தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இந்தியா கூட்டணி சார்பில், ”பிரதமராக உங்களைத் தேர்ந்தெடுக்கின்றோம், எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என்று இந்தியா கூட்டணி கோரிக்கை விடுத்ததாகவும் நிதீஷ் குமார் அதனை மறுத்து விட்டதாகவும்” ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்று ஊடகங்கள் கூறுகின்ற தியாகி என்பவர் முன் வைத்துள்ளார்.

நாட்டின் பிரதமராவதற்கு கிடைத்த வாய்ப்பை ’தியாகம்’ செய்துவிட்டு மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவதற்கு தனது கட்சியின் ஆதரவை கொடுத்துள்ள நிதிஷ்குமார் தியாகியாகியுள்ளார் என்பதை அவர் கட்சியின் தியாகி நமக்கு கூறுகிறார்.

பல்டி ராம் என்ற பெயருடனும், பல்டி மாமா என்ற பெயருடனும் பீகார் அரசியலில் மட்டுமின்றி, நாடு தழுவிய அளவில் அம்பலமாகி முதலாளித்துவ ஊடகங்களாலேயே காறி துப்பப்படுகின்ற நிதிஷ்குமார் யோக்கிய சிகாமணியை போல வலம் வந்து கொண்டிருக்கிறார்.

’அமைச்சரை மிஞ்சிய ராஜ விசுவாசி’ என்று அந்த காலத்தில் பழமொழி இருந்ததைப் போல இந்தியாவின் மன்னர் என்ற கருதிக் கொண்டு, கடந்த பத்தாண்டுகளாக பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகின்ற மோடியை NDA கூட்டத்தின் போது தலைவராக தேர்வு செய்ததை ஆதரித்து பேசிய நிதிஷ்குமார், ”ஞாயிற்றுக்கிழமை வரை நீங்கள் ஏன் காத்திருக்க வேண்டும்/ இன்றே நீங்கள் பிரதமராக வேண்டும்’ என்று வாங்கிய காசுக்கு மேலே கூவியுள்ளார்.

இதுபோன்ற கழிசடை அரசியல் பேர்வழியைதான் சோசலிச தலைவர் என்றும், OBC மக்களின் தலைவர் என்றும் கொண்டாடுறார்கள் என்பது இந்திய போலி ஜனநாயகத்தின் யோக்கியதையாகும். உண்மையில் நிதீஷ் குமார் வடநாட்டு ராமதாஸ் ஆவார். தேர்தலுக்கு தேர்தல் ஆதாயம் கிடைக்கின்ற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பல கோடிகளை வாங்கி தைலாபுரம் தோட்டத்தில் புதைத்து வைக்கின்ற கிழட்டு நரியான பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாசும், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரும் ஒருவகையில் பங்காளிகள் தான்.

இந்த பல்டி ராமின் உண்மையான முகம் என்ன

இந்தியாவில் பாசிச இந்திரா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சி என்ற அவசர நிலையை எதிர்த்து போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களின் அரசியலை பார்த்து பொது வாழ்க்கைக்கு வந்தவர் தான் திருவாளர் நிதிஷ்.

பீகாரில் இவருக்கு சமகாலத்தில் அரசியலுக்கு வந்த லாலு பிரசாத் உடன் இணைந்து எமர்ஜென்சி காலத்தில் நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியதால் பீதாரில் பிரபலமானார். எமர்ஜென்சிக்கு பிறகு நடந்த 1977 தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராக நிதிஷ் தேர்வு செய்யப்பட்டார்.

லாலு பிரசாத் யாதவ் பீகாரில் பெரும்பான்மையினரான யாதவர்களின் பிரதிநிதியாக இருப்பதால், பிற மேல் சாதிகளான குர்மிகளின் பிரதிநிதியாக தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழலில், போலி சோசலிஸ்டான ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் இணைந்து சமதா கட்சி என்ற ஒரு கட்சியை உருவாக்கினார். பிறகு லாலு ஜனதாவிலிருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் ஆரம்பித்தவுடன், மீண்டும் ஜனதா கட்சியுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவரானார்.

பீகாரில் நிலவுகின்ற வறுமைக் கொடுமை மற்றும் குர்மி, யாதவர்களின் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகின்ற இடதுசாரிகளையும் தலித் மக்களையும் ஒழித்துக் கட்டுவதற்கு என்று உருவாக்கப்பட்ட ஆதிக்கசாதி கொலைக் குழுக்களான ரண்வீர் சேனா போன்ற அமைப்புகள் நிதீஷ் குமாரை ஆதரிக்கின்றன.

எமர்ஜென்சி என்ற அவசர நிலையை எதிர்த்து அரசியலுக்கு வந்த சோசலிசவாதி என்று கூறப்படுகின்ற போலி சோசலிஸ்டான திருவாளர் நிதிஷ்குமார் 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. குஜராத் கலவரங்களுக்கு காரணமே மோடி தான் என்று கடுமையாக பிரச்சாரம் செய்த நிதிஷ்குமாருக்கு, பிரதமர் நாற்காலியின் மீது எப்போதுமே ஒரு கண் உள்ளது. இதனால் பாஜக கூட்டணியிலிருந்து விலகி தனியே போட்டியிட்டு 40 தொகுதிகளில் வெறும் இரண்டு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார்.

2024 தேர்தலில் பாசிச பாஜகவுடன் கூட்டு சேர்ந்து பீகாரில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு தற்போது 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்திய அரசியலின் தலைவிதியை தீர்மானிக்கின்ற இடத்தில் உள்ளார்.

2005 ஆம் ஆண்டு முதல் இடையில் சில ஆண்டுகளைத் தவிர பீகாரின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துள்ள நிதிஷ் குமார் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள பலமுறை கட்சி மாறி பல்டி அடித்துள்ளார். இந்த கேடுகெட்ட அரசியல் விபச்சாரியான நிதீஷ் குமாரை வெற்றி பெறச் செய்வதற்கு போலி கம்யூனிஸ்டுகள் மகாத் பந்தன் என்ற அமைப்பை உருவாக்கினார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

வட இந்தியாவில் ’ஆயா ராம் கயா ராம்’ என்று தேர்தலில் அடிக்கடி கட்சி மாறுபவர்களை விமர்சிப்பார்கள். ஒரே வாரத்தில் மூன்று கட்சி மாறிய ஹரியானாவின் ஆயா ராம் என்ற எம்எல்ஏவின் நினைவாக இந்த பழமொழி நிலவுகிறது. இந்த பழமொழி நிதிஷ்குமார் போன்ற பச்சோந்திகளுக்கு பொருத்தமானது தான். இத்தகைய கேடுகெட்ட பதவி வெறியர்களை தாஜா செய்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கருதினால் அதைவிட கேடுகெட்ட செயல் வேறு எதுவுமே இல்லை.

தேர்தல் அரசியலில் செயல்படுகின்ற கட்சிகளின் ரிஷிமூலம், நதிமூலத்தை பார்க்க கூடாது, பாசிச அபாய காலகட்டத்தில் அவர்களின் நடவடிக்கை எப்படி உள்ளது என்பதை வைத்து தான் அவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று பேசுவது சந்தர்ப்பவாதமே ஒழிய மார்க்சிய லெனினியம் அல்ல.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைத்து ஐக்கிய முன்னணி ஒன்றை கட்ட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன என்ற போதிலும், அது பற்றிய ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபடுவதற்கு பாஜகவிற்கு எதிரான கட்சிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

பாசிசத்திற்கு தகுந்தாற் போல் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வடிவமும், உள்ளடக்கமும் மாறியுள்ளது என்பதை அவதானிக்காமல், தற்போதும் போலி ஜனநாயக அரசு வடிவமே நீடிப்பதாக கருதிக் கொண்டு, எப்போதும் போலவே தேர்தல் கூட்டணி, பேரங்கள் மற்றும் வழக்கமான பிரச்சார முறைகள் ஆகியவற்றை மட்டுமே மேற்கொள்கின்றனர்.

படிக்க:

♦ கொலைகார, கொள்ளைக்கார சந்திரபாபு நாயுடு, மோடியுடன் கைகோர்ப்பது ஏன்?

♦ பழங்குடிகளுக்கு 24,000 கோடி ஒதுக்கீடு! தேர்தலில் ஓட்டுப் பொறுக்கும் பாஜகவின் தந்திரம்!

பீகாரின் பெரும்பான்மை மக்கள் வேலையில்லா திண்டாட்டத்திலும், வறுமையிலும் பசி கொடுமையிலும் தள்ளாடிக் கொண்டிருக்கும் போது அதனை மையப்படுத்தி பாசிசத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் உள்ள உறவை இணைத்து பிரச்சாரமாக கொண்டு சென்றிருந்தால் நிதீஷ் குமாரை வீழ்த்தி இருக்க முடியும். ஆனால் தேர்தல் வரம்புக்கு அப்பாற்பட்டு பிரச்சாரம் எதுவும் பீகாரில் நடக்கவில்லை.

2014 முதல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஆர்எஸ்எஸ் மோடி கும்பல், மீண்டும் 2019 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதன் மூலம் பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவ எத்தனித்தது. தற்போது 2024 நாடாளுமன்ற சூழலில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.

இதனை எதிர்த்து முறியடிப்பது ஒன்றும் முடியாத காரியம் அல்ல! மோடியின் அலை, இந்து மதவெறி பிரச்சாரங்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் போன்ற அனைத்தையும் தாண்டி மக்கள் தேர்தல் அரசியலில் பாசிச பாஜகவிற்கு பொருத்தமான பாடத்தை புகட்டியுள்ளனர்.

இந்த மக்கள் மனநிலையையும், பாசிச பாஜகவிற்கு எதிராக எழுந்துள்ள இந்த அரசியல் உந்து சக்தியையும் பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு தொடர்ந்து களமாடுவோம்.

பாசிசம் என்பது அரசியல் மேல்கட்டுமானத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு ஆட்சி மாறி வேறொரு ஆட்சி வருவது என்று சுருக்கமாக புரிந்து கொள்ளக்கூடாது. பாசிசத்தின் அரசியல் பொருளாதார, பண்பாட்டு அடிப்படைகளை புரிந்து கொண்டு பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற ஐக்கிய முன்னணி ஒன்றை நிறுவுவதை நோக்கி செயல்படுவதும், அந்த ஐக்கிய முன்னணியின் மூலமாக பாசிஸ்டுகளை முறியடித்து விட்டு ஜனநாயக கூட்டரசு ஒன்றை அமைப்பதே இன்றைய காலகட்டத்தில் முதன்மை பணியாக மாறியுள்ளது.

மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here