இன்னும் எத்தனை ரோகித் வெமுலாக்கள் சாக வேண்டும்?
UGC புதிய (சமத்துவ) விதியின் மீதான தடையை உடனே திரும்ப பெறு!!
அன்பார்ந்த மாணவர்களே.. பேராசிரியர்களே…
உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கும் சாதி-தீண்டாமை வன்கொடுமை, மத, மொழி, பாலின பாகுபாடு காரணங்களால் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 2014 மற்றும் 2021-க்கு இடையில் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 2021-ல் மக்களவையில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலின்படி, அவர்களில் 24 பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள், மற்றும் 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்கள். சமீபத்திய தரவுகளின்படி 2020-25 ல் உயர்கல்வி நிறுவனங்களில் 118 சதவீதம் சாதி ரீதியான வன்முறைகள் அதிகரித்து உள்ளது. 2024ல் மட்டும் 378 வழக்கு பதிவாகியுள்ளது. இப்பிரச்சனையையொட்டிதான் சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மத வன்கொடுமைகளைத் தடுக்க பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் புதிய விதிகள் அமல்படுத்தியது மோடி அரசு.
இந்த விதிகளை மோடி அரசு தானாக முன்வந்து கொண்டுவரவில்லை. ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலாவும், 2019 ஆம் ஆண்டு வன்கொடுமையால் பலியான மாணவி பாயல் தாத்வியின் தாயார் அபெதா சலிம் தாத்வியும் தொடுத்த வழக்கின் காரணமாகவே இது நிகழ்ந்தது.
2019 ஆம் ஆண்டே இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கொடுக்கப்பட்டாலும் மோடி அரசால் ஆறு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்த பின் புதிய சமத்துவ விதிகளுக்கான வரைவு விதியை பிப்ரவரி 2025 ஆம் ஆண்டு வெளியிட்டது மோடி அரசு. அது எந்த பயனும் அளிக்காது, முக்கிய மாற்றங்கள் வேண்டும் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், வழக்கறிஞர்கள் திஷா வதேகர், பிரசன்னா ஆகியோரது தொடர் முயற்சியால் செப்டம்பர் 2025 யில் புதிய விதிகள் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனடிப்படையிலேயே தற்போது UGC யின் சமத்துவ விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தது மோடி அரசு.
இதை எதிர்த்து பார்ப்பன – உயர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் சில அதிகாரிகள் “பாஜக பார்ப்பனர்களுக்கு எதிராக உள்ளது” என தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அரிய வகை உயர்சாதி ஏழைகளின் குரலுக்கு செவிமடுத்து நேற்று (29/01/2026) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் ஜாய் மால்யா அமர்வானது UGCயின் புதிய விதிகளுக்குத் தடை விதித்துள்ளது. “”சாதி பாகுபாடு” என்று வரையறுத்தது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் என்பதாக கூறியுள்ளது. மேலும் கடந்த 2012 சட்டமே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அறிவித்திருக்கிறது. விதிகளைக் கொண்டு வந்த ஒன்றிய மோடி அரசு நீதிமன்றத்தில் கள்ள மவுனம் சாதித்துள்ளது. இது நீதிமன்றமும் மோடி அரசும் சேர்ந்து செய்த கூட்டுச்சதி என்பதையே வெளிப்படுத்தியுள்ளது.
சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு ஆண்டுகள் போராடி பெற்ற தீர்வை, பார்ப்பன, உயர்சாதியினரின் போராட்டம் ஆறேழு நாட்களிலேயே தூக்கியெறிந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்று கூறினாலும் நடைமுறையில் பார்ப்பன – உயர்சாதியினரே மேலானவர்களாக நடத்தப்படுகின்றனர் என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு ஒரு எடுத்துக்காட்டு.
சமத்துவத்தை மேம்படுத்துதல் ( Promotion of Equity) என்ற அடிப்படையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்கிறது. அதில் 1) SC (பட்டியல் சாதிகள்), 2) ST (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) 3) OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், MBC உட்பட), 4) பெண்கள், 5) மாற்றுத் திறனாளி . இதன் தலைவராக துணைவேந்தர் இருப்பார் என புதிய விதிகளில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தீண்டாமை வன்கொடுமை சம்பந்தமாக மாணவர்கள் புகார் அளித்தால் 15 இலிருந்து 20 நாளுக்குள் கமிட்டி அமைத்து ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வது அடுத்த கட்டமாக நீதிமன்ற விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தது. சங்கிகள் இதைத்தான் தற்போது முடக்கி உள்ளனர்.
ஏற்கனவே இருந்த 2012 சட்டத்தில் புகார் அளிப்பவர் ’போலியாக’ புகார் மனு அளித்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இருந்தது தற்போது புதிய விதியில் அப்படி இல்லை. அதாவது, குற்றஞ்சாட்டுபவர் தன் குற்றச்சாட்டை நிருபிக்க முடியவில்லை எனில் அவர் குற்றவாளியாகிவிடுவார். இப்படி இருந்தால் யார் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வருவார்?
மேலும், சாதிய வன்கொடுமைகள் SC, ST, OBC ஆகியோருக்கு எதிரான செயல்கள், விளைவுகள் என நேரடியான, மறைமுகமான வன்கொடுமைகளையும் குற்றம் என வரையறுத்துள்ளது புதிய விதிகள்.
படிக்க: பூணூல்களின் ஆதிக்கத்தில் இருந்து ஐஐடிகளை விடுவிப்பது எப்போது?
புதிய விதிகளின் இது போன்ற அம்சங்களே பார்ப்பன, உயர் சாதியைச் சேர்ந்த மாணவர்களின் கண்களை உறுத்தியுள்ளது. இந்த விதிகளை அமல்படுத்த கூடாது என போராட்டத்தில் இறங்கினர். இது சாதிய பாகுப்பாட்டை மாணவர்கள் இடையே அதிகரிக்கும் என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஆனால், உண்மையில் அவர்களின் இந்த போராட்டத்தின் நோக்கம் சாதி தீண்டாமை வன்கொடுமைகளைச் செய்வதற்கு முழு சுதந்திரம் கோருவதே.
இந்த புதிய விதிகள் மக்களிடையே பிளவு உண்டாக்கப் போவதில்லை. ஏற்கனவே மக்களை சாதிரீதீயாக பல்வேறு ஏற்றாதாழ்வுகளோடு பிளவு படுத்தி தான் வைத்திருக்கிறது இந்து சனாதன தர்மம்.
இந்த புதிய விதிகள் பல்கலைகழகங்கள், கல்லூரிகளிகளிலும் நடக்கும் பாகுபாடுகளை, வன்கொடுமைகளை முழுமையாக தடுத்திடாது. மேலும் இந்த விதிகளிலும் பல்வேறு குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. எடுத்துக்காட்டாக, சமத்துவக் குழுவின் தலைவராக பல்கலைக்கழக துணைவேந்தர் இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளது. ரோகித் வெமுலா பிரச்சினையில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தரே குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற குறைபாடுகள் கண்டறிந்து களையப்பட வேண்டும்.
இனி நூற்றுக்கணக்கான ரோகித் வெமுலாக்களை இழப்பதைத் தடுக்க புதிய விதிகள் மீதான அநீதியான தடையை உச்சநீதிமன்றம் உடனடியாக நீக்க வேண்டும்.
துணைவேந்தர் பதவிகளிலும், பேராசிரியர் பணிகளிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட நபர்கள் தான் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஒன்றிய மோடி அரசு இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவது கிடையாது.
உயர் கல்வி நிறுவனங்கள் காவிமயமாவதை தடுக்க, மாணவர்கள் மீதான சாதி, மத, மொழி, பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை முற்றிலுமாக துடைத்தெறிய, அனைவருக்கும் சமத்துவமான கல்வியைப் பெற ஜனநாயக சக்திகள், மாணவர் அமைப்புகள் ஓரணியில் திரண்டு போராடுவோம். பாசிச எதிர்ப்பு மாணவர் முன்னணி அமைத்து கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை வீழ்த்துவோம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு புதுவை








இன்னும் எத்தனை ரோகித் வெமுலாக்கள் சாக வேண்டும் !
RSYF பத்திரிக்கை செய்தியை படித்தேன்
UGC விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி உயர்கல்வியில் சாதி மத இன பாலின அடிப்படையில் மாணவர்களை தற்கொலைக்கு தள்ளும் இந்த சட்ட விரோத விதிகளை உடனே நீக்க வேண்டும் என பதிவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்