முதல் பாகம் –பாசிச எதிர்ப்பு: திமுகவும் தவெகவும்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்கு எதைப் போதிக்கின்றன?

உள்ளபடியே தமிழ்நாட்டில் நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை என்பதனை நாம் ஏற்கனவே காணொளி மூலமாகவும் கட்டுரை வாயிலாகவும் பல அம்சங்களை படம் பிடித்து காண்பித்திருக்கிறோம்.

ஆம், ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் இந்துத்துவ மதவெறி கலவர அரசியல், அதன் கூட்டணியான கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையிலான நீதிமன்ற அமர்வுகள், ‘வானளாவிய அதிகாரம்’ பெற்ற தேர்தல் ஆணையம், (அது கையாளும் SIR, CU, EVM, VVPAT), தேர்தல் ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் (நாடாளுமன்ற அவசர சட்டத் திருத்தம் மூலமாக)பாஜகவை பெரும்பான்மையாக்கிக் கொண்டது, ED, IT, CBI, IAS, IPS, ராணுவம்… இவற்றின் அளவுக்கு மீறிய ஒத்துழைப்போடு தேர்தல்களில் தில்லுமுல்லு மோசடிகள் பலவற்றையும் செய்து பாராளுமன்ற – சட்டமன்ற தேர்தல்களை ஜனநாயக பூர்வமாக நடத்துவது போன்ற ஒரு பாவனையை இந்த காவிக் கும்பல் அமல் படுத்திக் கொண்டே ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது; அபகரித்துக் கொண்டு இருக்கிறது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநில தேர்தல்களின் கேவலமான முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளன.

மேலும் பல்வேறு கட்சிகளை உடைத்து தன்னோடு கூட்டணி சேரச் செய்து இறுதியில் அக்கட்சியையே விழுங்கி விடுவது; ‘பாச்சா’ பழிக்காத இடங்களில், விஜய் போன்ற தற்குறிகளை தம் காலை நக்கிப் பிழைக்கும் எடுபிடிகளாக மாற்றிக் கொள்வது என்பதுதான் காவிக் கும்பலின் கொள்கை மற்றும் நடைமுறை என்பதனை தொடர்ச்சியாக அவதானித்து வருகிறோம். நாளடைவில் இப்படிப்பட்ட கொள்கை  கோட்பாடற்ற சிறு கட்சிகளை விழுங்கி ஏப்பம் விடுவதையும் காவிக் கும்பல் கடைபிடிக்கும். இது நடக்கத்தான் போகிறது.

பாசிச சங்கிக் கும்பலுக்கு வால் பிடிக்கும் –  காலை நக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்துக் கொள்வது; அப்படிப்பட்ட கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களுக்கு மட்டுமே, மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டிய பல்வேறு திட்ட நிதிகளை மிகக் கூடுதலாக வழங்குவதும், பெருந்திட்டங்களை அமலாக்குவதும், தம்முடன் இசைந்து போகாத – தமது கொள்கைகளுக்கு இணக்கம் காட்டாத எதிர்த்து போரிடுகின்ற கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களுக்கு ஒட்டு மொத்தமாக நாமம் சாற்றுவது என்பதை ஒன்றிய காவிக் கும்பல் வாடிக்கையாக்கிக் கொண்டு விட்டது.

அந்த வகையில் திமுகவை தமது ஜென்ம விரோதியாக ஆக்கிக் கொண்டது காவிக் கும்பல். பல்வேறு மொழி பேசும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில் – கூட்டாட்சிக் கொள்கைகளை உள்ளடக்கிய சமூக அமைப்பைக் கொண்ட ஒரு நாட்டின் ஒன்றிய அரசு (United States of India) தனது கொள்கை கோட்பாடுகளுக்கு இணங்காத மாநிலங்களின் அரசுகளுக்கு இப்படி வஞ்சனை செய்கின்ற போக்குகளை எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படிப்பட்ட சர்வாதிகார மனோபாவத்தை கையில் எடுத்துக் கொள்ளவும் – மோடி, அமித்ஷா, தர்மேந்திர பிரதான், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் நாக்கில் நரம்பின்றி பேசுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அந்த மமதை பாசிச வெளிப்பாடல்லவா? அதனால் தான் பல்வேறு தில்லுமுல்லு மோசடிகள் மூலமாக திமுகவை குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தோற்கடிக்க முனைந்து நின்றார்கள். காரியத்தையும் நிறைவேற்றிக் கொண்டார்கள்.

தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமைச்சர்கள் முன்னணியாளர்கள் வீடுகளில் ED, IT, CBI போன்ற ஏவல் வெறி நாய்க் கூட்டத்தை ஏவி விடுவது; முதல்வர்களாக இருந்தால் கூட கைது செய்வது என்ற படு கேவலமான நடவடிக்கைகளில் ஆர் எஸ் எஸ் பாஜக காவிக்  கும்பல் தறிகெட்டு ஆடியது; ஆடிக் கொண்டே இருக்கிறது. அதே வேளையில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் ‘உத்தமபுத்திரர்கள்’! அதுமட்டும் அல்லாமல் பிற கட்சிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைதானவர்கள் பாஜகவில் இணைந்ததும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தூய்மையானவர்களாக  மாற்றுகின்ற ‘வாஷிங் மெஷினாக’ தரங்கெட்ட தனத்தில் காவிக் கும்பல் காரியம் ஆற்றுகிறது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பாஜக காவிக் கும்பலால் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதில்  உள்ள சிக்கலை உணர்ந்தே தற்குறி அரசியல்வாதி நடிகர் விஜய்யை இழுத்துப் போட்டு தமது தமிழ்நாட்டு எடுபிடி சங்கிகளைக் கொண்டு தவெக என்ற கட்சியினை உருவாக்கச் செய்து ஆர்எஸ்எஸ் – பாஜகவின் மறைமுக மக்கள் திரள் கட்சியாக உருவாக்கிக் கொண்டார்கள். காலப்போக்கில் தவெக-வை உறுதியாக விழுங்கி விடும் ஆர்எஸ்எஸ் பாஜக காவிக்கும்பல்.

ஏற்கனவே மோடி – அமித்ஷாவிடம் ஒட்டிக்கொண்டிருந்த சில அதிமுக கைக்கூலிகளையும் கூட தவெக-வில் இணையச் செய்த பெருமை காவிக் கும்பலையே சேரும். ‘கொள்கை எதிரி’ பாஜக என்ற முழக்கமும் ‘அரசியல் எதிரி’ திமுக என்ற முழக்கமும் சதித் திட்டம் மூலமே உருவகப்படுத்தப்பட்டது. அதனால் தான் தேர்தல் கால பரப்புரையில் ஒருவருக் கொருவர் (பாஜக-தவெக) தாக்குதல் தொடுப்பதை மேற்கொள்ளாமல், இருவரும் சேர்ந்து திமுகவை தாக்குதல் இலக்காக முன்னிறுத்திப் பயணப்பட்டார்கள்.

ஒருபுறம் சினிமா கவர்ச்சி மோகம்; மற்றொருபுறம் மேலே பட்டியலிட்டபடி ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் அனைத்துவித அதிகாரவர்க்க கூட்டணிகள், வாக்கு இயந்திர தில்லு முல்லு மோசடிகள், வாக்காளர் பட்டியல் சேர்த்தல் – நீக்கல் இவை அனைத்தின் மூலமாக தில்லு முல்லு மோசடிகள் பலவற்றை அரங்கேற்றி தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அமர வைத்து விட்டார்கள். இந்த விவரங்கள் யாவற்றையும் எவரும் மறுத்திட முடியாது.

அதனால்தான் ஸ்டாலின் காலத்தில் இயற்கை பேரிடர் நிதி ரூபாய் 37 ஆயிரம் கோடி தர கேட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் வெறும் 276 கோடியை மட்டுமே அளித்தது ஒன்றிய காவி அரசு. ஆண்டுதோறும் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய  இயற்கைப் பேரிடர் நிதியான ரூ.1000 கோடியை தூக்கிக் கொடுத்திருப்பதையே மோடி அரசு ”நாங்கள் கேட்டவுடனே கொடுத்துவிட்டது” எனத் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இதன் மூலமாக ஸ்டாலினுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், விஜய்க்கு ‘நிர்வாகப் புலி’ என்ற பெரும் பட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் (ஏனெனில் தாம் பெற்ற பிள்ளை அல்லவா தவெக!) திட்டமிட்டே ஒன்றிய அரசு செய்கிறது என்பதனை சாதாரண அறிவு படைத்தவர்கள் கூட உணர முடியும்.

இன்னும் விஜய் கோரிய நிதிகளில் எவை எவற்றைக் கொடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதனால் தான் டெல்லியில் நடைபெற்ற மோடி தலைமையிலான ஜூன் 11 நிதி ஆயோக் 11வது ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் விஜய், தமது அரசு, ஒன்றிய அரசுடன் ஆக்கப் பூர்வமான ஒத்துழைப்பு வழங்கிட உறுதி பூண்டுள்ளதாகக் கூறியுள்ளார். குறிப்பாக அவர் உரை நிகழ்த்துகையில் ‘தமிழ்நாட்டின் நலன்களையும், மக்களின் விருப்பங் களையும் உறுதியாகப் பாதுகாக்கும் கருத்தோட்டத்தில், ஒன்றிய அரசுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது…’ என்பதாக தமது நன்றி விசுவாசத்தை வாலை ஆட்டிக் கொண்டு தமது எஜமானர்களுக்கு காணிக்கை ஆக்கினார் விஜய். இவ்வாறு விஜய் பேசியதும் தமிழ்நாட்டு பாஜக இந்துத்துவக் காவிக் கும்பல் துள்ளிக் குதித்துக் கொண்டாடுகிறார்கள்! காக்கைக் கூட்டம் போல் கரைகின்றனர்!

தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தின் பொழுது கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்ற வக்கற்ற விஜய் அரசு, பதவியேற்ற ஒரு மாதத்திற்கு உள்ளாகவே மூன்று வயது குழந்தை முதல் 85 வயது மூதாட்டி வரை சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்ணினம் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ள பெரும் கொடுமைகள் நடந்தேறி உள்ளன; குறிப்பாக ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த ஆழ்வார் திருநகர் பகுதி தவெக பெண் ஒருவரை, புஸ்ஸி ஆனந்த்யிடம் கூறி வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றி ஸ்ரீ வைகுண்டம் எம் எல் ஏ சரவணன் வழிகாட்டுதலில் அவரது சகபாடிகள் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் பகுதி தவெக நிர்வாகி ஜெயபால் இருவரும் ஏர்வாடிக்கு அழைத்துச் சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தனியார் விடுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

உணர்வடைந்த அந்தப் பெண் சம்பந்தப்பட்ட கடசியினர்களுக்குப் புகார் அளித்து அந்த வீடியோ ஊடக வெளிச்சத்தில் நாறிக் கிடக்கிறது. காவல்துறையில் அப்பெண் புகார் அளிக்க, அவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதாக தகவல் வந்துள்ளது. அந்தப் பெண்ணையும் தவெக கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சபாஷ் விஜய்! ஆனால் எம்எல்ஏ சரவணன் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. தொங்கு சட்டமன்றமாக இருக்கின்ற பொழுது ஒரு எம்எல்ஏ குறைந்தாலும் ஆபத்தல்லவா? சிங்கப்பெண் அதிரடிப்படை பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்டதாக பீற்றிக் கொண்டார் விஜய். ஆனால் தவெக- வினரிடமிருந்தே தவெக பெண் உறுப்பினர்களையேப் பாதுகாப்பது என்பது குதிரைக் கொம்பாக தமிழ்நாட்டில் நிலைமை மாறி உள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்திட்ட நேரங்களில் வானத்திற்கும் பூமிக்குமாக குதியோ குதி எனக் குதித்து ஆர்ப்பரித்த தமிழிசை, வானதி, குஷ்பூ, சாவித்திரி, கீர்த்தனா போன்ற பெண் வானரப் படை இப்போது நாள்தோறும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டும்கூட வாயில் பிளாஸ்த்ரி போட்டு ஒட்டிக்கொண்டு மௌனம் காக்கிறார்கள். எங்கே இருக்கிறார்கள் என்பதை கூட அறிய முடியவில்லை. அதிலும் வாய்க் கொழுப்பெடுத்துப் பேசித் திரிந்த –  தற்போது அமைச்சராகிவிட்ட கீர்த்தனாவிடம் இப்படிப்பட்ட பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் ‘Administrations சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டும் கேளுங்கள்; Political சார்ந்த கேள்விகளுக்கு தலைவர் தான் பதில் சொல்ல வேண்டும்’ -என்று மெத்தப்படித்த மேதாவி போல் சிரித்துக் கொண்டே நழுவுகிறார்.

நெட்டிசன்கள் பதிந்து நாறடித்துக் கொண்டிருப்பது போல “மனைவி, மகன், மகள் இவர்களை வீட்டிலிருந்து விரட்டி விட்டு, வேறொரு நடிகையுடன் ஊர் சுற்றும் ‘ஒருவர்’ மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தை ஏவி சிங்கப்பெண் அதிரடிப்படை உடனடியாக முதல் நடவடிக்கையாகக் களம் இறங்க வேண்டும்” – என்பதாகக் குத்திக் காண்பித்து இருப்பது யாரை நோக்கி என்பதை அனைவரும் புரிய முடியும்தானே!

மேலும் படிக்க: ஐந்து மாநில தேர்தல்கள்: தேவை கவர்ச்சி திட்டமா? குறைந்தபட்ச செயல்திட்டமா?

இந்த நிலையில் தான் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாக் கூட்டத்தில் ‘தனிமனித ஒழுங்கு இருந்தாலே இப்படிப்பட்ட பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பெரிதும் குறைத்து விடலாம்’ என்பதாக முதலமைச்சராக நடிக்கும் விஜய் வார்த்தை ஜாலம் அடிக்கிறார். இவை மட்டுமல்ல; விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் நிகழும் கொலை, கொள்ளை, கலவரங்கள், தாக்குதல்கள், சாதி தீண்டாமைக் கொடுமைகள், ஆணவப் படுகொலைகள், மயானப் பிரச்சனைகள்,  பாலியல் வன்புணர்வுகள் என நாள்தோறும் பத்திரிக்கைகளைத் திறந்தால், காட்சி ஊடகச் செய்திகளுக்கு செவி மடுத்துக் கேட்டால் மேற்கண்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை. இவைதான் ‘ரீல்ஸ் மன்னன்’ சினிமா கவர்ச்சி மோக பொறுக்கி அரசியல் தலைவன் விஜய் ஆட்சியின் லட்சனம். அதிலும் இக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் தவெக-வினர் பெரும் பகுதியினராக இருக்கின்றனர் என்ற உண்மையும் அடங்கியிருப்பதை உணர்வோமாக!

இந்த லட்சணத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற துப்பில்லாமல் இருக்கிறார் விஜய். மின்வெட்டுக்குக் காரணம் ‘எதிர்க் கட்சியினர் பீஸ்சைத் திருட்டுத்தனமாகப் பிடுங்குகின்றனர்; செயற்கையான மின்வெட்டு உருவாக்கப் படுகிறது’ என்பதாக அமைச்சர் நிர்மல் குமார் ரீல் விடுகிறார். ‘காற்று அதிகமாக வீசுவதால் மின்வெட்டு ஏற்படுவதாக’ அமைச்சர் ஜாஜகான் சரடு விடுகிறார்; திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் 4000 ரூபாய் லஞ்சம் அமைச்சரிடமே கேட்டிருக்கிறார். இந்த லட்சணத்தில் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு பொருளாதார மற்றும் பல்வேறு திட்ட வளர்ச்சிப் பணிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகப் பெருமைபட எடுத்துரைத்துள்ளார் விஜய். யாரோ பெற்ற பிள்ளைக்கு யாரோ உரிமை கொண்டாடுவது போல, இந்த குறைந்த பட்ச பெயரை ஈட்டிடக் கூட உழைத்தவன் வேறு; பெயர் எடுப்பவன் வேறு…இதுதான் தமிழ் நாட்டின் நிலைமை.

தமிழகத்தில் பாசிச ‘பாஜக-வைத் தடம் பதிக்க விடக்கூடாது’ எனக் ‘குதிரை பேர சோபா புகழ்’ தவெக-விற்கு முட்டுக்கால் கொடுக்கப் பறந்து சென்ற ‘முற்போக்காளர்கள்’ இப்போது என்ன விளக்கம் கூறுவார்கள்?

மோசடி தேர்தல் மூலம் விஜய் ஆட்சி கட்டிலை பிடித்ததும், திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் ஓடோடிச் சென்று முதலில் துண்டு போட்டு இடம் பிடித்து விஜய் காலைக் கவ்விக் கொண்டது; ஐந்தே சட்டமன்ற உறுப்பினர்களில், இருவருக்கு அமைச்சர்கள் பதவி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி; போதும்! முழு திருப்தி ஆயிற்று! பாசிச பாஜக எதிர்ப்பாவது; மண்ணாங்கட்டியாவது?

அடுத்து விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஐ(எம்)இவர்களும், ‘ஆத்தாடி…ஆத்தாடி…தவெக-வை ஆதரிக்கத் தவறினால், பாஜக தமிழ்நாட்டில் உட் புகுந்துவிடும்; எனவே தமிழகத்தைக் காக்க வெளியில் இருந்து விஜய் அரசுக்கு ஆதரவு; ஆனால் திமுக கூட்டணியில் நீடிப்பது’ என்ற ‘பிரம்மாண்ட’ முடிவை மேற்கொண்டார்கள். சில நாட்களிலேயே என்ன பேரம் பேசினார்களோ, விசிக-வும், ஐயூஎம்எல்-லும் ஆளுக்கொரு அமைச்சர் பதவியை மட்டுமே பெற்று திருப்திப் படுத்திக் கொண்டு விஜய் காலில் விழுந்து விட்டார்கள். ‘இடதுசாரிகள்’ அப்படி இருக்க முடியுமா? ‘நாங்கள் அப்படி யெல்லாம் பதவி ஆசைக்கு இணங்குபவர்கள் அல்லர்; வெளியில் இருந்து மட்டுமே விஜய்க்கு ஆதரவு; திமுக கூட்டணியில் நீடிக்கவே செய்கிறோம்’ என்று சில நாட்கள் பம்மாத்துக் காண்பித்தார்கள்! இப்பொழுது திடீரென இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இல்லை என்பதாக அறிவித்து,  அதற்கு சில வியாக்கி யானங்களை ஒப்புவிக்கின்றனர். அருமை! அவை கிடக்கட்டும்! இப்பொழுது இந்த கட்சியினர் அனைவரும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்:

தமிழக முதல்வர் நடிகர் விஜய்,

*தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளிய ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்.

*ஆளுநர் மாளிகையில் உலகப் பொதுமறை தந்த வள்ளுவனுக்கு ஆர்.என். ரவி வழியிலேயே, ஆர்.வி.அர்லேகரும் காவிச் சாயம் அடிப்பதற்கு எதிராக வாய் திறக்க மாட்டார்.

*நாடு முழுவதும் காவிக் கூட்டத்தால் சிறுபான்மை இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகக் கொலை பாதகச் செயல்களில் ஈடுபடும் – தேவாலயங்களை, மசூதி – தர்காக்களை – வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கும் சங்கி வானரக் கும்பலின் ஈனச்செயல்களைக் கண்டிக்க முன்வர மாட்டார்.

*கீழடி அகழாராய்வு அறிக்கையை தெள்ளத் தெளிவாக 982 பக்கங்களில் சமர்ப்பித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் தொல்லியல் கண்காணிப்பாளர் மு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களின் அறிக்கையை முடக்கி வைத்துக் கொண்டு வெளியிட மறுக்கும் ஒன்றிய காவி அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வர மாட்டார்.

*தமிழ்நாட்டின் மதுரை எய்ம்ஸ், மதுரை, கோவை மெட்ரோ திட்ட அனுமதி, சென்னை மெட்ரோவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு இவற்றிற்காக ஓங்கி குரல் கொடுத்துப் போராட முன்வர மாட்டார்.

*திருப்பரங்குன்றத்தில் ஆண்டாண்டு காலம் நடைமுறையில் உள்ள வழக்கத்திற்கு மாறாக, இஸ்லாமியரின் சிக்கந்தர் தர்கா இடத்திற்கு அருகில் கார்த்திகை தீபம் ஏற்றக் காவிக் கும்பல் துடித்துக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் தமது அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முன்வர மாட்டார்.

*முன்பு திமுக ‘கும்பலின்’ திட்டங்கள் –  ஊழல்கள் குறித்து ‘ரீல்ஸ்’ விட்டுக் கொண்டிருந்த தவெக, தற்போது தமது கட்சியில் தானும், லாட்டரி புகழ் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அருண் ராஜ், செங்கோட்டையன், கீர்த்தனா போன்ற கோடீஸ்வர கும்பலின் யோக்கியதாம்சங்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்.

மேலும் படிக்க: பாசிசமா பாயாசமா! பாசிசம் உள்ள பூந்திடும் என்று நக்கலடித்த அரசியல் அறிவிலிகளுக்கு!

*என்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி ஒன்றிய அரசோடு மிக இணக்கமாகவும் – நிபந்தனையற்ற ஒத்துழைப்பையும் தமது அரசு வழங்கும் என்று வாய் கூசாமல் ‘கொள்கை எதிரி’  பக்கம் சரண் அடைவார்.

*ஆஹா…ஆஹா…’பாலுக்கும் காவல்; எலிக்கும் தோழன் – பூனை’ –  என்ற பழமொழிக்கேற்ப பாஜக-வுடனும், காங்கிரசுடனும் உறவு கொள்வார் விஜய். பாசிச பாஜக எதிர்ப்பு என்ற ‘இந்தியா கூட்டணி’-க்கு வேட்டு வைப்பார்! என்றென்றும் காவிக் கூட்டத்தின் காலை நக்குவதில் முன்னணியில் நிற்பார்.

*குதிரை பேர அடிப்படையில் அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்யச் செய்து தவெக-வில் இணைத்துக் கொள்வார்; நடைபெறவிருக்கும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இடைத்தேர்தலில் ஐந்திலும் ஏற்கனவே பின்பற்றப்பட்ட குறுக்கு வழியில் வெற்றி அடைந்து தனக்கான பெரும்பான்மையை ஈட்டிட முயற்சி செய்வார்; பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டதால் தொடர்ந்து காவிக் கும்பலின் வழிமுறைப்படி தமது கட்சி அறுதிப் பெரும்பாண்மைப் பலம் பெற தொடர்ந்து குதிரை பேர அரசியலில் ஈடுபடுவார். எதிர்க்கட்சிகளை உடைப்பார்.

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் ‘முட்டுக் கொடுக்கும்’ ‘முற்போக்காளர்கள்’ பதில் சொல்லியாக வேண்டும்.

இப்படிப்பட்ட சினிமா கவர்ச்சி மோக – பாசிச பாஜக பாதந்தாங்கி பொறுக்கி அரசியல் தலைவன் விஜய்யை, ‘பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜக தமிழ்நாட்டில் நுழைந்து விடாமல் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகத் தான் (குதிரை பேர சோபா புகழ்)தவெக-வுடன் அணி சேர்ந்தோம்’ – என்று ‘முற்போக்காளர்கள்’ வேடம் கட்டி ஆடுவது மிக விரைவில் வெளுத்துப் போகும்…!

தேர்தலுக்குப் பின் திருச்சியில் ஜூன் 1-ல் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் அரசியலற்று – மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் எதையும் பேசாமல் தரம் தாழ்ந்து மிகக் கேவலமான முறையில் விஜய் பேசிய ‘நரகல் நடை’ பேச்சுக்கள் குறித்து இந்த ‘முற்போக்காளர்’களில் எவருமே வாய் திறந்து கண்டனம் தெரிவிக்காதது அவமானகரமானது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! அடுத்து, தவெக ஐட்டி விங் காலிகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. கருத்துச் சுதந்திரம், கேளிக்கை வெளியிடும் சுதந்திரம் எல்லாருக்கும் உண்டுதான்!

ஆனால் சமீபத்தில் கோட்டு சூட்டுடன் ஷூ அணிந்து ‘கம்பீரமாக’ நிற்கும் கோமாளி  நடிகர் விஜய் ஷூவை கலைஞர் கருணாநிதி குனிந்து தொட்டு வணங்குவது போன்ற கேளிக்கைச் சித்திரம் எவ்வளவு கொழுப் பெடுத்த தன்மையை வெளிக்காட்டுகிறது என்பதைப் பாருங்கள். உண்மையில் அவரது அரசியல் ஆளுமைக்கு எள்ளின் முனை அளவு கூட பெற தகுதியற்ற கூத்தாடி விஜய்யை எந்த வகையிலும் சமப்படுத்த முடியாது. இந்த கேளிக்கை சித்திரம் குறித்து யாம் அறிந்த வகையில் சிபிஐ கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் மட்டுமே தமது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். வேறு எந்தவித ‘முற்போக்காளர்களும்’ இது குறித்து ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லை.

மேலும் விஜய் பதவியேற்ற பின் இந்த ஒரு மாத கால ஆட்சி நிர்வாகத்தில், தமிழ்நாட்டில் நாள்தோறும் நடக்கும் எண்ணற்ற அசம்பாவிதங்கள் – குற்றச்சம்பவங்கள் – நிர்வாகச் சீர்கேடுகள் – தவெக காலிகளின் அளப்பறைகள் அனைத்தையும் கணக்கிட்டு உரசிப் பாருங்கள் ‘முற்போக்காளர்’களே, உங்கள் இதயம், முன் எப்போதையும் விட வலி எடுக்கும்.

காங்கிரசை விட்டுத் தள்ளுங்கள்! நாணயம் துளியளவேனும் இருந்தால், பாராளுமன்ற இடதுசாரிகள், விசிக, புதிய உறவு கொண்டாடத் துடிக்கும் ‘கொள்கைச் சிகரம்’ மதிமுக, சிறுபான்மையினர் நலனுக்கான கட்சி எனப் பறைசாற்றிக் கொள்ளும் ஐயூஎம்எல் போன்ற கட்சித் தலைவர்கள், ‘விஜய் ஆர் எஸ் எஸ் பாஜக எதிர்ப்பு கட்சியா?’ என்ற பிரதான கேள்வி உட்பட மேலே தொகுத்து கேட்கப்பட்ட அல்லது விளக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்! இல்லையேல் உங்கள் சாயமும் வெளுக்கும்! மக்களும் உங்களை உறுதியாக  புறக்கணிப்பர்! நல்ல முடிவுகளை எடுப்பீர்களா?

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here