அதானியின் புதிய மின் திட்டம்; புதிய வகையிலான ஊழல்

சதாரா மாவட்டத்தின் கௌரவ வனவிலங்குப் பாதுகாவலரான ரோகன் பாட்டே, இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவை குறைத்துக் காட்டியது தவறானது எனக் குற்றம் சாட்டி அக்டோபர் 30 அன்று பிரதமரின் குறை தீர்ப்பு இணையதளம் மூலமாகவும், மாநில அரசின் குறைதீர் இணையதளம் வாயிலாக மகாராஷ்டிரா முதல்வருக்கும் புகார் அளித்தார்.

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் அதானி குழுமத்திற்குச் சொந்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், தனது 1500 மெகாவாட் நீர் மின் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக பிப்ரவரி 2025-ல் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட போது, இதன் திட்ட மதிப்பீடு 5,675 கோடி என குறிப்பிட்டு இருந்தது. ஆனால் செப்டம்பர் 2026-ல் நிறுவனம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் முதலீட்டு செலவு 56.75 கோடி என நூற்றில் ஒரு பங்காக சுருக்கிக் காட்டி மோசடி செய்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் SIR மூலமான ஓட்டுத் திருட்டு விவகாரத்தை அம்பலப்படுத்திய அதே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்தான் அதானியின் இந்த மோசடியையும் அம்பலப்படுத்தி உள்ளது. அதானியின் இந்த மின் திட்டமானது சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான கொய்னா வனவிலங்கு சரணாலயத்திற்குள் அமைந்துள்ளது. இந்த மின் திட்டத்தின் மதிப்பீட்டை நூற்றில் ஒரு பங்காக குறைத்ததன் மூலம், வனவிலங்கு சரணாலயப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையும் 227 கோடியிலிருந்து, வெறும் 2.27 கோடியாகக் குறைந்துள்ளது.

இந்த திட்டத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைச் சூழல் கடுமையாக பாதிப்படையக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புகளை ஓரளவு சீர்செய்வதற்கு அதானி குழுமம் வழங்கும் நிதி கணிசமாக குறைந்துள்ளதே இப்போது பிரச்சனை வெடிக்கக் காரணமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில வனத்துறையின் கூற்றுப்படி, இத்திட்டம் கொய்னா வனவிலங்கு சரணாலய சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலம் (Eco Sensitive Zone) வழியாக செல்கிறது.

கொய்னா வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின் படி, சரணாலயத்தைச் சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதி சுற்றுச்சூழல் மண்டலமாக கருதப்படுகிறது. இப்படியான பகுதியில் திட்டங்களை செயல் படுத்தும் தனியார் நிறுவனங்கள் வனப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக மொத்த திட்டச் செலவில் 4 % வரை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். அதன்படி 227 கோடியை வைப்புத் தொகையாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

படிக்க: அதானிக்கு நிலம் 1 ரூபாய்! மக்களுக்குப் புற்றுநோய் இலவசம்!

மகாராஷ்டிராவின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாஸ் ரெட்டி மார்ச் 2026 – ல் அதானி நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்திலும், மேற்கண்ட தொகையை செலுத்துமாறும், மற்ற 14 நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்யுமாறும், அதற்கான பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறும் கேட்டிருந்தார். இதற்கு அதானி கிரீன் எனர்ஜியின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நரேஷ் தெல்கு, திட்டச் செலவை நூற்றில் ஒரு பங்காக குறைத்து மதிப்பிட்டு இதனை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சீனிவாச ரெட்டியும் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் திட்டச் செலவை 56.75 கோடி என திருத்தப்பட்ட மதிப்பீட்டை ஏற்றுக் கொள்வதாக அக்- 12 அன்று அதானி கிரீன் எனர்ஜிக்கு ஒப்புதல் அளித்து கடிதம் எழுதினார். இதற்காக அவர் நன்கு ‘கவனிக்கக்பட்டு’ இருப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை. இப்படி திருத்தப்பட்ட திட்டச் செலவான இதில் 1% தொகையான 56.75 லட்சத்தை உடனே செலுத்துமாறும், மீதமுள்ள மூன்று சதத்தை பிறகு செலுத்தலாம் என்றும் கடிதத்தில் தெரிவித்தார். இந்தக் குறை மதிப்பீட்டை எப்படி ஏற்றுக் கொண்டீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மதிப்பீட்டுக் குறைவை பற்றி அதானி நிறுவனத்திடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்தார். அதானி நிறுவனம் சார்பிலும் இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

சதாரா மாவட்டத்தின் கௌரவ வனவிலங்குப் பாதுகாவலரான ரோகன் பாட்டே, இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவை குறைத்துக் காட்டியது தவறானது எனக் குற்றம் சாட்டி அக்டோபர் 30 அன்று பிரதமரின் குறை தீர்ப்பு இணையதளம் மூலமாகவும், மாநில அரசின் குறைதீர் இணையதளம் வாயிலாக மகாராஷ்டிரா முதல்வருக்கும் புகார் அளித்தார். இந்தக் குறைந்த முதலீட்டில் இவ்வளவு பெரிய மின் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதை ஒரு சாமானியனும் புரிந்து கொள்வான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படிக்க: சத்தீஸ்கர் வனக்காடுகள் அதானிக்கு! உயிர்பலி பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு!

மேலும் வனத்துறையின் இந்த ஒப்புதல் குறித்து பாரபட்சமற்ற முறையில் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இவ்விஷயத்தை விசாரிக்குமாறு நவம்பர் 6 அன்று மாநில வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணை நேர்மையாக நடைபெற்று அதன் மூலம் மோசடி கண்டறியப்பட்டாலும், ஒரு சில அதிகாரிகள் பலிகடாக்கள் ஆக்கப்படுவார்களேத் தவிர, இத்தகைய மாபெரும் ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த மோடியின் நண்பர் அதானி தண்டிக்கப்படப் போவதில்லை. வனவிலங்கு பாதுகாப்புக்காகவும் சுற்றுச்சூழலை பராமரிப்பதற்காகவும் வனத்துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை குறைப்பதற்காகவே அதானி நிறுவனம் மகாராஷ்டிர மின் திட்டத்தின் மதிப்பீட்டுச் செலவை 99 % குறைத்துக் காட்டி ஏமாற்றியுள்ளது என்பதே உண்மை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கார்ப்பரேட் முதலைகளுக்கு துளியும் அக்கறையில்லை என்பதையும், மென்மேலும் லாபத்தை குவிப்பதற்காக எத்தகைய மோசடிகளிலும் இக்கும்பல் ஈடுபடும் என்பதையும் இந்த விவகாரம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

குரு

ஆதாரம்: https://www.linkedin.com/posts/indian-express_adani-slashes-maharashtra-power-project-cost-activity-7527663026682888192-Z5RT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here