மணிப்பூரில் அணையாத வன்முறைத் தீ: வேடிக்கைப் பார்க்கும் ‘விஸ்வகுரு’!

அரசாங்கம் தாங்கள் முன்வைத்த 'ஆறு முக்கியக் கேள்விகளுக்கு' (6-point questions) பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த 'நிழல் யுத்தத்தை' (Proxy war) நிறுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மணிப்பூரின் இந்த அவல நிலைக்கு ஒன்றிய பாஜக அரசின் பாசிசப் போக்கும், அலட்சியமுமே முதன்மைக் காரணமாக உள்ளது.

0
மணிப்பூர் கலவரத்தீ

ஏப்ரல் 26, 2026 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்ததை கண்டித்துள்ள  ‘விஸ்வகுருவும்’  இந்தியாவின் பிரதமருமான மோடி, ஜனநாயகத்தில் வன்முறைக்கு எந்த இடமும் இல்லை என்றும், இத்தகைய சம்பவங்கள் உறுதியாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்து உலகத்  தலைவர் என பாசிஸ்டுகளின் அடிவருடிகள் கொண்டாடலாம். ஆனால், நம் நாட்டு மக்கள் பற்றி எரியும் போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்வது எவ்வளவு கொடூரமான பாசிச மனநிலை.

ஜனநாயகத்தில் வன்முறைக்கு எந்த இடமும் இல்லையாம். யார் சொல்வதுதென்றால் கடந்த 3 வருடங்களாக மணிப்பூர் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மோடிஜி.

மணிப்பூரின் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழும் மைத்தி சமூகத்தினருக்கும், மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே 2023 மே மாதம் தொடங்கிய மோதலில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 60,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

படிக்க: மணிப்பூர்: மனிதத் தன்மையே இல்லாத 56 இன்ச்!

மணிப்பூரில் கலவரம் உச்சத்தில் இருந்த போது அம்மாநிலத்தை ஆண்ட பாஜக முதல்வர் பிரேன்சிங் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. “Manipur tapes” என்று கூறப்பட்ட ஆடியோவில் “கலவரத்தில் தன் பங்கு இருப்பதாகவும், குறிப்பிட்ட சமூகத்திற்கு(மைத்தி) ஆதரவாக செயல்பட்டதாகவும்” பேசியது அம்மாநில மக்களிடையே கோபத்தை தூண்டியது. இதன் காரணமாக வேறு வழியின்றி பிரேன்சிங் இராஜினாமா செய்தார்.

இந்த “Manipur tapes” என்ற ஆடியோ கிளிப்புகள் Supreme Court of India வழக்கில் சான்றாக கொடுக்கப்பட்டன. அதனால் நீதிமன்றம், தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU)க்கு இந்த ஆடியோவை பரிசோதிக்கச் சொன்னது. NFSU நீதிமன்றத்தில் இந்த ஆடியோ கிளிப்புகள் முழுமையான original இல்லை அதில் editing / tampering (மாற்றம்) நடந்திருக்கிறது. அதனால் “இந்த குரல் பிரேன் சிங்குடையதா என்று சொல்ல முடியாது.  அதேநேரம் இல்லையென்றும் சொல்லிவிட முடியாது” என்று பிரேன்சிங்கிற்கு ஆதரவாக தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU) நவம்பர் 3 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தது. இவ்வழக்கில் பிரேன்சிங் தண்டிக்கப்பட்டால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.  சில மாதங்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் கேம்சந்த்சிங் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அமைதி திரும்பியது போன்ற ஒரு தோற்றம் நிலவிய போதிலும், உண்மை நிலை மிகவும் பலவீனமாக இருப்பதை சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன.

ஏப்ரல் 7 – பச்சிளம் குழந்தைகளின் படுகொலை

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அதிகாலையில், விஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லாபி (Tronglaobi) பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. பாதுகாக்கப்பட்ட மண்டலத்திற்கு (Security Buffer Zone) மிக அருகிலேயே இருந்த ஒரு வீட்டின் மீது ஏவப்பட்ட குண்டு, அங்கு தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனையும், 5 மாதக் குழந்தையையும் (ஆதாரங்களின்படி 5 மாதக் குழந்தை) பலி வாங்கியது; அவர்களின் தாயார் படுகாயமடைந்தார். பல அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் இருந்தபோதிலும் இத்தகைய தாக்குதல் நடந்தது பாதுகாப்புப் படைகளின் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.

போர்க்களமான இம்பால்: மக்களின் எழுச்சியும் ஒடுக்குமுறையும்

இந்தப் படுகொலைகளுக்கு நீதி கேட்டு, மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு (COCOMI) சார்பில் கடந்த ஏப்ரல் 25 அன்று இம்பாலில் ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் முதலமைச்சர் இல்லத்தை நோக்கி தீப்பந்தம் ஏந்தி அணிவகுத்துச் சென்றபோது, பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசித் தடுத்தனர். இதில் 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

படிக்க: 

மணிப்பூர் கலவரம்: நெருப்பை அணையாமல் பாதுகாக்கிறது பாஜக!

மணிப்பூர் போராட்ட வரலாறு உணர்த்தும் உண்மைகள்!

அரசாங்கம் தாங்கள் முன்வைத்த ‘ஆறு முக்கியக் கேள்விகளுக்கு’ (6-point questions) பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த ‘நிழல் யுத்தத்தை’ (Proxy war) நிறுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மணிப்பூரின் இந்த அவல நிலைக்கு ஒன்றிய பாஜக அரசின் பாசிசப் போக்கும், அலட்சியமுமே முதன்மைக் காரணமாக உள்ளது.

ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் மாநில காவல்துறை எனப் பல அடுக்கு பாதுகாப்பு இருந்தும், பொதுமக்களின் வீடுகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை. பாதுகாப்புப் படைகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முழுமையாகச் சிதைந்துவிட்டது. இது மக்களை மீண்டும் ஆயுதங்களை ஏந்தத் தூண்டுகிறது, இது வன்முறையை மேலும் மோசமாக்கும்.

நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், COCOMI அமைப்பு ஆளும் பாஜகவை மாநிலம் தழுவிய அளவில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. மணிப்பூர் மக்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக அவர்கள் அரசாங்கத்தை நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு

மணிப்பூரின் இந்த நெருப்பு இப்போது அண்டை பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, உக்ருல் மாவட்டத்தில் நாகா மற்றும் குக்கி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் கொல்லப்பட்டனர். இது வன்முறை மற்ற பழங்குடி இனத்தவர்களுக்கும் பரவி, ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தின் நிலைத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த மோதல்கள் வெறும் இனமோதல் மட்டுமல்ல; இது ஒரு முறையான நிர்வாகத் தோல்வி மற்றும் மக்களைப் பிரித்தாளும் பாசிச நடவடிக்கைகளின் விளைவு என்பது ஆதாரங்கள் மூலம் தெளிவாகிறது.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here