கோயிலின் மேற்கூரை ஒழுகுவதால் அயோத்தி ராமனே மழையில் நனைந்தபடிதான் நின்று கொண்டிருக்கிறான். அயோத்தி ராமன் மழையில் நனையும்படி நிற்பதற்கு காரணமான ஊழல் குறித்த விபரங்களையாவது வெளியே வராமல் தடுத்துவிட வேண்டும் என்று சங்கிகள் துடித்துக் கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர், சாதாரண மக்களை போன்று உயிரியல் ரீதியாக பிறக்காத கடவுளின் குழந்தையான மோடி, அவருக்கு ஏராளமான சக்திகள் உள்ளதாகவும் அந்த சக்திகள் அனைத்தும் கடவுளால் அவருக்கு நேரடியாக வழங்கப்பட்டதாகவும் அதனால் தான் அவர் மிகவும் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருப்பதாகவும் பிதற்றிக் கொண்டிருந்தார். இந்த பாசிச மோடி, கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்காகத்தான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மீண்டும் ஒரு முறை அம்பலத்திற்கு வந்துவிட்டது.
இம்மாதிரி அம்பலப்பட்டு நாறிவிடக் கூடாது என்பதற்காக இனி வரும் காலங்களிலும் பாசிச அடக்கு முறையை கட்டவிழ்த்துவிடத் தயங்காதவர் மோடி. இந்த உண்மையை சரியாகப் புரிந்து கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும்; நாட்டைக் காக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும் பாசிசத்தை வீழ்த்த ஓர் அணியில் திரண்டு போராட முன்வரவேண்டும்.
— குமரன்
செய்தி ஆதாரம்: Thewire