“எல்லாரும் கெட்டவங்க, அதுல ஒருத்தன் ரொம்ப கெட்டவன்” மங்காத்தா படத்தின் one line . அதையே கொஞ்சம் தலைகீழாக போட்டால் “எல்லாரும் நல்லவங்க, அதுல ஒருத்தன் ரொம்ப நல்லவன்” அவர் தான் professor என்று ஒரு web-series இருக்குமானால் அதுதான் Money Heist. Heist படங்கள் என்பது சினிமாவில் ஒரு genre வகைமாதிரி, கொள்ளையடிப்பதே கதையின் அடிநாதம். குறிப்பாக வங்கிக் கொள்ளைகள் பிரதானமாக காட்டப்படும். உலகளவில் “Heist” வகை படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. “மங்காத்தா” ஒரு heist வகைப்படம்.

“மங்காத்தா” படம் வந்த நேரம் “நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனா நடிக்கிறது” என்று தல சொல்லும் வசனத்துக்கு திரையரங்கே அதிர்ந்தது. முதன்முதலாக தமிழில் ஒரு கெட்டவன் திரையில் கொண்டாடப்பட்டான் அவன் பெயர் விநாயக் மகாதேவ். இவன் ஏன் இவ்வளவு கெட்டவன் என்பதற்கு flash back காட்சிகள் கூட இல்லை. அதைத்தாண்டியும் மக்கள் கொண்டாடி தீர்த்தார்கள். “பூவே உனக்காக” ரசித்த எளிமையான இதயங்கள், எப்படி “மங்காத்தாவை” கொண்டாடின, ஒரு வேளை கால மாற்றம், உலகமய தாக்கம், திடீர் பணக்காரர்கள், இந்தியாவில் பணக்காரர்களுக்கும், நடுத்தறவர்கத்துக்கும் இடையில் முளைத்த upper middle class வர்க்கம் என்னும் பல கரணங்கள் இருக்கலாம் என்று நினைத்தேன். நமக்குள் இருக்கும் விநாயக் மகாதேவ் படத்தை கொண்டாடி இருக்கிறானோ என்றே நினைத்தேன்.

நவம்பர் 8 2016 பணமதிப்பிழப்பு பற்றிய அறிவிப்பு வந்த நாள். எளிய மக்கள் பணத்தை மாற்ற வரிசையில் நிற்கிறார்கள். சூப்பர்ஸ்டார்கள் “புதிய இந்தியா பிறந்துவிட்டது” என்று கொண்டாடித்தீர்த்தார்கள். வரிசையில் அவர்களுக்கு நின்று பழக்கம் இல்லை. ஷூட்டிங் போனால் குடைபிடித்து கொண்டிருக்கும் அல்லக்கைகள் இருப்பார்கள். அவர்களுக்கு வரிசையின் வலி பற்றி தெரியுமா என்ன? கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். ஒரு பக்கம் சில VIP க்கள் முன்னதாகவே பணத்தை எல்லாம் மாற்றிவிட்டார்கள் என்று செய்தி வந்தது. எப்படியும் சிறிய தொழில் செய்தவர்களே, சாமானியர்களே பாதிக்கப்பட்டார்கள்.
இது ஒரு பக்கம்,

வங்கியில் கடன் வாங்கும்பொழுது சாமானியனே பாதிப்புக்கு உள்ளாகிறான். விவசாய கடன் காட்டாமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பல. corporate நிறுவனங்களுக்கு மட்டும் வங்கிகள் தொடர்ந்து கடனை ரத்து செய்துகொண்டே உள்ளன. அதற்குண்டான பணத்தை எளிய மனிதர்களின் PPF வட்டி விகிதத்தை குறைத்தோ, இல்லை கடனுக்கு உண்டான வட்டியை கூட்டியோ வசூல் செய்கின்றன. நமக்கெல்லாம் கேள்வி கேட்க ஆசை தான், யாரைக்கேள்வி கேட்க, கேள்வி கேட்டால் பதில் கிடைக்குமா என்ன? அப்படி இருக்கும் அதிகார அமைப்பான வங்கிக்கு, எதிராக ஒரு கும்பல் உள்ளே நுழைந்தால். சாமானியனால் செய்ய முடியாததை செய்தால், அந்த கும்பலுக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் மாறுவார்கள். அதுவே “heist” படங்கள் பெரும்பாலும் ஜெயிப்பதற்கான உளவியல்.

ஒரு வங்கியை எளிமையாக கொள்ளையடித்துவிட முடியுமா? வங்கியை கொள்ளையடித்தால் பிடிபட்டால் பின்விளைவு என்ன? வங்கி என்பது சொத்துக்களை கொண்ட வர்க்கத்தின் சேமிப்பு கிடங்கு. அதாவது வங்கி கொள்ளையடிக்கப்பட்டால் காப்பற்ற போலீஸ், ராணுவம், அரசு, மீடியா எல்லாம் வரும். வங்கியை கொள்ளையடிப்பது சாதாரண விடயமா, தொழில்நுட்ப ரீதியாக இருக்கும் செக்யூரிட்டியை உடைக்கவேண்டும், அதை காவல் காப்பவர்களை மீறி உள்நுழைவது என்னமோ சவாலான விடயம் தான். ஒரு பக்கம் சாகச மனநிலையும், புத்தி கூர்மையும் வேண்டும், அதைத்தாண்டி ஒரு அசாதாரண துணிவு வேண்டும். இது எல்லாம் “heist” படங்களில் பார்க்க முடியும். அதைத்தாண்டி சாமானியன் குதூகலிப்பதற்கான இடங்களும் உண்டு. அரசு மற்றும் வங்கி தாக்கப்படும்பொழுதுகளில் மனதில் அவனுக்குள் மெய் சிலிர்க்கிறான். கொஞ்சம் சில்லறையை சிதற விடுகிறான். எப்பொழுதும் தன்னைக்காக்க யாரோ வருவார்கள் என்பதே கடவுள் நம்பிக்கைக்கான உளவியல். அதே உளவியல் கொள்ளைக்கார கும்பலை கடவுளாக பார்க்கிறான்.

“Heist” படங்களை அதிகாரவர்க்கங்கள் மேல் எழுப்பப்படும் கேள்விகளாக பார்க்க முடியுமா? வேலை இழப்பு, வறுமை, வேலை ஆட்குறைப்பு இதெல்லாம் உலகமயத்தின் குழந்தைகள். ஒருவனுக்கு வேலை இழப்பா, அது அவனுடைய பிரச்சனை என்று சுருக்கி பார்த்துவிட முடியுமா? எனக்குத்தெரிந்து 2009 இல் சத்யம் ஸ்கேண்டலில் மாட்டிக்கொண்டது. அந்த சமயம் வேலைபார்த்த பலர் வேலை இழந்திருக்கலாம். கேம்பஸ் தேர்வில் தேர்வான மாணவர்கள் நடுரோட்டில் நின்று இருக்கலாம். அது தனிநபர்கள் பிரச்சனையாக சுருக்கி பார்க்கமுடியாது அல்லவா. அது என்ன பிரச்சனை என்று புரிந்துகொள்ள அரசியல் பொருளாதாரம், மூலதனம் எல்லாம் கற்க வேண்டும். எளிமையாக சொன்னால் மார்க்சிய பொருளாதாரம் கற்றால் மட்டுமே முதலில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அந்த அரசியல் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது பெரிய process. முதலில் கற்று, புரிந்துகொண்டு, மக்களிடம் பேசி ஒன்று திரட்ட வேண்டும். அப்படியிருக்க மார்க்சியம் நிரந்தர தீர்வு, அதைதெரிந்து கொள்ள, அதை செயல்படுத்த பெரிய உழைப்பு வேண்டும். அதிகார வர்க்கத்தை கேள்விக்கு உட்படுத்தி கேள்வி கேட்டு அதிகாரத்தை பிடிப்பது மார்க்சிய முறை, அதிகாரவர்க்கத்தின் சொத்துக்களை கொஞ்சம் சூறையாடிவிட்டு, அதுவே அதிகாரவர்க்கத்தின் குரலாக மாற்றுவது “heist” படங்களின் அரசியல்.

சிறிய சொத்துக்களை இழப்பதால் அதிகாரவர்க்கம் அசையப்போவதில்லை, மீண்டும் மக்களிடம் சுரண்டி அந்த சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளும். அதனால் “Heist” உண்மையாக நடந்தாலும் அதைப்பற்றி அதிகாரவர்க்கம் பெரிதாக கண்டுகொள்ளாது. உண்மையில் அதுவே மக்களிடம் “Heist” செய்கிறது, கொள்ளையடிக்கிறது. “Heist” கலைவடிவம் என்பதே அதிகாரவர்க்கத்தின் குரல் தான். ஒரு பக்கம் மக்கள் மார்க்சிய பின்னணியில் கற்பதை மடைமாற்றிவிட்டு, சாகசத்தை தீர்வாக வைக்கிறது. இன்னொரு பக்கம் அதிகாரவர்க்கத்தின் மீது குரல் எழுப்பப்படுகிறது என்னும் மாய பெருமிதத்தில் மக்களை குதூகலப்படுத்துகிறது, அப்படியே அவர்கள் அரசியலை காயடிக்கும் வேலையை நீர்த்துப்போகும் வேலையையும் செய்கிறது.

“Money Heist” இந்த லாக் டவுன் காலகட்டத்தில் அதிகம் கொண்டாடப்பட்ட web-series. கொள்ளையடிக்கும் கும்பல் வெறும் சாகச கும்பலாக மட்டுமில்லாமல், மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள். கொள்ளையை பிளான் செய்யும் professor இருப்பதிலேயே ரொம்ப நல்லவன். வெறும் சாகசங்கள் தாண்டி, எமோஷனல் மற்றும் உணர்வுபூர்வமாக அந்த கதாபாத்திரங்கள் நம் நெஞ்சை நனைக்கின்றன. ஒரு பக்கம் புரட்சியாளர் போல professor பேசுகிறார், பேசுவதில் நியாயம் உண்டு தான். ஆனால் தீர்வு இதுவல்லவே. மக்களை கடத்தினால் வரும் stock-home syndrome நமக்கும் வருகிறது. அங்கே பிணையக்கைதிகளுக்கு அவர்களை பிடிப்பதை போல நமக்கும் பிடிக்கிறது. “bella ciao” பாடல் வேறு, நமக்குள் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. அனைவரும் கெட்டவர்களாக இருந்து, வெறும் சாகசம் மட்டும் செய்த மங்காத்தாவே இங்கு கொண்டாடப்பட்டது. அப்படியிருக்க எமோஷனல் நெருக்கம் கொண்ட “Money Heist” ஐ கொண்டாடுகிறான் ரசிகன்.

ஆனால் அது வெறும் எமோஷனல் நெருக்கம் மட்டுமல்ல, நம் அரசியல் அறிவை காயடிக்கும் நெருக்கம். நிரந்தர தீர்வைத்தாண்டி, சாகசங்கள் நோக்கிய பயணம். இந்திய கம்யூனிஸ்ட் காட்சிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு தொடர் பிடித்து இருக்கிறது, அந்த கட்சிகளில் எல்லாம் மார்க்ஸை விட சே குவேரா முன்னிறுத்தபடுவது தற்செயலானதா?

நன்றி,

முகநூல் பதிவு
தோழர் கார்த்திக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here