மணத்தி கணேசன்- மாரி செல்வராஜ்: பைசன்களைக் கொண்டாடுவோம்!
உண்மையில் தேவேந்திரகுல வேளாள இளைஞனாக வரும் கிட்டானை ( மணத்தி கணேசனை ) நாடார் சமூகத்தினர் பல கட்டங்களில் கை தூக்கி மேல ஏற்றியிருக்கின்றனர் என்பதாகத்தான் படம் காட்சிப்படுத்தி உள்ளது.

பொதுவாக காட்டெருமைகள் மனிதர்களைக் கண்டு பயப்படாது. மனிதர்கள் தான் காட்டெருமையை கண்டு பயப்பட வேண்டும்.

அதைப் போல் 90களில் தென் மாவட்டங்களில் சாதி கலவரங்களும் படுகொலைகளும் அரங்கேறிய சூழலில், ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞன் காட்டெருமையாக மாறி தன்னை அமுக்க நினைக்கும் தடைகளை, வேலிகளை தட்டி தூக்கி விட்டு அவன் இலக்கை நோக்கி பயணித்து, வெற்றிக்கொடியையும் நாட்டுகிறான்.

தூத்துக்குடியில் பிறந்து இந்திய அளவில் கபடியில் சாதித்த மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ள படம்தான் ‘பைசன் காளமாடன்’. இப்படம்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் தீபாவளியை ஒட்டி  வெளிவந்து பாராட்டுக்கள் மற்றும் கடும் விமர்சனங்களையும் ஒருசேர பெற்று வருகிறது.

மாரி செல்வராஜை சீண்டும் சங்கி மீடியாக்கள்!

சினிமா என்பதை மக்களை மழுங்கடிக்கும் ஒரு ஆபாச, பிற்போக்கு, வக்கிர  சிந்தனைகளை தூண்டும் ஊடகமாக பயன்படுத்தி வரும் ஆளும் வர்க்கங்களும், பார்ப்பனியமும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களின் படைப்புகளை கண்டால் பதறிப் பாய்கின்றன. அப்படி அவை பதறிப் பாய்வதாலேயே, விமர்சனங்களை அடுக்குவதாலேயே,  மாரி செல்வராஜ் தனது கலைப்படைப்பின் மூலமாக எதை தொட வேண்டுமோ அதை, எங்கே தொட வேண்டுமோ அங்கே, எப்படி அடிக்க வேண்டுமோ அப்படி அதை மிகச் சரியாக துல்லியமாக செய்துள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ளவும் முடிகிறது .

ஆதிக்க சாதி வெறியர்களை உத்தமர்களாக காட்டும் வகையிலான தேவர் மகன்களோ, சின்னக்கவுண்டர்களோ, நாட்டாமைகளோ வரும் போது குதூகலித்தவர்கள் கர்ணனையோ பைசனையோ பார்த்து கொதிக்கிறார்கள்.

ஏன் தொடர்ந்து சாதிய பிரச்சனை வைத்து மட்டுமே படம் எடுக்கிறாய்? எப்போதோ மறந்து போன வெட்டு குத்துகளை திரையில் காட்டி மீண்டும் சாதி கலவரத்தை தூண்டவா முயற்சிக்கிறாய்?  என்றெல்லாம் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் தரப்பில் இருந்து வரும் கலை படைப்புகளைக் கண்டு விமர்சனங்கள் பாய்கின்றன. ஹரிநாடார் போன்றவர்கள் மாரி செல்வராஜை எச்சரிக்கவும் செய்கிறார்கள் .

“என்னை பாதித்த கதையை, என் அப்பாவின் கதையை, என் தாத்தாவின் கதை சொல்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதை நான் சாகுற வரைக்கும் சொல்லுவேன். பிற படங்களைப் போல் ரசிகன் குடிச்சிட்டு ஆடுவதற்காக நான் படம் எடுக்க மாட்டேன்” என்று ஓங்கி அடிக்கிறார் மாரி செல்வராஜ்.

என் படத்தை ஊரே கொண்டாட்டிக்கிட்டு இருக்கு. ஆனா யாரோ ஒரு பத்து பேர் ஒரு நெரேட்டிவ் செட் பண்றாங்க. தவறான கண்ணோட்டத்தை பொதுக்கருத்தாக மாற்றும் படியான அதே கேள்வியை மீடியாக்களும் இப்படி கேக்குறீங்களே!  ஆபரேஷன் பண்றப்ப நோயாளி கத்தத்தான் செய்வான். ஆனா அந்த நோயை சரி செய்யறது எங்களோட கடமை” – என்றும் மீடியாக்களுக்கு காட்டமாக பதில் சொல்லி இருக்கிறார்.

எப்படி ஆதிக்க மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிவெறியை கூண்டில் ஏற்றுகிறார் இயக்குனர்?

ஒரு கிராமத்துக்கு பள்ளி மாணவனின் பின்புலத்திலிருந்து கதையை சொல்ல ஆரம்பித்து, அந்த மாணவன் எதிர்கொள்ளும் ஊரின் புறக்கணிப்பை, சாதிய அடக்குமுறைகளை, சமத்துவத்துக்கான ஏக்கத்தை, கோபத்தை அழுத்தமாக காட்சிப்படுத்துகிறது பைசன் காள மாடான்.

உண்மையில் இக்கதையில் காட்டப்படும் கிட்டான் மட்டுமல்ல; தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் வேட்டை விலங்குகளால் துரத்தப்படும் இரைகளை  போலத்தான் காலம் முழுக்க உயிர் தப்பிக்கவும், முன்னேறவும் தலைத் தெரிக்க  ஓடுகிறார்கள்.

தமிழகத்தில் ஆதிக்க சாதிவெறியின் விளைவாக ஆணவப் படுகொலைகள் நடப்பது இன்றும் கூட தொடரவே செய்கிறது. ஏன் இப்படி வன்மத்தோடு வெட்டிக் கொள்(ல்)கிறார்கள்  என்பதை தென் மாவட்டங்களில் வாழ்ந்திடாத மக்களுக்கும் உலகிற்கும் உறைக்கும் படி காட்சிப்படுத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், சாதிய ஒடுக்குமுறையின் வலிகளையும், அவமானங்களையும், இழிவுகளையும் சுமந்து, எதிர்நீச்சல் போட்டு முன்னேறிய இயக்குனரின் சொந்த அனுபவங்களிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதால், அடக்கப்படுபவர்களின் நியாயத்தை மிகவும் தெளிவாக கூர்மையாக முன்வைத்து அடக்குமுறையை ஏவியவர்களின் கண்ணோட்டத்தை தவறுகளை அழுத்தமாகப் பதிய வைத்து விடுகிறது திரைப்படம்.

படிக்க:

 ஜெய்பீம் திரைப்படம் பார்த்தவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கலாம்!

 திண்டுக்கல் ஆணவப் படுகொலை! திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்!

மணத்தி கிட்டானை இப்படி அடித்து துவைத்தது, ஓட விட்டது நாங்கள்தான் என்று இப்படத்தைப் பார்த்தவர்களிடம் போய்  நெஞ்சை நிமித்த முடியுமா? இதை செய்தது என் வகையறாக்கள்தான், என் சமூகத்தார்தான், என் குடும்பத்தார்தான் என்று மீசையை முறுக்கி நெஞ்சை நிமிர்த்த முடியாமல் கூனிக் குறுகும்படி, மனசாட்சி உள்ளவர்களை தலை கவிழ்ந்து நிற்கும்படி  குற்றம் சாட்டுகிறது இத்திரைப்படம்.

தேவேந்திர குல வேளாளர்களாக இருக்கட்டும், அல்லது பண்ணையார் அண்ணாச்சிகளாக இருக்கட்டும், இவர்களின் கண்ணோட்டங்களைத்தான் கேள்விக்கு உட்படுத்துகிறது திரைப்படம்.  சாதிய வெறியை பெட்ரோல் ஊற்றி வளர்த்தெடுப்பவர்களாக காட்டப்படுபவர்களும் கூட மனசாட்சியுடனும், நீதி நேர்மையுடனும், நியாயத்துடனும் சில நேரங்களில் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் இயக்குனர் சரியாகவே காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால், அது அவர்களின் கொடூர முகத்தை மறைக்கும் முகமூடியாக இருக்கக் கூடாது என்பது மிக முக்கியம்.

தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக நடித்துள்ள அமீர் பேசும் வசனம் கூர்மையாக சிந்திக்க தூண்டுகிறது.  ”எல்லோரும் சமம் என்பதை நிலைநாட்டுவதற்காக தானே போராட்டத்தை தொடங்கினோம்.   நம்மவர்களே சமம் என்பதை ஏற்க மறுத்து நான் மேலானவன் என்று மோதிக்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் போலுள்ளது. எதற்காக இந்த போராட்டத்தை தொடங்கினோம் என்பதை நாமே மறந்து விடும் நிலை வந்து விட்டது” என பேசி சாதி வெறியின் வளர்ச்சி போக்கை பொட்டில் அறைந்தாற்போல் முன்வைக்கிறார்.

”இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் தயாரிப்பில் உருவாகியுள்ள பைசன் – காளமாடன் என்னும் திரைப்படத்தை இன்று பார்த்தோம்! இந்த திரைப்படம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்! மாரி செல்வராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!” என்கிறார் தொல் திருமாவளவன்.

“மாரி செல்வராஜ் திருந்த வேண்டும்; அல்லது திருத்தப்படுவார். நாங்கள் பைசன் படம் ஓடும்  தியேட்டர்களை முற்றுகையிடுவோம்! வெங்கடேச பண்ணையார் போலீசின் தோட்டக்களை நெஞ்சில் வாங்கிக் கொண்டு சாய்ந்தார். இந்த வரலாறு அவருக்கு தெரியுமா?” என்று மிரட்டுகிறார்  சத்ரிய சான்றோர் படையின் தலைவர்  ஹரி நாடார்.

உண்மையில் தேவேந்திரகுல வேளாள இளைஞனாக வரும் கிட்டானை ( மணத்தி கணேசனை ) நாடார் சமூகத்தினர் பல கட்டங்களில் கை தூக்கி மேல ஏற்றியிருக்கின்றனர் என்பதாகத்தான் படம் காட்சிப்படுத்தி உள்ளது.

குறிப்பாக PT வாத்தியார், பண்ணையார், சாதி வேற்றுமைகளை புறக்கணிக்கும்  தனியார் ஆலையின் கபடி கிளப் உரிமையாளர் ஆதித்தனார் , செலக்சன் கமிட்டியில் இருப்பவர்,  மணத்தி கணேசன் ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பு தர போராடி சாதித்த இந்திய கபடி அணியின் கேப்டனாக வரும் ரத்தினம் கதாபாத்திரம் என திறமையை மதிப்பவர்களாகவே பிற சமூகத்தினரை  காட்சிப் படுத்தியுள்ளது.

பைசன் ஒட்டுமொத்தமாக எந்த ஒரு சாதியையும் இழிவு படுத்தவில்லை. அதே நேரம் தாழ்த்தப்பட்டவனின் கேள்விகளை அழுத்தமாக முன்வைக்கிறது. அதற்குப் பொருத்தமாக ஒளிப்பதிவையும், பின்னணி இசையையும் கொடுத்து உயிரோட்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பைசனின் திரைக்கதை.

சிறந்த கலைப் படைப்பாகவும் மிளிர்கிறது பைசன்.  ஒவ்வொரு நடிகர்களும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமான நடிப்பை வழங்கி மெருகேற்றி உள்ளார்கள். பைசன் படத்திற்காக பணியாற்றியுள்ள ஒட்டுமொத்த குழுவையும் நாம் பாராட்ட வேண்டும்.

படத்தின் மூலமாக கிட்டான் எழுப்பும்  கேள்வியை,  படத்தை பார்த்த மக்கள் ஆதிக்க சாதியினரை பார்த்து கேட்டால், அவர்களுக்கு போதிய விளக்கம் தரும் துணிச்சலோ, நேர்மையோ இல்லாதவர்கள் தான் படத்தைப் பார்த்து  பதறுகிறார்கள்.

மாரி செல்வராஜ் மீதான இந்த வன்மத்துக்கான அடிப்படை எது?

அவரின் படங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கதாபாத்திரங்களை எடுத்துக் கொண்டு வலிகளை அழுத்தமாக சொல்கிறது. அவர்கள் மீது போடப்பட்ட தடைகளை தகர்த்துவிட்டு, அவன் முன்னேறி விட்டான், வளர்ந்து விட்டான், சாதித்தும் விட்டான் என்பதை பெருமிதத்தோடு காட்சிப்படுத்துகிறது.

ஒரு பிரச்சனையையோ சமூக சிக்கலையோ தீர்க்க வேண்டும் என்றால், முதலில் அதை பிறருக்கு புரியும்படி தெளிவாக முன்வைக்க வேண்டும். அது சமூக அக்கறை கொண்டவர்களால்  பரிசீலிக்கப்படவும், ஆராயப்படவும் வேண்டும். அதிலிருந்து தீர்வுகள் கண்டறியப்பட்டு, முன்வைத்து அமல்படுத்தப்பட வேண்டும். இதில் மாரி செல்வராஜ் பிரச்சனைகளை அழுத்தமாக புரியும்படி முன் வைப்பதில் முழு வெற்றியை பெற்றுவிட்டார்.

சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான மேலும் சாதியே இல்லாத ஒழிக்கும்படியான  தீர்வுகளை நோக்கி நகரும் போராட்டங்களை கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும்தான் செய்தாக வேண்டும்.

உண்மை சுடுகிறது; கசக்கிறது!

சங்கி கஸ்தூரியோ ”படத்தின் தலைப்பை தமிழில் வைக்கவில்லை; காளமாடன் என்பது எவ்வளவு சிறப்பான பெயர்” என்று தமிழுக்காக நீலி கண்ணீர் வடிக்கிறார். பாஜகவினர் தமிழ்ப் பற்று கொண்டு  கூவவில்லை; உண்மையில் அவர்களுக்கு மக்களை சாதிய அடிப்படையில் பிரித்து மோத விட்டு ஆதாயம் அடைய வேண்டும். அதற்கு எதிராக சாதி வெறியை கூண்டில் ஏற்றுகிறாரே மாரி செல்வராஜ் என்றுதான் கொதிக்கிறார்கள்.

கிட்டானின் அதாவது மணத்தி கணேசனின் வெற்றியை தமிழ் திரையுலகம் மூலம் நாடறியச் செய்வதைத்தான் ஆதிக்க சாதி வெறியோ மதவெறியோ பிடித்துள்ள பலரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.

உண்மை கசக்கிறது என்பதற்காக பொய்யையா தலையில் தூக்கி கொண்டாட முடியும்? உண்மையில் மணத்தி கணேசனைப் போலவே மாரி செல்வராஜூம் ஒரு பைசன் தான். நாம் பைசன்களை கொண்டாடுவோம்.  பார்ப்பனியம் சதித்தனமாக நால்வர்ணத்தை புகுத்தி உழைத்து வாழும் மக்களை பிளவுபடுத்தி , நரவேட்டை ஆடி வருவதற்கு எதிராக, ஆணவப் படுகொலைகளால் ரத்தம் குடித்து வரும்  இத்தகைய  சாதிய இழிவுகளை துடைத்தெரிய உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்து களமாடுவோம்.

இளமாறன்

1 COMMENT

  1. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பைசன் திரைப்படம் பார்த்தேன். இளமாறன் எழுதியுள்ள விமர்சனம் அனைத்தையும் சிறப்பாக விவரித்துள்ளார். சினிமா துறையில் மாரி ஒரு பைசன் என்பதை இத்திரைப்படம் மூலம் நிரூபித்துள்ளார்.

    ஸ்போர்ட்ஸ் டிராமா என்கிற போர்வைக்குள் தென் மாவட்ட மக்களின் வாழ்வியல், சாதி, அரசியல் என் பல பரிமாணங்களை பேசியிருக்கிறது. பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் அற்புதம்.

    இதுப்போன்ற படங்கள் சமூகத்தில் உண்மையில் மாற்றத்தை நிகழ்த்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here