“நடந்து சென்ற டி.எஸ்.பி” சோக கீதம் பாடும் ஊடகங்கள்! – நாம் அனுதாபப்படதான் வேண்டுமா?

டிஎஸ்பி யின் வாகனத்தை பறித்துக் கொண்டு அவர் கிலோமீட்டர் கணக்காக நடந்து செல்ல வைத்தார்; இருசக்கர வாகனத்தில் செல்ல வைத்தார்; சம்பளத்தை நிறுத்தி வைத்தார் என்று  செய்திகள் பகிரப்பட்டு டிஎஸ்பி- யின் மீது பரிவுணர்ச்சியும், எஸ்.பி. மீது காழ்ப்புணர்ச்சியும் உருவாக்கப்படுகிறது.

1
“நடந்து சென்ற டி.எஸ்.பி” சோக கீதம் பாடும் ஊடகங்கள்! – நாம் அனுதாபப்படதான் வேண்டுமா?
டி.எஸ்.பி சுந்தரேசன் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின்

டி.எஸ்.பி -க்கும் எஸ்.பிக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த மோதல் மீடியாவில் பேசு பொருளாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி சுந்தரேசன் தனது அலுவலகத்திற்கு காரில் செல்லாமல் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யது.

இதில் டி.எஸ்.பிக்கு ஆதரவாக பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் களமிறங்கியுள்ளனர். அண்ணாமலையின் நேர்மை நாணயத்தை புரிந்து கொண்டிருப்பவர்கள் அந்த மதிப்பீட்டில் இருந்து இதை அணுகினால், ஒரு வேளை இந்த டி.எஸ்.பி யின் பக்கம் நியாயமே இருந்தாலும் கூட, அது எதிர்மறையான பலனையே தரும் என்பதை அண்ணாமலை பார்க்கிறாரோ இல்லையோ நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணாமலை ஆதரிப்பதாலேயே ஒரு கருத்தை நாம் எதிர்க்க வேண்டும் என்பதோ, அல்லது அண்ணாமலை ஒரு கருத்தை எதிர்ப்பதாலேயே நாம் அதை ஆதரிக்க வேண்டும் என்பதோ அர்த்தமற்றது.

டி.எஸ்.பி யின் வாகனத்தை பறித்துக் கொண்டு அவர் கிலோமீட்டர் கணக்காக நடந்து செல்ல வைத்தார்; இருசக்கர வாகனத்தில் செல்ல வைத்தார்; சம்பளத்தை நிறுத்தி வைத்தார் என்று  செய்திகள் பகிரப்பட்டு டிஎஸ்பி- யின் மீது பரிவுணர்ச்சியும், எஸ்.பி. மீது காழ்ப்புணர்ச்சியும் உருவாக்கப்படுகிறது.

“இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், மணல் கொள்ளை மற்றும் குற்றவாளிகளிடம் பணம் பறிக்கிறார். அவர் ஒரு நேர்மையற்ற அதிகாரி. அவர் தவறான தகவலை எஸ்.பி.,க்கு சொல்கிறார். மக்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள். எஸ்.பி., பாலசந்தர் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை பொது மக்களுக்கே பாதுகாப்பு இல்லை. இந்த அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். நான் சஸ்பெண்ட் ஆனாலும் கவலைப்படவில்லை. இதற்கு பின்னர் இரண்டு உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் உளவுத்துறை ஐஜி செந்தில் வேல், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தான்” என்று பகிரங்க குற்றச்சாட்டை டிஎஸ்பி முன்வைத்தார். இதற்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் இரு உயர் அதிகாரிகளுக்கு இடையிலான இம்மோதலை நாம் தனித்த ஒரு நிகழ்வாக அணுக வேண்டுமா? அல்லது, மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையிலான உறவில் காவல்துறையின் வர்க்கத் தன்மை என்ன என்பதை கணக்கில் கொண்டு அணுக வேண்டுமா? இதுதான் விவாதிக்க வேண்டிய மையமான விஷயம்.

எந்த ஒரு துறையிலும் விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யும். அந்த விதிவிலக்கை பெரிதுபடுத்தி, பூதாகரமாக்கி, அந்தத் துறையே அப்படித்தான் என்று ஒரு சில ஊடகங்கள் கண்முன் நிறுத்துவதை நாம் எச்சரிக்கையுடன் அணுகி புறக்கணிக்க வேண்டும்.

காவல்துறை மக்களின் நண்பனா?

ஒருபோதும் இல்லை. மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய அடக்குமுறை உறுப்பு தான் காவல்துறை. இதுதான் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளில் முக்கியமானதும் கூட.

பொதுவாக “மக்களின் நண்பனா” என்று கேட்பதைவிட, உழைத்து வாழும் மக்களின் நண்பனா என்று கேட்டால் பளிச்சென்று பதில் கிடைக்கும். காவல்துறை எப்பொழுதுமே மேல் தட்டு வர்க்கத்திற்கு அதாவது முதலாளி வர்க்கத்திற்கே சேவகம் செய்கிறது. இதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டின் அனில் அகர்வாலுக்கு சாதகமாக களமிறங்கி மக்களை காக்கை குருவிகளை போல் சுட்டுத் தள்ளிய நிகழ்வை ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

காவல்துறையால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாத கிராமங்கள் என்று ஏதாவது எஞ்சியுள்ளதா என்பதை நாடெங்கும் தேடித்தான் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு அனைத்து கிராமங்களிலும் யாராவது ஒருவராவது காவல்துறையால் சட்டத்திற்கு புறம்பாக மிரட்டி அடித்து துன்புறுத்தப்பட்டு பாதிப்புக்குள்ளாகி இருப்பார்கள்.

அதேபோல் நாட்டில் உலவும் குற்றவாளிகள், கிரிமினல்கள் காவல்துறைக்குத் தெரியாமலோ, காவல்துறையை விடவும் திறமையாக காவல்துறையை ஏமாற்றியோ தான் தொழில் செய்கிறார்கள் என்று நம்மால் நம்ப முடியுமா?

காவல்துறை  காவலர்களை ஒடுக்காதா?

ஒடுக்கும் தான். ஒரு ஊரில், ஒரு மாவட்டத்தில், ஒரு மாநிலத்தில் எந்த கட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது என்பதை பொறுத்தும், அந்தக் கட்சியை ஆதரித்து நிற்கும் ஆளும் வர்க்கத்தின் எந்த தரப்பின் கை ஓங்கி உள்ளது என்பதை பொருத்தும், காவல்துறையிலேயே கூட சிலர் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், சிலர் சந்தேகத்துக்குரிய நபர்களாகவும் மாற்றம் பெறுவர். இதைப் பொறுத்துதான் ஆட்சி மாறியவுடன் அரசுத் துறைகளில் பதவி உயர்வுகளும், பணியிட மாறுதல்களும், காத்திருப்பு பட்டியல்களுக்கு அனுப்பப்படுதலும் நடந்தேறுகின்றன.  இதில் முக்கியமானது மக்களை நேரடியாக அச்சுறுத்தி ஒடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ள காவல் துறையில் நடக்கும் மாற்றங்கள் ஆகும். இது எல்லாம் தற்போது கூவும் டிஎஸ்பிக்கும் தெரிந்தே தான் இருக்கும்.

படிக்க: கொலைகார ஸ்டெர்லைட்டிற்கு அடியாள் வேலை பார்க்கும் தூத்துக்குடி காவல்துறை!

தற்போது தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூவும் டிஎஸ்பி பிறருக்கு அநீதி இழைக்கப்பட்ட போது களத்திற்கு வந்தாரா என்பதை அவரின் கடந்த கால நடைமுறையை பரிசீலித்து தான் முடிவுக்கு வர முடியும்.

நம் கவனத்திற்கு வரும் அளவு அவர் தனது துறையில் புரையோடி உள்ள கிரிமினல் தனங்களையோ, அதிகார வர்க்கத் திமிரையோ கண்டித்ததாக தெரியவில்லை. ஆனால் அவர் அப்படி கண்டித்துள்ளதாக சில விஷயங்களை தற்போது முன் வைக்கிறார்.

“குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, கஸ்தூரி என்ற முன்னாள் காவல்துறை அதிகாரி மரண வழக்கை விசாரித்து, இதில் போலீஸ் சித்ரவதை உண்டு. சில போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று மனித உரிமை ஆணைய மாநில தலைவருக்கு அறிக்கை அனுப்பினேன். இந்த அறிக்கையை அவர் அரசுக்கு அனுப்பினார். உடனடியாக மயிலாடுதுறைக்கு என்னை பணியிட மாற்றம் செய்தார்கள்”” என்கிறார் டி.எஸ்.பி.

 போலீசார்  ஹீரோவா – வில்லனா?

தமிழ்த் திரையுலகில் பெரும்பான்மையான படங்களில் ஹீரோ போலீஸ் அதிகாரியாக இருப்பார்; அல்லது வில்லன் போலீஸ் அதிகாரியாக இருப்பார். இந்த பார்முலா தொன்றுதொட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரே ஹீரோ (விஜயகாந்த்) சந்தன கடத்தல் வீரப்பன் ஆகவும் நடிப்பார்; சந்தன கடத்தல் வீரப்பனை வேட்டையாடும் தேவாரமாகவும் நடிப்பார். இதனால் சினிமாவானது ரசிகர்கள் வழியே சமூகத்தில் காவல்துறையைப் பற்றிய இரு வேறு கருத்துகளை உலவ விடுகிறது. பொதுவில் அது அடக்கு முறையை செலுத்தும் அச்சுறுத்தும் ஒரு கருவியாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு பொன் மாணிக்கவேலை எடுத்துக் கொள்வோம். ஓடி ஓடி கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுக் கொண்டு வந்து மீசையை முறுக்கிய அவர், இந்த கடத்தலுக்கு காரணகர்த்தாவாக இருந்த, கர்ப்ப கிரகத்திற்குள் சென்று வரும் முழு உரிமையையும் பிறப்பின் அடிப்படையில் தக்க வைத்துள்ள அர்ச்சகர்களில் எத்தனை பேரை சிறைக்கு அனுப்பியுள்ளார்? இந்த கோணத்தில் பரிசீலித்தால் அவரின் சாயம் வெளுக்கும்.

மடப்புரம் அஜித்குமாரை கொன்ற காவலர்களின் மீது இன்று ஆளும் வர்க்க ஊடகங்கள் எதிர்மறையாக எழுதுவதற்கு காரணமே அவர்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர் என்பதுதான். அதுவும் கோவில் பணியாளர்களில் ஒருவர் துணிச்சலாக தனிப்படையினரின் காட்டுமிராண்டி தாக்குதல்களை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, நீதிமன்றம் வரை துணிந்து வந்து அம்பலப்படுத்தியதால் தான் இந்த ‘அற்புதமும்’ நடந்துள்ளது. காவல்துறையினரின் மீது குறைந்தபட்ச ஆரம்பகட்ட நடவடிக்கையாவது பாய்ந்துள்ளது.

படிக்க: மடப்புரம் அஜித் குமாரை கொன்ற போலீசின் மீதான கோபத்தை திசை திருப்பும் திமுக ஆதரவு யூ டியூபர்கள்!

சாத்தான்குளத்தில் நடந்த கொட்டடி கொலை விவகாரத்தில் கொல்லப்பட்ட தந்தை மகனின் உடலில் உள்ள காயங்களும், உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் அதை மூடி மறைத்து, தாம் எடுத்துள்ள ஹிப்போகிரடிக் சத்தியத்திற்கு துரோகம் இழைக்காமல், உண்மையை பதிவு செய்து அளித்துள்ள மருத்துவ பரிசோதனை அறிக்கைகளும்தான் காவலர்களை குற்றவாளிகளாக அம்பலப்படுத்த உதவியுள்ளன.

கையும் களவுமாக காவல்துறையினர் மாட்டும் போதும் கூட அதிகபட்சம் பணியிட மாறுதல்களும், காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்படுவது தான் நடக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜட்ஜின் மண்டையைப் பிளந்தவர்களும் கூட இப்படித்தான் ‘தண்டிக்கப்’பட்டனர். இதில் மோசமாக சிலருக்கு ‘பதவி உயர்வு கொடுத்து’ கொடுமைப்படுத்தப்பட்டதும் கூட நடந்தது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது அல்ல அது சாமானியர்கள் மீது மட்டுமே ஏவப்படும் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டே வந்துள்ளது.

தனது துறையில் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற கிரிமினல் குற்றங்களை கண்டு நேர்மையான மனசாட்சியுள்ள காவலராக இருந்தால் தனது பதவியை தூக்கி எறிந்து விட்டு தனது துறைக்கு எதிராக களம் ஆடி இருக்க வேண்டும். நாட்டு மக்களுக்கோ, அல்லது தனது துறையில் உள்ள சக காவலர்களுக்கோ தனது துறையினராலேயே  அநீதி இழைக்கப்படும்போது மௌனமாக இருந்து விட்டு, தனக்கு ஒரு பாதிப்பு வந்தவுடன் ஒப்பாரி வைப்பவர்களையோ, ஓலம் இடுபவர்களையோ, நீதி கேட்பவர்களையோ நாம் நம்பலாமா? இதுவும் கூட உண்மையா எனத் தெரியவில்லை. டிஎஸ்பி -யுடைய ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பட்டியலே வெளிவந்துள்ளது.

இந்த டிஎஸ்பி சைவப்புலியாக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் தான் புலி என்பதில் பெருமிதத்துடன் இவர் சுற்றித் திரிகிறார் என்றால், இவரும் ஊர்க்காவலர்களின் இலக்காகவே இருந்தாக வேண்டும். அதாவது நாட்டு மக்களின் மீது ஏவப்படும் அடக்குமுறை கருவிகளில் முக்கியமான காவல்துறையில் முறியடிக்கப்பட வேண்டியவர்களில் ஒருவராகவே ம(மி)திக்கப்படவும் வேண்டும். விதிவிலக்குகளை பெரிதுபடுத்தி ஒரு துறையையே புனிதப்படுத்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. “தூக்கில் தொங்கவும் தயார்” என்று கூவும் டிஎஸ்பிக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்போம்.

  •  இளமாறன்

1 COMMENT

  1. மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் வாகனத்தை பறித்து வைத்துக் கொண்டு அவரை நடக்க விட்ட ‘மாபெரும் குற்றத்திற்காக’ அவர் எஸ்பி மீது குற்றம் சுமத்தி, தாம் எப்படி ஒரு நேர்மையான அதிகாரி என்ற சுய புராணத்தையும் வெளியிட்டு, குறிப்பிட்ட எஸ் பி ஏ டி ஜி பி இவர்களை எல்லாரையும் விட தான் மேம்பட்டவர் என்பதை போன்றும், அப்படிப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் தான் தூக்கில் தொங்குவதற்கும் தயாராக இருப்பதாகவும் கருத்து வெளியிட்டிருப்பது குறித்து -அது ஒரு பேசு பொருளாகி ஊடகங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ள விவரங்களின் அடிப்படையில் ஒட்டுமொத்த காவல்துறையையும் ஒரு கலக்கு கலக்கி கட்டுரையாளர் சிறப்பாகவே விமர்சனக் கண்ணோட்டத்துடன் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

    ஆம், காவல்துறை என்பது மக்களின் நண்பன் அல்ல; தலைவர் மாபோ சொன்னது போல் மக்கள் என்று நாம் சொல்வது உழைக்கும் மக்களையே! அப்படிப்பட்ட மக்களுக்கு இவர்கள் என்றும் அரணாக இருந்தது இல்லை என்பதனையும், மக்களின் எதிரிகளான முதலாளிகள் – பணக்காரர்கள் – நிலப்பரப்புகள்… இவர்களைக் காப்பாற்றுவதற்காக… இவர்கள் நலனுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு படைப்பிரிவு தான் அடியாள் பட்டாளமான
    போலீஸ், ராணுவம்…இத்தியாதி படைப்பிரிவு. அதில் எங்கோ ஒரு மூலையில் ஒரு டி எஸ் பி சுந்தரேசன் என்பவர் தான் மிகப்பெரும் யோக்கியர் போல வேடம் அணிந்து கதை அளப்பதும் அதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதும், அண்ணாமலை போன்ற பெ…ர்ரிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியல் பண்ணுவதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதும் எதற்காக என்பது நமக்குத் தெரியாதது அல்ல. நாம் மக்களைப் பற்றி தான் கவலைப்பட வேண்டும். மக்களின் எதிரிகளையும் அவர்களுக்கு அடியாள் வேலை செய்யும் போலீஸையும் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை-
    என்பதனைப் புரிய வைத்துள்ளார் கட்டுரையாளர்.

    அப்படியானால் போலீஸ் மக்கள் பிரிவிலலேயே சேர்க்கப்பட முடியாதவர்களா? நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், வறுமை இவற்றின் காரணமாகவே ஏதோ ஒரு உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்து விட்டோ, மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்து விட்டோ, ஏன், கல்லூரி படிப்பை முடித்து விட்டோ- போலீஸ் அல்லது ராணுவத்தில் சேர்ந்து விடுகின்றனர். மாதம் முடிந்தால் தம்மைப் பெற்ற பெற்றோரையும் கட்டிக்கொண்ட மனைவி, மக்களையும் காப்பாற்றுவதற்கு மாதம் முடிந்தால் ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளமாக வர வேண்டும்; அதற்குத்தான் அந்த அடியாள் ‘உத்தியோகத்தில்’ சேருகின்றார்களே ஒழிய
    அது கிடைத்ததற்கு அரிய மாபெரும் பதவி என்ற நோக்கில் எவரும் சேருவதில்லை. அப்பணியில் சேர்ந்த பின் தாம் பிறந்து வளர்ந்து வந்த உழைக்கும் வர்க்க பிரிவு மக்களே முற்றிலுமாக மறந்து ஆளு வர்க்கத்தின் சேவகர்களாக தம்மை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதுவே உண்மை. இதில் ஐபிஎஸ் அதிகாரிகளாக ராணுவத்தில் தளபதிகள் போன்ற பெரும்
    பதவிகளில் இருப்போரைத் தனியே ஒதுக்கி விடல் வேண்டும். ஏனெனில் அவர்கள் கீழ் மட்டத்திலிருந்து ஒருவேளை போய் இருந்தால் கூட அவர்களது வர்க்கத் தன்மை ஆளும் வர்க்கத் தன்மையாகவும் மாறி விடுகிறது. அப்படி எனில் உழைக்கும் வர்க்கப் பிரிவிலிருந்து சென்ற போலீஸ் ராணுவம் தான் பிறந்து வளர்ந்து வந்த மக்களைப் பற்றி யோசிக்க கடமைப்பட்டவர்கள்; ஆனால் மாறாக மேல் அதிகாரிகள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுவது ஒன்றையே தொழிலாக கொண்டவர்களாக – நேசிப்பவர்களாக மாறிவிட்டார்கள். இதன் மூலம் பட்டவர்த்தனமாக உழைக்கும் மக்களின் எதிர்நிலை சக்திகளாக உருவெடுத்து விட்டார்கள். ஆனாலும் இவர்கள் தத்தம் உயர் அதிகாரிகளால் கொடுமைப்படுத்தலுக்கு உள்ளாவது கொஞ்சநஞ்சம் அல்ல. எனவே தான் போலீசாருக்கு சங்க வேண்டும் என்ற உணர்வும் அவ்வப்பொழுது முகிழ்த்தெழ துவங்குகிறது. ஆனாலும் உயர் அதிகாரிகளும் அரசாங்கமும் அதை முளையிலேயே கிள்ளி எரிந்து விடுகின்றன.
    1978 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு காவல்துறை சார்பு ஆய்வாளர் நயினார் தாஸ் என்பவர் போலீஸ்க்கான சங்கத்தை கட்டி உருவாக்கினார். அது மள மளவென்று
    தமிழகம் எங்கும் பற்றி பரவியது. மதுரை போன்ற பகுதிகளில் டிஎஸ்பி வீட்டில் மாடுகள் கட்டுவதற்கு அமைக்கப்பட்ட கிடுகுக் கொட்டகையை தாமே தீ வைத்துக் கொளுத்தி விட்டு, போராடும் போலீசார் மீது பொய் வழக்குப் பதிந்து கைது செய்த வரலாறும் உண்டு. எப்படியோ பாசிச வெறிகொண்ட எம் ஜி ஆர் முதல்வராக இருந்த அத்தருணத்தில் வால்டர் தேவாரம் உள்ளிட்ட பல்வேறு மாநில அளவிலானன
    உயர் போலீஸ் அதிகாரிகளின் உற்ற துணையோடு நயினார் தாஸ் தலைமையில் துவங்கப்பட்ட போலீஸ் சங்கம் முற்றும் முழுதாக துடைத்தெறியப்பட்டு அவர்களுக்கென சில சிறப்பான ரேஷன் கடைகள் பொருட்கள் என்ற எலும்புத் துண்டுகளை வீசி எறிந்து முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த போலீஸ் சங்கம் உருப்பெற்று இருந்தாலும் மக்களின் நலனுக்காக இன்று இருக்குமா என்பது வேறு கதை. ஆனாலும் குறைந்தபட்ச சமூக கண்ணோட்டத்தை பெறுவதற்கான சூழல் உருவாகி இருக்க வாய்ப்பு உண்டு. இவற்றைப் பற்றி எல்லாம் அரசு பற்றிய — அது தோன்றிய வரலாறு பற்றிய மார்க்சிய ஆசான்கள் படைத்தளித்துச் சென்று இருக்கக்கூடிய படைப்புகளில் இருந்து இன்னும் நாம் கூடுதலாக கற்றுத் தேர்தல் வேண்டும். அதனூடாகத்தான் கட்டுரையாளர் டிஎஸ்பி சுந்தரேசன் புலம்பல்களில் இருந்து பலவற்றை தெளிவாக விளக்கிச் சென்றுள்ளார். கட்டுரையாளருக்கு
    வாழ்த்துக்கள். (குறிப்பு:-; எழுத்துப் பிழைகள் இருப்பின் அன்பு கூர்ந்து திருத்தி சரி செய்து படிக்கவும். இதற்கு மேல் என்னால் கூர்மை செலுத்த முடியவில்லை என்பதனையும் சேர்த்தே புரிந்து கொள்ளவும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here