இந்திய ரயில்வேயில் “மனித வள மறு சீரமைப்பு” என்று சுமார் 29,608 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது மோடி அரசு. 2026 – 27ஆம் நிதி ஆண்டிற்குள் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 2 சதவீதத்தை குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய ரயில்வே உலகிற்கு முன்மாதிரி!
பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே உலகிற்கு ஒரு முன்மாதிரியாக 14.80 லட்சம் நிரந்தர பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மிகப்பெரும் நிறுவனத்தை நடத்துவதற்கு முதலாளி எல்லாம் தேவை கிடையாது என்பதை நடைமுறையில் நிரூபித்துக் கொண்டும் வருகிறது.
இப்படி பிரம்மாண்டமான ஊழியர் படையை கொண்டு செயல்பட்டு வரும் ரயில்வேயானது லாபத்திலும் இயங்குகிறது. சரக்குகள் மற்றும் பயணிகள் போக்குவரத்தை திறம்பட கையாண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும் திகழ்கிறது. நீண்ட காலங்களாகவே படித்து வேலையை தேடும் இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக இந்திய ரயில்வேயின் பணியிடங்கள் உள்ளன.
கார்ப்பரேட்டுகளின் பிடியில் அரசு!
விமான நிலையங்களை நிர்வகிக்கும் பணியில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, குறிப்பிட்ட ரயில்களையே தனியாருக்கு தாரைவார்ப்பது, பின்னர் படிப்படியாக கோட்டங்களையும், மண்டலங்களையும் தனியாருக்கு அதாவது கார்ப்பரேட்டுகளுக்கு விற்று விடுவது என்ற திட்டத்தில் தான் நமது ஆட்சியாளர்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, பாசிச மோடி இதை வன்மத்துடனே அமல்படுத்தி வருகிறார். அவரின் சமீபத்திய தாக்குதலாகத்தான் “மனித வள மறு சீரமைப்பு இலக்கு 2026 -27” என்ற கொள்கை ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தாக வேண்டிய தருணத்தை எதிர்நோக்கி தொழிற்சங்கங்கள் தயார் நிலையிலா உள்ளன? இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
ரயில்வே துறையில் “அகில இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு” AIRF என்பது, HMS எனப்படும் ஹிந்து மஸ்தூர் சபா உடன் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, “தேசிய இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு” NFIR என்பது, BMS எனப்படும் பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு கூட்டமைப்புகளையே அரசு அதிகாரப்பூர்வமாக ரயில்வேயில் அங்கீகரித்துள்ளது.
இது தவிர மண்டல அளவிலான தொழிற்சங்கங்களும் உள்ளன. வடக்கு ரயில்வே ஆண்கள் சங்கம் NRMU, தேசிய ரயில்வே மஸ்தூர் யூனியன் NRMU, தென் மத்திய ரயில்வே மஸ்தூர் யூனியன் SCRMU, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் SRMU, கிழக்கு கடற்கரை ரயில்வே ஷ்ராமிக் யூனியன் ஆகியவையும் செயல்பாட்டில் உள்ளன.
ரயில்வேயில் ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் உள்ளன. பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்களும் உள்ளன. ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான’ தனிச்சங்கங்களும் உள்ளன.
படிக்க: இரயில்வே தொழிற்சங்கத் தேர்தலில் CITU – DREU அணி வெற்றி! இத்தனை சங்கங்கள் இருந்தும் ஒன்றிய அரசு எப்படி தொழிலாளரின் உரிமைகளில் கை வைக்க துணிகிறது? அதையும் பார்ப்போம்.
தொழிலாளர்களை ஊழல் படுத்து!
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைத்தால், வேலைப்பளுவை மட்டும் கூட்டினால், ஆட்குறைப்பை அமல்படுத்தினால் தொழிற்சங்கங்கள் தலையிடும்; தொழிலாளர்களை திரட்டி போராட்டத்திலும் ஈடுபடும்.
அப்படி இருக்க மோடி அரசு எப்படி துணிச்சலாக தாக்குதலை கொடுக்க முனைகிறது? பதில் மிகவும் எளிமையானது. யார் போராடுவார்களோ அவர்களையே அல்லது அவர்களில் கணிசமான பிரிவினையே ஊழல் படுத்தி விட்டால் பிரச்சனை தீர்ந்தது என்ற திட்டத்தில் தான் பாசிச மோடி அரசு வேலைகளை முன்னெடுத்துகிறது.
ஊழலுக்கு பலியாகும் நிரந்தர தொழிலாளர்கள்!
இன்று அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் 50 வயதை கடந்துவிட்ட நிரந்தர தொழிலாளர்களில் நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுபவர்களாக பெரும்பாலானோர் இல்லை. இந்திய ரயில்வேயில் மட்டுமின்றி, 50 ஆண்டுகளை கடந்து இயங்கும் பாரம்பரிய நிறுவனங்களில் எதை கணக்கில் எடுத்தாலும் இந்த உண்மை புரியும்.
அதாவது நிர்வாகம் திட்டமிட்டே நிரந்தர மற்றும் மூத்த தொழிலாளர்களான இவர்களுக்கு சலுகைகளை காட்டி, வெறுமனே மேற்பார்வையாளர்களை போல நடத்தி, முழு சம்பளத்தையும் தந்து பராமரிக்கிறது. “நீ உழைக்க வேண்டாம். உனது வர்க்கத்தை நாங்கள் கசக்கி பிழிகிறோம். ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தியை செய்து கொள்கிறோம். அதற்கு நீ துணை செய்” என்று சீரழிக்கிறது.
பெரும்பான்மையான கார்ப்பரேட் நிறுவனங்களில் உண்மையான உற்பத்தியில், கடும் உழைப்பில் ஈடுபடுபவர்கள் பயிற்சி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் தான். இதில் இந்திய ரயில்வேயும் உள்ளடங்கும்.
காரியவாதிகள் ஆன தொழிற்சங்க சுல்தான்கள்!
இந்திய ரயில்வேயில் தொழிற்சங்கம் வைத்து நடத்துபவர்கள் கோடிகளை கையாளுகின்றனர். தலைக்கு நூறு ரூபாய் சந்தா பிடித்தம் செய்தால் கூட சுமார் 14 கோடிகள் வருகிறது. போனஸ் போன்றவற்றின் போது சங்கத்திற்காக செய்யும் சிறப்பு பிடித்தத்தில் எத்தனை ஆயிரம் கோடிகள் புழங்கும் என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டு விடுகிறோம்.
இந்திய ரயில்வேயை இயக்கும் அதிகார வர்க்கத்தினருக்கு தொழிற்சங்க தலைமைகள் இணங்கி செல்வதன் மூலம் பல்வேறு ஒப்பந்தங்களை தாம் விரும்பியவருக்கு பெற்றுத்தந்து, பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தி, அதிலும் ஆதாயம் அடைகின்றனர். கேட்டரிங் & கேன்டீன், பார்க்கிங், துப்புரவு, துணிகள் சலவை, கட்டண கழிப்பிடம் உள்ளிட்ட ஒவ்வொரு அயல் பணியிலும் ஆதாயம் கிடைக்கிறது. இதற்கு கைமாறாகத்தான் அதிகார வர்க்கத்தின் மேற்பார்வையின் கீழ் தொழிலாளி வர்க்கத்தையும் ஊழல்படுத்துகின்றனர்.
படிக்க: மோடி அரசின் அலட்சியத்தால் அவல நிலையில் இந்திய ரயில்வேத் துறை!
தற்ப்போது இந்திய ரயில்வேயின் பெரும்பான்மையான துறைகளில், பெரும்பான்மையான நிரந்தர ஊழியர்கள் கடுமையாக உழைப்பவர்களாக இல்லை. கடும் உழைப்பு பணி முழுக்க முழுக்க அவுட் சோர்சிங் செய்யப்படுகிறது. ஒப்பந்ததாரர்களுக்கு தரப்படுகிறது. இந்திய ரயில்வேயை லாபத்தில் ஓட்டுவதற்காக வியர்வையும் ரத்தத்தையும் சிந்துபவர்களாக பெரும்பாலும் பயிற்சி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களே உள்ளனர். கொழுத்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு இருக்கும் நிரந்தர ஊழியர்களையும் படிப்படியாக வீட்டுக்கு அனுப்பி விட துடிக்கிறது அதிகார வர்க்கம்.
IAS கள் அதிகாரிகள் அல்ல! அதிகார வர்க்க முதலாளிகள்!
முதலாளி லாபவெறிகொண்டு ஆட்குறைப்பை நடத்துகிறான், பணிச்சுமையை கூட்டுகிறான் என்றால், அதை அவனின் வர்க்க இயல்பு என்பதாக புரிந்து கொள்ளலாம். ரயில்வேயில்தான் முதலாளியே கிடையாதே. ரயில்வேயை இயக்கும் படித்த அதிகார வர்க்கத்தினர் ஏன் முதலாளிகளின் பாதையிலேயே செல்கிறார்கள்? ஏனென்றால், நமது கல்வி முறையே முதலாளித்துவத்திற்கு ஏற்ப, முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு உறுதுணையாக நின்று பங்களிப்பு செய்வதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்யும் அதிகாரிகளை உருவாக்குவதற்கானது அல்ல. அதில் படித்து பயிற்சியும் பெற்று அதிகாரியாக அமருபவர்களிடம் முதலாளித்துவ கண்ணோட்டம் தான் கோலோச்சும். இதற்கு ரயில்வே மண்டலங்களை இயக்கும் இந்திய குடிமை பணியை முடித்த ஐஏஎஸ் களும் விதிவிலக்கு அல்ல.
படித்த அதிகார வர்க்கத்தினர்தான் இந்திய ரயில்வேயை கூறு போட்டு கார்ப்பரேட்டுகளுக்கு விற்க முனைப்பு காட்டுகின்றனர். கார்ப்பரேட்டுகள் வீசும் எலும்பு துண்டுகளை கவ்வியபடி நாக்கில் எச்சில் ஒழுக வேலை பார்க்கின்றனர். ரயில்வேயை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்தாக வேண்டும் அதுவும் கொழுத்த லாபம் வருவதாக மாற்றி தர வேண்டும் என்பதற்காக ஆட்குறைப்பையும் முன்வைக்கின்றனர். அதை கார்ப்பரேட் காவி பாசிச மோடி அரசு விருப்பபூர்வமாக அமல்படுத்த நிற்கிறது.
தேவை வர்க்க உணர்வு; வர்க்க கோபம்!
இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கம் தனது அடிமைச் சங்கிலிகளை தகர்த்தெறிய போராட்ட களம் காணும்; இதை முதலாளிகளாலோ, முதலாளிகளின் கையாட்களான அதிகார வர்க்கத்தினராலோ, ஆட்சியாளர்களாலோ ஆட்சியாளர்கள் ஏவும் அடக்குமுறைகளாலோ நீண்ட காலத்திற்கெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது.
படிக்க: மூத்த குடிமக்களிடம் 1500 கோடி பறித்த ரயில்வே
கார்ப்பரேட்டுகளும், அவர்கள் அடியாட்களாக மாறி நிற்கும் அதிகார வர்க்கத்தினரும் எவ்வளவுதான் முயன்றாலும் ஊழல் படுத்தப்பட்டு விட்ட ஒரு சில நிரந்தர தொழிலாளர்களும், அவர்களை ஊழல் படுத்தி உள்ள துரோக தொழிற்சங்க தலைமையயும் வேண்டுமானால் சோரம் போக வைக்கலாம். ஆனால் மொத்த வர்க்கத்தையும் அப்படியெல்லாம் சீரழித்து விட முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் வெடித்தே தீரும்.
வேட்டை விலங்கானது கொழுத்த இரையை வளைத்த பின், அதை முழுவதுமாக ஒரே அடியில் முழுங்க முடியாமல், வாய் கொள்ளும் அளவு கடித்து, சிறுகச் சிறுக தின்னும் வேலையை செய்கிறது. ரயில்வேயில் பல்வேறு பிரிவுகள் கார்ப்பரேட்டுகளால் விழுங்கப்பட்டு விட்டன.
இத்தருணங்களில் இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில், கோட்டங்களில் செயல்படும் தொழிற்சங்க தலைமைகள் தமது கடமையை சரியாக உணர்ந்து, தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் இறங்கி தம்மை மீட்டுருவாக்கம் செய்து கொள்ள வேண்டும். தவறினால் கார்ப்பரேட்டுகளின் கையாட்களாக அம்பலப்பட்டு அழிவர்.
“எனக்கு சம்பளம் வந்தால் போதும்; எனக்கு போனஸ் வந்தால் போதும்; நான் ஓய்வு பெற்று ஓய்வூதியத்தை சிக்கல் இல்லாமல் அனுபவித்தால் போதும்” என்ற சுயநலனுக்கு பலியாகி இருக்கும் மூத்த தொழிலாளர்கள் தமது கண்ணோட்டங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.
படிக்க: கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக நிலக்கரி உள்ளிட்ட சுரங்கங்கள் சட்ட திருத்தம்! ஆர்எஸ்எஸ் மோடியின் சாதனை!
தமது வாரிசுகளாகவும், தற்போது இளம் தொழிலாளர்களாகவும் கடுமையாக உழைக்கும் அனைவருடனும் மூத்த தொழிலாளர்கள் கரம் கோர்த்து நிற்க வேண்டும். அதற்கு தான் என்ற சுயநலனை விட்டு தனது வர்க்கத்திற்காக சிந்திக்கும் பொறுப்புள்ள மூத்த தொழிலாளர்களாக மாற வேண்டும். தவறினால், அரசின் ஆட்குறைப்புக்கு முதலில் பலியாகப் போவது நிரந்தர தொழிலாளர்களான, ஊழியர்களான அவர்கள் தான்.
புரட்சிகர தொழிற்சங்க பணி!
ஆட்குறைப்பை நிர்பந்திக்கும் கார்ப்பரேட் தாக்குதலுக்கு எதிராகவும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை திட்டங்களுக்கு எதிராகவும் தொழிலாளர்களை அணிதிரத்தி உரிமைக்காக போராட்ட களம் காண வேண்டிய தருணத்தில் நாடு நிற்கிறது. உறுதியாக களமாடும் புரட்சிகர தொழிற்சங்கங்கள் இந்த தருணத்தை பயன்படுத்த வேண்டும். ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு ஏற்ப வர்க்க கோபமும் வெடித்து கிளம்பும்.
இத்தருணத்தில் கடுமையாக உழைக்கும் பிரிவினரிடையே வேலை செய்து அமைப்பை வலுவாக கட்டவும் முடியும்.
மீண்டும் காலனிய காலத்தில் இருந்து தொடங்கியதைப் போன்று, அடிப்படை உரிமைகளுக்காக, ஒப்பந்த முறை ஒழிப்புக்காக, சம வேலைக்கு சம ஊதியத்திற்காக போராட்டங்கள் கட்டி எழுப்பவும் வேண்டும். இவற்றோடு தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் கல்வியையும் சேர்த்து புகட்ட வேண்டும். தவறினால், புதிதாக அமைப்பான தொழிலாளர்களையும் அதிகாரவர்க்கும் தனது வளமையான ஊழல் படுத்தும் பாணியில் சீரழிக்கவே செய்யும்.
புரட்சிகர வர்க்கத்திற்கு பொருத்தமான புரட்சிகர தலைமையை தொழிற்சங்கங்கள் அளிக்கும் பட்சத்தில், பாட்டாளி வர்க்கம் கோடிக்கால் பூதமாக அமைப்பாக திரண்டு, இந்தியாவை விழுங்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகளை அடித்துத் துவைப்பது சாத்தியமானதாகும். கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் ஊழல் அதிகார வர்க்கத்தினரையும் கூட வீட்டிற்கு அனுப்பும். முதலாளிகளே இல்லாத இந்திய ரயில்வேயை முதலாளித்து பாணியில் மாற்ற துடிக்கும் அதிகார வர்க்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பாட்டாளி வர்கமே பொறுப்பேற்று நடத்தும் சூழலும் உருவாகும். அத்தகைய போராட்டத்திற்கு புரட்சிகர தொழிற்சங்கங்கள் தனது படையணியை தயார் செய்யட்டும். நாட்டின் நலனில் அக்கறையுள்ள நாமும் ஒத்துழைப்போம்.
- இளமாறன்







ரயில்வே தாரை வார்ப்பே முதல் இலக்கு !
மனித வள மறு சிறமைப்பு தான் முதல்
அடிவைப்பு !
இந்திய ரயில்வேயில் தொழிலாளர்கள் வேலை பறிப்பு செய்யும் மோடியின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை
ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டிய கடமை குறித்தும் கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது கட்டுரையாசிரியர் இளமாறன் அவர்களுக்கு நன்றி