
பாசிச காலகட்டத்தில் பல்வேறு போராட்ட வடிவங்களை பயன்படுத்தி அதனை முறியடிக்க வேண்டும் என்பதை முன் வைக்கின்றது பருண்மையான மார்க்சிய லெனினியம்.
தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் முன்வைத்து அமல்படுத்த துவங்கியது முதல் தேர்தலில் குதித்து விட்டார்கள்; வலது சந்தர்ப்பவாதம் தலைவிரித்தாடுகிறது; புரட்சிகர அரசியலில் இருந்து வெளியேறி திமுகவிற்கு வாலாக சீரழிந்து விட்டார்கள் என்றெல்லாம் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மீது அவதூறுகளும், வசவுகளும் வாரி இறைக்கப்படுகிறது.
இது பற்றி எமது நிலைப்பாடுகளை அறிவித்த பின்னரும் அத்தகைய அவதூறுகள் ஓயவில்லை. இது ஒரு புறம் இருக்க தற்போது நிலவுகின்ற பாராளுமன்ற அமைப்புக்குள் செயல்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் என்று அழைக்கப்படுகின்ற எம்பிகள் தான் சார்ந்துள்ள மாநிலத்தின் உரிமைகளைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் போராட்டங்களையும் சில சமயங்களில் நடத்துகிறார்கள் என்ற போதிலும் இந்திய ஒன்றிய அரசாங்கமானது தனது கார்ப்பரேட் காவி பாசிச அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளை மூர்க்கமாக அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை.
தமிழகத்தின் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ள சூழலில் இந்திய ஒன்றிய அரசாங்கம் ஆனது அறிவித்துள்ள பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய அறிவிப்புகள் வரும் என்று நாடாளுமன்ற இடதுசாரி அரசியலில் உள்ள வெங்கடேசன் போன்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதனை வெளிப்படுத்துகின்ற விதமாக “தேர்தல் வருவதால் மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தலைகீழாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக சொல்லப்படும் திறக்குறளும், சங்க இலக்கிய பாடலும் கூட இடம்பெறவில்லை. வஞ்சகம் விளைவிப்பதும் வளங்களை சுரண்டுவதும் தான் இந்த பட்ஜெட்டின் அறிவிப்பு” என்கிறார் சு .வெங்கடேசன்.
பாராளுமன்றத்திற்கு உள்ளேயே பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தி முறியடித்து விட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்து இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்திய நிலைமைகளில் இந்திரா காந்தி அமுல்படுத்திய எமர்ஜென்சி பாசிசத்தின் போதும் சரி, தற்போது ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் அமல்படுத்துகின்ற கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமானாலும் சரி தேர்தல் அரசியலுக்கு வெளியில் மக்கள் எழுச்சியின் மூலமாகத்தான் முறியடிக்க முடியும் வீழ்த்தப்பட முடியும் என்பது தான் அரசியல் அறிவியல் போதிக்கின்ற உண்மை.
படிக்க:
♦ நிர்மலா சீதாராமன் எட்டாவது பட்ஜெட் யாருக்கானது?
♦ கனிம வளங்கள்: கொள்ளையோ கொள்ளை!
எனினும் தேர்தல் காலத்திலேயாவது ஓட்டுகளை பெறுவதற்காக இப்படிப்பட்ட அறிவிப்புகள் வரும் என்று நம்புகிறார்கள் ஆனால் நாட்டின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் பொருளாதாரத்தையும் ஒட்டுமொத்தமாக ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கைகளில் ஒப்படைத்துள்ள ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலானது ஒருபோதும் மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்காது.
விதிவிலக்காக தான் ஆளுகின்ற மாநிலங்களில் சில திட்டங்களை அறிவித்தாலும் அவையும் கூட ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கீழ் இயற்கை வளங்களை கொள்ளையடித்து செல்வதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குகின்ற வசதிகளை பெருக்குவதும் ஒரு சில தரகு முதலாளிகள் நலனை உயர்த்தி பிடிப்பதுமாகவே உள்ளது.
இந்த சாராம்சத்தில் இருந்து தான் இந்திய ஒன்றியத்தில் பட்ஜெட்டை நாம் அணுக வேண்டும். அதில் உள்ள அம்சங்கள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டு ஒரு சிலவை நல்லது ஒரு சிலது கெட்டது என்று பிரித்துப் பார்ப்பது அரசியல் பாமரத்தனம் ஆகும்.
எனினும் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் உருவான 70களில் நாடாளுமன்றத்திற்குள் அப்போது ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியை அம்பலப்படுத்துவதோ அதன் அரசியல் பொருளாதாரம் பண்பாட்டு நடவடிக்கைகளை மக்களுக்கு அறியப்படுவதோ இயலாத நிலை இருந்தது என்பதும் உண்மைதான்.
தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளடக்கமானது பாசிசம்× பாசிச எதிர்ப்பு என்று மாறியுள்ள சூழலில் வெங்கடேசன் போன்றவர்களின் குரல் நாட்டின் உண்மையான நிலைமையும் ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்க நினைக்கின்ற இந்து ராஷ்ட்ரத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு அம்சங்களின் உள்ளடக்கத்தை அம்பலப்படுத்துவதாகவும் உள்ளது என்ற அளவில் அதனை பயன்படுத்த வேண்டும்.
- கணேசன்.







இயற்கை வளங்களை பாதுகாக்க தேர்தல் மட்டுமே போதாது!
இடதுசாரி எம்பி சு வெங்கடேசன் 2026 தமிழக சட்ட சபை தேர்தல் நேரம் என்பதால் முன்கூட்டியே ஒன்றிய பட்ஜெட்டில் சில சலுகைகளையும் உரிமைகளையும் தருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தார் அவர் எதிர்பார்ப்புக்கு நேர் விரோதமாக தமிழக மக்களுக்கு வஞ்சகம் செய்து இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் சூறையாட மோடியும் நிர்மலா மாமியும் பட்ஜெட்டில் திட்டம் அறிவித்துள்ளார்கள்