வெறுப்பின் உச்சம் பாசிசம். அது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, நாக்பூரில், 27. 9. 1925 அன்று உருவம் பெற்றது. அதன் பெயர் ‘ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்’ (ஆர் எஸ். எஸ்). இச் சங்கம் கே. பி. ஹெட்கேவர் என்பவரால், இந்து தேசியத்தைக் கட்டமைக்கவும், தேசத்தை இந்துத்துவ மயமாக்கும் நோக்கத்தோடும் தொடங்கப்பட்டது.

இந்த ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஒரு குடும்ப அமைப்பாகச் செயல்படும்போது ‘சங்பரிவார்’ என்று அழைக்கப்படுகிறது. இந்துக் கோட்பாடுகளின் அடிப்படைத் தன்மையில் மனங்களைக் கட்டமைத்து அமைக்கப்படும் இந்து சமுதாயத்தின் மூலம், இந்து ராஜாங்கத்தைக் கட்டமைப்பதே இதன் செயல்திறன்.


இதையும் படியுங்கள்சாவர்க்கரும்  ஆர்.எஸ்.எஸ்-சும் –விடுதலைப் போராட்ட துரோக வரலாறு!


தொடங்கப்பட்ட தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் 60 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக இந்த ஆர். எஸ். எஸ். அமைப்பு வளர்ந்துள்ளது. 1940 ஆம் ஆண்டில் கென்யாவில் கிளைகள் தொடங்கிய இவ் அமைப்பு, இன்று 156 உலக நாடுகளில் 3289 கிளைகள் கொண்ட உலக அமைப்பாக வளர்நிலை பெற்றிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் நாடு முழுமையும் சிபிஎஸ்சி அல்லது மாநிலக் கல்விப் பாடத்திட்டங்களில், 34 லட்சம் மாணவர்கள் பயிலும் 12,828 கல்விச்சாலைகளைக் (வித்யா பாரதி) கொண்டுள்ளது. இது தவிர 11,353 முறைசாராக் கல்விக் கூடங்களையும் இயக்கி வருகிறது. இதன் ஊழியர்களுக்கு அதிக அளவிலான ஊதியம், ஆண்டுக்கு சராசரி 18 லட்சம் ரூபாய், வழங்கப்படுகிறது.

இந்துத்துவம், இந்து நாடு என்ற சொற்பழக்கம் 1890 களில் சந்திரநாத் பாசு என்பவரால் தொடங்கப்பட்டுப், பின்னர் பாலகங்காதர திலகரால் வழிமொழியப்பட்டு அந்தக் கருத்தியல் வழியில் ஓர் அமைப்பாக மாறியது. இந்திய அரசியலுக்கு மாற்றுக் கருத்தியலாகத்தான் இச்சொற்கள் கையாளப்பட்டன. அவற்றிற்கு இந்துக்களுக்கான நாடு என்று பொருள் கொடுத்து மெருகேற்றியவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.

இதே காலத்தில் (1925) குடியரசு இதழ் வழி, இடதுசாரி இயக்கமாகத் தொடங்கப்பட்டது தான், பெரியார் ஈ. வெ.ரா. அவர்களைத் தலைவராகக் கொண்ட சுயமரியாதை இயக்கம். அதற்கு முன்பு, 1916 ஆம் ஆண்டு பார்ப்பனர் அல்லாதோர் இயக்கமாகத் தொடங்கப்பட்ட நீதிக் கட்சியின் உடனான ஒருங்கிணைந்த கருத்தியல், செயல்பாடுகளால் திராவிட இயக்கமாகப் பரிணமித்தது. அந்தக் கருத்தியலில் அறிஞர் அண்ணா தலைமையில் உருவாகி வளர்ந்த அரசியல் இயக்கமான திமுக, ஆட்சி அதிகாரத்தை அடைந்து சமூகநீதிக் கோட்பாடுகள் பலவற்றையும் தமிழ்நாட்டில் சட்டமாகச் செயலாற்றியது. அறிஞர் அண்ணாவின் காலத்திற்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கோட்பாடுகள் நீர்த்துப்போன பின்னணியில் இன்றும் தமிழ்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு 2025 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட உள்ளது.

இதேபோல் 1925 ஆம் ஆண்டில் கான்பூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் மாநாடு, இந்தியாவிற்கு மற்றொரு தீவிர இடதுசாரி இயக்கத்தைக் கொண்டு வந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, 17.10.1920 அன்று, தாஷ்கண்ட் நகரில் எம்.என்.ராய் போன்ற ஆளுமைகளால் தொடங்கப்பட்டாலும், இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் மாநாடு 26.12.1925 அன்று கான்பூரில் நடைபெற்றது தான் அதன் தொடக்கம். இம்மாநாட்டிற்குத் திரு ம. சிங்காரவேலர் தலைமை ஏற்றார். இதன் நூற்றாண்டு 2025 ஆம் ஆண்டில் கொண்டாடப்படும்.

இதே காலகட்டத்தில் (1925) மேற்குலகில் கல்வி பெற்றுப் பேரறிஞராகத் திரும்பி வந்த டாக்டர் அம்பேத்கர், அறிவுசார் இயக்கத்தை அரசியலில் கொண்டு வந்தார். இப்படி இந்திய அரசியல், சமூக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 1925 ஆம் ஆண்டு அமைந்திருந்தது. திரு. ம. சிங்காரவேலர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் பாதை சமூக நீதி அமைப்பிலான இடதுசாரிப் பாதையாக இருக்க, ஆர். எஸ். எஸ். இன் பாதை, மத அடிப்படையில் ஆனதாகவும், வலதுசாரிப் போக்கினதாகவும் அமைந்திருந்தது.

பாசிச பயங்கரவாதம்: அறிவோம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் அமைப்புகளை பற்றி.

தொடங்கும் போதே எதிர்மறை எண்ணங்களின் அடிப்படையில், ஒரு வலதுசாரி அமைப்பாகத் தொடங்கப்பட்ட ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் நூற்றாண்டைக் கொண்டாட இருக்கிறது. அதன் நூற்றாண்டு விழாவின்போது இந்தியா முழுமையும் தனது முழு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற உறுதியில், 2024 ஆம் ஆண்டு பிஜேபியை மீண்டும் வெற்றி பெற வைத்து, இந்திய அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றும் தீவிர முயற்சிகளை இவ்வியக்கம் மேற்கொண்டு வருகிறது.

அப்படிக் கைப்பற்றப்படும் இந்திய அரசாங்கத்தின் மைய அதிகாரம், ஆர். எஸ். எஸ். இன் கையில் முழுமையாக இருக்க வேண்டுமானால், அந்த அரசாங்கம் சட்டத் தகுதியோடு பின்பற்றக்கூடிய அரசியலமைப்பானது, இந்து ராஷ்ட்ரியத்தின் அரசியல் அமைப்பாக இருந்தாக வேண்டும். அதைச் செயல்படுத்துவதற்கு அரசு கட்டமைப்பும், வலை அமைப்புகளும் தேவைப்படுகின்றன. அதற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர். எஸ். உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளும் சட்ட அமைப்பினில் இயங்க வேண்டும்.

ஒரு சமூக அமைப்பைக் கந்தலாக்கி விட்டு, அதைப் பாதுகாப்பது என்பது வரலாற்று ரீதியாக மிகக் கடுமையான ஒன்று. சாத்தியம் இல்லாத இந்தப் பணியைத் தங்களின் ‘புனித லட்சியமாக’க் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். இதை சாத்தியப்படுத்த வேண்டும் என்றால் பாசிசம் தான் அதன் ஒரே வழி. சுதந்திரமானதும், எல்லையற்ற அதிகாரம் கொண்டதும், கட்டுப்பாடற்ற அரசு கட்டமைப்பைக் கொண்டிருந்தால் மட்டுமே பாசிசத்தை நடைமுறைப்படுத்த முடியும்.


இதையும் படியுங்கள் : ஆர் எஸ் எஸ் –இன் நெஞ்சைக் கிழித்த அம்பு!


இந்தியாவில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தோன்றிய இயக்கங்களில் இடதுசாரி இயக்கங்களும் உண்டு; வலது சாரி இயக்கங்களும் உண்டு. தென்னிந்தியாவில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், இந்திய அளவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி, டாக்டர் அம்பேத்கரின் அரசியல் கருத்தியல் ஆகியவை இடதுசாரி இயக்கங்களாக மிளிர்ந்தன. காங்கிரஸ் கட்சியும், பிற தேசியம் பேசியக் கட்சிகளும் வலதுசாரிகளாகச் செயல் பட்டன.

வலது சாரி இயக்கங்களில் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான். நாடு தழுவிய, வலதுசாரி முறையில் இயங்கும், முழுமையான அதிகாரம் உள்ள அரசாங்கத்தையும், சமூக அமைப்புகளையும் கொண்டிருப்பது தான் பாசிசம் என்பதற்கான சரியான பொருள். அப்படியான ஓர் அரசு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமானால், அதற்கு முதற்கட்டமாக மக்களாட்சி முறையில் இயங்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்களைப் பலவீனப்படுத்த வேண்டும்; மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும்; அந்த வேலையைத்தான் தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பி.ஜே.பி. அரசியலும் செய்து கொண்டிருக்கின்றன.

சமூகத்தைக் கந்தலாக்கும் வேலையில் முதலாவது, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கலவரங்கள் ஆகும். இதைத் திட்டமிட்டு, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளில் (டிசம்பர் 6,1992) பாபர் மசூதியை இடித்ததன் மூலம் நாடு தழுவிய மதக் கலவரமாக மாற்றிவிட்டது, ஆர். எஸ். எஸ்.

( தொடரும்)…

முனைவர் சிவ இளங்கோ

புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here