ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்)
சட்டம் கிழித்தெறியப்பட வேண்டும் ஏன்?


யுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் கிழித்தெறியப்பட வேண்டும் என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?

இந்தச் சட்டம், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் செல்லுபடியாகக்கூடியதா என 1997இல் உச்சநீதிமன்றத்தில் அரசமைப்புச்சட்ட அமர்வாயம் பரிசீலித்து, இந்தச் சட்டமானது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லுபடியாகக்கூடியது என்றும், தன்னிச்சையாக செயல்படும் தன்மையிலிருந்தும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தது. (Naga People’s Movement of Human Rights v. Union of India, 1997).

கோட்பாட்டின்படி இது சரியானதாக இருக்கலாம். ஆனால், அந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் விதத்தைப் பார்த்தால் அப்படிச் சொல்லமுடியாது என சந்தேகமறக் கூற முடியும்.

ஆயுதப் படையினருக்கு வங்கம், அஸ்ஸாம், கிழக்கு பஞ்சாப், தில்லி, நாடு பிரிவினையடைந்தபோது அங்கேயிருந்த ஐக்கிய மாகாணங்கள் ஆகியவற்றில் எழும் நிலைமைகளைக் கையாள்வதற்காக அவசரச் சட்டங்கள் மூலமாக சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.

இந்த அவசரச் சட்டங்கள் பின்னர் 1948ஆம் ஆண்டு ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தால் மாற்றியமைக்கப்பட்டன. இந்தச் சட்டம் ஆரம்பத்தில் ஓராண்டுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டது. பின்னர் அது ஒவ்வோராண்டும் நீட்டிக்கப்பட்டு, அதுபோன்று 1958 வரையிலும் தொடர்ந்தது.

பின்னர் 1958இல் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆரம்பத்தில் அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் வட கிழக்கு பிராந்தியம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தச் சட்டத்தில் மொத்தம் ஆறு பிரிவுகள் மட்டுமே உள்ளன. இவற்றில் 3, 4 மற்றும் 6 ஆகிய பிரிவுகள் மிகவும் பிரச்சனைக்குரியவைகளாகும். 3ஆவது பிரிவு, ஒரு பகுதியை “அமைதி குலைந்த பகுதி” (“disturbed area”) என்று பிரகடனம் செய்வதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் சம்பந்தப்பட்டது. ஒரு பகுதி “அமைதி குலைந்த பகுதி” அல்லது ஆபத்தான பகுதி என்று சம்பந்தப்பட்ட அதிகாரவர்க்கம் திருப்தி அடைந்தால் போதுமானது, இந்தச் சட்டம் அங்கே அமல்படுத்தப்படும்.

படிக்க:

நாகலாந்தில் அரச படுகொலை – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை       செய்தி 

அதாவது, அங்கேயுள்ள அதிகாரிகளின் தன்னிலை திருப்தியை (subjective satisfaction) அடிப்படையாகக் கொண்டு அல்லது அங்கேயுள்ள புறநிலை எதார்த்த நிலைமையினை (objective material) அடிப்படையாகக் கொண்டு அங்கேயுள்ள அதிகாரி தன் விருப்பத்தை வைத்து இதனைப் பிரகடனம் செய்கிறார். இது மிகவும் முக்கியம். ஏனெனில், கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி பல மாநிலங்களில் வகைதொகையின்றி திணிக்கப்பட்டது.

இவ்வாறு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு அங்கேயுள்ள புறநிலை எதார்த்த நிலைமை தேவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவரை குடியரசுத் தலைவர் ஆட்சி அந்த மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வந்தது. துரதிர்ஷ்டவசமாக உச்சநீதிமன்றம் இப்போது தன்னிலை திருப்தியா? இல்லை புறநிலை எதார்த்த நிலைமையா (subjective satisfaction versus objective material) என்பதை ஆராய்ந்திடவில்லை.

ஆகையால், ஆட்சியிலுள்ளவர்களின் விருப்பு வெறுப்புக்கிணங்க ஒரு பிரகடனத்தை ஏற்படுத்திட முடியும். இவ்வாறு ஆட்சியாளர்களின் பிரகடனம் எதையும் நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தி ரத்து செய்ததாக எடுத்துக்காட்டு எதுவும் இல்லை.

பிரகடனத்தின் கால அளவு குறித்தோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அது நிர்வாகத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தோ சட்டத்தில் எதுவும் கூறப்படாமல் அது மவுனம் கடைப்பிடிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் முன் அட்டார்னி-ஜெனரல் பிரகடனங்களை ஒன்றிய அரசு இனிமேல் ஆய்வு செய்திடும் என்றும் அதனை ஒவ்வோராண்டும் செய்திடும் என்றும் கூறினார்.

ஆனால் உச்சநீதிமன்றம் இவ்வாறு ஆய்வு செய்யப்படுவதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்திட வேண்டும் என்று கூறி அவ்வாறு கட்டளையும் பிறப்பித்திருந்தது. இவ்வாறு மறு ஆய்வு செய்வது எந்திரரீதியாக இருக்கக்கூடாது என்றும், வழக்கமான ஒன்றாக அது மாறிவிடக்கூடாது என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இதுதொடர்பாக எதார்த்தத்தில் நடந்திருப்பது என்ன என்று எவருக்கும் தெரியாது.

ஏனெனில் 1997க்குப் பின்னர் இதுநாள்வரையிலும் இத்தகைய பிரகடனங்கள் எவ்விதமான நீதித்துறை ஆய்வும் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து இருந்து வருகின்றன.

வேறொரு வழக்கில், உச்சநீதிமன்றமானது, திரும்பத்திரும்ப அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுவது அரசமைப்புச்சட்டத்தின் மீதான மோசடி என்று கூறியிருக்கிறது. இந்த தர்க்கமுறையை இதற்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியைத் திரும்பத் திரும்ப “அமைதிகுலைந்த பகுதி” என்று கூறுவது ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் மீதான மோசடியேயாகும்.

நாகாலாந்து மாநில அரசாங்கம், எங்கள் மாநிலத்தில் “அமைதி குலைந்த பகுதி” எதுவும் இல்லை என்று கூறுகிறது. ஆனால் ஒன்றிய அரசாங்கமோ அது “அமைதி குலைந்த” மாநிலம் என்கிறது. யார் கூறுவது சரி, ஏன்?

இறுதியாக, மேற்படி சட்டத்தின் 3ஆவது பிரிவு, ஆயுதப்படையினர் சம்பவ இடத்தில் உள்ள சிவில் நிர்வாகத்திற்கு உதவியாக செயல்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறது.

படிக்க:

நாகாலாந்து படுகொலைகள்! பாசிச பயங்கரவாதமே ‘இந்திய ஜனநாயகம்’!

ஆனால், நாகாலாந்தில் மோன் மாவட்டத்தில் சுரங்கத்தொழிலாளர்கள் சமீபத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தை, அங்கே ஆட்சிபுரியும் சிவில் நிர்வாகம் கொஞ்சம்கூட அறிந்திருக்கவில்லை என்றும், ஆயுதப்படையினர் மேற்கொண்ட அல்லது மேற்கொள்ள முடிவு செய்திடும் நடவடிக்கைகள் குறித்து அதற்கு எதுவுமே தெரியாது என்றும் கூறப்படுகிறது. மிகவும் மோசமான முறையில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு, யார் பொறுப்பு என்கிற பிரச்சனையையும் எழுப்பியிருக்கிறது.

மேற்படி சட்டத்தின் 4ஆவது பிரிவு, ராணுவ அதிகாரிகளுக்கு, சுடுவதற்கான அதிகாரத்தை அளிக்கிறது. ஆணையிடப்படாத அதிகாரிகள் (non-commissioned officers) உட்பட எந்த அதிகாரியாக இருந்தாலும், “அமைதி குலைந்த” பகுதி என்று பிரகடனம் செய்யப்பட்ட பகுதியில், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடியிருந்தாலோ அல்லது எவரேனும் ஆயுதங்கள் வைத்திருந்தாலோ, அவர்களை அதிகாரிகள் சுடலாம்.

பொது ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு துப்பாக்கியால் சுடுவது அவசியம் என்று அவர் (தன்னிச்சையாகவோ அல்லது புறநிலைமைகளைப் பரிசீலனை செய்தோ) முடிவுக்கு வந்தால் போதும். நாகாலாந்து மாவட்டத்தில் நடந்த நிகழ்வில், சம்பவ இடம் தொடர்பாக புலனாய்வு அறிக்கைகள் வந்திருந்ததாகவும், அதனால் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் அந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பொது ஒழுங்கு நிலைமை ஏற்பட்டிருந்ததா என்பது குறித்தோ, சுரங்கத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவோ எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை. இவ்வாறெல்லாம் செய்யாதது இந்தச் சட்டப்பிரிவை முழுமையாக மீறிய செயல் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

சட்டத்தின் 4ஆவது பிரிவுக்கு உட்பட்டு நடக்காததால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன? சட்டத்தின் 6ஆவது பிரிவு, ஒன்றிய அரசின் முன் அனுமதி இல்லாமல், இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது வழக்குத் தொடரவோ, அல்லது இதர சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ தடை விதிக்கிறது.

எனவே, இந்தச் சட்டத்தின் 4ஆவது பிரிவிற்கு உட்பட்டு செயல்படாமல் எந்த அதிகாரியாவது நடந்துகொண்டால், ஒன்றிய அரசின் முன் அனுமதியின்றி, அவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது.

கடந்த 63 ஆண்டுகளில் ஒன்றிய அரசு இவ்வாறு முன் அனுமதி எவருக்கும் வழங்கியதுமில்லை என்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் ஒரு விமர்சகர் குறிப்பிட்டிருந்தார். (சஞ்சய் ஹசரிகா, இந்துதான் டைம்ஸ், 7 டிசம்பர் 2021). இவ்வாறு ஒன்றிய அரசு மறுத்ததை எதிர்த்து எவரும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு எதுவும் செய்ததாகவும் தெரியவில்லை.

இவ்வாறாக ஆயுதப்படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் விதம், இந்தச் சட்டமானது முற்றிலுமாக மாற்றி எழுதப்பட வேண்டும் அல்லது கிழித்து எறியப்பட வேண்டும் என்றே பரிந்துரைக்கிறது.

இதைத்தவிர மூன்றாவது மாற்று எதுவும் இல்லை.

-மதன் பி லோகூர் (ஓய்வு பெற்ற நீதிபதி)
(நன்றி: எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி)
தமிழில்: ச. வீரமணி / தீக்கதிர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here