ணிப்பூரில் கலவரக்காரர்களால் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை தடுக்க முயன்ற ஒரு பெண்ணின் 19 வயது சகோதரர் கொல்லப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் தந்தையும் கொல்லப்பட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியே வந்து உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.

இந்த வீடியோ வெளிவந்தவுடன் அரசியல் கட்சியின் தலைவர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் ஜனநாயகவாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் பதபதைப்புடன் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்தது மே 4 ஆம் தேதி. அதாவது இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 75 நாட்கள் ஆகிவிட்டன. இந்தியாவில் உள்ள மக்களுக்கு இப்பொழுது தான் இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. ஆனால் ஆற்றல் மிக்க பிரதமர்… நாட்டு மக்களின் நன்மைக்காகவே ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் பிரதமர்…. இந்தியாவை வல்லரசாக்குவதற்காக மூன்றாவது முறையாகவும் பிரதமராக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மோடிக்கு இப்பொழுது தான் இந்த பிரச்சனை தெரியுமா? திருவாளர் மோடியும் இப்பொழுதுதான் இது குறித்து கருத்து கூறியுள்ளார். இந்தப் பிரச்சனை பற்றி அனைவரும் பேசத் தொடங்கி விட்டதால் வேறு வழியின்றி மோடி பேசியுள்ளார்.

மூன்று மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 75 நாட்களுக்கு முன்பே இந்த இரு பெண்களும் இப்படிப்பட்ட  கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர். ஆனால் இது பற்றி வாய் திறக்காத மோடி முதலில் அமெரிக்காவுக்கு சென்று வந்தவர் பின்னர் பிரான்சுக்கு சென்று அந்த நாட்டு மக்களின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து கூறுகிறார்; ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்கிறார்; அந்த நாட்டினர் அளித்த விருந்திலும் கலந்து கொண்டு உள்ளார்.

அங்கிருந்து திரும்பி வந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகளை பொளந்து கட்டுகிறார். மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் கூட்டணிக் கட்சிகளை கூட்டி ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துகிறார். ஆனால் மணிப்பூரைப் பற்றி வாயே திறக்கவில்லை.

பிரான்சுக்கு சென்றதையோ அங்கு இவர் செய்ததையோ நாம் இப்பொழுது தவறு என்று இப்பொழுது விமர்சனம் செய்யவில்லை. மணிப்பூருக்கு செல்லாமல் மணிப்பூர் பிரச்சனையைப் தீர்க்க எதுவும் செய்யாமல் இப்படி செய்தது ஏன்? என்று தான் நாம் கேள்வி எழுப்புகிறோம்.

இந்தப் பிரச்சினையைப் பற்றி சிறிதும் அக்கறையற்ற மோடி மனிதாபிமானமே இல்லாத முறையில் நடந்து கொண்டுள்ளார் என்பதைத்தான் இவரது நடவடிக்கைகள் தெள்ளத்தெளிவாக உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன.

இதையும் படியுங்கள்:

மனிதத் தன்மை கொஞ்சம் இருந்திருந்தால் கூட இதைக் கேள்விப்பட்ட உடனே பதைபதைத்திருப்பார்; மணிப்பூருக்கு பறந்து சென்று இருப்பார்; அங்கே எரிந்து கொண்டிருக்கும் கலவரத்தீயை அணைத்து இருப்பார்.

மனிதத் தன்மையற்ற மோடி இப்பொழுது என்ன நினைத்துக் கொண்டிருப்பார். இம்மாதிரியான விஷயங்கள் மணிப்பூருக்கு வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகத்தானே இணையத்தை முடக்கி வைத்திருந்தோம். அப்படி இருந்தும் இந்த விஷயம் வெளியில் கசிந்து உலகம் முழுவதும் தனது பெயர் நாறிக் கொண்டிருக்கிறதே! இனி எதையெதையெல்லாம் முடக்கினால் இப்படிப்பட்ட விஷயங்களை வெளியே தெரியாமல் தடுக்க முடியும் என்றுதான் யோசித்துக் கொண்டிருப்பார்.(இதை எழுதும் போதே சமூகவலைத்தளங்களில் பகிரக் கூடாது என கட்டளையிட்டுள்ளது ஒன்றிய அரசு)

இனியும் தொடர அனுமதிக்கலாமா பாசிச பாஜகவின் ஆட்சியை?

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here