நீதிமன்றங்கள், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதை விடுத்து, அரசின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஆதரவான தீர்ப்புகளையே வழங்குவதாக, பல வழக்கறிஞர்களும், கல்வியாளர்களும், முன்னாள் நீதிபதிகளும் கருதுகின்றனர்.
தனக்கு வாழ்வளித்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை முழுவதுமாக இழக்கும் துரதிருஷ்டவசமான நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதை எண்ணி வருந்துவதாக, ஒரிசா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், மூத்த வழக்கறிஞருமான,”பிலால் நஸ்கி “கடந்த ஜுலை 1 ம் தேதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நஸ்கி மட்டுமல்ல, இதற்கு முன்பும் நீதித்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. எனினும், தற்போது விமர்சனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. பல வழக்கறிஞர்களும், கல்வியாளர்களும், முன்னாள் நீதிபதிகளும் தற்போது பொது வெளியில் நீதித்துறை மீதான தங்களின் விமர்சனங்களை பதிவு செய்து வருவது, நீதிமன்றங்கள் தற்போது சட்டத்தை உயர்த்திபிடித்து மக்களின் உரிமைகளை பாதுகாப்பவைகளாக இல்லை! என்பதை தெரிவிக்கிறது..
தொடர் சரிவு:
கடந்த சில வருடங்களாக பல சட்ட அறிஞர்கள் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களின் செயல்பாடுகள் அதிர்ச்சியளிப்பதாக பதிவு செய்திருக்கின்றனர். சட்ட அறிஞர் அனுஜ் ப்ஹுவானியா “மோடி பதவியேற்ற 2014 ம் ஆண்டிலிருந்தே உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கிறது” என்று எழுதுகிறார்.
படிக்க:
நீதிமன்றங்கள் ஒன்றிய அரசின் அதீத நடவடிக்கைகளை சட்டரீதியாக கட்டுப்படுத்த தவறியதுதான் அவற்றின்மீதான அறிஞர்களின் விமர்சனத்திற்கு முதன்மை காரணம். ”உச்ச நீதிமன்றம் அரசுக்கு சார்பாக இயங்கும் நிர்வாக கருவிகளாக சுருங்கி விட்டனவோ “என்று தனக்கு சந்தேகம் எழுவதாக சட்ட நிபுணர் “கௌதம் பாட்டியா” 2020ம் ஆண்டு எழுதியுள்ளார்.
பல சமயங்களில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் விதமாகவே இருந்து வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணமாக, கடந்த 2018 ம் ஆண்டு ரபேல் ஜெட் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கில், அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட, சீலிடப்பட்ட அறிக்கை குறித்து எதிர்த்தரப்பிற்கு எந்த விளக்கமும் தராமலேயே வழக்குகளை தள்ளுபடி செய்தது. பல சமயங்களில் முக்கிய வழக்குகளை வரிசை பட்டியலில் சேர்க்காமல் வருடக்கணக்கில் இழுத்தடித்து வந்துள்ளது. அவற்றில் அரசியல் கட்சிகள் அனாமதேயமாக நிதி பெற வழிவகை செய்யும் தீர்த்தல் பத்திரங்களின் சட்டபூர்வ தன்மை குறித்த வழக்கும் அடங்கும்.
சமீபத்திய நிகழ்வுகள்:
இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக முக்கிய நபர்கள் சம்பத்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் கையாளும் முறை கடும் அதிருப்தியளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2002-குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குற்றமற்றவர்கள் என்று யோக்கியப் பட்டம் கொடுத்து விடுவித்ததோடல்லாமல் வழக்காடிய சமூகப் போராளி தீஸ்தா சேத்தல்வாட், முன்னாள் குஜராத் டி.ஜி.பி. R.B. Sreekumar, சிறையிலிருக்கும் சஞ்சீவ் பட் மற்றும் குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல் தன்னுடைய 452 பக்க தீர்ப்பில் கடுமையாக கண்டித்திருப்பதோடு “இது பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடும், தேசத்தை கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிருப்தியில் இருந்த அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சி” என்றும் “இத்தகையோரை சட்டத்திற்குட்படுத்தி இருட்டில் தள்ள வேண்டும்” என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் மறுநாளே தீஸ்தா சேத்தல்வாட் மற்றும் R.B. Sreekumar ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சஞ்சீவ் பட் ஏற்கனவே சிறையிலுள்ளார்.
படிக்க:
- ALT news முகமது ஜூபைர் கைது! கருத்துரிமையை பறிக்கும் பாசிஸ்டுகள்.
- குஜராத் இனப்படுகொலை 2002! குற்றவாளிகள் தப்பி விட்டனர்! எதிர்த்து போராடியவர்கள் ஒடுக்கப் படுகின்றனர்!
Alt news எனும் உண்மை சரிபார்க்கும் இணைய தளத்தின் இணை இயக்குனர் முகமது ஜுபைர்-க்கு பிணை மறுக்கப்பட்டதையும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். முகமது ஜுபைர் கடந்த 2018ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்த ஒரு பதிவிற்காக கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ஜூலை-2 ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு ஐந்து மணி நேரம் முன்னரே தீர்ப்பின் விபரங்கள் டெல்லி போலீஸ் மூலமாக ஊடகத்திற்கு கசிந்தது, வழக்கறிஞர்களையும் மனித உரிமை அமைப்புகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்னரே, தீர்ப்பின் விபரங்கள் டெல்லி போலிசுக்கு கிடைத்திருப்பதென்பது நீதிபதிக்கும்- போலீசுக்கும் இடையில் கொல்லைப்புற ஒப்பந்தம் ஏதும் இருக்குமோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக, ‘நீதித்துறை பொறுப்புடைமை மற்றும் சீர்த்திருத்தங்களுக்கான இயக்கம்’ தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
“அரசை விமர்சிக்கும் வழக்குகளில் நடவடிக்கை எடுப்பதில்லை” என்பவையே நீதிமன்றத்தின் மீதான பெரும்பாலான விமர்சனங்களாக இருந்து வந்த நிலையில் தற்போது “பி.ஜே.பி ஆதரவாளர்கள் சம்பத்தப்பட்ட வழக்குகளிலும் நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன என்று மாறியுள்ளது”. உதாரணமாக பி.ஜே.பி இன் அதிகாரப்பூர்வ செய்திதொடர்பாளரான நுபுர் ஷர்மா கடந்த மே மாதம் முகமது நபியை பற்றி சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததை அடுத்து உலகம் முழுவது கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்தியாவிலும் பல்வேறு இடங்ககளில் போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன. ஜூலை முதல் தேதியில் வழக்கறிஞர்கள் நுபுர் ஷர்மா மீது வெவ்வேறு இடங்களில் பதியப்பெற்ற முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக் கோரிய கோரிக்கையை நிராகரித்த ! அதே நீதிமன்றம் “தற்போது நாட்டில் நடக்கும் அனைத்திற்கும் நுபுர் ஷர்மா மட்டுமே காரணம்” என்றும் தனது சொல்லிற்கும் செயலிற்கும் இடையில் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
, உச்சநீதிமன்றம் கட்சி தாவல் தடை சட்டத்தை அமல்படுத்தாமல், மகாராஷ்டிராவில் கூட்டாட்சி தத்துவத்தை புறந்தள்ளியுள்ளதாக வழக்கறிஞர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த ஜுன் 27ம் தேதி 16 சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை தாமதப்படுத்தியதோடல்லாமல் 29ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பிற்கும் அனுமதியளித்து, மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகதி கூட்டணியை வீழ்ச்சியுற செய்து பி.ஜே.பி யின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வழி வகுத்தது.
நீதிமன்றங்களின் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் சட்ட அறிஞர்கள் மத்தியில் பரவலான விவாதங்களை எழுப்பியுள்ளது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை நம் சட்ட அமைப்பு இவ்வளவு கீழ் இறங்கியதில்லை என்று விவாதம் நடக்கிறது. “நான் பார்த்ததிலேயே இதுதான் நீதிமன்றங்களின் மோசமான காலம்” என்றும் “ தற்போது எவ்விதமான பொருள் சார்ந்த அர்த்தமுள்ள நடைமுறைகளையும் கடைபிடிக்காமல் இயங்கும் அமைப்பை இனிமேல் நீதிமன்றம் என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை” என்று தனது வருத்தத்தை பதிவு செய்கிறார் புவானியா.
மேலும் கூறுகையில் “நீதிமன்ற உத்தரவுகள் அனைத்து மட்டங்களிலும் மீறப்படுவதால் நீதிமன்றங்களின் சட்டப்பூர்வ தன்மையும் மதிப்பும் சிதைந்துள்ளது. முன்னர் அரசுக்கு விதிவிலக்களித்து தனது அதிகாரத்தை தக்க வைத்து மற்ற விசயங்களில் சமாளிக்க முயன்றது. ஆனால் அதுபோல் இப்போது நடக்கவில்லை”. என்கிறார்.
மாறுகின்ற கருத்து
நீதிமன்றங்கள் அரசியல் சார்பற்றவை எனும் கருத்து மறைந்துவிட்டதாக பல வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
தங்கள் பிரச்சனைகளுக்கு எந்த வழியும் தீர்வளிக்காத போது கடைசி புகலிடமாக நீதிமன்றங்களே தீர்வளிக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். நீதிமன்றங்கள் நடுநிலையாக செயல் பட வேண்டும்; ஆனால் சமீப காலமாக நீதிமன்றங்களின் நடுநிலைத்தன்மை மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் உடனடியாக நீதிமன்றங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
படிக்க:
“இந்திய நீதிமன்றங்கள் முறையாக சட்ட விதிகளுக்கு இணங்கி நடவடிக்கை மேற்கொள்வதில் சிறந்தவையாக விளங்கியதில்லை. இதற்கு நாட்டின் பெரிய பரப்பளவு, மோசமான நீதித்துறை உட்கட்டமைப்பு, மூடப்பட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட பலவீனமான கட்டமைப்பே பிரதான காரணமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன” என்று நீதிமன்றங்களின் குறைபாடுகளை விளக்குகிறார் சட்ட அறிஞர்,” தருண் கைதான்”.
மேலும் அவர் கூறுகையில் “அவசரநிலை காலங்களை தவிர மற்ற காலங்களில் தாங்கள் எப்போதும் நடுநிலையை கடைபிடிக்க தவறியதில்லை என்று அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறை கூறுவது போல, கடந்த சில வருடங்களாக சட்ட ரீதியாக நியாயப்படுத்தவே முடியாத வகையில் சில வழக்குகளில் நீதிமன்றத்தின் முடிவுகள் அமைந்துள்ளன. இவை நீதிமன்றங்கள் நடுநிலையை கைவிடுமளவுக்கான பாரிய அழுத்தங்களை எதிர்கொள்கின்றனவோ என்கிற சந்தேகம் எழுகிறது” என்று தனது மனநிலையை விளக்குகிறார்.
நீதிபதிகளின் நியமனம்:
ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் நீதிபதிகளுக்கு எதிராக அவர்களது நியமனம், பதவி உயர்வு, பணியிடமாற்றம் போன்றவற்றில் அரசின் தலையீடு தொடர்ந்து அதிகரித்து வருவது நீதித்துறையின் சுதந்திரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக பல வழக்கறிஞர்களும்,முன்னாள் நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர்.
“இங்குதான் சிக்கல் தொடங்குகிறது, நீதிபதிகளின் நியமனம், பதவிஉயர்வு மற்றும் நியமனங்களில் உயர்மட்ட நிர்வாகத்தின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. நியமனத்தில் அரசின் தலையீடுகளை நாம் சமரசம் செய்ய முற்பட்டால் சுயசிந்தனையுடைய ஆளுமைமிக்க நடுநிலையை காக்கும் நீதிபதிகள் கிடைப்பது அரிதாகிவிடுகிறது” என்று நீதித்துறையின் அவலத்தை விளக்குகிறார் சஞ்சய் கோஷ்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கில் கலந்து கொண்டதற்காக, கர்நாடகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆதித்திய சோந்தியின் உயர்நீதிமன்றத்துக்கான பதவி உயர்வு,
உள்நோக்கத்துடன் ஒரு வருடத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டது.கடந்த பிப்ரவரி மாதம் பதவி உயர்வுக்கான தனது ஒப்புதல் கடிதத்தை திரும்ப பெற்றார் ஆதித்திய சோந்தி.
நீதித்துறையின் பல்வேறு அடுக்குகள்:
உயர்நீதிமன்றங்கள் மட்டுமல்ல அரசின் அத்துமீறல்களை எதிர்த்து மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கீழமை நீதிமன்றங்களும் எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று வழக்கறிஞர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்கின்றனர்.
“உரிமைகளை பாதுகாப்பதில் கீழமை நீதிமன்றங்களே முன்களத்தில் போராடவேண்டும். மாறாக, நீதிபதிகள் எந்திரகதியாக சட்டத்தை அணுகுகிறார்கள்” என்று தனது வருத்தத்தை பதிவு செய்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்” அனஸ் தன்வீர்”.
“தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுவிடுமோ என்ற அனுமானத்தில் சிக்கலான வழக்குகளில் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்காமல் எச்சரிக்கையாக இருப்பதாக எண்ணி (கீழமை நீதிமன்றங்கள்) தவறிழைக்கின்றன”, என்கிறார் சஞ்சய் ஹெக்டே.
உதாரணமாக, ஹிந்தி நடிகர் ஷாருக்கனின் மகன் “ஆர்யன் கான் “போதைபொருள் சம்பத்தப்பட்ட வழக்கில் 25 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதே தன்மையுடைய பல வழக்குகளில் பல சமயங்களில் கீழமை நீதிமன்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கியுள்ளன. எனினும் இவ்வழக்கில் ஆர்யன் கானின் பிணை மனு போதைபொருள் தடை சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. கடைசியில் அவர் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சென்று பிணை பெற்றார்.
“உயர்நீதிமன்றங்களுக்கு உள்ளது போல் கீழமை நீதிமன்றங்களுக்கு இந்திய அரசியலமைப்பில் எந்த பாதுகாப்பும் இல்லை, ஆகையால் அவற்றின் அதீத எச்சரிக்கை உணர்வை நாம் குறை கூற முடியாது”. என்கிறார் ஹெக்டே.
இறுதியாக நீதித்துறையின் குறைபாடுகளுக்கு உயர் அதிகாரம் பெற்ற நீதிமன்றங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று முடிக்கிறார்கள் விமர்சகர்கள். “எந்த நீதி அமைப்பில் குறைபாடு இருந்தாலும் அதுஉச்ச நீதிமன்றத்தின் குறைபாடாகவே முடியும்”. என்கிறார்” தன்வீர”..
புதிய விமர்சகர்கள்:
இதுவரை நீதித்துறையின் மீது வழக்கறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் போன்றவர்களேஅதிமாக விமர்சனங்கள் வைத்து வந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் முன்னாள் நீதிபதிகளும் சேர்ந்துள்ளனர். ”சில ஆளுமைமிக்க நீதிபதிகள் இதற்கு முந்தைய காலங்களில் கூட நீதிமன்றங்களை விமர்சித்துள்ளனர். என்றாலும், தற்போது நீதித்துறையின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் முன்னாள் நீதிபதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.” என்கிறார் “கைதான்”.
கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதில் நீதிமன்ற விதிகளை மீறி நடப்பதாக நான்கு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தங்கள் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் பதிவு செய்தனர்.
அந்த சம்பவத்துக்கு பிறகு பல முன்னாள் நீதிபதிகள் பல சமயங்களில் நீதித்துறையை விமர்சித்து பேசி வருகிறார்கள். “நீதித்துறை எவ்வளவு தரம் குறைந்து தற்போது மக்களின் நம்பிக்கையை இழக்க துவங்கியுள்ளது என்பதற்கு தீஸ்தா சேதல்வாட் மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரின் கைது நடவடிக்கையே சிறந்த உதாரணம்”.என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி “K.சந்துரு” அவர்கள் ‘The Wire ‘இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜுபைர்-க்கு வழங்கப்பட இருந்த தீர்ப்பு முன்கூட்டியே போலிசுக்கு தெரியப்படுத்தபட்டதையடுத்து “நமது குற்றவியல் நீதியமைப்பு இதைவிட சிதைந்து போக முடியாது”.என்று The Wire தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி” மதன் லோகுர்”.
ஜுபைருக்கு பிணை வழங்காமல் அவரது மின்னணு பொருட்களை போலிஸ் கையகப்படுத்த அனுமதியளித்ததையும் முன்னாள் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர். ‘நுபுர் ஷர்மா’ வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் நீதித்துறையின் ஒழுங்கையும், மாண்பையும் குலைக்கும் விதமாக உள்ளதாக விமர்சித்து 15 ஓய்வுபெற்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி NV ரமணாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நீதிபதிகளின் உரைகள்:
நீதித்துறையின் தரம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளதாக கருத்து நிலவி வரும் நிலையில், தற்போதய நீதிபதிகள் பொதுவெளியில் நீதிமன்றங்களின் பெருமைகள் குறித்து பேசுவது முரணாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த சில வாரங்களில் NV.ரமணா, DY.சந்திரசூட் மற்றும் JB பாதிரிவலா உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்தியர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நீதிமன்றங்களின் பங்களிப்பு பற்றி பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளனர். கடந்த ஜுன் 22 இந்தோ- ஜெர்மன் வர்த்தக கூட்டமைப்பில் பேசிய தலைமை நீதிபதி NV.ரமணா “முழு சுதந்திரத்துடன் செயல்படும் இந்திய நீதித்துறையை நீங்கள் தாரளமாக நம்பலாம்” என்று பேசியுள்ளார்.
“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், சில நீதிபதிகள் மனித உரிமைகள் சார்ந்த கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு பொருத்தமில்லாமல் பேசி வருகிறார்கள்”. என்கிறார் கோஷ்.
“”இத்தகைய பேச்சுகள் நிறுவனத்தின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும், பொதுமக்களின் எரிச்சலை அதிகப்படுத்தும் என்றும் ட்விட்டர்-ல் பதிவிட்டுள்ளார் இணையதள சுதந்திர அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் “அமர் குப்தா”.
பதவியில் இருக்கும் நீதிபதிகள் பொதுவெளியில் பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்தை விமர்சனங்கள் உண்டாக்கியுள்ளன. “பெரும்பாலும் ஊடகங்களோ, சமூக ஊடகமோ தங்களின் தேவைக்கு தீனியிடாத எந்த வழக்கையும் முன்னிலைப்படுத்தி பேசுவதில்லை.” என்று கடந்த ஜூன் 20ம் தேதி லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பேசியுள்ளார்.
பல வழக்குகளில் சிறுபான்மை மக்களுக்கு தங்கள் தீர்ப்பின் மூலம் நியாயம் வழங்கியுள்ளதை எந்த ஊடகமும் மக்களிடம் கொண்டு செல்வதில்லை என்பதை தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்ததாகவும், ஆகையால் நாட்டில் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் வெளிவரும் அனைத்து தகவல்களும் உண்மையல்ல, என்றும் இதற்காக தான் ஊடகங்கள் மீது குற்றம் சுமத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நீதிபதியான “JB. பாதிரிவாலா” சமூக வலைத்தளங்களில் நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க வேண்டுமானால் நாட்டில் இயங்கும் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை நெறிபடுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வருத்தமில்லை:
ஒட்டுமொத்தமாக அனைத்து வழக்கறிஞர்களும் இந்த அரசாங்கத்தில் நீதித்துறை சிதைந்து விட்டதாக கருதவில்லை. “இது எனக்கு ஏமாற்றத்தையோ, ஆச்சர்யத்தையோ ஏற்படுத்தவில்லை, நீதித்துறை அதிலும் குறிப்பாக உயர் நீதித்துறை எப்போதும் ஒரு இணக்கமான நிறுவனமாகவே இருந்துள்ளது. அதிலும் சக்திவாய்ந்த பெரும்பான்மையுடன் இருக்கும் அரசாங்கத்திற்கு அது மிகவும் இணக்கமாகவே இருக்கும்”.என்று குறிப்பிடுகிறார் சஞ்சய் ஹெக்டே.
நீதிமன்றத்தின் மீதான விமர்சனங்கள் சட்டத்தின் அடிப்படையில் அமைவதைவிட அரசியலின் அடிப்படையிலேயே அதிகமாக இருக்கும் என்று சில வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு ஆதரவாக தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். “மக்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப உச்ச நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் மோசமானதாக தோன்றலாம்”. நீதிமன்றங்கள் எப்போதும் அரசுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறது , தங்கள் நியாயம் வெல்லவில்லை என்பதால் சிலர் நம்பிக்கை இழந்திருக்கலாம். ஆனால் என் நம்பிக்கை குறையவில்லை”. என்று தனது நிலைப்பாட்டை முன்வைக்கிறார் வழக்கறிஞர் “நிகில் மெஹ்ரா”.
இறுதியாக சில வழக்கறிஞர்கள் நிலைமை மேம்படும் என்று தங்களின் நம்பிக்கையை தெரிவித்துள்ளார்கள். “நமது நீதி அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது, சில சறுக்கல்கள் வரலாம், எனினும் நமது நீதித்துறை மீண்டெழும்”. என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி “கோவிந்த் மாத்தூர்”.
குறிப்பு: நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு காரணம் அவரவர் ‘அரசியல் நிலைப்பாடுகளே ‘ எனும் நிகில் மேஹ்ரா போன்றோரின் கருத்து எத்தனை பிழையானது;பொறுத்தமற்றது என்பதனை நீதிமன்றங்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகள் மூலம் நிரூபித்து வருகின்றன. வழக்கறிஞர் கௌதம் பாட்டியா போன்றோரின் கருத்தே நடைமுறை எதார்த்தத்தில் பொருத்தமாக உள்ளது.
மொழியாக்கம்
- தாமோதரன்
https://scroll.in/article/1027674/why-many-in-the-legal-world-are-dismayed-by-the-indian-judiciary







