கோட்பாடுகளில் மட்டுமல்ல; ஆசான்களின் குடும்ப வாழ்க்கையினின்றும் மேலும் கற்போம்
காரல் மார்க்ஸ் குடும்பம்

சான் கார்ல் மார்க்ஸ், பாட்டாளி மக்களின் விடுதலைக்கான தத்துவங்களை மட்டும் அவர் படைத்து மடிந்திடவில்லை; போர்க்களம் பலகண்டு முதலாளித்துவவாதிகள் அவரை நாடு- நாடாகக் கடத்திக் குடும்பத்தினரை சொல்லொண்ணா வறுமைக்கு தள்ளியபோதும், தான் வரித்துக் கொண்ட கூர்மையான தத்துவங்கள் – கொள்கைகள் – செயற்பாடுகளிலிருந்து – அவர் லண்டனில் தான் கடைசியாக வசித்த வீட்டில் நாற்காலியில் அமர்ந்தபடியே மரணத்தைத் தழுவும் காலம் வரை எள்ளின் முனையளவேனும் பின் வாங்கியதில்லை.

அவருக்கும் – ஜென்னிக்கும் திருமணமான புதிதில் – அதாவது இளம் பருவத்திலேயே மார்க்ஸினுடைய குடும்பத்தில் அவர்களுடைய நண்பர்கள் எப்போதும் மார்க்ஸ் குடும்பத்தில் தயாராக உள்ள அனுதாபம் மட்டுமல்ல; எந்த விதமான தடையும் இல்லாத உதவிகளையும் பெற்றார்கள்; மார்க்ஸினுடைய மூத்த மகள் ஜென்னி, தனது தாயார் ஜென்னி மார்க்ஸ், அவளிடம் ஒரு முறை கூறியதாக இப்படிப் பதிவிடுகிறாள்:

“அவர்களுடைய (ஜென்னி-மார்க்ஸ்) திருமணம் முடிந்த சமயத்தில் தன்னுடைய முன்னோர் சொத்தில் இருந்து கொஞ்சம் பணம் கிடைத்தது; அதை ஒரு சிறு பெட்டியில் போட்டு வைத்திருந்தார்கள்; எப்போதாவது சில நண்பர்கள் – வந்தவர்களுக்கு – மிக அவசரமாகத் தேவைப்பட்டால் அந்தப் பெட்டி திறக்கப்பட்டு மேஜையில் வைக்கப்படும். தேவைப்படுபவர்கள் – அவர்களுடைய தேவையினளவு தாராளமாக எடுத்துக் கொள்வார்கள்…”

கற்பனைக்கு எட்டாத இத்தகு செயற்பாடுகளை அக்காலத்தில் யார் செய்ய முன் வந்திருப்பர்? யோசித்துப் பாருங்கள்!

மார்க்ஸின் மூத்த மகள் ஜென்னி தனது தாயாரின் இந்த வார்த்தைகளைப் பதிவிடுகின்ற பொழுது, தனது தாயும் தந்தையும் குழந்தை குட்டிகளும் வறுமையின் உச்சத்திற்கே சென்ற பொழுது கூட தமது பெற்றோர்கள்… ‘இப்படிப்
பட்ட இளித்த வாய்ப் பிழைப்பை மேற்கொண்டு விட்டார்களே… சேமிக்கும் தன்மையில் – சம்பாதிக்கும் தன்மையில் சற்று கெட்டிக்காரத்தனம் – பெற்றோருக்கு இருந்திருக்குமேயானால்… இப்படிப்பட்ட கொடும் துன்ப துயரங்களைத் தந்த வறுமைக் கோளத்திற்குக் குடும்பம் ஆட்பட்டதிலிருந்து சற்று விடுதலை பெற்றிருக்கலாமே…’என்று மார்க்ஸின் மூத்த புதல்வி ஜென்னி எள்ளின் முனையளவும் எண்ணிடவில்லை.

மாறாக தாய் தந்தையரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் போராட்ட குணங்களையும் பிள்ளைகளும் வரித்துக் கொண்டதால், தாராள மனம் கொண்ட தம் பெற்றோரின் அச்செயல்களை புகழ்ந்து தள்ளியே பதிவிடுகிறார்கள். இது மூத்த மகள் ஜென்னி-ஷார்ல் லொங்கே மட்டுமல்ல; அதற்கடுத்தும் உயிரோடிருந்த புதல்வியர் லௌரா-போல் லபார்க், எலியனோர்-எத்வார்த் ஏவ்லிங் முதலானோரும் கொள்கை வழிப்பட்டவர்களாக – மார்க்ஸ் – ஏங்கல்ஸ் தொடர்பான நினைவுக் குறிப்புக்களை எழுதும் அளவிற்கான செயற்பாட்டாளர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இவற்றில் இருந்து இங்கே நாம் கற்க வேண்டியது யாதெனில்; பரந்துபட்ட மக்களை விட்டுத் தள்ளுங்கள்; அல்லலுரும் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்காக வரித்துக் கொண்டதாக கூறிக் கொள்ளும் ‘தோழர்கள்’ என்ற பிரிவினரின் குடும்பங்களில் இத்தகு பெரும் தியாகங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கவில்லை தாம்…!

படிக்க:

♦ ஆசான் மார்க்ஸ் பற்றி அவரது இளமைக் காலத்து சகாக்கள் என்ன கூறுகின்றனர்?

 ஆசான் கார்ல் மார்க்ஸ் நினைவைப் போற்றுவோம்…! மார்க்சியம் பயில்வோம்!

ஆனால் சகிக்க முடியாத அளவிற்கு சீர்கெட்டுக் கிடக்கும் இச்சமூகத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட முற்படும்பொழுது, ஏற்படும் குடும்ப இடுக்கன்களைத் – தடைகளைத் தகர்த்துக் கொண்டு வெளிவருவதற்கு அஞ்சி ஊசலாடுவோர் எத்தனை எத்தனை பேர்? என்பதனை நாம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். செம்மையான வழிமுறை எது என்ற முடிவிற்கு வந்து முன்னுதாரணமாக களப்பணி ஆற்றிட துணிந்திட வேண்டும்.

அப்பொழுது மட்டுமே நாம் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிக்கும் மரபினர் என்ற தகுதியைப் பெற்றவர்களாவோம்!

எனவே மார்க்ஸின் தத்துவம் கொள்கைகள் மட்டும் நமக்கு வழிகாட்டுபவைகளாக அமைந்திட முடியாது: அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் கூட நமது வாழ்வின் வழிகாட்டும் நெறிமுறைகளாக வகுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

ஏன், இரண்டாம் உலகப் போரில் ஆசான் ஸ்டாலின் மகன் யாகோப்-பை நாசிச ஹிட்லர் படை பிணையாகப் பிடித்து வைத்துக் கொண்டு பேரம் பேசிய பொழுது கூட பேரத்திற்கு அடிபணியாமல் தனது மகனை சாகக் கொடுத்த வீர மரபினையும் தமது தலைமையிலான செம்படை, சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிசக் கூட்டத்தை
மண்ணைக் கவ்வ வைத்ததையும் நாம் நெஞ்சில் ஏந்தக் கடமைப்பட்டுள்ளோம்!

இத்தகு ஆசான் குடும்பங்களின் தியாகங்களைஉணர்வோமாக…!

அவற்றிலிருந்து பெரும் பாடங்களைக் கற்று அனைத்து துறைகளிலும் நடைமுறைகளில் மெய்ப்பிப்போமாக…!

  • எழில்மாறன்

2 COMMENTS

  1. நமது ஆசான்களின் தியாகத்தை படிக்கும் போது நமது செயல்பாடு அர்ப்பணிப்பு தியாகம் மிக குறைவாகவே இருக்கிறது என உணர்கிறேன்..
    நம்மை மேலும் வலுப்படுத்தி கொள்ள சித்தாந்த ரீதியாக படிக்க வேண்டும் உழைக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது.

    • மிக்க மகிழ்ச்சி. நன்றி தோழரே!

      அப்படிப்பட்ட உள்ளுணர்வு சுய விமர்சன ரீதியாக ‘நம்மிடம் குறைபாடு உள்ளது; அதனை உறுதியாக களைய வேண்டும்…’ என்ற உறுதியான எண்ணம் பலருக்கும் வரவேண்டும்; அதன் மூலம் சிறப்பான மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என்ற உந்துதலாலேயேயே
      இக்கட்டுரையும் படைக்கப்பட்டது. பார்க்கலாம்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here