திர்பார்த்தப்படியே 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி, மக்கள் தலையில் பேரிடியாக இறக்கியுள்ளது பாசிச பாஜக கும்பல்.

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு ஜூன் 16 முதல் அமலுக்கு வந்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பழைய மின் கட்டணமே தொடர்கிறது. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25-லிருந்து ரூ.4ஆக உயர்ந்துள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கான மின் கட்டணம் ரூ.5.40-ல் இருந்து ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. 301 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின் கட்டணம் ரூ.6.80-ல் இருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வீட்டு மின்சார உபயோக நுகர்வாளர்களுக்கு ரூ 300 முதல் ரூ 500 வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை கையாளும் மின்வாரியம், மின் உற்பத்தி – பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மின் தொடரமைப்பு கழகம் (டான்டிரான்ஸ்கோ) உள்ளிட்ட நிறுவனங்களின் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின்வாரியம் உள்ளது. இதன் காரணமாக, கடந்த 2022-ல் மின்கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது.

2026-27 ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடரும் மின் கட்டண உயர்வால் யாருக்கு லாபம்?

உதய் ஏன் வந்தது? யாருக்கு லாபம்?

இந்தியாவில் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்களின் மொத்தக் கடன் 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்தக் கடன்களிலிருந்து மின்விநியோக நிறுவனங்களை விடுவித்து, அவற்றை சிறப்பாக இயங்கச் செய்யவே உதய் திட்டத்தை வடிவமைத்திருப்பதாக இதனை 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய போது இந்திய ஒன்றிய பாஜக அரசு தெரிவித்திருந்தது.

தனியார் மின் நிறுவனங்கள் அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், மாநில மின்வாரியங்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அவற்றை வாங்க முடிவதில்லை. அதனால் தனியார் மின் நிறுவனங்களால் அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து அவை, வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடிவதில்லை. அதனால், அந்தக் கடன்கள் வங்கிகளுக்கு சுமையாக மாறுகின்றந. ஆகவே, மின் வாரியங்களின் நிதிநிலையை சீர்செய்து, மின்சாரத்தை வாங்கவைத்து தனியார் மின் நிலையங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை செலுத்த வைப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இது உண்மையில் தனியார் மின்உற்பத்தி நிலையங்களுக்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் உதய் திட்டம்.

உலகின் மூன்றாவது பெரிய மின் உற்பத்தி நாடான இந்தியாவில் உற்பத்தியாகின்ற ஆண்டுக்கு 1844 TWh மின்சாரமானது, அனல் மின்சாரம் மற்றும் புனல் மின்சாரம், அணு மின்சாரம், சூரியஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், புதியதாக கொண்டு வரப்பட்டுள்ள புதை படிவ மின்சாரம் ஆகியவற்றின் மூலம் உற்பத்தியாகிறது. இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஆண்டுக்கு 1618 TWh மின்சாரம் இந்தியாவிலேயே நுகரப்பட்டு விடுகிறது.

மீதமுள்ள மின்சாரத்தை ஆசிய நாடுகளுக்கு, குறிப்பாக சார்க் நாடுகளில் மின் ஏற்றுமதி செய்வதையும், நாடு முழுவதும் செயல்படும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் உதய் மின் திட்டம். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தான் இலங்கையில் அதானி குழுமம் மின் உற்பத்தியை துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக விழுங்கி வரும் அதானி, அம்பானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளின் கார்ப்பரேட்டுகள் மின் உற்பத்தி துறையிலும் இறங்கி சார்க் பிராந்தியத்திற்கு தேவையான மொத்த மின்சாரத்தையும் கட்டுப்படுத்துகின்ற அளவிற்கு வளர்ந்து வருகிறது. இது தனியாக எழுத வேண்டிய அம்சமாகும்.

இந்த கார்ப்பரேட்டுகளிடமிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு பொருத்தமாக மாநிலங்கள் சுயேச்சையாக நடத்தி வருகின்ற மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின்வாரியங்களை கடனுக்கு தள்ளியும், ஏற்கனவே வாங்கியுள்ள கடனுக்கு நிர்பந்திக்கின்ற வகையில் உதய் மின் திட்டத்தில் இணையுமாறு 2015 ஆம் ஆண்டிலேயே பாசிச மோடி கும்பல் மாநிலங்களின் மீது மிரட்டல் விடுத்தது.

தமிழகத்தில் அப்போதைய ஆட்சியாளராக இருந்த பாசிச ஜெயா உதய மின் திட்டத்தில் இணைய முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஜெயாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தை ஆண்டு வந்த மோடியின் பினாமி மற்றும் அடிமைகளான பழனிச்சாமி கும்பல் ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்து கொண்டது.

இதன் விளைவுகளை தான் தற்போது மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மின்வாரியம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வரையில் மக்களுக்கு சலுகை விலையில், மானிய விலையில் மின்சாரத்தை வழங்குவது அவர்களின் கடமைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக மின்சாரம், தண்ணீர், உணவுப் பொருட்கள் போன்றவை சேவைத் துறையாக கருதப்படுவதால் அவற்றை லாபமீட்டும் நோக்கத்தில் நடத்தக்கூடாது என்பதுதான் 1950 முதல் 1990 வரை 40 ஆண்டுகளாக இந்திய ஒன்றிய அரசாங்கம் கடைப்பிடித்து வந்த நடைமுறையாகும்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க பொருளாதார கொள்கைகள் அமல்படுத்த துவங்கியது முதல் சேவைத்துறைகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களும், தேசங்கடந்த தொழிற்கழகங்களும் தாராளமாக கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டன. இந்த காலகட்டத்திலேயே தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டது. மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது.

அதன் உச்சகட்ட வளர்ச்சியாக 2014 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய ஆட்சியை கைப்பற்றிய பாசிச மோடி ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தையும் ஒரு சில தேசங்கடந்த தரகு முதலாளிகளான அதானி, அம்பானி போன்றவர்களுக்கு தாரைவார்க்கின்ற கேடுகெட்ட செயலில் இறங்கியதால் மின்வாரியமும், மின் உற்பத்தி துறையும் தப்பவில்லை.

மின்சாரம் தனியார்மயம் என்பதும், சேவைத் துறைகள் அனைத்தும் தனியார்மயம் என்பதும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்படும் கடுமையான தாக்குதலாகும் என்பதைப் பற்றி எமது புதிய ஜனநாயகம் இதழில் 90-கள் முதல் தொடர்ச்சியாக எழுதி வருகிறோம் என்ற போதிலும், தற்போது அதன் விளைவுகளை மக்கள் கொடூரமாக அனுபவித்து வருகின்றனர். இந்த கொடுமையின் விளைவாக தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதும், மின் கட்டண உயர்வு ஜூலை-1 முதல் அமுலாகும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளதாகும்.

மாநிலங்களின் அதிகாரத்தை படிப்படியாக பறித்துக் கொண்டு மின்வாரியங்களை ஒழித்துக் கட்டி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற ஆணையத்தின் கீழ் அனைத்து அதிகாரங்களும் படிப்படியாக கொண்டு செல்லப்பட்ட பிறகு, மின் கட்டண உயர்வுகள் பற்றி தீர்மானிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. அதே சமயம் கட்டாயமாக மின்சார உயர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் உதய் திட்டத்தின் மூலமாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையாகும்.

படிக்க: 

♦ மின்சார சட்ட திருத்த மசோதாவை அனைத்து மக்களும் ஏன் எதிர்க்க வேண்டும்?

♦ மின்சார கட்டண உயர்வு : ஆண்டுக்கு ஒருமுறை இனி ஷாக் கொடுக்க போகிறார்கள்!

இப்படி கூறுவதால் மாநில அரசுக்கு குறிப்பாக திமுக அரசுக்கு எந்த பொறுப்பும் கடமையும் இல்லையா என்ற கேள்வி எழுவதும் இயல்பானது தான். இவ்வாறு மத்திய அரசு விலையை உயர்த்தும் போது, ரேஷன் உரிமைகளை பறிக்கின்ற போது மாநில அரசு தனது தொகுப்பு நிதியிலிருந்து மானியத்தை வழங்கி மக்களுக்கு சுமையை தராமல் பாதுகாத்து வந்தது. ஆனால் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால் வெறும் 27 காசுகள் மட்டும் தான் தமிழகத்திற்கு மீண்டும் நிதியாக கிடைக்கின்ற சூழலில் அனைத்து சுமையையும் மாநில அரசே சுமக்க முடியாது என்பதும் நிலைமையாக உள்ளது.

எனவே, ”மின் கட்டணத்தை உயர்த்தாதே! மக்கள் தலையில் கட்டண உயர்வை சுமத்தாதே! கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஒன்றிய அரசிடம் போராடு!” என்ற முழக்கத்தை முன்னெடுப்போம். இதனுடன் சேர்த்து, ”மின்சாரத்தை அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதை நிறுத்து!, கார்ப்பரேட் கொள்ளைக்கு துணை போகாதே!” போன்ற முழக்கத்தையும் இணைத்து முன்வைத்து போராடுவதே மின் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடிப்பதற்கு தற்காலிக தீர்வாக அமையும். நிரந்தரமாக மின்சாரம் உள்ளிட்ட மக்களின் தேவைகளை மக்களுக்கு கட்டுப்படியாகின்ற விலையில் வழங்குவதற்கு ஜனநாயக கூட்டரசு ஒன்று நிறுவப்படுவது தான் தீர்வாகும்.

  • மாசாணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here