பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் செயல் வெட்கக்கேடானது!

நமது கேள்வி என்னவென்றால் பகல்காம் தாக்குதலுக்குக் காரணம் பாகிஸ்தான் அரசு என சந்தேகம் மட்டுமே உள்ள நிலையிலேயே பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கக் கூடாது எனில் கல்வான் பகுதியில் நமது நாட்டு இராணுவ வீரர்கள் 20 பேரை கொன்ற சீன அரசின் அதிபரை ஆரத்தழுவுகிறாரே மோடி. அதுவும் தேசத்துரோகம் தானே.

0
பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காத இந்திய வீரர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டில் நடந்து வருகிறது. அங்கு கடந்த 14ஆம் தேதி ஞாயிறு அன்று நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்பொழுது இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துள்ளனர். அத்துடன் நிற்காமல் கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆர்எஸ்எஸ் பாஜகவினரை போல, தேசவெறி – மதவெறியூட்டும் வகையில் பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார்.

பொதுவாக விளையாட்டு என்பது விளையாடும் வீரர்களின் உடல் நலன்,  மனநலனை மேம்படுத்துவதற்கானதாக, விளையாடுபவர்கள் மற்றும் பார்வையாளர்களின் மகிழ்ச்சிக்கானதாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக விளையாட்டு என்பது மக்களுக்கிடையில், மதம் – மொழி – இனம் –  நாடு என்ற வேறுபாடுகளை கடந்து மக்களுக்கு இடையில் நட்புறவை வளர்ப்பதற்கானது. விளையாட்டுப் போட்டிகளை இப்படித்தான் பார்க்க வேண்டும்.

எதிர் அணி வீரர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் ஒரு மரபு. இதை செய்யாமல் புறக்கணித்தது என்பது வெட்கக்கேடானது

பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்காமல் இருந்தது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட பொழுது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் துணை நிற்கிறோம். அவர்களது குடும்பத்தினருடன் நாங்கள் நிற்கிறோம்”… “நான் செய்தியாளர் சந்திப்பில் கூறியது போல ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற எங்கள் துணிச்சலான ஆயுதப்படைகளுக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிக்கிறோம். மேலும் அவர்கள் தொடர்ந்து நம் அனைவரையும் ஊக்குவிப்பதால், எங்களால் முடிந்தால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களை  ஊக்குவிக்க நாங்கள் முடிந்தது அனைத்தையும் செய்வோம்.” என்று கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதல், பஹல்காம் தாக்குதல் போன்றவற்றை பயன்படுத்தி, அதாவது நமது ராணுவ வீரர்களின் மரணத்தை பயன்படுத்தி பாஜகவினர் எப்படியெல்லாம் மதவெறியூட்டி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக புல்வாமா தாக்குதலை பயன்படுத்தித்தான், மக்களை மத ரீதியாக பிளந்து 2019 ஆம் ஆண்டில் பாஜகவினர் ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

பாஜகவினருக்கு எப்பொழுதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஏதேனும் பிரச்சனைகளை கிளப்பி விடுவது அவர்களின் வழக்கமான நடைமுறையாக உள்ளது.

பெங்களூரு வாக்காளர் பட்டியலில் மோசடி செய்தது, பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் மோசடி செய்வது போன்ற விஷயங்கள் வெளியில் வந்து பாஜகவின் பெயரும் மோடியின் பெயரும் நாறிக் கொண்டிருக்கிறது. வாக்குகளை திருடியதன் மூலமாகத்தான் பாஜகவால் 2024ல் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முடிந்திருக்கிறது என்ற காங்கிரசின் அதிரடியான பிரச்சாரம் மக்களிடம்  சென்றடைந்து “வாக்குத்திருடன் மோடி” என்ற முழக்கம் நாட்டு மக்களிடையே இப்பொழுது பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்தப் பிரச்சனையிலிருந்து  மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்குத்தான் இப்படிப்பட்ட ஒரு முயற்சியை பாஜக செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும் படிக்க:

தேர்தல் திருட்டு: எஞ்சியிருந்த தேர்தல் ஆணையம் மோடி, அமித்ஷாக்களின் கோவணங்களையும் உருவி எடுத்து விட்டார் ராகுல்!

அரங்கெங்கும் ஒலித்த ஜெய் ஶ்ரீ ராம் கோஷம்; அஹமதாபாத் ரசிகர்கள் செய்தது அநாகரிகத்தின் உச்சம்!

ஏனெனில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அமித்சாவின் மகன் ஜெய்ஷாதான்  உள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் “இந்திய அரசாங்கமும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் ஒன்றிணைந்து நிற்கின்றன” என்று தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

இந்திய அணியின் நடத்தையை குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பொழுது “இது ஒரு இழிவான மனநிலை. அவர்களின் தலைவராக பிரதமர் மோடி இருக்கும் வரை இது தொடரும். உரையாடல் மூலம் உலகத்துடன் ஒத்துழைக்க விரும்பும் ராகுல் காந்தி போன்ற நேர்மையான மனநிலையுடன் கூடிய நல்லவர்களும் இந்தியாவில் உள்ளனர். ஆனால் நீங்கள் இங்கே இஸ்ரேலை போல மாற்ற முயற்சிக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியை குறிப்பிட்டு பாஜகவின் செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி “இந்தியாவின் எதிரிகள் பாராட்டுகளை பொழிவதிலிருந்து காங்கிரஸ் பாரதத்திற்கு எதிரான ஒரு கட்சி என்பது உங்களுக்குத் தெரியும்” என்கிறார். அதேபோல மற்றொரு பாஜக தலைவரான ஷெஹ்சாத் பூனவாலா ‘ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்தியாவை வெறுக்கும் அனைவரும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸில் ஒரு கூட்டாளியை காண்கிறார்கள்…. மும்பை தாக்குதல், புல்வாமா தாக்குதல், 370 வது பிரிவு நீக்கம், சர்ஜிகல் ஸ்ட்ரைக், பகஹல்காமில் நடந்த சம்பவங்களில் காங்கிரஸ் எப்பொழுதும் பாகிஸ்தானின் கதையை எதிரொலிக்கிறது’ ‘ராகுல் காந்தி பாகிஸ்தானின் செல்லம். சாகித் அப்ரீடியும் பாகிஸ்தான் மக்களும் ராகுல் காந்தியை தங்கள் தலைவராக கூட ஆக்க முடியும்’ என்கிறார். ‘பாரதத்தின் எதிரிகள் உங்களைப் பாராட்ட தொடங்கும் போது உங்கள் விசுவாசம் எங்கே இருக்கிறது என்பது  இந்திய மக்களுக்கு தெரியும்’ என்கிறார் பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா.

இவ்வளவு தேசபக்தி உள்ளவர்கள் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்க மோடி அரசு அனுமதித்தது ஏன்?  என்று கேட்க வேண்டும். நமது கேள்வி என்னவென்றால் பகல்காம் தாக்குதலுக்குக் காரணம் பாகிஸ்தான் அரசு என சந்தேகம் மட்டுமே உள்ள நிலையிலேயே பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கக் கூடாது எனில் கல்வான் பகுதியில் நமது நாட்டு இராணுவ வீரர்கள் 20 பேரை கொன்ற சீன அரசின் அதிபரை ஆரத்தழுவுகிறாரே மோடி. அதுவும் தேசத்துரோகம் தானே.

இதற்கு முன் இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் தங்கள் அணியை போட்டிகளில் பங்கேற்காமல் திரும்ப பெற்றதுண்டு. அது அரசுகளின் நடவடிக்கை. அது பல்வேறு விளையாட்டுகளில் வெவ்வேறு நாடுகளுக்கு இடையில் நடந்துள்ளது. ஆனால்,ஒன்றாக விளையாடிவிட்டு கைகுலுக்காமல் வருவது எந்த ஒரு விளையாட்டும் உருவாக்க முனையும் சகோதரத்துவ உணர்வுக்கு எதிரானது.

விளையாட்டு விதிகளில் கைகொடுத்தாக வேண்டும் என்று இல்லை என சுனில் கவாஸ்கர் போன்றவர்கள் அற்பத்தனமாக பேசி சமாளிக்க முயன்றாலும் கைகுலுக்காமல் இருந்த நடவடிக்கை என்பது சர்வதேச  விளையாட்டு அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரும் தலைகுனிவே. கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ஆட்டம் இழந்து வெளியில் வந்து கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர்களை நோக்கி “ஜெய் ஸ்ரீ ராம்…, ஜெய் ஸ்ரீ ராம்…..” என்று மதவெறி கூச்சல் எழுப்பிய செயலை போல இதுவும் ஒரு வெட்கக்கேடான, அவமானகரமான செயலாகும் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here