மாசற்ற, சுற்றுச்சூழலை கெடுக்காத, 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் சென்னை நகரத்தில் இயக்கப்பட உள்ளது. இது வரவேற்க வேண்டிய திட்டம் தானே! வாழ்த்த வேண்டியது தானே! இதில் கேள்விக்கு என்ன தேவை வந்துவிட்டது? இது பற்றி விரிவாக பார்ப்போம்.
மாசற்ற பேருந்தா?
மின்சாரப் பேருந்துகள் பெட்ரோல் டீசலை பயன்படுத்தாது என்பதால் கார்பன் டை ஆக்சைடை – கார்பனை வெளியிடப் போவதில்லைதான். ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் ஓடக்கூடியதாக இவை இருக்கும்தான். ஆனால், இப்பேருந்துகளை இயக்கப் பயன்படுத்தும் மின்சாரம் தூய்மையாகத்தான் கிடைக்கிறதா?
நமது நாட்டில் மின் உற்பத்தி என்பது நிலக்கரிகளை எரிக்கும் அனல் மின் நிலையங்களில் இருந்துதான் அதிக அளவில் பெறப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத நீர் மின் உற்பத்தியோ, காற்றாலை மின் உற்பத்தியோ உத்திரவாதமாகவும் சீராகவும் கிடைப்பது இல்லை . அதேபோல் சூரிய ஒளி மின் உற்பத்தியும் நாட்டின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, சூரிய ஒளி மின் உற்பத்தியானது, தற்போது தான் ராமநாதபுரத்தில் அதானியின் ‘“தயவுடன்” படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
மின்சாரப் பேருந்துகள் காற்றை மாசு படுத்தாது தான். ஆனால் அந்த மின்சார உற்பத்திக்காக காற்று மாசடைவது தொடரவே செய்கிறது.
இந்தப் புரிதலில் இருந்து மின்சாரப் பேருந்துகளை கொண்டுவரும் தமிழக அரசை நாம் விமர்சிக்கவில்லை. தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ள 500 மின்சார பேருந்துகளின் இயக்கத்தில் வேறு என்ன பிரச்சனை? பிரச்சனையின் சாரத்தை பார்ப்போம்.
பலியிடப்படும் போக்குவரத்துக் கழகங்கள்!
தற்போது சென்னையில் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள 500 மின்சார பேருந்துகளை – பெரும்பாக்கம், பூந்தமல்லி, வியாசர்பாடி, பெரம்பூர் ஆகிய ஐந்து பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ள இவற்றை – அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொறுப்பு எடுத்து இயக்கப் போவது இல்லை.
500 பேருந்துகளை பாடி பில்டிங் செய்வதோடு, 12 ஆண்டுகளுக்கு இயக்குவதற்காகவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் கார்ப்பரேட்டுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு மூலம் இதற்காக நடத்தப்பட்ட டெண்டரில் மூன்று நிறுவனங்கள் போட்டியிட்டுள்ளன. அவற்றில் இரண்டிற்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது. ஓ எச் எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற அசோக் லேலாண்ட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமும், சுவிட்ச் மொபிலிட்டி ஆட்டோமேட்டிவ் லிமிடெட்டும் தேர்வாகி, இவ்விரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.
அரசால் பேருந்தை இயக்கி, பராமரிக்க முடியாதா?
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்துகளை இயக்கிய அனுபவம் பெற்றவையாக போக்குவரத்து கழகங்கள், அவற்றின் பணி மனைகள் உள்ளன. அப்படி இருந்தும் எதற்காக தனியாரிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது? இது ஒரு துரோகத்தின், துயரத்தின் கதை .
இந்தப் போக்குவரத்து கழகங்களை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், மகளிருக்கான இலவச பயண அனுமதி உள்ளிட்ட பல திட்டங்களை கவர்ச்சிகரமாக அறிவித்து ஆட்சியைப் பிடிதத்துள்ளன. தாம் ஆட்சி அமைத்த பின் கொடுத்த வாக்குறுதியை அமுல்படுத்தியும் வந்துள்ளன. நமது கட்சியின் மாநாடுகளுக்கு தனியா பேருந்து முதலாளிகளை நிர்பந்தப்படுத்தி பயன்படுத்தியும் வந்துள்ளனர். இதற்கான கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு முறையாக செலுத்தவில்லை. தனியார் பேருந்துகளுக்கு ரூட்பர்மிட்டும், கலெக்ஷனுக்கு ஏற்ற கால அட்டவணையையும் (Trip Sedule) ஒதுக்கி தந்து கொழுக்க வைக்கின்றனர்.
கலெக்சன் வராத கிராமப்புற பேருந்துகள், மலைப்பகுதி பேருந்துகள் உள்ளிட்டவைகளை அரசு போக்குவரத்துக் கழகங்களின் தலையிலேயே மொத்தமாக கட்டி விடுகின்றனர். இது மட்டுமின்றி உயர் அதிகாரிகளையும் ஊழல் படுத்தி, போக்குவரத்து துறையை படிப்படியாகஅழித்து வந்துள்ளனர். அத்தகைய ஊழல் அதிகாரிகள் முறையாக பேருந்துகளை பராமரிக்காமலேயே, உதிரி பாகங்களை அவ்வப்போது மாற்றாமலேயே, புதிதாக டயர்களை வாங்காமலேயே கள்ளக் கணக்கு காட்டி ஏமாற்றி வந்துள்ளனர். இன்று தமிழகத்தில் ஓடும் பல பேருந்துகள் ஆர்டிஓ அலுவலகத்தையே பார்க்காதவை. விதிமுறைப்படி பரிசீலித்தால், உடைத்து பழைய இரும்புக்கு போடப்பட வேண்டியவை. அதிகார வர்க்கத்தினரும் ஆட்சியாளர்களும் கூட்டு சேர்ந்து பேருந்துகளை காயலான் கடை சரக்காக மாற்றிவிட்டு, கோடிகளை சுருட்டிக் கொண்டு சென்று விட்டனர்.
தற்போது போக்குவரத்து கழகங்களை நிர்வகிக்கும் மேலாளர்கள் பரிதாபப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள். போக்குவரத்து கழகத்தை இயக்கவும் பணிமனையை முறையாக நிர்வகிக்கவும் தேவையான ஊழியர்களை நிரந்தர வேலைக்கு எடுக்க நிதி இல்லை.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சேர வேண்டிய நியாயமான தொகைகளை தருவதற்கு கூட இருப்பு இல்லை. அதாவது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்காக மாதம் தோறும் தொழிலாளியின் பணத்தை சம்பளத்திலிருந்து பிடித்ததையும் கூட, அவர் அவர்களுக்குரிய PF கணக்குகளில் கட்டாமல் மோசடி செய்து, ஆண்டுக்கணக்காக தாமே முறைகேடாக தின்று தீர்த்துள்ளனர்.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமையை புறக்கணிக்கும் தமிழக அரசு!
போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்கள் உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அடமானம் வைத்து, அதையும் தின்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதே நேரம், போக்குவரத்து கழகத்தில் செயல்படும் தொழிற்சங்க தலைவர்களில் ஒருவர்கூட அதிகார வர்க்கத்தினரை கண்டித்து போராடியதாகவும் தெரியவில்லை. தொழிற்சங்கங்கள் போனஸ், ஊதிய உயர்வு உள்ளிட்ட பொருளாதாரக் கோரிக்கையோடு வரம்பிட்டுக் கொள்கின்றன. ஒட்டுமொத்த துறையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை பார்ப்பது குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.
மக்களின் சொத்துக்கள் அதிகார வர்க்கத்தினரால் மார்வாடி சேட்டுகளிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளதா என்று RTI இல் கேட்டுத்தான் உறுதி செய்ய வேண்டும் என்பதில்லை. நாடு முழுக்க நடந்து வரும் மாற்றங்களை பார்த்தாலேயே இப்படித்தான் நடக்கும் என்று முடிவுக்கு வர முடிகிறது.
இந்த அடமானத்தின் முடிவு எதுவாக இருக்கும்? மக்கள் சொத்தான போக்குவரத்து கழகங்கள் அடகு பிடித்துள்ள மார்வாடி சேட்களுக்கு – தேசங்கடந்த தரகு முதலாளிகளாக வளர்ந்து வரும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுவதில்தான் போய் முடியும்.
இதைப் பற்றி எல்லாம் போக்குவரத்து கழகத்தில் தற்போது பணிபுரியும் யாரும் அக்கறை காட்டுவதில்லை. நமக்கு சர்வீஸ் உள்ளவரை வேலை கிடைத்தால் போதும் என்றே பார்க்கின்றனர். தற்போது உள்ள டிப்போ அதிகாரிகளுக்கும் தினம் தோறும் வேலைக்கு “ஆள் பிடிப்பது” மட்டும்தான் தலையாயப் பிரச்சினையாக உள்ளது. தான் பொறுப்பில் இருக்கும் வரை வண்டிகளை முறையாக இருக்க வேண்டும் என்ற வரம்புடன் மட்டுமே சிந்திக்கின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கண்ணோட்டம் துளியும் இல்லை.
ஆள் பிடிக்கும் அவல நிலை!
ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தினரின் கிரிமினல் ஊழல் குற்றங்களால் போக்குவரத்துக் கழகங்கள் ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு விட்டன. தற்போது மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கு முழுமையாக நிரந்தர ஓட்டுனரையோ நிரந்தர நடத்துனரையோ பயன்படுத்துவது இல்லை. டிப்போவில் உள்ள ஒரு ஓட்டுனருக்கு ஒரு தினக்கூலி நடத்துனரையும், ஒரு நிரந்தர நடத்துனருக்கு ஒரு தினக்கூலி ஓட்டுனரையும் ஜோடி சேர்த்துதான் தினந்தோறும் சாத்தியமான அளவில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழித்தடத்தில் ஓட்டுவதன் மூலம், நிறுத்தங்களில் சரியாக நிறுத்தி இயக்க முடியாமலும், உரிய நேரத்திற்குள் டிரிப்பை முடிக்க முடியாமலும் சிரமப்படுகின்றனர்.
தினக்கூலி ஓட்டுனர்களையும் நடத்துனர்களையும் தேடிப் பிடித்து ஜோடி சேர்ப்பதே டிப்போ மேனேஜருடைய தினசரி வேலையாகி விட்டுள்ளது.
உரிய நேரத்தில் பேருந்து வருமா – வராதா? என்ற தகவல் கூட சாலைகளில் நிற்கும் பரிசோதகர்களுக்கோ, டைம் கீப்பர்களாக வேலை செய்யும் அதிகாரிகளுக்கோ தெரிவதில்லை. இது மக்களிடம் அரசு போக்குவரத்து கழகங்களின் மீது கோபத்தை தூண்டுவதாக அமைகிறது. “தனியாரே பரவாயில்லை; சொன்ன நேரத்திற்கு வண்டி வருகிறது” என்று தனியார்மயத்தை ஆதரித்து பேசவும் பேசவும் வைக்கின்றன. அதிகார வர்க்கத்தின் ஆட்சியாளர்களின் ஊழல்களை பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைகின்றனர் கார்ப்பரேட்டுகள்.
முதல் கட்டமாக 12 ஆண்டுகள்!
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 500 மின்சாரப் பேருந்துகளை, 12 ஆண்டுகளுக்கு ஓட்டுநர்களை போட்டு இயக்குவதன் மூலம் கொழுத்த லாபத்தை சுருட்ட போகின்றன கார்ப்பரேட்டுகள்.
500 பேருந்துகளை வாங்க மட்டுமே 875 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்த பேருந்துகளை இயக்குவதற்கு ஒரு கி.மீ.க்கு ஏசி பஸ் களுக்கு ரூ.80.86 என்றும், சாதாரண மின்சார பேருந்துகளுக்கு ரூ.77.16 என்றும் கணக்கிட்டு தரவுள்ளனர்.
தற்போதைய பேருந்துகள் படிப்படியாக பழைய இரும்பு கடைக்குப் போடப்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஓட உள்ள அனைத்து பேருந்துகளையும் இப்படித்தான் இயக்குவார்கள் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடியும்.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் – ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் – அந்தப் பேருந்துகள் ஓடும் தரத்தில் இருக்கும் பட்சத்தில், அதை யாரைக் கொண்டு இயக்குவார்கள்? தமிழக அரசு நிச்சயமாக நிரந்தரப் பணிக்கு ஓட்டுநர், நடத்துனர், மெக்கானிக் உள்ளிட்டவர்களை எடுக்கப் போவதில்லை. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அப்படி எடுத்து இயக்குவது சாத்தியம் என்றால், உரிய தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலை தர வேண்டும் என்ற கண்ணோட்டம் அரசுக்கு உள்ளது என்றால், இப்பொழுதே ஆள் எடுத்து, 500 பேருந்துகளை அவர்களைக் கொண்டே இயக்கிவிடலாமே.
சேவைத்துறையான போக்குவரத்துத் துறையை கார்ப்பரேட்டுகளுக்குப் படையல் வைக்கிறது கழக அரசு. இந்த மின்சார பேருந்துகளுக்கான – மொத்த நாட்டின் நுகர்வுக்கான – அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான – மின்சார உற்பத்தியை அதானிகளுக்கு வாரி வழங்க ஆரம்பித்துவிட்டது ஒன்றிய அரசு. ஆனால், சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பேருந்துகளை இயக்குவதாக கதை கட்டி, நம் காதில் பூசுற்றுகின்றனர்.
இப்படி கார்ப்பரேட் சேவையில், மோடியின் அரசும், ஸ்டாலினின் தமிழக அரசும் ஒரே புள்ளியில் ஒன்றிணைகின்றன. அவற்றை அமுல்படுத்தும் வழிமுறைகளில் தான் வேறுபடுகின்றன. இந்த தாழ்தள மின்சாரப் பேருந்துகளை பார்த்து நாம் மயங்கி வரவேற்க முடியாது. இதில் கார்ப்பரேட்டுகளை நுழைப்பதை தடுத்தாக வேண்டும்.
தீர்வு எது?
தற்போதுள்ள போக்குவரத்து ஊழியர்களும், ஓய்வு பெற்றும் பணப்பலன் கிடைக்காமல் பரிதவித்து கொண்டு நிற்கும் முன்னாள் ஊழியர்களும், படித்து உரிய தகுதியுடன் இருந்தும் அரசு வேலை கிடைக்காமல் கார்ப்பரேட்டுகளிடம் நவீன கொத்தடிமையாக செல்ல நிர்பந்திக்கப்படும் இளைஞர்களும், படிக்கவே கார்ப்பரேட்டுகளுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்ற இந்தக் கொடுமையில் உழன்று வரும் மாணவர்களும் ஓரணியில் திரள வேண்டியுள்ளது.
போக்குவரத்து துறை உள்ளிட்டு, ஒட்டுமொத்த நாட்டையே கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் உள்ளிட்ட, அனைத்து ஆட்சியாளர்களையும், கார்ப்பரேட் கொள்ளைக்கு துணை நிற்கும் அதிகார வர்க்கத்தினரையும் அம்பலப்படுத்தி தனிமைப் படுத்துவோம். மக்களின் நியாயமான போராட்டங்களை நசுக்க அடக்குமுறைகளை ஏவும் கார்ப்பரேட் – காவி பாசிஸ்டுகளை மோதி வீழ்த்துவோம். இதுவே, நம் அனைவரின் முதன்மையான கடமையாக உள்ளது.
இளமாறன்.







தமிழ்நாடு அரசின் தாழ் தள மின்சார பேருந்து இயக்கம் – இயங்குகின்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை இல்லாது ஒழிக்க முற்படுவது – ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களை அத்துக் கூலிகளாக மாற்றி படிப்படியாக பணியிடங்களையும் இல்லாதொழிப்பது – அனைத்தையும் தனியார் மையமாக்கி கார்ப்பரேட்டுகள் வசம்
ஒப்படைப்பது என கார்ப்பரேட் காவி பாசிசத்தை நிலை நிறுத்துதலில் ஒன்றிய மோடி அரசுக்கும், தமிழ்நாட்டின் ஸ்டாலின் அரசுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதனை இக்கட்டுரை சிறப்பாகவே அம்பலப்படுத்துகிறது. அனைவரும் படித்து முழுமையை கிரகித்துக் கொள்ள வேண்டும். பரவலாக பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.