2019-21 ஆண்டுகள் கொரானா காலம். அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன; அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டன. அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டன.
கொரோனாவை ஒழிக்க மக்களை, பிரதமர் மோடி தட்டேந்தி மணி அடிக்கச் சொன்னார்; அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றச் சொன்னார். இப்படிப்பட்ட ‘அரு மருந்துகளை’ அறிவித்த மாத்திரத்திலேயே ஆர்.எஸ்.எஸ்-பாஜக சங் பரிவார் கும்பல் (மற்றும் அறியா நிலையில் உள்ள மக்கள் கூட) நாடு முழுமைக்கும் வெட்கம்- மானம்- அறிவு துளியும் இன்றி நடைமுறைப்படுத்திக் காண்பித்தனர்.
அனைத்துப் போக்குவரத்துக்களும் முழுமையாக அடைபட்ட பிறகு உழைக்கும் மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் குழந்தை குட்டிகளுடன் தலைச் சுமையுடன் நடந்து செத்தார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் தான் 2020 மத்தியில் சற்று தளர்வு ஏற்படுத்தி கடைகளைக் குறிப்பிட்ட கால அளவு மட்டும் திறக்க அனுமதித்தது அரசும், அரசாங்கமும். அப்பொழுது தான் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை ஒன்றினை சிறிய அளவில் நடத்தி வந்த ஜெயராஜ் (59) என்பவரை காவல்துறையினர் 2020 ஜூன் 20-ல் கைது செய்து அழைத்துச் சென்றனர். அதாவது இரவு எட்டு மணிக்கு மேல் 10 நிமிடங்கள் கூடுதலான நேரம் கடை திறக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு. ஆனால் உண்மையில் ஏற்கனவே ஒரு சார்பு ஆய்வாளர் இலவசமாக புதிய அலைபேசி கேட்டு ஜெயராஜ் கொடுக்கவில்லை என்பதுவே பிரதானக் காரணம் என்று கூறப்படுகிறது.
அப்பாவை கைது செய்து அழைத்துச் சென்ற விவரம் அறிந்த மகன் பெனிக்ஸ் (31) உடனடியாக தமது நண்பர்கள் மணிமாறன், ரவிச்சந்திரன், ராஜாராம் முதலானோருடன் சாத்தான்குளம் காவல் நிலையம் செல்கிறார். காவல் நிலையத்தில் தனது தந்தையை அவமரியாதையாக திட்டிச் சட்டையைப் பிடித்து சார்பு ஆய்வாளர் இழுத்த பொழுது வாயிலுக்கு வெளியே நின்ற பெனிக்ஸ் ஆட்சேபனை தெரிவிக்கிறார். உடனே ஜெயராஜின் மகன் பெனிக்ஸ் என்பதை அறிந்து கொண்ட காவல் துறையினர் அவரையும் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டு
மற்றவர்களை வெளியே தள்ளி காவல் நிலையக் கதவுகளை பூட்டிக் கொள்கின்றனர்.
சித்திரவதைக் கூடமானது
காவல் நிலையம்!
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் குறிப்பிட்டது போல ‘அடித்துப் பழகுவதற்கு அப்பன் மகன் இருவர் கிடைத்துள்ளனர்; புகுந்து விளையாடுங்கப்பா’ என்று சொன்னது தான் தாமதம்…!
ஜூன் 20 இரவு சுமார் எட்டு மணி துவங்கி மறுநாள் 21ஆம் தேதி காலை வரை சுமார் பத்து காவல்துறையினர் ஒன்று சேர்ந்து இரு வரையும் கொடூரமான முறையில் லத்தியால் தாக்கியுள்ளனர்; ஆசனவாயிலில் லத்தியை வைத்துக் குத்தி ரணமாக்
கினர். தலைகீழாகத் தொங்கவிட்டுக் கதறக் கதற அடித்துள்ளனர்; நிர்வாணமாகப் படுக்கப் போட்டு தொடைகளிலும் கணுக்கால்களிலும் லத்திகளால் அடித்தது மட்டுமின்றி, பூட்ஸ் காலால் தொடைகளில் பலம் உள்ள மட்டும் மிதித்து தடம் பதித்தது மிருகக் கும்பல்.
ரத்தம் கொப்பளித்து வெளியே வந்த பிறகும் ஜெயராஜ் குடும்பத்தினரிடமே துணிகளை எடுத்து வரச் செய்து கைலிகளாலும், வேட்டிகளாலும் அணிந்திருந்த உள்ளாடைகளாலும் ரத்தத்தை துடைத்து குப்பைகளில் விசிரி அடிக்கச் சொல்லி இருக்கிறார்கள் காவல் நாய்கள். ஜெயராஜ் மனைவி மற்றும் குடும்பத்தினர் எவ்வளவோ கதறி ‘நாங்கள் யாரிடமும் புகார் அளிக்க மாட்டோம் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதற்கு உதவுங்கள்’ என்று கெஞ்சிக்கூத்தாடியும் கடுகளவும் இரக்கம் காட்ட மறுத்தார்கள். இந்தக் கொலை பாதக மிருகக்கும்பல்.
படிக்க: ஆட்சி மாறினாலும் காவல்துறையின் தடி ஓயவில்லை! இதுதான் இரட்டையாட்சி கொடூரம்!
ஜூன் 21 இல் கடனுக்கு கொரோனா கால விதிமுறைப்படி நீதிபதி முன் தூர நிக்க வைத்து ஆஜர் படுத்திவிட்டு அன்றே சாத்தான்குளம் எல்கைக்கு உட்படாத கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்து விட்டனர். அப்பொழுதும் கூட தந்தை மகன் ஆடைகளில் புட்டம் என்று சொல்லப்படக்கூடிய பின்புறத்திலிருந்து ரத்தக்கரைகள் கடுமையாகப் படிந்திருந்தன.
சிறையில் வலி தாங்க முடியவில்லை என்று பெனிக்ஸ் கதறியவுடன் சிறை மருத்துவர் சோதித்து நிலைமையின் கடுமையை உணர்ந்து உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஜூன் 22 பெனிக்ஸ் மரணம் அடைகிறார். அவரைத் தொடர்ந்து அவரது தந்தை ஜெயராஜ் அதே நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவர் ஜூன் 23 அன்று மரணம் அடைகிறார்.
இதற்கிடையில் காவல் நிலையத்தில் லத்தியில் படிந்திருந்த ரத்தக்கரைகள், மேஜை, நாற்காலிகள், சுவர் இவற்றில் இருந்த ரத்த கரைகள் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா முழுமையாக அழிக்கப்பட்டன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சர்க்கரை நோய், மூச்சுத் திணறல் காரணமாக மாண்டு போனதாக அறிக்கை வெளியிட்டார். அன்றைய தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு 20-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 22, 23 தேதிகளில் தான் இறந்துள்ளனர். இதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் போலீஸ் கஸ்டடியில் இறக்கவில்லை; நோய்வாய்ப்பட்டுத் தான் இறந்துள்ளனர் என்று’-எனக் கெட்டிக்காரத்தனமாக சப்பைக் கட்டு கட்டினார்.
அதே அறிக்கையை அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓலமிட்டுக் கூவினார். ஆம், வாந்தி எடுத்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக் காலத்தில் காக்கை- குருவிகளைப் போல போலீஸ் மிருகங்கள் 13 பேரை சுட்டுப் பொசுக்கியதையே குற்ற உணர்வு துளியும் இன்றி ‘டிவி-யைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்’ என்று கூறிய உத்தமபுத்திரன் அல்லவா எடப்பாடி பழனிச்சாமி!
காவல் நிலையப் படுகொலைகளைத் தடுக்க இந்த தீர்ப்பு போதுமா?
“காவல்துறை” என்று பெயர் சூட்டிக் கொண்டாலும் இத்துறை யாரை காவல் காக்க அமைக்கப்பட்டது என்பதுதான் பிரதானமான கேள்வி. இப்படிப்பட்ட கொடுமைகள் சாத்தான்குளத்திற்கு முன்பும் பின்பும் தொடர்கதையாக நீள்வதற்கு என்ன காரணம்?
குறிப்பாக சாத்தான்குளம் நிகழ்வுக்கு பின்னர் மட்டும் ‘போலீஸ் கஸ்டோடியல் டெத்’ 36 என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனவே இதற்கு என்ன காரணம்?
அனைத்து குற்றச் செயல்களுக்கும் நீதிமன்றம் சரியான தீர்ப்புகளை வழங்கித் தான் இருக்கின்றனவா?
1968-ல் கீழவெண்மணியில் குடிசையில் பூட்டி வைத்து 44 தலித் விவசாயக் கூலிகளை கதற கதற தீ வைத்துக் கொழுத்தியதே கோபாலகிருஷ்ண (நாயுடு) தலைமையிலான கேடுகெட்ட கும்பல். அவர்களை எப்படிச் சொல்லி உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது? ஆம், ‘பணக்காரர்கள், கார் வைத்திருப்பவர்கள், பங்களா வைத்திருப்பவர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள்’- என்று தானே? இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை எந்த காக்கிச்சட்டை போலீஸ் ரணகளமாகத் தாக்கியது கூற முடியுமா!
வாசாத்தி கொடுமைகளை எங்கே சொல்லி அழுது புலம்புவது? இப்பிரச்சனைக்கு காரணமானவர்களுள் ஒருவரான அன்றைய வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் இன்றும் வெள்ளையும் சொல்லையுமாக வெட்கமின்றி நடமாடுவதற்கு இச்சமூகம் அனுமதித்துக் கொண்டுதானே இருக்கிறது? போலீஸ் அனுமதித்து கொண்டு தானே இருக்கிறது
படிக்க:
வேப்பந்தட்டை பட்டியல் இன இளைஞர் படுகொலை! சாதிவெறியர்களுக்குத் துணை போன காவல்துறை!
கொலைகார ஸ்டெர்லைட்டிற்கு அடியாள் வேலை பார்க்கும் தூத்துக்குடி காவல்துறை!
1978-ல் சிவகங்கை மாவட்டம் உஞ்சனை கிராம ஆதிதிராவிடர்கள் குதிரை எடுப்பு கோவில் விழாவில் ஆதிக்க சாதியினரால் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதும், ஐவர் கொலை செய்யப்பட்டதும் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டதும் நாம் ‘கண்டு களித்தது’ தானே! இதில் காவல்துறையினர் யாரைப் பிடித்து கட்டி வைத்து உதைத்தார்கள்? ரத்தம் வரச் செய்தார்கள்?
எத்தனை எத்தனை ஆணவப் படுகொலைகள் இன்று வரை நீடிக்கின்றன? இதன் குற்றவாளிகளில் எத்தனை பேரை காக்கிச்சட்டை மிருகங்கள் அடித்து ரத்தம் கொட்டச் செய்தனர்?
இவ்வாறாக காவல்துறை, நீதித்துறை நிலச்சுவான்தார்கள், பணக்கார கூட்டம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள், ஆதிக்க சாதி வெறியர்கள் என ஒருங்கிணைந்த கும்பலால் ஒன்றுக்கொன்று இசைந்து நின்று இச்சமூகம் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதே உண்மை.
உலகம் முழுமைக்கான காவல்துறையாக இருக்கட்டும்; ராணுவத் துறையாக இருக்கட்டும். இன்ன பிற அதிகார வர்க்கத் துறைகளாகட்டும்; இவை குறித்து மார்க்சிய- லெனினியம் நமக்கு எதனை போதிக்கிறது? உடைமை வர்க்கம் – உடைமைகள் ஏதும் இல்லாத வர்க்கம் என்ற ஒரு சமூக அமைப்பில் அங்கே அமைக்கப்பட்டுள்ள ‘அரசு’ (போலீஸ், நீதிமன்றம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ராணுவம் உட்பட அனைத்து அதிகாரத்துவ அமைப்புகள்) மற்றும் ‘அரசாங்கம்’ (உள்ளாட்சி முதல் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் ஜனாதிபதி) என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு கருவியாக இயங்கவே முடியாது என்பதுதான் சமூக விஞ்ஞானம்.
இவை அனைத்தும் ஆளும் வர்க்க கருவிகள் தான். அதாவது உடைமையாளர்களை – முதலாளிகளை- பணக்காரர்களை – இந்திய நாட்டைப் பொருத்த மட்டில் ஆதிக்க சாதி வெறியர்களை – சனாதன பார்ப்பனியத்தை வளர்ப்பவர்களை பாதுகாக்கும் கருவிகள் தான்.
இதைத்தான் ஆசான் லெனின் அவரது நடையில் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்:
“சமூகம் இணக்கம் காண முடியாத அளவிற்கான வர்க்கங்களாகப் பிளவுபட்ட பிறகு அங்கே அனைவருக்கும் பொதுவான ஒரு ‘அரசு’ நிலவுவதற்கான சாத்தியக்கூறே இல்லை”.
அவருக்கு முன்னால் ஆசான்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ் முதலானோரும் விரிவுபட விஞ்ஞான ரீதியில் அரசு மற்றும் அரசாங்கம் பற்றி எடுத்து விளக்கியிருக்கிறார்கள்.
அப்படி என்றால் சாத்தான்குளத்தில் பெனிக்ஸ் ஜெயராஜ் இருவரையும் படுகொலை செய்வதற்கான தனித்த அதிகாரம் அந்த காக்கிச் சட்டை மிருகங்களுக்கு எங்கே இருந்து கிடைத்தது? ஏனெனில் அவர்கள் உழைக்கும் மக்கள் எவருக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை. உழைக்கும் மக்கள் மீது தமது எதேச்சதிகாரத்தை செலுத்துவதற்கான அனைத்து உரிமைகளும் இச்சமூகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தையே அவர்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதானி, அம்பானி, டாட்டா, பிர்லா, அனில் அகர்வால், நிரவ் மோடி, மல்லையா…. இத்தியாதி இத்தியாதி
கும்பலிடம் இந்த காக்கிச்சட்டை கும்பல் இப்படிப்பட்ட வீரத்தை காண்பிக்க முன் வருமா? வரவே வராது. மாறாக அவர்களின் அனைத்துவித தவறுகளுக்கும் கொடுங்கோன்மைகளுக்கும் வெட்கமின்றி பாதுகாப்பு வழங்குவார்கள்.எனவே, ஏற்றத்தாழ்வு மிகுந்து விளங்கும் ஒரு சமூகத்தில் காக்கிச்சட்டை கயவர்களிடம் பொது நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
தற்போது மதுரை அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அவர்கள் 9 காவல்துறையினரையும் குற்றவாளிகள் என அறிவித்துவிட்டார். பாராட்டுவோம். அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதுதான் சரி. எனினும் 7 பேருக்கு உறுதியாக ஆயுள் தண்டனைகளை எதிர்பார்க்கலாம். தாக்குதல் நடத்தியதை வெளியில் இருந்து யாரும் பார்க்கா வண்ணம் காவல் காத்த இருவருக்கு சற்று குறைந்த தண்டனை கிடைக்கலாம்.
ஆனால், அத்தி பூத்தாற் போல ஒரு சில சிறப்பான விசாரணைகளையும், தீர்ப்புக்களையும் மட்டும் வைத்துக் கொண்டு “சமூகத்தில் அனைத்திற்கும் நியாயமான தீர்ப்பு இருக்கவே செய்கின்றன’ என்று உழைக்கும் மக்கள் மனப்பால் குடிக்க முடியவே முடியாது.
இப்படிப்பட்ட அரசு சார்ந்த வரம்பற்ற அதிகார வர்க்கத்தினரையும், மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்வோரையும் கண்காணிக்கும் அதிகாரம் நாட்டில் அருதிப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களுக்கு இருக்க வேண்டும்;
அப்படிப்பட்ட அதிகாரம் உழைக்கும் மக்கள் கைக்கு கிட்டும் வரை இத்தகைய கொடுமைகள் தடுத்து நிறுத்தப்படவே முடியாது.
அதுவரை உழைக்கும் மக்கள் தத்தம் பிள்ளைகளை ஏதாவது வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட அடியாள்படை வேலைகளுக்கு அனுப்புவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மேலும் இன்று பாராளுமன்ற ஜனநாயகத்தை வைத்துக் கொண்டே ஒற்றை சர்வாதிகாரத்தை நிலைநாட்டக் காவிக் கூட்டம் ஹிட்லர் பாணியில் துடித்துக் கொண்டிருக்கின்ற பொழுது அதனை வேரறுத்து சாய்க்க தற்காலிகமாக முதலில் அப்பாசிசக் கும்பலை வீழ்த்தவும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி மூலமாக ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவவும் களமாடுவதே இன்றைய அனைத்து அமைப்புகளின் கடமையாக இருக்க முடியும்.
அதன் வழியில் மென்மேலும் உழைக்கும் மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்கவும் தறிகெட்டுத் திரியும் அனைத்து அதிகார வர்க்கத்தின் கொட்டங்களை ஒடுக்கி மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்கவும் முடியும்.
எழில்மாறன்







