கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அன்றாடம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; பாலியல் சீண்டல்கள்; பாலியல் ரீதியிலாக அவமானப்படுத்துகின்ற பல்வேறு கடி ஜோக்குகள் மற்றும் விளம்பரங்களில் பெண்களை வைத்து கவர்ச்சி காட்டி நுகர்வோர் பொருட்களை விற்கின்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் உள்ளது.

குறிப்பான சம்பவங்கள் நடக்கும்போது அதை வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகின்ற கீழ்த்தரமான முயற்சியில் தான் ஓட்டுக் கட்சிகள் இறங்குகிறதே ஒழிய, “ஒட்டுமொத்த சமூகத்தின் அவமானமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது” என்ற வகையில் அவமானப்படுவதில்லை.

கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வன்முறை வெறியாட்டங்களும், பாலியல் வன்கொடுமைகளும், பெண்களை இழிவுபடுத்துகின்ற பல்வேறு சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

ஆணாதிக்க வெறியாட்டத்தை கட்டி காக்கின்ற, மிகவும் பிற்போக்கான பார்ப்பன (இந்து) மதத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பாசிச பயங்கரவாத ஆட்சி இந்தியாவில் நடந்து கொண்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது மட்டும் இல்லை சமத்துவ உரிமை, கருத்து சொல்லும் உரிமை, அவர்களின் விருப்பத்திற்கு தனது இணையை தேடிக் கொள்ளும் உரிமை எதுவுமே கிடையாது.  விதிவிலக்காக சில இடங்களில் நடப்பதை வைத்து இது போன்றுதான் ஒட்டுமொத்த சமூகமும் இருப்பதாக கருதிக் கொள்ளக் கூடாது.

பொது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற குற்றங்கள் தலைவிரித்தாடும் போது அதற்கு எதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாக சில போராட்டங்கள், சில பெண்கள் அமைப்பு நடத்துகின்ற போராட்டங்கள், ஊடகங்களில் வருகின்ற செய்தி, அதைத் தாண்டி சமூக ஊடகங்களில் சிலர் அக்கறையுடன் எழுதுவது என்பதற்கு மேல் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துகின்ற அளவிற்கு எழுச்சிகரமான போராட்டங்கள் நடைபெறவில்லை.

கொல்கத்தாவில் ஆளுகின்ற மம்தா அரசை கவிழ்ப்பதற்காக மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரின் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான போராட்டங்கள் மாதக்கணக்கில் நீடித்தது. இதுபோன்று தனது அரசியல் தேவைக்காக பெண்களை வைத்து போராட்டங்கள் நடத்தப்படுகிறதே ஒழிய உண்மையாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் ஆணாதிக்க வக்கிரங்கள், வெறியாட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற வகையில் போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தகர்த்தெறிய வேண்டும் என்பதற்காக பொதுவாக சமூகத்தில் பிரச்சாரம் செய்வது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, கருத்தரங்குகளை நடத்துவது என்பதன் மூலம் கருத்து பிரச்சாரத்தை உருவாக்கலாம் தான். ஆனால் அது மட்டும் போதுமா? போதவே போதாது. சமூகத்தில் போராட தயாராவதற்கு முன்பாகவே பெண்களுக்கு சில ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டும். தங்களது குடும்பத்தில் “வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்து அல்லது கௌரவமான வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வந்து புகுந்து கொள்ள வேண்டும்” என்ற கட்டுப்பாட்டை திணிப்பதை என்னவென்று சொல்வது?

பெண்கள் மீதான நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகள் பெண்களை வீட்டுக்கு வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தது. தற்போதுள்ள அரை நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பு படிப்படியாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்பினாலும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிக்கல்கள் கருதி குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு பெற்றோர்களாலும், உறவினர்களாலும் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது.

எங்கோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற ஒரு அடக்குமுறையை எதிர்த்து, தானும் சமூகத்தில் ஒரு பிரஜை என்ற முறையில் பெண்கள் சுதந்திரமாக கருத்து சொல்வதற்கும், போராடுவதற்கும், வீதியில் இறங்கி போர்க்குணமாக ஆணாதிக்க சமுதாயத்திற்கு சவால் விடுக்கவும் அவர்களின் குடும்பமே முதல் தடையாக உள்ளது.

படிக்க:

 கோவையில் மாணவியை சீரழித்த கிரிமினல்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்?

 நீதியரசர் ஹேமா அறிக்கையும், ஆணாதிக்க வக்கிர வெறிபிடித்த சமூகத்தின் யோக்கியதையும்.

சட்டங்களை தீவிரமாக்குவதன் மூலமாகவோ அல்லது பொறுப்பான நபர்களை வைத்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடித்து தண்டனை கொடுப்பதன் மூலமாகவோ இந்த பிரச்சனைகள் முழுமையாக தீர்ந்து விடப் போவதில்லை.

ஆணாதிக்க அடக்குமுறைகளையும், பெண்களுக்கு எதிரான பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவதற்கு பெண்கள் அமைப்பு முன் வருவது மட்டுமின்றி முதலில் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பெண்களை சுதந்திரமாக, தங்கள் விரும்பிய வேலைகளை செய்வதற்கும், விரும்பிய துறையில் படிப்பதற்கும், விரும்பிய இணையரை தேர்வு செய்து கொள்வதற்கும், விரும்பியவாறு சமூகத்தில் நடக்கின்ற கொடுமைகளுக்கு எதிராக போராடுவதற்கும் அனுமதிக்கின்ற மனப்பான்மை உடனடியாக தேவைப்படுகிறது.

நாம் அறிந்த வரையில் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற வன்கொடுமைகளை கண்டு நரம்பு புடைக்க எழுதுகின்ற அல்லது பேசுகின்ற பலரும் குடும்பத்தில் ஆணாதிக்கவாதிகளாகவும், பெண்களை குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதை தடுப்பவர்களாகவும் உள்ளனர் என்பது தான் சாபக்கேடாக உள்ளது.

நமக்கு எதிரிகளை கண்டுபிடிப்பது சுலபமாக இருக்கிறது. ஆனால் நானும் இதையெல்லாம் வெறுக்கின்றேன், எதிர்க்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு எதிரிகளுடைய மனப்பான்மையுடன் செயல்படுபவர்களை கண்டுபிடிப்பது கடினமான வேலையாக இருக்கிறது.

எனவேதான், “சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றவர்களை மட்டுமே நம்ப முடியும்” என்ற இலக்கணத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது.

மீண்டும் கோவை கல்லூரி மாணவியின் மீதான பாலியல் வன்கொடுமையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்ற அதே சமயத்தில் நேர்மையாக மனம் திறந்த முறையில் பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கின்ற ஆணாதிக்க வக்கிரங்களையும் வெறியாட்டங்களையும் எதிர்த்து போராட வேண்டியது அவசியம் என்பதை முன் வைக்க வேண்டும்.

எந்த நேரத்தில் எதைப் பேசுகிறார் என்று கொதிப்படைவதை விட இந்த நேரத்தில்தான் இதை முன் வைக்க முடியும். அப்போதுதான் சமூகத்தைப் பற்றி நேசிப்பவர்கள் மத்தியில் உள்ள இரட்டை மனப்பான்மை ஒழியும். புதிதாக போராடுகின்ற பெண் போராளிகளை சமூகம். கிடைக்கப்பெறும்.

◾️பா.மதிவதனி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here