இந்தியச் சமூகம் புரோகித ஆதிக்கத்துக்கு ஏற்ப தகவமைக்கப்பட்ட சமூகம். தங்களுக்கு ஏதுவான அதிகார முறைமைகளையும் சமூக முறைமைகளையும் பார்ப்பனர்கள் உருவாக்கினர். அவற்றின் உள்ளார்ந்த ஆதார வடிவமாக வருணாசிரமம் இருந்தது.
எந்தவொரு அமைப்பிலும் எத்தனை பேர் இருந்தாலும் பிரச்சினை இல்லை. ஒரே ஒரு பார்ப்பனர் இருந்தால் போதும். அந்த அமைப்பில் வருணாசிரமம் நுழைந்து விடும். பார்ப்பனர் இல்லாவிட்டாலும் வருணாசிரமம் நுழையும் வழிகளை பார்ப்பனர் உருவாக்கினர். உதாரணமாக மதம், சாதி!
ஓர் அலுவலகக் கட்டமைப்பில் பார்ப்பனர் அல்லாத ஆட்கள் மட்டுமே இருந்தாலும் கூட, அவர்கள் இந்து மதத்தையும் சாதியையும் முன்னிறுத்துபவர்களாக இருந்தால் போதும், அங்கு வருணாசிரமம் வெற்றிகரமாக நிறுவப்பட்டு விடும்.
யாருக்கும் யாரும் சமமில்லை என்கிற வருணாசிரமக் கோட்பாடு, இந்தியச் சமூகத்தின் மதம், சாதியம், கிராமம், பொருளாதாரம், அரசியல் அதிகாரம், நீதி, கல்வி, குடும்பம் என சமூகத்தை இயக்கும் பிரதான நிறுவனங்களை முழுமையாக நிரப்பி இருக்கின்றன.
ஒருவருக்கு ஒருவர் சமமில்லை என்கிற சமூகமுறைக்கு மாற்றாக அனைவரும் சமம் என்கிற சமூக முறை மட்டும்தான் இருக்க முடியும். அனைவரும் சமம் என்பது சொல்லளவில் இருந்தால் மட்டும் போதாது. அது ஒரு சமூக முறையாக, வாழ்க்கை முறையாக, பண்பாட்டு முறையாக உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியச் சூழலில் பார்ப்பனிய எதிர்ப்பு, மத வடிவத்தைக் கொண்டாலும் அது இந்து மதமாகவே பாவிக்கப்படும். நாத்திகத்தையே இந்து நெறியின் ஓரம்சமாக பார்ப்பனியம் சொல்லும் நிலையை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எனவேதான் பார்ப்பனியம் நிரம்பும் வாய்ப்பு கொண்ட எல்லா விஷயங்களுக்கும் கண்ணிவெடி வைத்தார் பெரியார். அவருக்கு சமஸ்கிருதம் மீது மயக்கம் இருக்கவில்லை. இந்தியா என்கிற கட்டமைப்புக்கு எதிராக நின்றார். தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக நின்றார்.
ஆரிய எதிர்ப்பை தன்னகத்தே கொண்ட தமிழர் வாழ்வியலை ஆதரித்தார். சாதி தேசியத்தை எதிர்த்தார். சாதி மாநாடுகளுக்குக் கூடச் சென்று, சாதியத்தை ஏற்பது பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்பது என விவரித்து பார்ப்பனியத்தை எதிர்த்துப் பேசினார்.
எல்லாம் சரி. மாற்று பண்பாடு? பெரியார் முக்கியமான மாற்று பண்பாடை அறிவித்திருக்கிறார். ‘சுயமரியாதை’ என்பதே அந்த மாற்று பண்பாடு. 18ம் நூற்றாண்டின் இமானுவேல் காண்ட் போன்ற அறிவொளி கால தத்துவ அறிஞர்கள் பேசிய சுயமரியாதையை பெரியார் தமிழ்ச்சூழலுக்கேற்ப முன் வைத்தார்.
பொதுவாக ஒருவன் அடுத்தவனை பார்த்து ‘தூரப் போ’ என்பதும் ‘தீட்டு’ என்பதும் கண்ணில் படக் கூடாது என்பதும் ஒரு வாழ்வியலாக இருப்பதற்குக் காரணம், பார்ப்பனர் அல்லாத சாதிகளுக்கு காலங்காலமாக ஊட்டப்பட்ட அவநம்பிக்கையும் தாழ்வு மனப்பான்மையும் என்பதுதான் பெரியாரின் பார்வை.
தாழ்வு மனப்பான்மைக்குள்தான் பார்ப்பனின் ஆதிக்கம் பிழைப்பதை கண்டார் அவர். எனவேதான் பார்ப்பனன் அல்லது பார்ப்பனியத்துக்கு எதிராக அவர், பார்ப்பன எதிர்ப்பை வைக்காமல் சுயமரியாதையை வைத்தார். பார்ப்பன எதிர்ப்பின் முதல் படி மானமறிதல் என்றார்.
சுயமரியாதையை வாழ்வியலாக நிறுவத் தொடங்கினார் பெரியார். வெறும் சுயமரியாதை கூட அகங்காரமாக மாறும் வாய்ப்பை புரிந்து கொண்டு, இமானுவேல் காண்ட் சொன்ன ‘சுயமரியாதைக்கு சக மனிதன் மீதான மதிப்பு அவசியம்’ என்ற கருத்தை பரவலாக்கினார் பெரியார்.
பெரியார் நினைத்திருந்தால் சுயமரியாதை தத்துவத்தை மதம் என்கிற வடிவத்துக்குள் செலுத்தி இருக்கலாம். ஆனால் இந்திய ஆளும்வர்க்கம் மதத்தை சுவீகரித்துவிடும் எனத் தெரிந்து அதை தவிர்த்தார். அம்பேத்கர் இஸ்லாமுக்கு மாறுவதை கூட ஏற்ற பெரியார், பவுத்தத்துக்கு அம்பேத்கர் நகர்ந்தபோது கிலேசம் கொண்டார். ‘பவுத்தம் இந்து மதமாகி விட்டது. பவுத்த மதத் தழுவலுக்கு பார்ப்பனர்கள் பெரியளவில் பயப்பட மாட்டார்கள்’ என்றார்.
எனக்குத் தெரிந்து அறிவொளி காலத்து ஐரோப்பாவில் மத பீடங்கள் தகர்க்கப்பட்டு அறிவை சிந்தனாவழியாக முன்வைத்து இயங்கிய வால்டர், ரூசோ வழியில் மாற்று பண்பாடை இந்தியாவில் உருவாக்கியவர் பெரியார் மட்டும்தான். அப்படித்தான் ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்கிற இடத்தை அடைந்தார் பெரியார்.
பண்பாடு என்றாலே கடவுள், மதம் ஆகியவைதான் என சிந்திப்போருக்கு பெரியாரின் மாற்று பண்பாடு புலப்படுவதில்லை. பெரியாரின் மாற்று பண்பாடு மதமாக இல்லாமல் இருப்பதால்தான் அவரை ஆர்எஸ்எஸ் சுவீகரிக்க முடியவில்லை.
எனவேதான் பெரியார் சிலையை உடைத்து சுகம் கண்டு கொள்கின்றனர். பெரியார் வெறும் சிலை மட்டுமல்ல, தமிழர் பண்பாட்டின் அறிவொளி அவர்.
- ராஜசங்கீதன்