தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் “தீவிர திருத்தப் பணி”யை மேற்கொண்டு வருகின்றது. இந்தப் பணி கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி துவங்கி, ஜூலை 25 ஆம் தேதிக்குள் அதாவது ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.
பீகார் மாநிலத்தில் கடைசியாக 2003 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு இப்பொழுது தான் இந்த பணி மீண்டும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு வாக்காளர் பட்டியல் சேர்க்கப்பட்டவர்களும் இனிமேல் சேர்க்கப்பட இருப்பவர்களும் தங்களது பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், பத்தாம் வகுப்பு – பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்ற பதினோரு ஆதாரங்களில் ஒன்றை காட்டி தங்களது இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 2.93 கோடி நபர்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணையத்தின் மூலமாக பாஜக பறிக்க முயற்சி செய்கிறது.
பறிக்கப்படும் ஏழைகளின் வாக்குரிமை!
ஆனால் ஏழை எளிய மக்களிடம் இது போன்ற சான்றிதழ்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் மிகவும் குறைவாகவே உள்ளன. பீகார் மாநிலத்தில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெரும் பழக்கமே மக்களிடம் இல்லை. உதாரணமாக, இந்த மாநிலத்தில் இப்பொழுது கூட 40% குழந்தைகள் வீடுகளில் தான் பிறக்கின்றன. இந்த குழந்தைகளுக்கு எப்படி பிறப்புச் சான்றிதழ் இருக்கும்?
அடுத்து, இந்த மாநிலத்தில், மக்கள் பத்தாம் வகுப்பு வரை படிப்பது என்பது மிக மிக அரிதானதாகவே உள்ளது. 2011ல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 36%பேர் கல்வியறிவு பெறாதவர்கள். இதுவே 2000 ஆவது ஆண்டிற்கு முன்பு எனில், அங்கு கல்வியறிவு பெற்றாத மக்களின் சதவிகிதம் இதைவிட மிகமிக அதிகமாகத்தான் இருந்திருக்கும். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் பெரும்பான்மையான மக்களிடம் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை.
இவை இல்லாத மக்கள், தங்கள் பெயரில் ஏதேனும் வீடோ நிலமோ இருந்தால் அந்தப் பத்திரத்தைக் காட்டி தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மிகக் கொடிய வறுமை தாண்டவமாடும் பீகாரில், மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களிடம் ஒரு துண்டு நிலமுமோ அல்லது சிறிய வீடோ கூட இருப்பதற்கான வாய்ப்பு மிகமிக அரிதானதாகவே உள்ளது. அதிலும் பெண்களின் பெயரில் இந்த சொத்துக்கள் இருப்பதற்கான வாய்ப்பே ஏறக்குறைய இல்லை என்றே கூறிவிட முடியும்.

அடுத்து, பாஸ்போர்ட்டை காட்டி தங்களை வாக்காளர் பட்டியலில் மக்கள் சேர்த்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களிலேயே இரண்டு சதவீதம் பேரிடம் தான் பாஸ்போர்ட் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் பீகார் மாநிலத்தில் எத்தனை பேரிடம் பாஸ்போர்ட் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது? ஏழை எளிய மக்களிடம் இது இருப்பதற்கான வாய்ப்பே இல்லை.
இந்த நிலையில் 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் தங்களது ஆவணத்தை மட்டும் இன்றி தங்களது பெற்றோர்களின் ஆவணத்தையும் அதாவது மேற்கூறிய ஆவணங்களில் ஏதாவது ஒன்றையும் சேர்த்து சமர்ப்பித்தால் தான் வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அதேசமயம் மிக முக்கியமாக ஏழை எளிய மக்கள் அனைவரிடமும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ள ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை ஆதாரமாக காட்டி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை.
தேர்தல் ஆணையம் பாஜக கூட்டு!
பீகார் மாநிலத்தின் 70% இளைஞர்கள் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் விவசாய வேலை செய்து வருவதாக புள்ளிவிவரங்கள் மேலும், பீகார் மாநிலத்திலிருந்து ஏராளமான மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் வேலை செய்து வரும் நிலையில் அவர்களால் ஒரு மாதத்திற்குள் இந்த ஆவணங்களை தயார் செய்து கொடுக்க வாய்ப்பே இல்லை.
மேலும், தற்போது மழைக்காலமாக உள்ளதால், பீகாரின் 6 மாவட்டங்களில் பெரும் மழை பொழிவு — வெள்ளம் காரணமாக, மக்கள், தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள மக்களாலும் தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்களை காட்டி தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியாது.
படிக்க:
♦ டெல்லி பாஜகவுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையம்!
♦ ‘ஜனநாயக’த்தை மறுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் !
பீகார் மாநில மக்கள் இப்படிப்பட்ட ஒரு சூழலில் இருக்கும் நிலையில்,
வரும் நவம்பர் 2025 ல் பீகார் மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திடீரென அறிவிக்கப்பட்டு அவசர அவசரமாக இப்படி வாக்காளர் பட்டியலில் “தீவிர திருத்தப் பணி” மேற்கொள்வதற்கான தேவை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகாரில் 19.65% மக்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள், 1.68% மக்கள் பழங்குடியினர், 17.7% மக்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர்.
அதாவது பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 39.03% ஆக உள்ள தலித்துகள், இஸ்லாமியர்கள், பழங்குடியினரின் வாக்குகளில் ஆகப்பெறும்பான்மையினரின் வாக்கு பிஜேபியினருக்கு அல்லது பிஜேபி கூட்டணிக்கு கிடைக்கவே கிடைக்காது. இந்த மக்கள் பிஜேபி கூட்டணிக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள் என்ற நிலை உள்ளது.
இவர்களின் வாக்கை என்ன முயற்சி செய்தாலும் தங்களால் வாங்க முடியாது என்று அறிந்து கொண்ட பாசிச பாஜக இந்த மக்களின் ஆகப்பெரும்பான்மையோருக்கு வாக்களிக்கும் உரிமையே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதற்காகவே இப்பொழுது இவ்வளவு அவசரம் அவசரமாக வாக்காளர் பட்டியலில் “தீவிர திருத்தப் பணி” மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக இந்த மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பணியை பாஜக மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்தடுத்து பல தேர்தல்களில் வாக்களித்தவர்களைக் கூட இனிமேல் வாக்களிக்க முடியாதபடி தடுப்பதற்கான வேலையில் பாசிச பாஜக ஈடுபட்டுள்ளது.
பீகார் தொடக்கம் தான்!
இந்த வேலையை அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க உள்ள மேற்குவங்கம், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களிலும் பாசிச பாஜக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தேர்தலில் வென்று இந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த மாநிலங்களில் வலுவாக காலூன்றி விட வேண்டும் என்று வெறிகொண்டு அலைவதன் ஒரு வெளிப்பாடாகத்தான் பீகாரில் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே மகாராஷ்டிரா, டெல்லி சட்டமன்ற தேர்தல்களின் போது பல லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியும், அதே போல மிகக் குறுகிய காலத்திற்கு உள்ளாக பல லட்சக்கணக்கான வாக்காளர்களை புதிதாக வாக்காளர் பட்டியலுக்குள் கொண்டு வந்தும் பாஜக வெற்றி பெற்றது இப்பொழுது வெளியில் வந்து நாறிக் கொண்டிருக்கிறது.
இவை அனைத்தும் பாசிச பாஜக, தான் ஆட்சிக்கு வருவதற்காகவும் ஆட்சியில் நீடிப்பதற்காகவும் தேர்தல் தில்லுமுல்லுகளில் மட்டும் ஈடுபடுவதில்லை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலிலேயே தங்களுக்கு சாதகமாக தாங்கள் வெல்வதற்கு ஏற்ப அயோக்கியத்தனமான பல்வேறு வேலைகளை செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்கள் நடைபெறுவதை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையே தனது வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறது இந்திய நீதித்துறை. மக்களின் உரிமையை காப்பாற்றுவதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு, எவ்வித உத்தரவையும் உச்ச நீதிமன்றம் போட மறுத்துவிட்டது.
அனைத்து ஏழை எளிய மக்களிடமும் உள்ள ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை மக்களின் ஆதாரமாக ஏற்றுக்கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்துவதைக் குறித்து தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து மட்டும்தான் சொல்லி இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் மிக முக்கியத் தூணாக உள்ள இந்திய நீதித்துறையின் லட்சணம்.
தேர்தல் வருவதற்கு முன்பாகவே பாசிச பாஜகவின் அயோக்கியத்தனங்களை எதிர்த்து, மக்களை திரட்டி போராடி, அயோக்கியத்தனமான வேலைகளை செய்ய விடாமல் தடுப்பதன் மூலமாகத்தான் பாசிச பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
— குமரன்
தோழர் குமரன் அவர்களின் இக்கட்டுரை பாஜகவின் முகமூடியை நன்றாகவே கிழித்தெறிந்து தொங்கவிட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; நீதித்துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ், போலீஸ், ராணுவம், அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை…இப்படியாக இன்ன
பிற அனைத்தையும் காவிமயமாக்கி விட்டது
பாசிச ஆர் எஸ் எஸ் – பாஜக கும்பல். ஆக, பட்டவர்த்தனமாக சர்வாதிகார ஆட்சி என்று பிரகடனப்படுத்தாமல், ஒற்றை சர்வாதிகார – ஒற்றைக் கட்சியின் ஆட்சியை அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அறிவிப்பிற்கு இணங்க நிலைநாட்ட இந்துத்துவா கும்பல் மோடி அமித்ஷா தலைமையில் சதிராட்டம் போடுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் கோடிக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பது மட்டுமல்ல; EVM வாக்கு இயந்திரம் மூலம் எண்ணற்ற தில்லு முல்லு மோசடிகளை கடந்த பல மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் நடைமுறைப்படுத்தி காண்பித்ததை நாம் கண்கூடாகக் கண்டோம். அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. ஆனால் தேர்தல் ஆணையமோ தான் ஒரு பாஜக கிளை அமைப்பு தான் என்று நிர்வாணமாக நிற்பதாலும், அதற்குப் பக்கவாத்தியம் வாசிக்க தந்தை பெரியார் பாணியில் சொல்ல வேண்டுமானால் உச்சிக் குடுமி நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதால் இவர்களது ஆட்ட பாட்டங்களை அனைத்திலும் அடக்க முடியாத நிலை நீடிக்கிறது. குறிப்பிட்ட பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தல் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் மொத்த வழக்கறிஞர் கபில் சிபில் அவர்களின் நியாயமான வாதங்களை காது கொடுத்து கேட்பதற்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயார் இல்லை. மாறாக அவருடைய வாதங்களை ஒட்டடையைப் போல் ஒதுக்கி தள்ளி விட்டு
காவிமயமான தேர்தல் ஆணையத்தின் அடாவடித்தனமான நடவடிக்கைகளுக்கு ஒத்தூதுவதை பார்க்க முடிந்தது.
பாராளுமன்றம் என்பதும், சட்டமன்றம் என்பதும் ஆசான் லெனின் கூறியது போல பன்றிகளின் துன்பம் தான். எனினும் இருக்கக்கூடிய குறைந்தபட்ச ஜனநாயகக் குடியரசில் மக்கள் பெரும் குறைந்தபட்ச உரிமையையும் பறிக்கக் கூடிய கேவலமான சூழ்நிலையை அடித்து நொறுக்கி ஜனநாயக உரிமையை நிலைநாட்ட நாடு முழுமைக்கும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி அரசியல் இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும், புரட்சிகர இடதுசாரி இயக்கங்களும் ஒட்டுமொத்த மக்களை அணி திரட்டி வீதியில் இறங்கி போராடி வெற்றியை ஈட்டியாக வேண்டிய காலக்கட்டாயம் இது. அதைத்தான் இக்கட்டுரை விளக்குகிறது. கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
எனது பின்னூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் என்பதற்கு பதிலாக மொத்த வழக்கறிஞர் என்று தவறாக தட்டச்சு ஆகிவிட்டது; பன்றிகளின் தொழுவம் என்பதற்கு பதிலாக பன்றிகளின் துன்பம் என்பதாக தவறாக தட்டச்சு ஆகிவிட்டது;
காலக்கட்டம் என்பதற்குப் பதிலாக காலக்கட்டாயம் என்பதாக தவறாக தட்டச்சு ஆகிவிட்டது. நான் அறிய இந்த மூன்று பிழை திருத்தங்களையும் சரி செய்து படித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன்.