2024ஆம் ஆண்டு ஜனவரி 1 – ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படும் என சமீபத்தில் பேசிய பாஜக அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். கட்டுமானப் பணிகளும் வேகமாக நடைபெற்று இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இப்போது கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகள் அகலப்படுத்தும் பணி நடப்பதால், அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு மக்களின், வணிகர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் கேள்விக் குறியாகவும், நிச்சயமற்றதாகவும் மாறியுள்ளது.

சுமார் 18,000 கோடி மதிப்பீட்டில் இந்த ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான மறைமுக செலவுகளை கோயிலை சுற்றி வாழும் மக்களும், வணிகர்களும் சுமக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகள் விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக 13 கிலோமீட்டர் நீளமுள்ள ராம் பாதை (சகாதட்கஞ்ச் முதல் நயாகாட் வரை); 800 மீட்டர் நீளமுள்ள ராமஜென்ம பூமி பாதை (சுக்ரீவ் குய்லா மார்க் முதல் ராமஜென்ம பூமி வரை); 800 மீட்டர் நீளமுள்ள பக்திப் பாதை (ஷிரிங்கர் காட் முதல் ராமஜென்ம பூமி வரை) அகலப்படுத்தப்படுகிறது.

இதனால் பல வியாபாரிகளின் கடைகள் இடிக்கப்படும் நிலையில், அவர்களது வாழ்வாதாரம் அழிவை சந்திக்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த வணிகர்களில் பலரும் பாஜகவின் வலுவான ஆதரவாளர்கள்தான். பாஜக 1980களில் அரசியல் கட்சியாக நிறுவப்பட்டதிலிருந்தே, அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதில் தீவிரமாக இருந்தது. உச்ச நீதிமன்றம் அங்கு கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய 2019 ஆம் ஆண்டு வரை இந்தப் பிரச்சனையால் நாடு பதட்டத்திலேயே இருந்தது. ஆகஸ்ட் 5, 2020 -ல் நரேந்திர மோடி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டியபோது, அயோத்தியில் உள்ள வணிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதே வணிகர்கள்தான் இப்போது ஏமாற்றமும், அநீதி இழைக்கப்படுவதாக ஆதங்கமும் அடைந்துள்ளனர்.

வாழ்க்கைக்கான போராட்டம்!

“அடுத்த ஆண்டு முதல் தேதியில் கோயிலை திறப்பது பற்றி அமித்ஷா எளிதாக அறிவித்துவிட்டார். ஆனால் அயோத்தியின் ராம் நகரில் உள்ள வணிகர்களின் வாழ்வாதாரம் என்ன ஆவது?” எனக் கேள்வி எழுப்புகிறார் பூஜை பொருட்களை விற்கும் வியாபாரி ஒருவர். அதேபோல தனது தொழிலையும் வீட்டையும் இழந்த வழிபாட்டு பொருட்களை விற்பனை செய்யும் மற்றொரு வியாபாரியான பிரிஜ் கிஷோர் பாண்டே, “எங்கள் தொழில் கடவுள் தொடர்பானது. ஆனால் அது இப்போது பறிக்கப்பட்டுள்ளது. மேலும் நான் இங்கு மூன்றாம் தலைமுறையாக வாழ்ந்து வருகிறேன். மோடிஜி மற்றும் யோகிஜியின் தீவிர ஆதரவாளர்களாக எங்கள் குடும்பமே உள்ளது. ஆனால் எனது வீட்டுக்கும், கடைக்கும் கூட புல்டோசர் வரும் என நான் கனவிலும் நினைக்கவில்லை” என்று அழுது புலம்புகிறார்.

அவை இடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது. மற்ற எல்லோருக்கும் கிடைத்தது போலவே அவருக்கும் அரசின் இழப்பீடாக ஒரு லட்சம் கிடைத்தது. ஆனால் இது எப்படி போதும் என ஆதங்கப்படுகிறார் அவர். அவரது நம்பிக்கை குலைந்து தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக இப்போது உணர்கிறார். “தனது குடும்பம் ராமர் கோயிலுடன் நீண்ட காலமாக தொடர்பில் உள்ளது. பாபர் மசூதியை இடிக்க வந்த கரசேவர்கள் பலருக்கும் உதவிகளும், ஆதரவும் எப்போதும் வழங்கி வந்தோம். எனவே யோகி ஆதித்யநாத், இங்குள்ள வணிகர்களின் குறைகளைக் கேட்டு பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் எனவும் நம்பிக்கை இருந்தது” என்கிறார். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் போன்றவற்றை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர், தனது தொழிலுக்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முத்ரா திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். இப்போது தொழில் பாதிக்கப்பட்டதால் வருமான ஆதாரம் இல்லாத நிலையில் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணைகளை அவரால் கட்ட முடியவில்லை.

இவரைப்போலவே பல வணிகர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளவும், அன்றாட வாழ்க்கையை நடத்தவும் இயலாத நிலையில் உள்ளனர். சென்ற ஆண்டு நவம்பரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் உரையாற்றிய போது, வணிகர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் இன்றுவரை அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இந்த மௌனத்தால் அங்குள்ள மக்கள் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையில்தான் உள்ளனர்.

அயோத்தி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த தேஜ் நரேன் பாண்டே, சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் வணிகர்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு, அயோத்தியில் குஜராத்திகளை குடியமர்த்த முயலும் பாஜகவின் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதிதான் இது என்கிறார். மேலும் அவர் கூறும் போது “இது அவர்களது மாபெரும் திட்டம்.

இங்கு குஜராத்திகள் பல ஒப்பந்த வேலைகளை எடுத்துச் செய்து வருகின்றனர். அரசு நிறைவேற்றும் எந்த ஒரு வேலையும் மக்களை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும். ஆனால் அயோத்தியில் அரசாங்கத்தைக் கண்டு அனைவரும் அச்சப்படும் நிலை உள்ளது” என்கிறார்.

ராம் பாதையில் மதம் தொடர்பான புத்தகங்களை விற்று வந்த லட்சுமி காந்த் திவாரி, இப்போது வாழ்வாதாரத்துக்காக புகையிலை சார்ந்த பொருட்களை விற்கிறார். 20 அடிக்கு 10 அடி அளவில் இருந்த அவரது கடையில் பாதி இடிக்கப்பட்டு விட்டது. அவர் கூறுகையில், “முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 வரை சம்பாதித்தேன். இப்போது முதல் விற்பனையை தொடங்குவதே கடினமாக உள்ளது. அரசாங்கம் எங்களுக்கு உதவாவிட்டால் நாங்கள் பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார்.

அடுத்து வரும் நிதி நெருக்கடிகள்!

இங்குள்ள வியாபாரிகளின் கவலையை அதிகரிக்கும் வகையில், குறிப்பாக ராமர் கோவிலின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாடகை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. 2007 – ஆம் ஆண்டு அயோத்தி நகரின் மிகப்பெரிய நில உரிமையாளர்களில் ஒருவரான ‘ராஜா’ பிம்லேந்திர மிஸ்ரா, அவருடைய கடைகளில் வாடகைக்கு இருந்தவர்களிடம் திடீரென வாடகையை இரு மடங்கு உயர்த்தினார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இப்போது தங்களது வாடகையை, கடை உரிமையாளரிடம் செலுத்தாமல் நீதிமன்றத்தில் செலுத்துகின்றனர் அங்குள்ள வியாபாரிகள். 2022 – ல் புது விதியாக, இதுவரை ஐந்து ஆண்டுகளாக இருந்த குத்தகை கால அளவானது, 11 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே வணிகர்கள் தங்களது எதிர்காலம் குறித்து மிகவும் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர்.

இது குறித்து திவாரி கூறுகையில்,” எனது குடும்பம் இந்த இடத்துக்கு 70 ஆண்டுகளாக வாடகை செலுத்தி வருகிறது. முன்பு 5 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தங்கள் இருந்தன. மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் போது 25 சதவீதம் வாடகை உயர்வு இருக்கும். ஆனால் இப்போது குறுகிய காலமான 11 மாத ஒப்பந்தம் மட்டுமே போட முடியும் என்கிறார் ‘ராஜா’. அதன் பிறகு என்னைக் காலி செய்ய சொல்வாரோ என அஞ்சுகிறேன்” என்கிறார். ஒரு அச்சக உரிமையாளரான யோகேஷ் மிஸ்ரா கூறுகையில், “‘ராஜா’ பிம்லேந்திர மிஸ்ரா; வழக்கை வணிகர்கள் வாபஸ் பெற்று, மாதத்திற்கு 2000 வீதம் இடத்தின் பாதி பகுதிக்கு வாடகைக்கு விட ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார். இது அநியாயமானது என வியாபாரிகள் கருதுகின்றனர்” என்கிறார்.

1991-ல் வழங்கப்பட்ட திவாரியின் ரசீது

வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரான நந்த் குமார் குப்தா, “வாடகை உயர்வு மற்றும் குறுகிய கால குத்தகை போன்ற இந்த மாறுதல்கள் யோகி அரசு, ராமர் கோயிலின் மகான்கள் மற்றும் ‘ராஜா’ பிம்லேந்திரா(கோயிலின் டிரஸ்டி) ஆகியோர் இணைந்து, இங்குள்ள வியாபாரிகளை அயோத்தியில் இருந்து வெளியேற்றும் சதியின் அறிகுறிகள்தான் இது” என காட்டமாகக் கூறுகிறார். மேலும் “நாங்கள் பல தலைமுறைகளாக இங்கு வாழ்கிறோம். முறையாக வாடகைகளை செலுத்துகிறோம். இப்போது கோயில் கட்டி முடித்தால், புதிய நபர்களிடமிருந்து பெரும் தொகையை சம்பாதிக்க முடியும். இந்த நிலையில் தான் இப்போது புல்டோசர்கள் எங்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. எனது சொத்துக்களை அழித்ததற்கு ‘ராஜா’ பிம்லேந்தர்தான் காரணம்” எனவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

“எனது கடையின் பத்து அடியை நான் இழந்தேன். மீதமுள்ள பகுதியை அரசின் அனுமதியுடன் கட்டத் தொடங்கும் போது, எனக்கும் மற்ற 15 வியாபாரிகளுக்கும் எதிராக’ராஜா’ கடந்த மாதம் போலீசில் புகார் அளித்து FIR பதிவு செய்துள்ளார் ” எனவும் வேதனைப்படுகிறார். அதாவது நிலத்தின் உரிமையாளரிடம் புதிதாக ஒப்பந்தம் செய்த பிறகுதான் கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என்பதற்குத் தான் எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று யோகேஷ் மிஸ்ரா கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், எனது 76 வயதான தந்தையின் பெயரில் ஒப்பந்தம் உள்ளதால், அவரை காவல் நிலைய விசாரணைக்காக அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது என்கிறார்.

“தி ஒயர்” இணையதளம் மூலமாக ‘ராஜா’ பிம்லேந்திர மிஸ்ராவை தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டபோது, இந்த விவகாரம் பற்றி பேச மறுத்துள்ளார். அடுத்ததாக அயோத்தியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான வேத் பிரகாஷ் குப்தாவிடம், வியாபாரிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கேட்க முயன்ற போது, அவர் தரப்பில் இருந்தும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும், பெரும் பணக்காரர்களும் இணைந்து கள்ளக் கூட்டு வைத்து, மனசாட்சியின்றி மக்களைச் சுரண்டுவதும், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்த கவலையின்றி தங்களது ஆதாயம் ஒன்றே நோக்கமாகவும் இருப்பது தான் கார்ப்பரேட் நலனுக்கான ஆட்சியின் லட்சணம்.

அயோத்தி ராமர் கோயில் விசயத்தில், கூடுதல் விசேஷமாக “இந்துக்களின் காவலர்கள்” என்று தங்களைக் கூறிக் கொள்ளும் காவி பாசிஸ்டுகள், தாங்கள் மதச் சிறுபான்மையினருக்கு மட்டும் எதிரிகள் அல்ல, சிறுவணிகம் செய்யும் ‘இந்து’க்களுக்கும் எதிரானவர்கள்தான் என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றனர்.

செய்தி ஆதாரம்: The wire

ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here