ஈரான் மீதான யூத, ஜியோனிச இஸ்ரேலின் பயங்கரவாதப் போர் பாகம் -2

’அணு ஆயுதத்தை தடுக்கதான் இந்தப் போர்’ என்று இஸ்ரேல் கூறிக்கொள்கிறது. ’ஈராக்கில் உயிரியல் ஆயுதங்களை வைத்திருந்தார்’ என்று காரணம் கூறித்தான் சதாம் ஹுசேனை கொன்றொழித்தது அமெரிக்கா.

ஈரான் மீதான யூத, ஜியோனிச இஸ்ரேலின் பயங்கரவாதப் போர் பாகம் -2

யூத, ஜியோனிச வெறிபிடித்த பாசிச கும்பலான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி ஏறக்குறைய 1.5 லட்சம் மக்களை கொன்றொழித்துள்ளது. தற்போது 20 லட்சம் மக்களுக்கு குடிநீரின்றி, மின்சாரமின்றி, உணவுகளின்றி, குடியிருக்க இடமுமின்றி கொத்துக்கொத்தாக செத்து மடிகின்றனர்.

இந்த நிலையில் ஜூன் மாதம் 13ஆம் தேதியன்று ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது, இதற்கு இஸ்ரேலும், இஸ்ரேலின் எஜமானனான அமெரிக்காவும் முன்வைக்கும் காரணங்கள் அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்திற்கு ஈரான் கட்டுப்படாமல் இருப்பது தான் என்று கூறுகின்றனர்.

ஆனால் உலகில் அணு ஆயுதங்களின் மீது அமர்ந்துக் கொண்டு உலக சமாதானத்தையும், அமைதியான வாழ்க்கையும் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்ற அமெரிக்கா மற்றும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் உலகை மேலாதிக்கம் செய்கின்ற போட்டியில் கனிமவளங்களை சூறையாடுவது; எண்ணெய் வளங்களை கைப்பற்றுவது என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே மத்திய கிழக்கு நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

தற்போது உலகில் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. அவை: ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல், வட கொரியா ஆகியவை. இந்த நாடுகளில் தோராயமாக 12,331 அணு ஆயுதங்கள் உள்ளன, அவற்றில் 9,600 க்கும் மேற்பட்டவை செயலில் உள்ள இராணுவ இருப்புக்களில் உள்ளன என்று அணு விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் 2025 உலக அணுசக்தி படைகளின் நிலை கூறுகிறது . பனிப்போரின் போது அணு ஆயுதம் ஏந்திய நாடுகள் வைத்திருந்த தோராயமாக 70,000 போர் ஆயுதங்களிலிருந்து இது குறிப்பிடத்தக்க சரிவு என்றாலும், வரும் தசாப்தத்தில் அணு ஆயுதங்கள் மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 1970ஆம் ஆண்டில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அதாவது NPT எனப்படும் ஒரு ஒப்பந்தம், 190 நாடுகளுக்கு இடையே அமலுக்கு வந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவும் இதில் அடங்கும். ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை. 2003ல் வடகொரியா அதிலிருந்து விலகியது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டான 1967க்கு முன்பாக அணு ஆயுதங்களை சோதனை செய்த அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே அணு ஆயுத நாடுகளாக கருதப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகம் முழுவதும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு எதிராகவும், நிதி மூலதன ஏகபோகத்திற்கு எதிராகவும் கம்யூனிசம் பரவத் தொடங்கியது.. பாட்டாளி வர்க்க முகாம் தாக்குதல் நிலையிலிருந்த இந்த காலகட்டத்தில் அரபு நாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் கம்யூனிச சித்தாந்தமும், கம்யூனிஸ்ட் கட்சியும் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே அவற்றை அழித்து ஒழிப்பதற்காக இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை உற்பத்தி செய்தார்கள்.

எகிப்து, துனிசியா, ஈராக், ஈரான், ஏமன், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் கம்யூனிச இயக்கங்களுக்கு எதிராக அமெரிக்காவின் கொலைகார உளவுப்படையான சிஐஏ செய்த சதிகள், உருவாக்கிய இஸ்லாமிய அடைப்படைவாதக் குழுக்கள் பட்டியல் மிக நீளமானது.

அதன் பிறகு அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகளை அடக்கி ஒடுக்குவதிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாத குழுக்கள் முன்னிலை வகித்தன. அவற்றிற்கும் தாராளமாக ஆயுதங்களை வாரி வழங்கிய அமெரிக்க மேல்நிலை வல்லரசும், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளும் இஸ்லாமிய அடிப்படையிலான தீவிரவாதத்தை ஊக்குவித்து வளர்த்தார்கள் என்பதுதான் வரலாறு ஆகும்.

ஆப்கானிஸ்தானத்தில் நஜிபுல்லா அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக தாலிபன்களையும் ஒசாமா பின்லேடன்களையும் உருவாக்கியவர்கள் அமெரிக்க பயங்கரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஈரானும் இதற்கு விதிவிலக்கல்ல.

படிக்க:

🔰 ஈரான் மீதான யூத, ஜியோனிச இஸ்ரேலின் பயங்கரவாதப் போர்! பாகம் 1

”ஈரானின் அரசு கட்டமைப்பு முற்றிலும் வேறுபட்ட தன்மை கொண்டது. அந்நாட்டின் அதிபரும் நாடாளுமன்றமும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மத குருமார்களின் கட்டுப்பாட்டை மீறி அதிபரும் நாடாளுமன்றமும் தன்னிச்சையாக நடந்து கொள்வதற்கு முட்டுக்கட்டை போடுவதற்காகவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பல்வேறு அமைப்புகள் அரசின் அங்கங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

மத குருமார்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆயுட்காலத்துக்கும் நியமிக்கப்படும் உயர்மட்டத் தலைவர்தான், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபருக்கும் மேலானவர். அரசு, நிர்வாகம் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் உயர்மட்டத் தலைவரின் முடிவுதான் இறுதியானது.

290 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றமும், 86 மதகுருமார்களை உறுப்பினர்களாகக் கொண்ட நிபுணர்களின் அவையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நிபுணர்களின் சபைதான் உயர்மட்டத் தலைவரை நியமிக்கும் அதிகாரம் கொண்டது. நிபுணர்களின் அவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எட்டு ஆண்டுகளாகும்.

12 மதகுருமார்களை உறுப்பினர்களாகக் கொண்டது, காப்பாளர் அவை. இவ்வுறுப்பினர்களில் ஆறு பேர் உயர்மட்டத் தலைவராலும், ஆறு பேர் நீதிமன்றத்தாலும் நியமிக்கப்பட்டு, இந்த அவை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்று இயங்குகிறது. இஸ்லாமியச் சட்டங்களுக்கு முரணாக நாடாளுமன்றத்தில் ஏதாவது சட்டமியற்றப்பட்டால், அவ்வகையான சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரம் கொண்டது, காப்பாளர் அவை. நாடாளுமன்றத்திற்கும் காப்பாளர் அவைக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளை, பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக ஆலோசனை அவை நியமிக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இஸ்லாமியச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வது நீதிமன்றத்தின் முக்கியமான பணியாகும். இராணுவம் ஒருபுறமிருக்க, மத குருமார்களின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்ட புரட்சிகர காவல் படையும், பாஸ்ஜி போராளிகள் படையும் அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாந்தவை. சுருக்கமாகச் சோன்னால், ஈரானில் நடைபெறும் ஷியா பிரிவு முசுலீம் மத குருமார்களின் சர்வாதிகார ஆட்சியை மூடி மறைக்கும் திரையாகவே நாடாளுமன்றமும், தேர்தலும் பயன்படுகின்றன”. என்று ஜூலை-2009 புதிய ஜனநாயகம் இதழில் எழுதியிருந்தோம்.

இன்று இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி கொடுத்த ஈரான் நடவடிக்கை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் ஒரு சில புரட்சிகர, ஜனநாயக சக்திகளால் வரவேற்கப்படுகிறது என்ற போதிலும் ஈரான் அடிப்படையில் ஒரு ஜனநாயக நாடு கிடையாது என்பது தான் உண்மை. ஆனால் இதற்காக அந்த நாட்டில் ’ஜனநாயகத்தை’ கொண்டு வருவதற்கு தான் முயற்சிப்பதாக இஸ்ரேல் முன் வைப்பது பித்தலாட்டமாகும்.

அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்துக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதும், இஸ்லாமியர்களை பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் வளர விடாமல் தடுப்பதற்கு இஸ்ரேல் யூத, ஜியோனிச வெறியுடன் அலைந்து கொண்டுள்ளது என்பதுதான் ஈரான் மீது கொடுக்கப்பட்ட திடீர் தாக்குதலின் பின்னணி ஆகும்.

அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள எண்ணெய் வளத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவததற்கும், உலக மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும், மத்திய கிழக்கு நாடுகளில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை வைத்துள்ளது.

சுமார் 21 க்கு மேற்பட்ட ராணுவ தளங்களை அமைத்துள்ளது. ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், குவைத், ஈராக், ஜோர்டான், சிரியா, சைப்ரஸ், லெபனான், காசா பகுதிகளில் இவை இருக்கிறது. கத்தார் என்ற சிறிய நாட்டில் மட்டும் 60 ஏக்கர் நிலப்பரப்பில் நூறு யுத்த விமானங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 10,000 வீரர்களை இங்கு முகாமிடச் செய்துள்ளது. இதனால்தான் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், “அமெரிக்காவின் பச்சைக் கொடி மற்றும் ஆதரவு இல்லாமல் இஸ்ரேலின் தாக்குதல் சாத்தியமற்றதாக இருந்திருக்கும்” என்று வலியுறுத்தி வருகிறார்.

கடந்த காலங்களில் ஈரான் அமெரிக்காவின் பயங்கரவாத நடவடிக்கைகளை குறிப்பாக ஈராக் மற்றும் குவைத் இடையில் நடந்த போரின் போது வேடிக்கை பார்த்தது மற்றும் இந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தன்னை ஒரு துணை வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்ளும் எண்ணத்தில் ஈரான் நடந்து கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஈரான் மக்களுக்கு மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் எதிரானது என்பது தான் புரிந்துக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய முக்கூட்டு நடத்தி வருகின்ற கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் சார்பில் போராடிவரும் ஹமாஸ் இயக்கம் மற்றும் ஹிஸ்புல்லா குழுக்கள் போன்றவை குறிப்பிட்ட அளவிற்கு இஸ்ரேலின் மீது சேதத்தை உண்டு பண்ண முடியாத நிலையில், ,”அவர்கள் தங்கள் நாட்டை இரும்பு கோட்டைக்குள் வைத்திருக்கிறோம் என்ற மமதையில் திரிந்து கொண்டிருந்த சூழலில், அதாவது ’அயர்ன் டோர்ம்’ மூலம் எதிரிகள் தொடுக்கின்ற தாக்குதல்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை அடித்து ஒழிக்கின்ற சர்வ வல்லமை தங்களுக்கு உள்ளது என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்த சூழலில்,” அதனை உடைத்தெறிந்து ஈரான் நடத்தி வருகின்ற தாக்குதல்கள் இஸ்ரேலின் திமிர்த்தனத்தையும், பயங்கரவாத ஒடுக்குமுறைகளையும் கண்டிப்பாக பின்னடைவுக்கு உள்ளாக்கியிருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

’அணு ஆயுதத்தை தடுக்கதான் இந்தப் போர்’ என்று இஸ்ரேல் கூறிக்கொள்கிறது. ’ஈராக்கில் உயிரியல் ஆயுதங்களை வைத்திருந்தார்’ என்று காரணம் கூறித்தான் சதாம் ஹுசேனை கொன்றொழித்தது அமெரிக்கா. இவ்வாறு உலகம் முழுவதும் நாட்டாண்மை செய்வதற்கும், இராணுவத் தாக்குதல்கள் மூலம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும், தனக்கு முழு உரிமை இருப்பதாக அமெரிக்காவும், மத்திய கிழக்கு நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என அதன் இளைய பங்காளியான இஸ்ரேலும் தனக்குத்தானே அதிகாரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதற்கு எதிராக போராட்டங்கள் இஸ்ரேலுக்குள்ளேயே நடந்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக சக்திகள் இன்னும் சொல்லப்போனால் ஏறக்குறைய 51% யூத இன மக்கள் இந்த போரை வெறுப்பதாக அங்கிருந்து செய்திகள் வெளி வருகின்றன. அமெரிக்காவிலும் இந்த அநீதியான போருக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் போராடத் தொடங்கியுள்ளனர்.

போர் அநீதியானது என்பது மட்டுமின்றி, அது ஏற்கனவே உலகை ஆதிக்கம் செய்கின்ற மேல்நிலை வல்லரசுகள் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் அதிகாரத்தையும், சுரண்டலையும் தக்க வைத்துக் கொள்வதற்கு நடத்தப்படுகின்ற கொடூரமான, பயங்கரவாத நடவடிக்கைகள் தான் என்பதை மக்களுக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் புரிய வைப்போம்.

முற்றும்.

நன்னிலம் சுப்புராயன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here