ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரீசி மாவட்டத்தில் கட்ரா நகருக்கு அருகில் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவக் கல்லூரி புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் முதல் தொகுப்பாக 2025 – 26 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்களாக 50 பேர் எம்பிபிஎஸ் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆர்எஸ்எஸ் காவி வெறியர்கள் மாணவர் சேர்க்கையை எதிர்த்து கடும் போராட்டத்தில் இறங்கிதால் இந்தக் கல்லூரியின் உரிமத்தையே ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்துள்ளது.
ஒரு இந்துக் கோவிலின் பெயரால் துவங்கப்பட்ட ஒரு கல்லூரியை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சங்கிகள் போராடுவது என்பதும் அந்தப் போராட்டத்தை அங்கீகரித்து அந்த கல்லூரியின் உரிமத்தையே பாசிச பாஜக அரசு ரத்து செய்துள்ளது என்பதும் வியப்புக்குரியதாக வாசகர்களுக்கு தோன்றலாம். இதன் பின்னே உள்ள அயோக்கியத்தனமான நிகழ்வுகளைப் பார்ப்போம்.
இந்தக் கல்லூரியில் முதல் தொகுப்பாக 2025 – 26 ஆம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் படிப்பிற்கு மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாணவர்களில் 42 பேர் முஸ்லிம்கள், 7 பேர் இந்துக்கள், ஒருவர் சீக்கியர். இந்த மாணவர்கள் அனைவரும் நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது பாசிச பாஜக அரசு கூறும் ‘தகுதி’யின் அடிப்படையில் தான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகுதி என்ற போர்வையில் உழைக்கும் மக்களையும் சூத்திர பஞ்சம சாதியினரையும் புறக்கணிப்பதற்காக எதைச் செய்தாலும் ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் வெறியர்கள் இந்த விசயத்தில் தகுதியைப் பற்றி கவலைப்படவில்லை.
படிக்க:
♦ காஷ்மீர் டைம்ஸ் பத்திரிக்கை மீதான பாசிச தாக்குதல்!
♦ காஷ்மீர்: தியாகிகளுக்கு மரியாதை செலுத்த அனுமதிக்காத பாசிச அரசு!
இந்தக் கல்லூரி ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி ஆலய வாரியத்தால், அதாவது இந்து கோயிலின் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் கல்லூரி என்பதால் அதில் இந்து மாணவர்களை தான் அதிக இடங்களில் சேர்க்க வேண்டும் என்று கூறி சங்கிகள் சதிராட்டம் போடுகின்றனர்.
தற்பொழுது எம்பிபிஎஸ் படிப்பிற்கு வெளியிடப்பட்டுள்ள மாணவர் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்; மாணவர் சேர்க்கையில் இந்து மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் உருவ பொம்மையை அவரது மாளிகைக்கு முன்பாகவே வைத்து எரித்து ஆர் எஸ் எஸ் பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்து மத வெறியர்களின் போராட்டத்திற்கு பணிந்த தேசிய மருத்துவ வாரியம் (National Medical Commission) இந்தக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தையே ரத்து செய்துவிட்டது. இதில் கல்வி கற்க தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாணவர்களையும் வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றி விடப் போவதாக கூறிவிட்டது.
ஆனால் தேசிய மருத்துவ வாரியம் இந்தக் கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்ததற்கான உண்மையான காரணத்தை கூறவில்லை. மாறாக, தாங்கள் இப்பொழுது ஆய்வு செய்த பொழுது இந்த கல்லூரியில் போதுமான வசதிகள் இல்லாதது போதுமான ஆசிரியர்கள் இல்லாதது கண்டறியப்பட்டதால் கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளது.
கல்லூரிக்கு உரிமம் வழங்கும் பொழுதே அந்தக் கல்லூரியில் போதுமான வசதிகள் உள்ளனவா என்று இவர்கள் சோதித்து அறியாமல் உரிமம் வழங்கியதாக ஒப்புக் கொள்கிறார்களா என்ன? என்றெல்லாம் கேள்வி கேட்டால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை. ஆர் எஸ் எஸ் பாஜகவின் ஆணையை செயல்படுத்துவதைத் தவிர இந்த வாரியத்திற்கு வேறு வழி ஏதும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்துக் கோவிலின் பணத்தில் நடத்தப்படும் கல்லூரியில் இந்து மாணவர்களுக்கு தான் அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று சங்கிகள் கூறுகிறார்கள்.
இந்த சங்கிகள் கூறுவது நியாயம்தான் என்று சில அப்பாவிகளுக்கு தோன்றினாலும் தோன்றலாம். அப்படி நினைக்கும் அப்பாவி வாசகர்கள் கீழ்க்கண்ட விசயங்களை பரிசீலித்து பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நாம் கோருகிறோம்.
தமிழகத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து தமிழக அரசால் உருவாக்கப்பட்டு தமிழக அரசால் தான் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மாணவர்கள் தான் இதில் பெரும்பான்மையாக சேர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது நியாயம்தான் என்பதை ஆர்எஸ்எஸ் பாஜகவினர் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இந்தியா முழுமைக்கும் இருந்து வந்து மாணவர்கள் படிக்கலாம் என்று எதிர்வாதம் புரிகின்றனர்.
சூத்திர பஞ்சம சாதியினரை சேர்ந்த மக்களின் வரிப்பணத்தில், உழைப்பில் தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களில் ஆரிய பார்ப்பனர்கள் மட்டும்தான் மணி ஆட்ட வேண்டும் என்று விதியை வகுத்து நடைமுறைப்படுத்துவது குறித்து கேள்வி கேட்டால், அதாவது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேள்விக் கேட்டால் இந்துமத தர்மப்படி பார்ப்பனர்கள்மட்டும்தான் அர்ச்சகராக வேண்டும் என்று அயோக்கியத்தனமாக இந்துமத வெறியர்கள் வாதாடுகின்றனர்.
இந்தியாவில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் மத்திய மாநில அரசுகளின் உயர் பதவிகளில் 80, 90 சதவீதத்திற்கு மேல் இருப்பது எப்படி நியாயமானது? என்று கேள்வி எழுப்பினால் அரசு உயர் பதவிகளிலும் அனைத்து சாதியினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் கூறினால் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமித்தால் திறமையற்றவர்கள் உயர்தரவிக்கு வந்து விடுவார்கள் நாட்டை நாசமாக்கி விடுவார்கள் என்று ஆர்எஸ்எஸ் பார்ப்பன மத வெறியர்கள் திமிர்த்தனமாக பேசுகிறார்கள்.
சூத்திர பஞ்சம சாதியினரை சேர்ந்தவர்கள் கல்வி கற்கக் கூடாது என்று அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது இந்து மதம். அவை மேல் நிலையில் இருந்து வக்கிரமாக நடத்தியதும் நடத்தி வருவதும் பார்ப்பனர்கள். இந்த நிலையில் சூத்திர பஞ்சம சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து கல்வி கற்க வைத்து கல்வியை உழைக்கும் மக்களுக்கானதாகவும் மாற்றியது கிறிஸ்தவர்கள் தானே? அந்தக் கிறிஸ்தவர்கள் நடத்திய பள்ளியில் பயின்று பல பார்ப்பனர்களும் உயர் சாதி இந்துக்களும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளாக வக்கீல்களாக நீதிபதிகளாக மருத்துவராக உருவானார்கள்.
இதையெல்லாம் அப்பாவி இந்துக்களிடமிருந்து மறைத்து விட்டு, தங்களின் மத வெறியைப் பரப்புவதற்கான வாய்ப்பாக இந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரத்தை சங்கீகள் பயன்படுத்துகின்றனர்.
இந்திய நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அரசு வேலைவாய்ப்பிலும் இன்ன பிற பொருளாதார சமூக நடைமுறைகளிலும் அனைத்து சாதியினருக்கும் அனைத்து மதத்தினருக்கும் உரிய பிரநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. இந்த வகையில் பார்க்க போனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் இஸ்லாமியர்கள் அவர்களுக்குத்தான் பெரும்பான்மையான இடங்கள் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் ஒதுக்கப்பட வேண்டும். இந்த மருத்துவக் கல்லூரியில் பாஜக அரசு கூறும் நீட் தேர்வின் அடிப்படையில், அதாவது, ‘தகுதி’யின் அடிப்படையில் தான் 42 இஸ்லாமிய மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை இந்து மத வெறியர்கள் எதிர்ப்பதற்கு ஒரே காரணம் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி மோத விட வேண்டும் என்பதுதான்.
மக்களை ஒடுக்குவதற்கும் சுரண்டிப் பிழைப்பதற்கும் மக்களை மரீதியாக மோதவிட்டு குளிர் காய்வதற்கும் ஆர் எஸ் எஸ் பாஜகவினர் இரட்டை நாக்கில் மட்டுமல்ல, பல நாக்குகளில் பல பொய்களை கூறுவதற்கு தயங்காதவர்கள். இதை அப்பாவிகள் கூட புரிந்து கொள்வதற்கு ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவக் கல்லூரியின் உரிமத்தை பாசிச பாஜக அரசு ரத்து செய்துள்ளதானது ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது.
- குமரன்






