இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
“ஏன் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது?” என்ற ஒரு கேள்வி வெகுகாலமாகவே என் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் அதற்கான பதிலை நான் இதற்கு முன்னர் தேடவில்லை.
இப்பொழுது இதுகுறித்து தேடிய பொழுது “செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடுவது பொருத்தமானதுதானா? இதைவிட வேறு பொருத்தமான தேதியே இல்லையா? என்ற கேள்விகள் எனக்குள் எழுகின்றன.
முதலில் இந்த கேள்விகளுக்கான காரணத்தையும் பதிலையும் கூறுவதற்கு முன்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வவள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றி சில வரிகளில் சுருக்கமாக கூறிவிடலாம்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் முதல் துணைகுடியரசுத் தலைவராகவும் இரண்டாவது குடியரசு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அதற்கு முன்பாக கல்லூரிகளில் தத்துவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார். ஆந்திர பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் “கிழக்கு மதங்களும் நெறி தத்துவமும்” (Eastern Religions and Ethics) கற்பித்தார். உலக கல்வி மாநாடுகளில் இந்தியக் கல்வியின் பார்வையை உலகிற்கு எடுத்துச் சென்றார்.
“இந்திய தத்துவங்கள்”, “ரவீந்திரநாத் தாகூரின் தத்துவங்கள்”, “மதமும் சமூகமும்”, “வாழ்க்கையைப் பற்றிய இந்துக்களின் பார்வை” என்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவில் ஆகப்பெரும்பான்மையான மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருந்த நிலையில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்காகவோ எழுத்தறிவற்ற மக்களை கல்வி கற்க வைப்பதற்காகவோ எதுவும் செய்ததாக எமக்குத் தெரியவில்லை. அவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் அளவிற்கு கல்வித் துறையில் அவர் பங்களிப்பு செய்ததாகவும் எமக்குத் தெரியவில்லை.
இப்படி சிந்திக்கும் பொழுது ஜோதிராவ் பூலேவும் அவரது மனைவி சாவித்திரிபாய் பூலேவும்
எழுத்தறிவற்ற இந்திய மக்களுக்கு கல்வி வழங்கிட வேண்டும் என்பதற்காக செய்த பணிகளும் அதனால் அவர்கள் அனுபவித்த துன்பங்களும் எனது மனதில் நிழலாடுகின்றன.
ஜோதிராவ் பூலே 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். அவர் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும் பெண்களும் படிக்கவே கூடாது என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தனது மனைவி சாவித்திரிபாய் பூலேவுக்கு அவரே கல்வி கற்பித்தார். பின்னாளில் சாவித்திரிபாய் தகுதி பெற்ற – பயிற்சி பெற்ற ஆசிரியராக உயர்ந்தார். 1848 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் பூனே நகரில் பெண்களுக்கான முதல் பள்ளியை ஜோதிராவ் பூலே தனது மனைவி சாவித்திரிபாய் பூலே உடன் சேர்ந்து நிறுவினார். சாவித்திரிபாய் அந்தப் பள்ளியில் ஆசிரியராக கல்வி கற்பித்தார்.
அந்தக் காலத்தில் பெண்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது தடுக்கப்பட்டு இருந்த நிலையில், சாவித்திரிபாய் பள்ளிக்கு செல்லும் வழியில் மக்கள் இவர் மீது கற்களையும் மண்ணையும் சாணத்தையும் வீசி எறிந்தனர். தினமும் இவர் பள்ளிக்கு வந்து மக்களால் அசிங்கப்படுத்தப்பட்ட தனது உடைகளை களைந்து வேறு உடை மாற்றிக் கொண்டு ஆசிரியராக பணியை செய்ததாக கூறப்படுகிறது.
படிக்க: இந்திய பெண்ணியத்தின் தாயார் சாவித்திரிபாய் புலே
இந்த தம்பதிகள் மொத்தம் 18 பள்ளிகளை திறந்து நடத்தியுள்ளனர். அதில் ஆண்டுக்கு 800 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர்.
தலித்துகள், பெண்கள், ஏழைகள் இந்தப் பள்ளிகளில் பயின்றுள்ளனர். இது அந்தக் காலத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டுள்ளது.
இவற்றை படிக்கும் பொழுது
“இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்”, “இந்திய பெண்கள் கல்வியின் தாய்”,
“சமத்துவ கல்வியின் முன்னோடி” என்று சாவித்திரிபாய் பூலே அவர்கள் பலவாறு போற்றப்படுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை நம்மால் உணர முடிகிறது.
இவ்வளவு சிறப்புகள் மிக்க சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடாமல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக எப்படி தேர்ந்தெடுத்தனர் என்ற கேள்விக்கு நாம் வருவோம்.
சர்வர்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் குடியரசு தலைவராக இருந்த பொழுது பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அவரிடம் சென்று அவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டதாகவும் அதற்கு அவர் தனது பிறந்தநாளை “ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும்” என்று பணிவுடன் (என்ன ஒரு பணிவு!) கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அப்படி கொண்டாடப்படுவதாகவும் செய்திகள் காணக் கிடைக்கின்றன.
நாம் இங்கு சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை. அதேசமயம் இந்திய கல்வித் துறையில் ராதாகிருஷ்ணனின் பங்களிப்பு என்பது சாவித்திரிபாய் பூலே அவர்களின் பணியுடன் ஒப்பிடும் பொழுது ஒன்றுமே இல்லை என்னும் அளவிற்கு மிகவும் சிறியதாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
இந்த நிலையில் சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடாமல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது சாவித்திரிபாய் பூலேவிற்கும் சாதி – மத – வர்க்க வேறுபாடு இன்றி அனைவருக்கும் சமமான கல்வி அளிக்கப்படவேண்டும் என்று செயல்படுகிற உண்மையான ஆசிரியர்களுக்கும் செய்யப்படும் அநீதியாகவே கருதப்பட வேண்டும்.
– குமரன்






