கடந்த 2025 ஜூலை 27 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் தமிழ்ச்செல்வி தம்பதியரின் மூத்த மகன் கவின் செல்வ கணேஷ் திருநெல்வேலியில் ஆதிக்க சாதிக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தமிழ்நாடு அறியும். ‘மக்கள் அதிகாரம்’ உட்பட பல்வேறு அமைப்புகள் இக்கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன. 

மூவர் மட்டும் கைதாகி இருந்த நிலையில் கவின் காதலி சுபாஷினியின் தாய் கிருஷ்ணகுமாரி (SI) மட்டும் காவல்துறையின் பெரும் சலுகையை பெற்று பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நீண்ட இழுத்தடிப்புக்கு பின் கைது செய்யப்பட்டார். 

வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில்) நடைபெற்று வருகிறது. இச்சூழலில், ‘தாங்கள் குற்றமற்றவர்கள்; எனவே தங்களை வழக்கினின்றும் விடுவிக்க வேண்டும்; தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என (குற்றவாளி எண். 1 சுர்ஜித்தின் பெற்றோர்களான) தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள காவல்துறை உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி (குற்றவாளிகள் எண்.2 & 3) மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

மதுரை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். விஜயகுமார் அளித்த தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: 

‘சுர்ஜித் தந்தை சரவணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப் பட்டுள்ளது;  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய போதிய ஆதாரம் வேண்டும்; ஆனால் இந்த வழக்கில் ஆதாரங்கள் எதுவும் இல்லை; அதுபோல சுர்ஜித் தாயார் கிருஷ்ணகுமாரி ஒரு அம்மாவாக மட்டுமே, கவினிடமும் அவரது பெற்றோரிடமும் இனி எனது மகளிடம் பேச வேண்டாமென கூறி உள்ளார்; சாதி ரீதியாக திட்டியதாகவோ அல்லது பேசியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை; விசாரணையில் இது திட்டமிட்ட செயல் இல்லை எனத் தெரிகிறது;  எனவே சுர்ஜித் பெற்றோர் (சரவணன் & கிருஷ்ணகுமாரி)  மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யப்படுகிறது…’

மேற்கண்டவாறுதான் கவின் ஆணவப் படுகொலையின் குற்றவாளிகள் எண்.2 & 3 சரவணனும் கிருஷ்ணகுமாரியும் குற்றச் செயல்களினின்றும்  விடுதலை செய்யப் படுவதற்கான தீர்ப்பாக நீதிபதி விஜயகுமார் தீர்ப்பளித்துள்ளார்.

‘அப்பன் குதிருக்குள் இல்லை’ – என்பது போன்று அமைந்துள்ளது நீதிபதியின் தீர்ப்பு!

கவின் செல்வ கணேசும் அவரது காதலி சுபாஷினியும், பள்ளிப் பருவக் காலம் தொட்டே காதலித்து வந்தனர் என்பது உண்மை. நீதிபதியின் தீர்ப்பிலேயே (சுபாஷினி & சுர்ஜித் தாய்) கிருஷ்ணகுமாரி தமது மகள் சுபாஷினியுடன் கவினோ அவரது பெற்றோரோ பேசக்கூடாது என சுபாஷினி- யின் அம்மாவாக இருந்து மட்டும் ‘அறிவுரை’ பகன்றதாக ஒப்புக்கொண்டு உள்ளார் நீதிபதி. 

அவ்வாறெனில் கிருஷ்ணகுமாரிக்கோ சரவணனுக்கோ தமது மகள் சுபாஷினியும் கவினும் காதலித்து வந்த உண்மை வெகு காலமாகவே தெளிவாகத் தெரியும் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. எனவே ஒரு பட்டியலின வாலிபனுடன் ஆதிக்க சாதி குடும்பத்தைச் சேர்ந்த தமது மகள் சுபாஷினி திருமணம் செய்து கொண்டு விடக் கூடாது என்ற ஆதிக்க சாதி வெறி பெற்றோருக்கு உள்ளூர இருந்து உள்ளது என்பது பேருண்மை.

கிருஷ்ணகுமாரி, கவின் தரப்பினருக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் என்ன? கிருஷ்ணகுமாரி சாதி ரீதியாக திட்டவில்லை அல்லது பேசவில்லை என நீதிபதி கூறுவது இவ்விடயத்தில் எந்த வகையில் நியாயமாகும்? அதனால் மட்டுமே அவர்கள் குற்றவாளிகள் இல்லாமல் எப்படிப் போய்விடும்? ஒரு குறிப்பிட்ட பருவமடைந்த  ஆணும் பெண்ணும் காதலிக்கின்ற பொழுது, அதைத் தடுத்து நிறுத்திட கிருஷ்ணாகுமாரி ஏன் அறிவுரை சொல்கிறார்? அதுவே ஒரு எச்சரிக்கை தானே! தமது ஆதிக்க சாதி வெறியை வெளிப்படுத்தும் செயலின்றி வேறு எதுவாக இருக்க முடியும்? மேலும் தமது மகள் சுபாஷினி பட்டியலின இளைஞனை காதலிப்பது தாம் சார்ந்த ஆதிக்க சாதி மனோபாவத்திற்கு உகந்தது அல்ல என்று கிருஷ்ணகுமாரியோ அவரது கணவர் சரவணனோ கருதி இருப்பார்களேயானால் தமது மகளுக்குத்தான் அறிவுரை வழங்கி கவினுடனான பேச்சுவார்த்தையையும் உறவையும் அறுத்துக் கொள்ளச் செய்திருக்க வேண்டும். 

படிக்க:

♦ கவின் ஆணவப் படுகொலை: ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற வழக்கு விசாரணை!

♦ கவின் ஆணவப்படுகொலை குற்றவாளி கிருஷ்ணகுமாரி கைது: 10 மாத தாமதம் ஏன்?

அதுவல்லாமல் கவினுக்கோ அவரது பெற்றோருக்கோ அறிவுரை சொல்வதற்கு கிருஷ்ணகுமாரி வகையறாவிற்கு அதிகாரம் கொடுத்தது யார்? உங்கள் மகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு தங்களின் ஆதிக்க சாதி வன்மத்தைக் காட்டிட சரவணன், கிருஷ்ணகுமாரி, சுர்ஜித், ஜெயபால்,  மற்றும்  சாதி வெறியர்கள் சிலர் சேர்ந்து சதி செய்து தான் கவின் செல்வ கணேஷை ஆணவப் படுகொலை செய்தார்கள். அவர்களுக்கு சாதி வெறி தான் முக்கியம் எனக் கருதி இருப்பார்களேயானால் -அதுவும் மாபெரும் தவறுதான் என்றாலும்- சாதியை உச்சத்தில் வைத்துக் கொண்டாடிட தமது மகளை வெட்டி வீழ்த்தி இருக்க வேண்டும். அதை விடுத்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்த யாரோ பெற்ற பிள்ளை தானே எனப் பாவித்து  கவினைப் படுகொலை செய்ய இவர்களுக்கு எவ்வளவு கொழுப்பும் திமிரும் இருந்திருக்க வேண்டும்?

நாம் விஞ்ஞான யுகமான 2026 இல் தான் வாழ்கின்றோமா? இந்த கொலை மிருக வெறி அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

இந்தக் கண்ணோட்டத்தில் எல்லாம் ‘மாண்புமிகு நீதி அரசர்கள்’ தமது விசாரணையை ஊடுருவிப் பார்க்க மாட்டார்கள் என்பதுதான் கடந்த கால பல்வேறு தீர்ப்புகளில் கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அனுபவமாகப் பார்க்க முடிகிறது. அதாவது ‘வலுத்தவனுக்கு ஒரு நீதி; வலுவிழந்தவனுக்கு ஒரு நீதி’ – இதுதான் இன்றைய நீதிபரிபாலன விசாரணை முறையாக நீடித்து நிலைத்து நிற்கிறது.

மேலும் சரவணனும் கிருஷ்ணகுமாரியும் காவல்துறையின் சார்நிலை ஆய்வாளர்கள். அதனாலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் பொழுதே சுர்ஜித்துக்கு மட்டுமே விதி 302-ன் கீழ் கொலை குற்றவாளியாகவும், மற்ற மூவர் மீதும் பிணையில் எளிதில் வரத்தக்க அளவிலான சாதாரண பிரிவுகளின் கீழ் மட்டும் தான் வழக்கை பதிவு செய்தனர்- காவல்துறையினர். இந்த உண்மையை அன்றே வெளிப்படுத்தினார் வழக்கறிஞர் ப.பா.மோகன். அந்த வகையில் அதிகார வர்க்கப் பின்புலமும், ஆதிக்க சாதி பின்புலமும் படுத்தும் பாடு இப்படி பல்வேறு குறுக்கு வழிகளில் இவர்களால் நீதியை விலை பேசி வெற்றி பெற முடிகிறது. நீதி பரிபாலன முறையும் நன்றாகவே வளைந்து கொடுக்கிறது.

வழக்கில் சிலவற்றை கிடப்பில் போடுவதும் – சிலவற்றில் அவசர அலங்கோலமாக நீதிபதிகள் தீர்ப்பளிப்பதும் ஏன்? 

கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்யின் குதிரை பேர அரசியல் மூலம் கட்சி மாறி தவெக-வில் இணைந்ததை அறிவோம். இது தொடர்பாக வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அவரது வழக்கின் சாராம்சம் இதுதான்: 

‘ராஜனாமா செய்தவர்கள் சுய லாபத்திற்காக ஆளும் கட்சிக்கு மாறி சென்று விட்டார்கள்; இதனால் தேர்தல் ஆணையத்திற்கும், அரசுகளுக்கும் கூடுதலான வேலை பளுவும் பண விரயமும் ஏற்பட்டுள்ளது; தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக் கொண்டு இருக்காமல் மக்களின் தீர்ப்புக்கு எதிராக முடிவு எடுத்த 6 பேரும் இடைத்தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது; அப்படி அனுமதித்தால் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடம் இடைத்தேர்தல்களுக்கான செலவு தொகையை வசூலிக்க வேண்டும். இறுதித் தீர்ப்பு வரும்வரை இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்; நியாயமான காரணங்கள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத ராஜினமாக்களைத் தடுக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும்…’

வழக்குத் தொடுத்தவர் யார் என்பதே நமக்குத் தெரியாது. ஆனால் வழக்கில் அவர் வெளிப் படுத்தியுள்ள அம்சங்கள் யாவும் தவறெனக் கூறுவதற்கு அறிவுடையோர் எவரும்  முன்வர மாட்டார்கள்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து, இவ்வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு என்றும் கூறி நியாயமான வழக்குத் தொடுத்தவர் மீதே குற்றம் சாட்டி வழக்கு தொடுத்த வழக்கறிஞருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து செப்டம்பர் 29 அன்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய அநியாயம்? இது எந்த வகை நீதிபரிபாலனம்? 

கரூரில் 2025 செப்டம்பர் 27 அன்று நடிகர் விஜய் கூட்ட நெறிசலில் 41 பேர் கொடுமையாக மாண்டு போன வழக்கு ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கிறது. இவ்வளவுக்கும் இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்துக் கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைத்தார்கள். கேட்பதற்கு நாதி இல்லாமல் முடங்கிப் போய் கிடக்கிறது வழக்கு. 

இதுபோல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆயிரம் ஆயிரம் வழக்குகள் முடங்கிக் கிடப்பதும், சிலவற்றில் அவசர அவசரமாக முந்திரிக்கொட்டைத்தனமாக பாமரரும் எள்ளி நகையாடக் கூடிய அளவிற்கான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்குவதும் பாதிக்கப்பட்ட மக்கள் மனம் வெதும்பும் வகையில் அரங்கேறி வருகின்றன.

‘சமூகம் இணக்கம் காண இயலாத வகையிலான வர்க்கங்களாகப் பிளவு பட்டுக்  கிடக்கின்ற பொழுது அங்கே நிலவுகின்ற ‘அரசு’ என்பது, அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க முடியாது…’

இவ்வாறு இரத்தின சுருக்கமாக ஆசான் லெனின் வரையறுத்துக் கூறியதை நாம் தெளிவாக நோக்கும் பொழுது இச்சமூகக் கட்டமைப்பைப். பாதுகாக்கின்ற “அதிகாரவர்க்கம் – நீதிமன்றம்” என்ற இந்த ‘அரசு’ வடிவம் மற்றும் இன்ன பிற எதுவாக இருந்தாலும் அது ஆதிக்க சாதியினருக்கே – வலுத்தவருக்கே – பணக்காரர்களுக்கே சேவை புரியும் என்பது தெட்டத் தெளிவான உண்மை என்பதை நாம் தொடர்ந்து அவதானித்து வருகிறோம்.

இவ்விதம் இத்துப்போன அரசு கட்டமைப்பை இடித்து தரைமட்டமாக்காமல் சமூக மாற்றம் சாத்தியம் இல்லை. கவின் செல்வ கணேஷ் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல;  அனைத்து உழைக்கும் மக்களுக்கும் இதுதான் கதி. 

எனவே, புரட்சிகர சமூக  மாற்றத்திற்கான அரசு கட்டமைப்பை நிறுவுவோம்! அனைத்து அம்சங்களிலும் அனைவருக்குமான  சம நீதி – சம வாழ்வு கிடைக்கப் பெற உறுதி பூணுவோம்!

– எழில்மாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here