வெங்கடேசன்

தஞ்சை ஜில்லாவில் மன்னார்குடி நகரத்துக்கு எட்டு மைல் தூரத்திலுள்ள ராதா நரசிம்மபுரம் என்ற கிராமத்தில் பிறந்த குடியானவர் வீட்டுப்பிள்ளை. அவருடைய தகப்பனார் பெயர் பக்கிரி சோழகர். அந்தப் பக்கத்துக் கிராமங்களில் பலத்துக்கும், துணிச்சலுக்கும் பேர்போனவர். பெரிய விவசாயக் குடும்பம். நமது தோழர் கிராமப் பள்ளிக்கூடத்தில் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார். சிறுவயதிலிருந்தே வயல்வேலைகள் அலுப்பின்றி செய்து பழகியவர். குடியானவனின் வேலை சிரமம் அவருக்கு நன்றாகத் தெரியும். 18 வயதில் தோழர் வெங்கடேசன் மலேயாவுக்கு சம்பாதிக்கச் சென்றார். அங்கே ஏதோ ஒரு கம்பெனியில் சாதாரண சிப்பந்ததியாக வேலையிலமர்ந்தார். இந்திய இளைஞர் சங்கத்தில் சேர்ந்து அதன் நடவடிக்கைகளில் முக்கிய பங்கெடுத்துக்கொண்டார். தொழில் சங்கத்திலும் சேர்ந்து ஊக்கமாக வேலைசெய்து அப்போது நடந்த வேலை நிறுத்தத்தில் மூன்று மாதம் சிறைத் தண்டனை அடைந்தார்.இம்மாதிரி அரசியல் உணர்ச்சி தூண்டப்பட்டது காரணமாக காலப்போக்கில் அங்கே உள்ள கம்யூனிஸ்டுக் கட்சியின்மேல் பிரேமை ஏற்பட்டது. கம்யூனிஸ்டுக் கட்சி மூலமாகத்தான் ஏழை விவசாயிகளுக்கு சகல விடுதலையும் கிடைக்கும் என்ற முடிவோடு யுத்தம் ஆரம்பமாகும் சமயத்தில் வீடு திரும்பினார்.அந்தச் சமயம் கம்யூனிஸ்டுக் கட்சியின் தொடர்பு கிடைக்காததால், கிராமத்தில் ஒரு வாசகசாலை ஏற்படுத்தி நடத்தினார். பிறகு காங்கிரஸில் சேர்ந்து கிராமக் காங்கிரஸ் கமிட்டி ஏற்படுத்தி வேலை செய்து வந்தார்.

1941 வருடக் கடைசியில் நமது கட்சியில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். முதலில் தன் வீட்டிலேயே விவசாய வர்க்கத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கட்சி வகுப்புக்கள் நடத்த ஏற்பாடு செய்து தானும் கலந்துகொண்டார். தஞ்சை ஜில்லாவில் முதல் முதல் விவசாயிகள் இயக்கத்துக்கு அஸ்திவாரமிட்டது அப்போதுதான்.

தென்பரை அவருடைய ஊருக்குப் பக்கத்து ஊர். வகுப்பில் பெற்ற பயிற்சியோடு தென்பரை விவசாயிகள் சங்கத்தை இன்னும் சில தோழர்களோடு ஆரம்பித்தார். ஒரு வருடம் ஓயாப் போராட்டம், அடக்குமுறை, குண்டர்களின் கலகம். ஒரு முறை காலிகளால் தாக்கப்பட்டார். இவரிடம் சாகுபடிக்கு மிராசுதார் கொடுத்திருந்த நிலங்களைப் பிடுங்கிக்கொண்டார். கடைசியாக தென்பரை வழக்கில் நான்கு மாதம் தண்டிக்கப்பட்டார்.

அவர் வீட்டில் நோய்வாய்ப்பட்டிருக்கும் தகப்பனாரும் இதரர்களும் தங்கள் வீட்டுப்பையன் ஜனங்களுக்குப் பாடுபடுகிறான் என்பதில் மகிழ்ச்சி உள்ளவர்கள். அங்கு செல்லும் நமது தோழர்களை எல்லாம் ஏழையாயிருந்தாலும் அவர் வீட்டினர் நன்கு உபசரிப்பார்கள்.

தோழர் வெங்கடேசன் ஒரு குடியானவரின் மகன், இன்று அந்தப் பக்கத்துக் குடியானவர்களின் இணைபிரியாத தோழனாய் விளங்குகிறார். 1949 அடக்குமுறைக் காலத்தில் கைது செய்யப்பட்டார்;

1952இல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் நீடாமங்கலம் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பெரியமிராசுதார் குன்னியூர் சாம்பசிவ அய்யரை எதிர்த்து வெற்றிபெற்றார்.

தஞ்சை. திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள். விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காகச் சட்டமன்றத்தில் தொடர்ந்து வாதிட்டார். வரத்துக்கால், வடிகால் பாசனங்களை மராமத்துச் செய்வதற்காக மக்களைத் திரட்டுவதோடு. சட்டமன்றத்திலும் வெளியிலும் இடைவிடாது போராடி வந்தார்.

இறுதிவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார். மக்களின் தொண்டனாகவே தொடர்ந்து பணியாற்றிவந்தார்.

முதல் மனைவிக்கு 2 பெண்களும் ஒரு மகனும் உண்டு. முதல் மனைவி இறந்துவிட்டதால், இரண்டாவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளராக இருந்த தோழர் ப. மாணிக்கத்தின் தங்கை ராஜத்தை திருமணம் செய்துகொண்டார். ஐந்து பெண்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. 2001இல் இயற்கை எய்தினார். மகன் நீலமேகன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர் ஒன்றியக்குழு உறுப்பினராக இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here