தொழிலாளர் நலனும் இல்லை; நவீனமும் இல்லை! கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் சுரண்டலே நான்கு தொகுப்புச் சட்டங்களின் அடிப்படை
ஒன்றிய அரசு 2025 நவம்பர் 21 அன்று நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு கள் குறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு முழுமையான ஏமாற்று வேலை யாகும். அதில் இடம்பெற்றுள்ள அரசின் இக்கூற்று களை இந்திய தொழிற்சங்க மையம் (CITU) வன்மை யாக மறுப்பதோடு, கடுமையாக எதிர்க்கிறது. இந்த சட்டங்கள் “தொழிலாளர் நலன்” மற்றும் “நவீனமயமாக்கல்” என்று அரசால் வர்ணிக்கப் பட்டாலும், உண்மையில் இவை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை முற்றாகப் பறிக்கும் செய லாகும். கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கும் ஒப்பந்த முறைக்கும், கட்டுப்பாடற்ற பணிநீக்கத்திற் கும் வழிவகுப்பதே இதன் உண்மையானநோக்கம். அரசின் தவறான பிரச்சாரங்களுக்கு சிஐடியுவின் பதிலடி இதோ:
1. 29 சட்டங்களை 4 குறியீடுகளாக எளிமைப்படுத்துதல் – ஒரு மாயை! ‘எளிமைப்படுத்துதல்’ என்ற பெயரில் தொழிற் சாலைகள் சட்டம், தொழிற்தகராறு சட்டம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு விதிகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன. இது தொழிலாளர் துறையின் கண்காணிப்புப் பங்கை அழித்து, ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தையும் நிலையற்ற வேலைச் சூழலுக்குள் தள்ளுகிறது. 90 சதவீதத்திற்கும் அதிக மானோர் அமைப்புசாராத் துறையில் இருக்கும் சூழலில், முறையான பணி நியமனக் கடிதத்திற்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள் என்பதற்கு இச்சட்டத்தில் பதிலில்லை.
2. சமூகப் பாதுகாப்பு: அனைவருக்குமானது எனும் பொய் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு என்பது இத்தொகுப்பில் இல்லை. பிரிவுகள் 109–114 எவ்வித காலக்கெடுவோ, நிதி ஒதுக்கீடோ இன்றி அறிவிக்கப் பட்டுள்ளன. கிக் (Gig) எனப்படும் செயலி வழி தொழிலாளர்களுக்கு, விற்றுமுதல் (Turnover) அடிப்படையில் 1-2% மட்டுமே முதலாளிகளின் பங்களிப்பாகக் கோருவது ஓய்வூதியம் மற்றும் சுகாதார நலன்களுக்குச் சற்றும் போதாது. எல்லா வற்றிற்கும் மேலாக, அவர்களை ‘சட்டப்பூர்வ தொழி லாளி’ எனவும், நிறுவனத்தை ‘முதலாளி’ எனவும் அங்கீகரிக்காமல் வழங்கப்படும் ஆதார் அடிப்படை யிலான பெயர்வுத்திறன் (Portability) அர்த்தமற்றது. பிஎப் (PF), இஎஸ்ஐ (ESI) வரம்பிற்கான தொழிலாளர் எண்ணிக்கையை முறையே 20 மற்றும் 10 எனக் குறைக்கவும் அரசு தயாராக இல்லை.
3.குறைந்தபட்ச ஊதியம்: அறிவியல்பூர்வமற்ற அணுகுமுறை 15-வது இந்திய தொழிலாளர் மாநாடு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அறி வியல்பூர்வமான ‘வாழ்க்கை ஊதியத்தை’ (Living Wage) இந்த ஊதியத் தொகுப்பு வழங்கவில்லை. மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் மிகக்குறைந்த ‘தேசிய அடிப்படை ஊதியம்’ (Floor Wage), பல மாநிலங்களில் தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியத்தையும் குறைக்கும் அபாயம் கொண்டது. ஏற்கனவே குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் 45% தொழிலாளர்கள் உள்ள நிலையில் (PLFS 2023), அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட லட்சக்கணக்கான திட்டத் தொழி லாளர்களை இவ்வூதிய வரம்பிற்கு வெளியே நிறுத்தி யிருப்பது அநீதியாகும்.
4.சுகாதாரப் பராமரிப்பு: தொழிலாளர்கள் மீதான மோசடி அனைத்து ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ வசதியை விரிவுபடுத்தவும், ஊதிய உச்ச வரம்பின்றி முதலாளிகளின் பங்களிப்பை உறுதி செய்ய வும் இச்சட்டம் மறுக்கிறது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஆண்டு மருத்துவப் பரிசோதனை என்பது மற்றொரு மோசடி. 10 ஆண்டுகளுக்குட்பட்ட நிறுவனங்கள் ‘விருப்பப்பட்டால்’ மட்டுமே இதைச் செய்யலாம் என்ற விதி, கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்ட சலுகையே தவிர தொழிலாளர் நலன் அல்ல.
5.ஊதியப் பாதுகாப்பு: அபராதம் ரத்து ஊதியத்தைத் தாமதமாக வழங்கினாலோ அல்லது பிடித்தம் செய்தாலோ விதிக்கப்பட்டிருந்த 10 மடங்கு அபராதத்தை புதிய தொகுப்பு நீக்கியுள்ளது. இது முதலாளிகளுக்குச் சாதகமான நட வடிக்கை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத் தொழிலாளர்கள் மற்றும் மத்திய அரசின் திட்டத் தொழிலாளர்களின் ஊதியம் பல மாதங் களாக நிலுவையில் உள்ள நிலையில், இந்தத் தொகுப்பு அவர்களுக்குப் பொருந்தாது என விலக்கு அளித்துள்ளது பெரும் ஏமாற்று வித்தையாகும்.
படிக்க:
♦ தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை அமலாக்க விடாதே! திரும்பப் பெற வீதியில் இறங்கி போராடுவோம்!
6.நிலையான வேலைவாய்ப்பின் முடிவு (Fixed Term Employment) ‘குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு’ என்ற பெயரில் நிரந்தரப் பணிகளில் தற்காலிக முறையை சட்டப்பூர்வ மாக்குகிறது இத்தொகுப்பு. இது நிறுவனங்களுக்கு ‘அமர்த்து – துரத்து’ (Hire and Fire) என்ற வரம்பற்ற அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு வருடம் பணிபுரிந்தாலும் பணிக்கொடை (Gratuity) உண்டு எனக் கூறப்பட்டாலும், சேவைத் தொடர்ச்சி, சீனியாரிட்டி மற்றும் நிரந்தரப் பணியின் பலன்களை இது ஈடு செய்யாது. இது தொழிற்சங்கமயமாக்கலை வேரறுக்கும் முயற்சியாகும்.
7.பெண் தொழிலாளர் பாதுகாப்பு: பெயரளவில் மட்டுமே பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறினாலும், தற்போதைய வேலையின்மை சூழலில் அந்த ‘ஒப்புதல்’ கட்டாயத்தின் பெயரிலேயே பெறப்படும். சமவேலைக்கு சம ஊதியம், பணியிடப் பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, பேறுகாலச் சலுகைகள் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், வெறுமனே தடைகளை நீக்குவது பாலினப் பாகுபாட்டை அதிகரிக்கவே செய்யும்.
8.சிறு குறு தொழில் மற்றும் கட்டுமானத் துறை: ஆபத்தான தளர்வுகள் சுய சான்றிதழ் (Self-certification) முறையும், ஆய்விலிருந்து விலக்கு அளிப்பதும் தொழிலாளர் களைப் பாதுகாப்பற்றவர்களாக மாற்றும். ஏற்கனவே கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் ரூ.38,000 கோடிக்கு மேல் பயன்படுத்தப்படாமல் உள்ளது (CAG 2022). இந்நிலையில், செஸ் (Cess) வரி ஏய்ப்பை ஊக்குவிக்கும் வகையிலான தளர்வுகள் கட்டுமானத் தொழிலாளர்களை வஞ்சிக்கின்றன. சுரங்கம் மற்றும் தோட்டத் தொழில்களில் ஆய்வுகளை நீர்த்துப்போகச் செய்வது பணியிட விபத்துகளையும், உயிரிழப்புகளையும் அதிகரிக்கும்.
9.தொழிற் தகராறு தீர்வு: வேலைநிறுத்த உரிமை முடக்கம் புதிய தொழிற்தகராறு சட்டம் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை மறைமுகமாக முடக்குகிறது. 300 தொழிலாளர்கள் வரை உள்ள நிறுவனங்களில் அரசின் அனுமதியின்றி ஆட்குறைப்பு, பணிநீக்கம் மற்றும் ஆலை மூடல் ஆகியவற்றைச் செய்ய முத லாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது 90% பணியிடங்களில் தொழிலாளர்களைப் பந்தாட உதவும். ஏற்கனவே 12 லட்சம் வழக்குகள் நிலுவை யில் உள்ள நிலையில், புதிய சட்டங்கள் நிலைமை யை மேலும் மோசமாக்கும்.
10.ஆய்வாளர் இனி ‘வசதி செய்பவர்’ (Facilitator) தொழிலாளர் துறை ஆய்வாளர்களை ‘வசதி செய்பவர்களாக’ மாற்றுவதும், புகார் அடிப்படை யிலான ஆய்வை ரத்து செய்வதும் சட்ட அம லாக்கத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இது ஊதியம், பாதுகாப்பு மற்றும் பணிநேர விதி மீறல்களைச் சட்டப்பூர்வமாக்கவே வழிவகுக்கும்.
11.நெகிழ்வுத்தன்மை வேலைவாய்ப்பைப் பெருக்காது தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்தினால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது சுத்தப் பொய். ராஜஸ்தானில் 2014-ல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கவில்லை; மாறாக நிரந்தரத் தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், பயிற்சிப் பணியாளர்களாக வும் (Trainees) மாற்றியதே வரலாறு. ரிசர்வ் வங்கி அறிக்கைகளும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தேக்கநிலையே உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.
12.ஜனநாயகப் படுகொலை நாட்டின் உயரிய அமைப்பான இந்திய தொழி லாளர் மாநாடு (ILC) கடந்த பத்தாண்டுகளாகக் கூட்டப்படவில்லை. சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ் (CITU, AITUC, INTUC, HMS) உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இச்சட்டங்களை ஒருமித்த குரலில் எதிர்த்தன. ஆனால், எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் நாடாளு மன்றத்தில் இச்சட்டங்களை நிறைவேற்றியது ஜனநாயக நடைமுறையை கேலிக்கூத்தாக்கிய செயலாகும். போராட்டமே தீர்வு! நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் கார்ப்பரேட் லாபத்திற்காகத் தொழிலாளர் சந்தையைத் திறந்துவிடும் கருவிகளே. வேலைப் பாதுகாப்பு, சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு என அனைத்தை யும் அழிப்பதே இதன் நோக்கம். எனவே, இந்த நான்கு சட்டத் தொகுப்புகளையும் உடனடியாக ரத்து செய்யுமாறு சிஐடியு வலியுறுத்து கிறது. தேசத்தின் சொத்தாகிய தொழிலாளர் வர்க்கம், மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையின் அழைப்பை ஏற்று ஒன்றிணைய வேண்டும். வரும் 2025 நவம்பர் 26 அன்று நடைபெறவுள்ள அகில இந்தியப் போராட்டத்தில் முழு பலத்துடன் பங்கேற்று, தொழிலாளர் விரோதக் கொள்கைகளை முறியடிக்க வாரீர்! இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதற்கு முன்பும் இதுபோன்ற தாக்குதல்களை முறியடித்துள்ளது; இனியும் முறியடிக்கும்.
தமிழில்: கே.சி.கோபிகுமார்
முகநூல் பதிவு
![]()







கார்ப்பரேட்டு நலனுக்காக முழு மூச்சாக வேலை செய்யும் காவி கும்பலுக்கு தொழிலாளி வர்க்கம் தக்க பதில் கொடுக்கும்..