தோள் சீலைப் போராட்டம் என்பது பார்ப்பன (இந்து) மத வெறியர்களின் வக்கிரத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தி , வெற்றி கண்ட வீரம் செறிந்த போராட்டம். வரலாற்று சிறப்புமிக்க இந்தப் போராட்டம் துவங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்தப் போராட்டம் நடைபெற்ற இடம் கேரள மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானம்.
திருவிதாங்கூர் சமஸ்தானம்
கேரளாவின் தென்பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளும் உள்ளடக்கியதாக அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் இருந்தது.
இந்த சமஸ்தானத்தில் பார்ப்பன மதவெறி ஒடுக்கு முறைகள் கொடிகட்டி பறந்து கொண்டிருந்ததன.
பார்ப்பனீயத்தின் வக்கிரங்கள்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்
சாணார் (நாடார் ) ,புலையர் , பரவர், ஈழவர், முக்குவர் உள்ளிட்ட 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள்
தங்கள் மார்பகத்தை மறைத்து ஆடை அணிய 1819 ஆம் ஆண்டு இராமவர்மா என்ற அரசனால் தடை விதிக்கப்பட்டது. தங்களது மார்பகத்தை மறைத்து ஆடை அணியும் பெண்களின் மார்பகத்தை அரசு அதிகாரி தொட்டு, அளந்து பார்த்து மார்பகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது.
மேற்படி சாதிகளை சேர்ந்த பெண்களுக்கு மட்டும்தான் இந்த நிலை என்று இல்லை. மற்ற சாதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைத்து உடை அணியலாம் என்ற போதிலும் கூட,
நம்பூதிரி பார்ப்பனர்கள் முன்பு உயர் சாதி என்று கூறப்படுகிற சாதிப் பெண்கள் உள்ளிட்ட அனைத்து சாதிப் பெண்களுமே மார்பகங்களை மறைக்காமல், திறந்த மார்போடுதான், வரவேண்டும் என்று விதிக்கப்பட்டு இருந்தது.
அரசன், நம்பூதிரி பார்ப்பனன், நாயர், வேளாளர் ஆகியோரை தவிர மற்ற அனைத்து சாதியினரும் தீண்டத்தகாதவர்களாகவே கருதப்பட்டனர்.
நம்பூதிரியை ( பார்ப்பனனை) விட்டு விலகி நாடார்களும் ஈழவர்களும் 36 அடி தொலைவில் நிற்க வேண்டும்; புலையர்கள் 96 அடி தொலைவில் நிற்க வேண்டும் . அதே சமயம் நாயரிடமிருந்து நாடார்களும் ஈழவர்கள் 12 அடி தூரத்தில் நிற்க வேண்டும்; புலையர்களோ 60 அடி தூரத்தில் நிற்க வேண்டும் என்று சட்டம் வகுத்திருந்தனர்.
அரசன், நம்பூதிரி பார்ப்பனர்கள், நாயகர்கள் , வேளாளர்கள் தவிர மற்றவர்கள் குடை பிடிக்கவோ செருப்பு அணியவோ கூடாது என்றும் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது; குளத்தில் இறங்கக்கூடாது; சந்தைக்குள் நுழையக்கூடாது; சாலைகளின் நடக்கக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்திருந்தனர். மேலும் தீண்டத்தகாத சாதியினராக ஒதுக்கி வைக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்கள் தாடி – மீசை வைத்துக் கொள்ளக் கூடாது; மீறி வைத்துக் கொள்பவர்கள் அதற்கென்று தனி வரி கட்ட வேண்டும். இவ்வளவு ஒடுக்கு முறைகள் இருந்த திருவதாங்கூர் சமஸ்தானத்து மக்கள் பார்ப்பன மத வெறியர்களை எப்படி போராடி வெற்றி கண்டனர்?
போராட்டத்திற்கு வித்திட்ட ஆங்கிலேயரின் அறிவிப்பு
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பெண்கள் மார்பை மறைத்து குப்பாயம் போன்ற ஆடையை அணியலாம் என்று ஜான் மான்ரோ என்ற ஆங்கில அதிகாரிஅறிவித்தார். பார்ப்பன மதவெறிச் சட்டங்களால் வெறுப்புற்றிருந்த ஒடுக்கப்பட்ட பெண்கள் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர்.
இதனால் ஆத்திரம் கொண்ட நாயர் , வேளாள சாதியினர் பெண்களின் இரவிக்கையை கிழித்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
மார்பை மறைத்து மேலாடை அணிந்த ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களை தாக்குவது , இரவிக்கையை கிழிப்பது போன்ற வன்முறைகள் நிற்காமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. இத்தகைய வன்முறைகளும் கலவரங்களும் ஒவ்வொரு ஊராக பரவிக் கொண்டே இருந்த நிலையில் நாடார் சாதியை சேர்ந்த மக்கள் கிறிஸ்தவர்கள்– இந்துக்கள் என்ற பாகுபாடுகளை கடந்து ஓர் அணியில் திரண்டு நாயர் வேளாளர் சாதியினரின் வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராக போராடினர்.
இப்படித் துவங்கிய இந்த தோள் சீலைப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 1822 முதல் 1823 வரை முதல் கட்டப் போராட்டமும், 1827 முதல் 1829 வரை இரண்டாம் கட்ட போராட்டமும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைபெற்றது.

இந்த காலகட்டத்தில் , மாபெரும் சமூக சீர்திருத்த போராளியான அய்யா வைகுண்டர் ( 1809–1851)அவர்களின் சமூக சீர்திருத்த செயல்பாடுகளும் தோள் சீலைப் போராட்டத்திற்கு பெரும் உந்து சக்தியாக இருந்தன.
மார்பகங்களை மறைத்து ஆடை அணியும் உரிமைக்காக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் விடாப்பிடியாக போராடியதன் காரணமாக 26.07.1859 அன்று, திருவிதாங்கூர் உத்தரம் திருநாள் அரசர், சாணார் சமூகத்து பெண்கள் தோள் சீலை அணியலாம் என அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, இறுதியாக, ஈழவர் சாதி உள்ளிட்ட மற்ற சாதிகளைச் சேர்ந்த பெண்களும் தங்கள் மார்பகங்களை மறைத்து ஆடை அணியலாம் என்று 1865ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரசர் ஆயில்யம் திருநாள் அறிவித்தார்.
பார்ப்பன மத வெறியர்கள் எவ்வளவு வக்கிரம் பிடித்தவர்கள் என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாக தோள் சீலைப் போராட்டம் வரலாற்றில் நிலை பெற்று நிற்கிறது. இப்படிப்பட்ட வக்கிர வெறியர்களை எதிர்த்து உழைக்கும் மக்கள் மதம் கடந்து , ஓரணியில் இணைந்து போராடினால் பார்ப்பன மத வெறியர்களை மட்டுமல்ல படைபலம் கொண்ட மன்னனையும் பணிய வைக்க முடியும் என்பதை தோள் சீலைப் போராட்டம் மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
—பாலன்