
டெல்லி கார் வெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விடுதலை செய்துள்ளது. விசாரணையில் டெல்லி குண்டுவெடிப்பில் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி மாலை செங்கோட்டை சிக்னல் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ விடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டு வெடிப்பு தற்கொலை படை தாக்குதல் என NIA தெரிவித்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி என, காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலியை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் முகமது நபி தான் காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தினார் எனவும் தெரிவித்துள்ளது. இவர் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவ துறையில் உதவி பேராசிரியராக பணியில் இருந்துள்ளார் என்பதை என்.ஐ.ஏ உறுதிப்படுத்தியுள்ளது.
அதேசமயம், அந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மூன்று மருத்துவர்களை கைது செய்திருந்தது என்.ஐ.ஏ. அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக.
இந்நிலையில் தீவிரவாத நடவடிக்கையில் தொடர்புடையவர்களாகவும் முக்கிய குற்றவாளியாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக என்.ஐ.ஏ வால் சொல்லப்படும் நபியுடன் தொடர்புடையவர்கள் என கருதப்பட்ட டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம் மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோர் தற்போது நபியுடன் தொடர்புபடுத்தும் எந்தவித ஆதாரங்களும் இல்லை என என்.ஐ.ஏ விடுதலை செய்துள்ளது.
டெல்லி கார் வெடிப்பில் இதுவரை விசாரணை முழுமையடையாத சூழ்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு முன்பே குற்றவாளிகளாக்கி அவர்களது புகைப்படங்களுடன் இந்தியா முழுவதும் உள்ள ஊடகங்கள் புதுப்புது கதைகளை கட்டி ஒளிபரப்பி சங்பரிவார் கும்பலின் மதவெறி பசிக்கு தீனி போடுகின்றன.
மறுபுறம் சமூக வலைதளங்களிலும், இணைய செய்திகளிலும் கார் வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவராக மெத்த படித்தவர்களாக இருப்பதால் வெள்ளைக்காலர் பயங்கரவாதம் என படித்த முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தும் வண்ணமாக செய்திகளை பரப்பியது.
இப்போது கைது செய்யப்பட்டவர்களில் மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு பேர் குற்றவாளிகள் இல்லை என ஒன்றிய அரசு அரசின் என்ஐஏ அறிவித்துள்ளது. இதனை எந்த ஊடகமும் நாங்கள் தவறான செய்திகளை வெளியிட்டோம், குறிப்பிட்ட நபர் மீது அபாண்டமான குற்றம் சுமத்தினோம் என மறுப்பு செய்திகள் கூட வெளியிடவில்லை. 4 பேர் குற்றவாளிகள் இல்லை என என்ஐஏ வெளியிட்ட செய்தியை பல பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. இதுதான் அவர்களது பத்திரிக்கை தர்மம்.
இந்தியாவில் யார் குற்றம் செய்கிறார்கள் என்பதை தாண்டி அவர்கள் எந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தான் செய்திகள் ஒளிபரப்பப்படும். பீகார் தேர்தலையொட்டி விடுதலை செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி அசிமானந்தாவை பற்றி Godi மீடியாக்கள் வாய் திறக்கவே இல்லை. ஐந்து ஆண்டுகளாக குற்றம் நிரூபிக்கப்படாமலேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித் உள்ளிட்டவர்களின் நியாயங்களை பேசுவதில்லை. சங்பரிவார் கும்பல் கொடுப்பதுதான் அவர்களுக்கு செய்தி. அதையே ஊதிப் பெருக்குவார்கள். இஸ்லாமியர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
படிக்க:
♦ டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் சாவு! இந்து மத வெறி அரசியலுக்காக கொடுக்கப்பட்ட பலிகள்!!
♦ கன்வார் யாத்திரை மூலம் இஸ்லாமிய மத வெறுப்பை வளர்க்கும் பாஜக அரசுகள்!
இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். அவற்றில் சில, நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு தொடர்பாக டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹிலானி கைது செய்யப்பட்டு போதி ஆதாரங்கள் இல்லை என 2003 ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பின்னாளில் அப்சல் குரூப் தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக அவர் மீது தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டது.
2001 நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அப்துல் குரு 2014 ஆம் ஆண்டு அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டார். அப்சல் குரு மீது எந்த வித குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. 2001 நாடாளுமன்றத் தாக்குதல் நடைபெற்ற போது ஆட்சியில் இருந்தது பாஜக தான். இந்திய மக்களின் ‘கூட்டு மனசாட்சி’யைத் திருப்திபடுத்த அப்சல் குருவை தூக்கிலிட்டது நீதிமன்றம்.
அப்பாவி இஸ்லாமியர்கள் கைது செய்யப்படுவதும் அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படும் முன்பே குற்றவாளி ஆக்கப்படுவதும் சமீப ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் ஆளும் இந்தியாவின் நிலை. அதே நேரத்தில் மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகள், இந்து தீவிரவாதிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கப்படுவதும் அதே இந்தியாவில்தான்.
இந்திய மக்களிடையே இஸ்லாமியர் என்றாலே பயங்கரவாதிகள் என்பதை பொதுப்புத்தியில் திணித்து வருகிறார்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள். அவர்கள் ஆட்சியில் நீடிக்கின்ற வரையில் சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழமுடியாது.
- நந்தன்






