“தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டும்.” (ஓர் நேர்மறை – எதிர்மறை அலசல்!) பாகம் -3

இந்து மதக் கொடுங்கோன்மை, சனாதன பார்ப்பனியம், காவிப் பாசிசம் முதலானவற்றுக்கு எதிராக பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட சீர்திருத்த செம்மல்களின் கருத்தாக்கங்களையும் துணைக்கு எடுத்துக்கொண்டு, சமூகத்தைப் பீடித்து இருக்கும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அழிப்பதற்கு, உழைக்கும் மக்கள் விடுதலை காண்பதற்கு விஞ்ஞான ரீதியிலான மார்க்சிய - லெனினியமே மூல மருந்து என்பதை உணர்ந்து சரியான திசை வழியில் பயணப் படுவோம்!

3
பெரியார்-அண்ணா-கலைஞர்

முந்தைய பாகங்களைப் படிக்க:

தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும்  சுயமரியாதை இயக்க நூற்றாண்டும் (ஓர் நேர்மறை – எதிர்மறை அலசல்!)

தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டும் (ஓர் நேர்மறை – எதிர்மறை அலசல்!) பாகம் -2

பெரியாருடனான எங்கள் சந்திப்பும் –
ஈரோடு திட்டம் பற்றிய வினாக்களும், பதில்களும்


1970-களில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் தேவகோட்டையை மையப்படுத்தி திராவிடர் மாணவர் கழக அமைப்பினை நாங்கள் திறம்பட மேற்கொண்டிருந்த காலகட்டம். தோழர் லெனின் பெருவழுதி தலைவராகவும், எழில்மாறன் எனும் நான் செயலாளராகவும், செம்பியன் என்ற தோழர் பொருளாளராகவும் இன்னும் பலர் மற்றைய பொறுப்புகளில் இருந்து பணியாற்றினோம். 14-11-1971-ல் தி.மா.க. சார்பில் தேவகோட்டையில் தந்தை பெரியாரை வரவழைத்துப் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். வழக்கம்போல மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு காலையிலேயே தேவகோட்டை நகராட்சி பயணியர் விடுதிக்கு ஓய்வெடுக்க பெரியார் வந்து விட்டார்.

எங்களுக்கு அக்காலத்தில் உற்ற துணையாக இருந்து பெரியாரியலை பரப்புவதற்கு உந்து சக்தியாக இருந்த மறைந்த பேராசிரியர் பெரியார் பேருரையாளர் இறையனாரிடம் நாங்கள் ஒரு கோரிக்கையை பல நாட்கள் வைத்திருந்தோம். பெரியார் தேவகோட்டைக்கு வந்திருக்கக்கூடிய இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவருடன் நாங்கள் சில ஐயப்பாடுகளை எழுப்பி அதற்கான விளக்கத்தை பெற விரும்புகிறோம் என்று தெரிவித்தோம்.

அவரது ஏற்பாட்டின்படி 14-11-1971-ல் மாலை 3:30 மணி அளவில் நாங்கள் பெரியாரை சந்தித்தோம். அண்ணன் இறையனார், ‘ஐயா, தம்பிகள் தங்களிடம் சில சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற விரும்புகிறார்கள்’ என்று கூறிய மாத்திரத்தில் பெரியார் எங்களை அன்புடன் வரவேற்று, ‘கேளுங்கய்யா, கேளுங்க..  என்ன சந்தேகம்’ எனக் கூறினார்.

நான்தான் முதலில் தொடங்கினேன். திராவிடர் மாணவர் கழகத்தின் அன்றைய மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில்,பெரியாரிடம் கேட்ட எனது கேள்விகளின் சாரம் இதுதான்:

“அய்யா, நீங்கள் 1932 ல் சோவியத் ரஷ்யா சென்று வந்த பிறகு உடனடியாக ஈரோட்டில் தங்கள் இல்லத்தில் சுயமரியாதை இயக்கத்தினரின் அவசரக் கூட்டத்தை நடத்தி இருக்கின்றீர்கள். சுமார் 200 பேர் கலந்து கொண்டதாக அறிகிறேன். குறிப்பாக தங்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் மா. சிங்காரவேலர், ஜீவானந்தம், எஸ். ராமநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர் எனவும் அறிகிறேன். முன்னதாக தாங்கள் சிங்காரவேலரைக் கலந்து ஆலோசித்து “ஈரோட்டுத் திட்டம்” என்ற வகையில் ஓர் அறிக்கையும் தயாரித்து கூட்டத்தில் படித்தும் காண்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கிடையில் ‘வெறுமனே இனி சுயமரியாதை இயக்கம், பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு..போன்ற பிரச்சினைகளை மட்டும் எடுத்துக்கொண்டு செயல் படுவது சரியன்று; இனி பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அகற்றுவதற்கு பொதுவுடமை சார்ந்த சமதர்ம இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்பதாக முடிவெடுக்கபபட்டுள்ளது.  அதன்படி தமிழ்நாட்டில் சுமார் 145-க்கும் மேற்பட்ட சம்மதர்மச் சங்கங்களை கட்டி இருக்கின்றீர்கள். தாங்களும் மா. சிங்காரவேலர் அவர்களும் பல்வேறு ஊர் களுக்கு சென்று விளக்க உரை நிகழ்த்தி இருக்கின்றீர்கள். அதுமட்டுமல்ல; ‘இந்திய நாட்டில் உண்மையான கம்யூனிசம் வந்து விடுமேயானால் நான் என் கட்சியை கலைத்து விடுவேன்; காரணம் எனது கொள்கையும் கம்யூனிசக் கொள்கையும் ஒன்றே’ என்றும் கூறியிருக்கின்றீர்கள்’; அப்படிப்பட்ட அய்யா பிற்காலத்தில் சீர்திருத்த கொள்கைகளை மட்டும் பிரச்சாரம் செய்பவராகவும், பொது உடைமை சார்ந்த சமதர்மக் கொள்கைகளை பிரச்சாரம் செய்யாமல் கைவிட்டு பின் வாங்கி விட்டதன் காரணம் என்ன அய்யா’ என்ற வகையில் கேள்விகள் கேட்டேன்.

குனிந்து கொண்டே ஆழமாக செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த பெரியார்,  நிமிர்ந்து இப்படி பதில் சொல்ல ஆரம்பித்தார்: “ரொம்ப சந்தோசம் ஐயா, நல்ல கேள்விகளைக் கேட்டீங்க; நாம் பொதுவுடமை கொள்கைகளை கைவிடவில்லை; உலகத்திலே இந்தியாவைப் போல நாலு வர்ணம் 4000 சாதிகளையும், தீண்டாமையையும் நீங்கள் எங்கேயும் காண முடியாது; மக்கள் சாக்கடை புதைச்சேற்றில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; முதலில் அவர்களை கரையேற்றி விடுவோம்; அதன் பிறகு நீங்க சொன்ன பொதுவுடமை இயக்க வேலைகள் தான் நம்ம வேலையாக இருக்கும்…”என்று விளக்கம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தி.மா.க. மாவட்டத் தலைவர் தோழர் லெனின் பெருவழுதி கீழ்க்கண்ட அய்யத்தை வெளிப்படுத்தினார்.

“அய்யா, தாங்கள் கூறுவது 1932 ஈரோட்டுத்திட்டத்திற்கு முரண்பட்டதாக உள்ளது; மேலும் சாதி-தீண்டாமை ஒழிப்புக்கு நாம் எப்படி கால நிர்ணயம் செய்ய முடியும்; அதுவரை வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நம்முடைய பங்களிப்பு இருக்க வேண்டாமா? எனவே, தண்டவாளத்தின் இரண்டு தடங்களைப் போல சாதி-தீண்டாமை ஒழிப்புப் பணியையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் பணியையும் சமகாலத்தில் எடுத்துச் செல்வது தானய்யா சரியானதாக இருக்க முடியும்..” என்று கேட்டார்.

உடனே அய்யா அவர்கள்  ஆழ்ந்து சிந்தித்தவராய் குனிந்து இரண்டு கரங்களின் விரல்களை இணைத்து இணைத்து எடுத்துக் கொண்டிருந்த சூழலில் அவருக்கு வழக்கம் போல் ஏற்படும் சிறுநீரக பிரச்சனை காரணமான வலி எடுத்து அம்மா, அம்மா எனக் குரல் எழுப்பியவாறு பக்கவாட்டில் சாய்ந்திடலானார். நாங்கள் மன துயரத்துடன் அமைதியானோம். பரவசப்பட்ட அண்ணன் இறையனார் அவர்கள் அய்யாவுக்கு உதவியாக நின்று கொண்டு, எங்களை அறையை விட்டு வெளி வரந் தாவில் அமரச் சொன்னார்.

15 நிமிடங்கள் கழித்து வெளியில் வந்த இறையனார், ‘தம்பிகளா பொதுக்கூட்டத்திற்கு நேரம் நெருங்கி விட்டது; மேடைப் பணிகளையும் நீங்களே மேற்கொள்ள வேண்டி உள்ளது; அய்யாவின் உதவியாளராக எழில்மாறனே விரைவில் போக இருக்கிறார்; அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அய்யாவிடம் கேள்விகளை தொடர்ந்து எழுப்பட்டும்; இப்போது பொதுக்கூட்ட பணிகளை மேற்கொள்ளுங்கள். மேலும் ஐயா என்னிடம் தம்பிகள் சிறியவர்களாக இருந்தாலும் ஆழமான கேள்விகள் கேக்குறாங்கய்யா, எனவே அவர்களைத் திருப்திப்படும் வகையிலான பதில்களைச் சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். எனவே விரிவாக நமது விவாதத்தை தொடரலாம். அய்யா சற்று ஓய்வெடுக்கட்டும்’ என்று கூறி அனுப்பி வைத்தார். அதன் பிறகு நான் அய்யாவிடம் உதவியாளராகச் சென்ற பிறகும் கூட எனது கேள்விகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இது உண்மை நிலை.

திராவிடர் இயக்க ஆட்சி:
சாதனையும் சரிவும்

பல்லாண்டுகள் சுயமரியாதை இயக்கமாக நீடித்த நிலையில் பல்வேறு சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளை கணக்கிற் கொண்டு அண்ணா அவர்களின் உறுதுணையுடன் 1944 இல் “திராவிடர் கழகம்” என்ற பெயர் மாற்றத்தை உருவாக்கினார் பெரியார். 1947ஆம் ஆண்டு பெற்ற இந்திய ‘சுதந்திரத்தை’ வெறும் ஆட்சி அதிகார மாற்றம் என்றும், குறிப்பாக வெள்ளையர்களிடம் இருந்து பார்ப்பனர்கள் கைக்குப் போன அதிகாரம் என்றும் விமர்சித்தார். அன்றிருந்த மெட்ராஸ் மாகாணத்தை திராவிட நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.  அதே காலக்கட்டத்தில், பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து மற்றும் செயற்பாட்டு முரண்கள் உருவாகவே 1949 இல் அண்ணா, புதிதாக “திராவிட முன்னேற்ற கழகம்” என்ற அமைப்பை கலைஞர், நெடுஞ்செழியன், என்.வி. நடராஜன், மதியழகன், சிற்றரசு இன்னும்  ஏனையோரின் ஒத்துழைப்புடன் அமைப்பைக் கட்டி 1967 இல் தமிழ்நாடு ஆட்சி கட்டிலையும் பிடித்தார். அதன் பிறகு பெரியார் அண்ணா உறவு புதுப்பிக்கப்பட்டு நல்லுறவாக மலர்ந்தது.

சுயமரியாதை திருமணம் சட்ட பூர்வமாக்கப்பட்டது; தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது; உட்பட சில முக்கிய சாதனைகளை ஈட்டினார் அண்ணா. அது கலைஞர் காலத்திலும் நீடித்தது. இந்தியை எதிர்த்து இருமொழிக் கொள்கையில் உறுதியாக நின்றது; கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது; அர்ச்சகர்கள் நியமனம்; பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு; ஊர்- சேரி என்ற பிரிவை ஒழிக்கும் நோக்கில் சமத்துவபுரங்கள் அமைத்தது என்ற சாதனைகளைச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குட்பட்டு இவற்றை நிறைவேற்றவே பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டி இருந்தது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது.

அதே போல, 1969ஆம் ஆண்டு ராஜமன்னார் கமிட்டி அமைத்து மத்திய அரசு- மாநில அரசு இடையிலான அதிகாரப் பகிர்வில் உள்ள பிரச்சினைகளைப் பரிசீலிக்க இந்திய அரசியல் அமைப்புச் சட்டக்கூறுகளை ஆய்வு செய்து 1971 ஆம் ஆண்டு அறிக்கை சமர்பித்தது திமுக அரசு. ஆண்டான் மனப்பான்மையில் செயல்படும் ஒன்றிய ஆட்சியாளர்கள் பொறுத்துக்கொள்வார்களா? ஒன்றுமில்லாத பிரச்சனையை முன்வைத்து திமுகவில் இருந்து விலகி, 1971 இல் எம்ஜிஆர் அண்ணா திமுக என்று புதிய கட்சி உருவாக்கினார். இந்திரா காந்தியின் அவசரநிலை பாசிசத்தை ஆதரித்தார். 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலைப் பிடித்தார். அதற்கு அவரது சினிமா கலைத்தளம் கை கொடுத்தது. சினிமா மோகத்தில் மயங்கி கிடந்த மக்களும், சினிமாவே நிஜ வாழ்க்கை என்று கருதும் நிலை உருவானது. 1987ஆம் இறக்கும் வரை முதல்வராக நீடித்தார்.

மேலும் படிக்க:

பாசிச ஜெயாவின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு கருவூலத்தில் வைத்து பாதுகாக்காதே! மக்களிடம் கொள்ளையடித்த சொத்துக்களை மக்களுக்கே பிரித்துக் கொடு!

கோயில் சொத்து கல்விக்கு ஆகாது: நான் முழு சங்கியே தான்! நிர்வாணமாக நிற்கிறார் எடப்பாடி!

எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வரானார். பார்ப்பனப் பண்பாட்டில் ஊறித் திளைத்தார்; தமிழ் சமுதாயத்தை சீரழித்தார். கரங்களில் பலவண்ண கயிறுகளும், நெற்றியில் பலவண்ண பட்டைகளும் தீட்டிக்கொண்டு திராவிட கொள்கைகளுக்கு நேர் எதிரான பண்பாடுகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு வந்த அதிமுகவினர், இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சங்கிகளோடு கரைந்து விட்டனர். பெரியாரையே மறந்து போயினர். இவர்கள் அண்ணா பெயரையோ, திராவிடம் என்ற பெயரையோ உச்சரிக்க முழுத் தகுதியும் இழந்து விட்டார்கள். அமித்ஷா முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம் என்ற அளவிற்கு தரம் தாழ்ந்து போயினர். பொதுவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட ஆட்சி என்று குறிப்பிடப்படுகிறது. அதிமுக ஆட்சி காலமும் அதில் சேர்க்க பொருத்தமானது என்பது கேள்விக்குறியே. தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு, திராவிடர் கழகம் இட ஒதுக்கீடு பிரச்சினை, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெரியார் எழுத்துக்களை நூல்களாக கொண்டு வருவது போன்ற பணிகளிலே கவனம் செலுத்தலாயிற்று. அதில் இருந்து பிரிந்து சென்ற கொளத்தூர் மணி, விடுதலை ராசேந்திரன், கு.ராமகிருஷ்ணன் போன்றோர் திராவிடர் இயக்க பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி ஆட்சி என்று முன்னிறுத்தி வருகிறார். ஒன்றிய பாஜகவின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பது, இட ஒதுக்கீடு, நீட் எதிர்ப்பு, மாநில உரிமைகள் போன்ற பிரச்சினைகளில் உறுதியாக போராடி வந்தாலும், தொழிலாளர் உரிமைகள், சாதி ஆணவக் கொலை தடுப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக பேசினாலும்  நடைமுறையில் அதனை மேற்கொள்வதற்கான முழுமையான விருப்பமோ, செயற்பாடோ காண முடியவில்லை.

அண்மையில் நடைபெற்ற நெல்லை ஆதிக்க சாதிவெறி ஆணவப் படுகொலையில் கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கு எவ்வித முனைப்பும் காட்டவில்லை. சாதி வெறிச் சங்கங்களை தடை செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டம் இல்லை.  சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கண்ணோட்டம் இல்லை. கல்விக்கூடங்களில் சாதி தீண்டாமை ஒழிப்பு சிந்தனையை ஊட்டும் வகையிலான பாடத்திட்டங்களை வகுக்கும் நோக்கம் ஏதுமில்லை. காரணம் வாக்கு வங்கி அரசியல் பின்னணியில் மட்டுமே இவர்கள் இதமான முறையில் இப் பிரச்சனைகளை கையாளுகிறார்கள். பிறகு எப்படி தந்தை பெரியார் வழியில், சமூக நீதி, திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெற முடியும். தேர்தல் கட்சிகளில் இதில் எவ்வித கட்சியும் வேறுபாட்டை காண முடியவில்லை. தொழிலாளர் போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. அதற்கு அண்மைக்கால உதாரணம் சாம்சங் போராட்டம்; மற்றும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம். இவை போன்றவற்றை இந்த ஆட்சி பாரதூரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

பெரியாரின் வழியை பின்பற்றுவதாக கூறும் பல்வேறு வகைகளில் பிரிந்து கிடக்கும் திராவிட இயக்கங்களும் ஒரு சமூக விஞ்ஞானப் பார்வையின்றி மேலோட்டமான செயற்பாடுகளையே கொண்டுள்ளனர்.  இயக்கவியல் பொருள் முதல் வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள் முதல் வாதத்தின் – சமூக விஞ்ஞானமான மார்க்சிய-லெனினிய விதிகளின்படி உழைக்கும் மக்களுக்கான விடுதலையைப் பெறுவதற்கு மக்கள் அதிகாரம் தேவைப்படுகிறது. ஆம், அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தேர்தல் மூலம் கிடைக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மட்டுமல்ல; அச்சட்டங்களை அமல்படுத்தும் அதிகார வர்க்கம் உள்ளிட்ட முழு அரசு கட்டமைப்பையும் மக்கள் கட்டுப்படுத்தக்கூடிய முழு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த அடிப்படையில் மக்கள் விடுதலைக்கான இயக்கத்திற்கு தலைமை தாங்குவோர், அப்படிப்பட்ட அரசியல் பொருளாதார செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டே செயல்பட முடியும்.

ஆனால் தந்தை பெரியாரின் வாழ் நாள் முழுவதுமான உழைப்பானது அரசியல் அதிகாரத்தை பெற்று மக்களுக்கு விடுதலையைத் தேடித் தரக் கூடியதாக அல்லாமல், சீர்திருத்தவாத பிரச்சார மற்றும் போராட்ட வழிமுறைகளால் மட்டுமே தன்னுடைய பணிகளை மேற்கொண்டார் என்பது மிகப்பெரிய குறைபாடாக பார்க்க வேண்டி உள்ளது. அவர் தமது ரஷ்ய நாட்டுப் பயணத்தில் ஸ்டாலினை மட்டும் நேரடியாக சந்தித்து கூடுதலான நேரம் ஒதுக்கி விவாதித்து வந்திருப்பாரேயானால் இன்னும் கூடுதலானப் புரிதலுக்கு வந்திருக்கக் கூடும் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.

மொத்தத்தில், சுயமரியாதை இயக்கம், நூற்றாண்டு காணும் இவ்வேளையில் பெரியார் காலத்தில் இருந்தே நேர்மறையிலும் எதிர்மறையிலும் பரிசீலிப்போமேயானால், பெரியாரோ அம்பேத்கரோ நிலவுகின்ற சமூக சூழலில் உள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் சீர்திருத்தவாதிகளாக இயங்கி இருக்கின்றார்கள்; அவர்கள் சமூகத்தை தலை குப்புற மாற்றி போடும் வகையிலான, விஞ்ஞான நோக்கில் அணுகி புரட்சிகரப் பணிகளை மேற்கொண்டு புரட்சியாளர்களாக பரிணமிக்க வில்லை என்றாலும், இந்திய சமுதாய வரலாற்றில் முக்கியமான, முற்போக்கு பாத்திரத்தை ஆற்றியுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் குறைந்தபட்சம் இந்த அளவிற்காவது மேம்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு வள்ளலார், தந்தை பெரியார், அய்யா வைகுண்டர் ஜோதிராவ் பூலே, அண்ணல் அம்பேத்கர், பெரியவர் நாராயண குரு  போன்ற பல சீர்திருத்தவாதிகளின் உழைப்பு மிகுதியாக அடங்கி உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

இந்து மதக் கொடுங்கோன்மை, சனாதன பார்ப்பனியம், காவிப் பாசிசம் முதலானவற்றுக்கு எதிராக பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட சீர்திருத்த செம்மல்களின் கருத்தாக்கங்களையும் துணைக்கு எடுத்துக்கொண்டு, சமூகத்தைப் பீடித்து இருக்கும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அழிப்பதற்கு, உழைக்கும் மக்கள் விடுதலை காண்பதற்கு விஞ்ஞான ரீதியிலான மார்க்சிய – லெனினியமே மூல மருந்து என்பதை உணர்ந்து சரியான திசை வழியில் பயணப் படுவோம்!

பாசிச ஆட்சியை வீழ்த்த

ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவோம்!

தற்போதைய காலகட்டத்தில், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் தடைக்கல்லாக – மிகப்பெரிய ஆபத்தானதாக விளங்கும், ஆர்எஸ்எஸ்- பாஜக- இந்துத்துவ-சங் பரிவார் காவிக் கூட்டம் முற்றிலும் பாசிச கொள்கைகளை வகுத்துக் கொண்டு நான்கு கால் பாய்ச்சலில் செயல்பட்டு வருகின்றது.

சனாதனப் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடித்து ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே அடையாள அட்டை, ஒரே ரேஷன் கார்டு… என்ற பாணியில் சர்வாதிகாரத்தின் கீழ் இந்துராஷ்டிரா படைக்கத் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. சனாதனப் பார்ப்பனியத்தை நிலை நிறுத்துவதும், அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட்  முதலாளிகளின் நலன் காப்பதும், மக்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் பறித்தெடுத்து தேசம் கடந்த கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு நாட்டையே விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

ஆக கார்ப்பரேட் காவிப் பாசிசம் மிகப் பெரும் ஆபத்தானதாக இந்திய நாட்டை சூழ்ந்துள்ளது. இதன் சூத்திரதாரிகள் தான் ஆர்எஸ்எஸ். இதுவும் 2025ல் தான் நூற்றாண்டு காணுகிறது. ஆபத்தான மக்கள் விரோத திட்டங்கள் பலவற்றை வகுத்துக் கொண்டிருக்கிறது. RSS ‘ஆழ விருட்சகமாய்’ – பாசிசத் தன்மையுடைய- மக்கள் விரோத இயக்கமாய் உருவெடுத்து விட்டதால் அந்தப் பிரதான எதிரியான பாசிசக் காவிக் கூட்டத்தை வீழ்த்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

நாட்டை சூறையாடும் கார்ப்பரேட் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம்!

தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தூக்கியெறிவோம்!

சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம்!

சாதிவெறிச் சங்கங்களை தடை செய்ய போராடுவோம்!

சாதி-தீண்டாமையை முற்றிலும் ஒழித்துக் கட்டுவோம்!

ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ மதவெறி அமைப்புகளை தடை செய்யப் போராடுவோம்!

கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்!

ஜனநாயகக் கூட்டரசை நிறுவிடப் போரிடுவோம்!

எழில்மாறன்.

தந்தை பெரியாரின் இறுதிக் கால உதவியாளராக இருந்தவர் (1972-1973)

தந்தை பெரியாருடன் எழில்மாறன்

(தந்தை பெரியாருடன் எழில்மாறன்)

———–

கட்டுரைக்கான ஆதாரங்கள்

1. தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு – சாமி சிதம்பரனார்.

2. தந்தை பெரியாரின் அயல்நாட்டு பயண குறிப்புகள் – திருச்சி ஆனைமுத்து

3. கட்டுரையாளரின் நேரடி அனுபவங்கள்

 

3 COMMENTS

  1. இந்த மூன்றாவது பகுதி சிறப்பான தொகுப்பு. வாழ்த்துகள்.

    தந்தை பெரியாருக்கு பொதுவுடமை குறித்து ஆழமான புரிதல் உண்டு என்பது அவர் சோவியத் ருஷ்யாவிற்கு சென்று வந்த பிறகு எழுதிய கட்டுரைகள் ஏராளமாய் உண்டு.

    ஆனால் அதன் பிறகு, அவரும் சரி, அவருக்குப் பிறகு அய்யா ஆனைமுத்து அவர்களைத் தவிர்த்த பிற திராவிட இயக்கங்கள் பொதுவுடமையின் தேவை குறித்து பேசுவதே இல்லை.

    அதேபோல பொதுவுடமை இயக்கங்களும், மக்களிடையே மண்டிக் கிடைக்கும், இன்னும் சொல்லப்போனால் பரவிவரும் பார்ப்பனிய சனாதன மூடநம்பிக்கைகளைக் களைவதற்கு போதிய கவனம் செலுத்தவில்லை என்பதையும் பரிசீலிக்க வேண்டும். ‌

  2. “தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளும் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டும்”(ஓர் நேர்மறை – எதிர்மறை அலசல்) என்பதான கட்டுரை மூன்று பாகங்களாக வெவ்வேறு நாட்களில் மக்கள் அதிகாரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதில் முதல் இரண்டு பாகங்கள் குறித்து ‘ஊரான்’ என்ற பெயரில்
    ஓரிரு விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
    தற்போது மூன்றாவது பாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு மென்மையான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார். நான் பல்வேறு பணிகள் காரணமாக வெகு தூரம் சென்று விட்டு இப்பொழுதுதான் இருப்பிடம் வர நேர்ந்தது.
    உடல்நிலை பாதிப்பு வேறு சேர்ந்து கொண்டது.‌ அதனால் அவருடைய கருத்துகளுக்கு உடனடியாக என்னுடைய பதிலுரையைப் பகிர்ந்திட இயலவில்லை.

    முதல் பாகத்தில் பெரியாரைப் பற்றி ‘பிறவி’ நாத்திகர் பகுத்தறிவுவாதி சமத்துவவாதி
    என்பதில் ‘பிறவி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது மாபெரும் தவறு என்ற பாணியில் கருத்துப் பதிவிட்டிருந்தார். நான் எந்த கண்ணோட்டத்தில் அப்படிப்பட்ட வார்த்தையை பயன்படுத்தினேன் என்பதற்கு நீண்ட விளக்கம் கொடுத்த பிறகும் கூட அவர் சமாதானம் அடையவில்லை. விவாதித்துக் கொண்டே இருந்தார். புற நிலையில் இருந்து தான் அகநிலை சிந்தனை உருவாகும் என்பதனை மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தில் இருக்கக்கூடிய எவரும் மறுத்து பேசுவதற்கு இல்லை. அதே நேரத்தில் முதல் பாகத்தில் தன்னைப் பற்றி பெரியாரே கூறிய கருத்துக்களை முன்வைத்தும், கல்வியறிவில் பெரிதும் படிப்பறிவில்லாத அவருடைய ஆளுமையை
    முன்வைத்தும் அவரைப் பற்றி வியந்தோதியே ‘பிறவி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளித்த பின்பும் ஊரான் சமாதானம் அடையவில்லை.
    பின்பு ஆசான்கள் மார்க்ஸ் – எங்கெல்ஸ் வகுத்தளித்த அரிய பொக்கிஷமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், துவக்கத்திலேயே ‘ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்; கம்யூனிசம் எனும் பூதம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்களே, அதனுடைய அர்த்தம் அவர்கள் பேய் பிசாசுகளில் நம்பிக்கை கொண்டுதான், ‘பூதம்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பார்களா என்ற அர்த்தத்தை புரிந்து கொள்ளும் வகையில் உதாரணம் காட்டினால், பிறவி வேறு; பூதம் வேறு; இரண்டை சமப்படுத்த கூடாது என்று இவராக ஒரு வியாக்கியானம் கொடுத்துக் கொள்கிறார். ஒரு விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் பதிலாக அமையாது என்று ‘கெட்டிக்காரத்தனமாக’
    நழுவுகிறார். அதாவது இவர் எதைச் சொல்கிறாரோ அதை அப்படியே ஏற்பது தான் மார்க்சியம்.

    அடுத்து இரண்டாவது பாகத்தில் இந்திய நாட்டின் கம்யூனிஸ இயக்கங்கள் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் குறித்த பாகுபாடுகளை – இந்திய கம்யூனிச இயக்கம் தோன்றியும் ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது என்பதை போகிற போக்கில் சில விடயங்களைப் பதிவிட்டிருந்தேன். அதில் பல்வேறு குழுக்களாக பிளவு பட்டு களமாடுகிறார்கள்; காலம் விடை சொல்லும் எனவும் எமது அரசியல் நிலைப்பாட்டின் ஒரு முழக்கத்தை வைத்து வெளிப்படுத்தி இருந்தேன். உடனே ஊரான் ‘எதிர்மறை அம்சங்களைக் கொண்டிருக்க கூடிய மா.லெ. குழுக்கள் குறித்து நேர்மறையில்தான் விமர்சனம் செய்திருக்கின்றீர்கள்; ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்குதல் தொடுத்து கொண்டிருக்கின்ற பொழுது எவ்வாறு நேர்மறையாக பதிவிடலாம்’ என்ற பாணியில் விமர்சித்து இருந்தார். நான் எழுதியதோ பெரியார் பிறந்த நாள் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடர்பான கட்டுரை.
    ஆக இவ்வித கட்டுரையில் எல்லா அம்சங்களையும் முழுமையாகக் கொண்டு வந்து விவாதித்து ‘ஊரான்’ விரும்புகின்ற படி
    விளக்க வேண்டும் எனக் கருதுகிறார். அவர் அதற்காக தனியாக கட்டுரை எழுதிக் கொள்ளட்டும். என்னால் இயன்றதை நான் படைக்கின்றேன். மேலும் ‘ஒரு படைப்பின் மீது விமர்சனமே செய்யக்கூடாது எனக் கருதுகின்றீர்களா’ என்ற பாணியில் எதிர் விமர்சனம் வைக்கிறார். நான் அப்படி கருதக்கூடியவன் அல்ல. நான் ஆசான்களில் ஒருவராக கருதக்கூடிய தந்தை பெரியார் இடமே 1971-ல் விமர்சனம் வைத்து வினா எழுப்பியவன். பதில் பெற்றவன். அப்படி இருக்கையில் மிகச் சாதாரணமான நான் எனது எழுத்துக்களின் மீது விமர்சனங்கள் வரக்கூடாது என்று கருதும் மன இயல்பு உடையவன் அல்ல என்பதனை ‘ஊரான்’ புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது பாகத்தில் கூட ‘கம்யூனிச இயக்கங்கள் சனாதன பார்ப்பனீயத்திற்கு எதிராக போதுமான வகையில் களமாட வில்லை’ என்ற பாணியில் கருத்து பதிந்துள்ளார். எமது ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு தன் சக்திக்கு உட்பட்ட வகையில் முடிந்த அளவு இதில் போதுமான அக்கறை செலுத்தி களமாடுகிறது என்றே கூறுவேன். அதை வேறு எவரும் குறை சொல்லி நெஞ்சு நிமிர்த்த தேவையில்லை என்று கருதுகிறேன்.

    மேலும் முக்கியமான சில விடயங்கள்:-
    ‘டீன் ஏஜ்’ என்று சொல்லக்கூடிய எனது பள்ளிப் பருவ காலத்திலேயே நான் ‘எழில் மாறன்’ என்ற பெயரை சூட்டிக் கொண்டவன் ஆவேன். அதன் பின்பு கல்லூரி படிப்பு காலத்திலும் அதே ‘எழில் மாறன்’ என்ற பெயரிலேயே களம் ஆடினேன். தந்தை பெரியாரிடம் உதவியாளராக பணியாற்றிய போதும் அதாவது பெரியாரியலை மட்டுமே முற்றாக பற்றி இருந்த காலத்திலும் நான் ‘எழில் மாறன்’ தான். பின்பு 1970-களின் மத்தியில் இந்திரா காந்தி இந்தியாவில் அமுல்படுத்திய அவசர நிலை பிரகடனம் வந்த பிறகு பெரும் போராட்டத்திற்கு இடையே நானும் என்னுடன் பல தோழர்களும் மார்க்சிய-லெனினியத்தைப் பற்றி நின்று அரசியலில் களமாடத் துவங்கினோம்; நான் முதலில் மக்கள் கலை இலக்கியக் கழகம்; பின்பு அதன் தோழமை அமைப்பான மக்கள் அதிகாரம் அமைப்பில் இந்த 77 வயதினில் பல உடல் உபாதைகளுக்கிடையில், ‘எழில் மாறன்’ என்ற பெயரிலேயே என்னால் இயன்ற அளவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். ‘எழில் மாறன்’ என்ற பெயரிலேயே, கட்டுரைகள் முடிந்த அளவு படைக்கிறேன்; ‘எழில் மாறன்’ என்ற பெயரிலேயே அவ்வப்பொழுது வீடியோ உரைகளையும், நேர்காணல்களையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

    அப்படி இருக்கின்ற பொழுது ‘ஊரான்’ என்பது யார்? அவர் எந்த அமைப்பின் பின்புலத்தில் நின்று களமாடுகிறார்? அவரது கொள்கை கோட்பாடுகள் என்ன? மார்க்சிய லெனினிய கண்ணோட்டம் குறித்து அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்? என்பதெல்லாம் பிறர் தெரியாத வகையில் விமர்சனங்கள் என்ற பெயரில் சில கருத்துக்களைப் பதிவிட்டு அதற்கு நான் பதில் கொடுத்துக் கொண்டிருக்க கூடிய அவல நிலை தேவையில்லை என்று கருதுகிறேன். இதுவரை எனது கட்டுரைகள் மீது பலர் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். வெளிப்படையாக அவர்கள் யார் என்று எனக்குத் தெரியும். சிறந்த முறையில் விமர்சனம் வைப்பார்கள். அதற்கு யாம் அளிக்கக் கூடிய பதிலை ஏற்பர்; அல்லது யாம் மேலும் கூர்மையாக கவனிக்கத்தக்க வகையில் இதமான வகையில் பதில் அளிப்பர். ஆனால் ஊரானின் பதிவுகள் மூலமாக நான் அறிந்தது குற்றம் சுமத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார் என்பதனை புரிய முடிகிறது. முதலில் வெளிப்படையாக நீங்கள் யார்? எந்த அமைப்பினர்? என்று தெரிவித்துக் கொண்டு
    விமர்சனம் செய்ய முன் வாருங்கள். எங்களுக்கு வேலை அதிகம் இருக்கிறது.
    அதன் பிறகு உங்களுடைய விமர்சனங்களை பரிசீலிக்கலாம். அந்த வகையில் இத்தோடு முடிவாகவு முடித்துக் கொள்கிறேன்.

  3. நான் மேலே என்னைப் பற்றி குறிப்பிட்ட ‘டீன் ஏஜ்’ பள்ளிப் பருவக் காலத்தில் திமுக-வில்
    முழு மூச்சுடன் பணியாற்றினேன். கல்லூரிப் பருவக் காலத்தில் திராவிட மாணவர் கழகத்தினனாய் அதாவது தி.க.-காரனாக செயல்படத் துவங்கினேன். 1975-76 இந்திராவின் Emergency எனும் அவசரநிலைப் பிரகடனம் நடைமுறைப்படுத்தப்பட்ட பொழுது மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அது முதல் இதுவரை அவ்வழியிலேயே பயணிக்கிறேன். இன்று மக்கள் அதிகாரம்
    அமைப்பில் செயல்படுகிறேன். தகவலுக்காக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here