அரியமங்கலம் கிராமத்தில் ஆதிக்க சாதிவெறி ஆணவக் கொலைக்கு பலியான வைரமுத்து!
குடும்பத்தினருடன் மக்கள் அதிகாரம் தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்!
வைரமுத்து ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர்.
அப்பா சகோதரிகள் அனைவரும் பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
சுமார் பத்து ஆண்டுகளாய் அதே ஊரில் வசித்த மாலினியை காதலித்து வந்தார் வைரமுத்து, காதலித்த பெண்ணின் தாயார் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் தந்தை ஆதிதிராவிட உறுப்பினர் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்களோடு வாழ்ந்ததாக சொல்கிறார்கள்.
மாலினியும் வைரமுத்துவும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்வதில் தந்தைக்கு விருப்பம் இருந்தது. ஆனால் தாயோ தன் மகளை இன்னொரு தலித்துக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று ஆவேசமாக மிரட்டினார்.

கடந்து எட்டாம் தேதி வைரமுத்துவின் குடும்பத்தினர் இது பற்றி காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டு 12 ஆம் தேதி விசாரணை செய்து வைரமுத்துவுடன் காதலி மாலினியை அனுப்பி வைத்து திருமண ஏற்பாட்டுக்கும் பேசியிருந்தனர். இனி எந்த வித தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்றும் காவல்துறையினர் பெண்ணின் தாயையும், உறவினர்களையும் அறிவுறுத்தி எச்சரித்த நிலையில்…
கடந்த செப்டம்பர் 15 தேதி அன்று இரவு 10.30 மணிக்கு இருட்டான பகுதியில் இந்த படுகொலை நடத்தப்பட்டுள்ளது.
இந்த படுகொலைக்குப் பிறகு தலித் பிரிவில் நான்கு இளைஞர்களையும் பெண்ணின் தாய் மற்றும் சகோதரரையும் கைது செய்து உள்ளது காவல்துறை.
இரவு 10:30 மணி அளவில் பதுங்கி இருந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வைரமுத்துவை வண்டி ஓட்டிக் கொண்டிருந்த பொழுது முதலில் கையில் வெட்டி உள்ளனர். பிறகு இன்னொரு கையிலும் வெட்டி உள்ளனர் உடனடியாக வெட்டுப்பட்ட கைகளுடன் வண்டியை விட்டு ஓடும் பொழுது காலில் வெட்டி பிறகு கழுத்தில் வெட்டி உள்ளனர்.

வைரமுத்துவை கொலை செய்வதற்காக கையாண்ட முறைகள் என்பது நமக்கு சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தொழில் முறை கொலை கிரிமினல் தான் இப்படி வெட்டுவார்கள் எனவே இதில் காவல்துறை கடமைக்கு வழக்கு போட்டு விட்டோம் என்றில்லாமல் சம்பவங்களை முறையாக புலன் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை அதன் பின்னணியை காரணங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
மேலும் பாதிப்புக்கு உள்ளான குடும்பத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மேற்படி வழக்கினை விரைந்து முடிக்க தனிச் சிறப்பான முறையில் விசாரணை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
படிக்க: தொடரும் ஆணவப் படுகொலைகள்: சட்டரீதியாக மட்டுமே பாதுகாப்பு கிடைக்குமா?
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணத் வகையாக ரூபாய் 50 லட்சமும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்ந்து அதிகரித்து வரும் ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு
கிராமங்கள் தோறும் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் சாதி தீண்டாமை ஒழிப்பை பாடத்திட்டமாக சேர்க்க வேண்டும்.
சாதி வெறி சங்கங்களை தடை செய்ய வேண்டும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்
சாதி மறுத்து திருமணம் செய்பவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்குவதோடு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரப்புரை இயக்கங்களை மக்கள் அதிகாரம் மக்களிடம் மேற்கொண்டு வருகிறது.
தகவல் :
மக்கள் அதிகாரம்
மயிலாடுதுறை மாவட்டம்.
தொடர்புக்கு : 96003 62533.








இதற்கு முன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் நெல்லையில் வைத்து ஆணவப் படுகொலை செய்யப்பட்டு ரத்த ஈரம் கூட இன்னும் காயவில்லை. ஆம், 51-வது நாளிலேயே மயிலாடுதுறை மாவட்டம் அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிகல் இன்ஜினியர் வைரமுத்து ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பெரியார் பிறந்த மண்; சமூக நீதி மண்; திராவிட மாடல் மண்… என்றெல்லாம் வெட்டித்தனமான பம்மாத்து வார்த்தைகளை பயன்படுத்துவதில் எவ்வித பயனும் இல்லை.
தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் கொலைபாதக குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை முதற்கொண்டு வழங்கும் வகையில் கடுமையான அவசர சட்டத்தினை தமிழ்நாடு அரசாங்கம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். முதல் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பாடப்பிரிவுகளில் சாதி தீண்டாமை ஒழிப்பு தொடர்பான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு நுழைக்கப்படல் வேண்டும். பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு தனித்தனி ஆசிரியர்கள் நியமிப்பது போல் இதற்கென ‘பகுத்தறிவு ஆசிரியர்’ என்ற பணி நியமனங்களை துவக்கப்பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை நியமனம் செய்யல் வேண்டும். சாதி தீண்டாமை மூடநம்பிக்கைகள் ஒழிப்பு தொடர்பான கருத்துக்கள் குழந்தை பருவத்திலேயே, இளம் பிராயத்திலேயே கற்பிக்கப்பட வேண்டும். மற்ற வகையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நேரடியாகச் சென்று துக்கம் விசாரித்ததோடு
சில முன்மொழிவுகளையும் வெளிப்படுத்தி இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களும் பாராட்டத்தக்கவை. மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
👍