ஈரான் மீது அதன் எண்ணெய் வளத்தையும் அதன் தலைவர்களையும் குறிவைத்து தாக்கி வருகின்ற இஸ்ரேல் அமெரிக்க கூட்டுப்படை தொடர்ச்சியாக தனது ராணுவ வலிமையை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
போர் விதிமுறைகளை மீறி பள்ளி குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் போரின்போது தாக்கப்பட கூடாது என்ற அறிவிக்கப்பட்டுள்ள சேவை துறைகள் அனைத்தையும் குறிவைத்து தாக்கி ஈரான் அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது.
இதற்கு எதிராக ஈரான் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் எதிர் தாக்குதல் தொடுத்து வருகிறது என்பது சமூக வலைதளங்களில் செய்திகளாக பரவுகிறது ஒழிய அமெரிக்க மேல்நிலை வல்லரசின் பிடிக்குள் உள்ள மைய நீரோட்ட ஊடகங்கள் இவற்றை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
மாறாக போரில் இஸ்ரேல் அமெரிக்கக் கை மேலோங்கி இருப்பதைப் போலவே சித்தரித்து வருகின்றனர். ஆனால், இது உண்மையில்லை. இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் இந்தியாவில் பயிற்சி மேற்கொண்ட ஈரான் கப்பல்படை பயிற்சியை முடித்து நாடு திரும்புவதற்குள் அமெரிக்கா தனது கண்ணிவெடி தாக்குதலால் மூழ்கடித்தது.
ஐரிஸ் டேனா பிப்ரவரியில் விசாகப்பட்டினத்தில் இருந்தது மற்றும் இந்திய கடற்படை நடத்திய மிலன் பலதரப்பு கடற்படைப் பயிற்சியில் விருந்தினராகப் பங்கேற்றது. இந்தப் பயிற்சி பிப்ரவரி 24 அன்று முடிவடைந்தது, கூட்டுப் பயிற்சி முடித்த பின்னர் “கப்பல் அடுத்த நாளே ஈரானுக்குப் புறப்பட்டது” என்று பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள பல வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்ட ஈரானிய கப்பற்படையானது இந்தியாவின் எல்லையை தாண்டிய உடனே அமெரிக்க பயங்கரவாதிகளின் தாக்குதலினால் நீரில் மூழ்கடிக்கப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இந்தியா எந்த கண்டனமும் தெரிவிக்காதது மட்டுமின்றி தங்களது எல்லையை தாண்டி விட்டனர். அதன் பிறகு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று திமிர்த்தனமாகவும், அமெரிக்க அடிமை புத்தியுடனும் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் கீழ்கண்டவாறு அறிக்கை வெளியிட்டது. “இந்தத் தாக்குதலுக்கு இந்தியா எந்தப் பொறுப்பும் ஏற்காது என்று திட்டவட்டமாகத் முன்வைக்கின்றோம். மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதலில், அமெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, அந்தக் கப்பல் இந்தியக் கரைகளை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டது” என்று அறிவித்தனர்.
இதற்கு நேர்மாறாக நீரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்த ராணுவ வீரர்களை மீட்பது அவர்கள் உடல்களை மீட்பது என்ற பொறுப்பேற்று கொண்ட இலங்கை அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாமல் அவற்றை பாதுகாப்புடன் ஈரானுக்கு அனுப்பி வைத்தது என்பது சமீபத்திய செய்திகள் தான்.
அதுமட்டுமின்றி இந்தப் போரில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினருக்கு உதவுகின்ற வகையிலேயே இந்தியாவை ஆளுகின்ற மோடி கும்பல் அடிமை புத்தியுடன் நடந்து வருகிறது என்பது மட்டுமின்றி ஈரானுடனான எண்ணெய் ஒப்பந்தங்களை ரத்து செய்து அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து வெனிசுலாவிலிருந்து எண்ணெய்களை வாங்குகிறது.
மேலும் பற்றாக்குறையை ஈடுகட்ட ரஷ்யாவில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா காலால் கொடுத்துள்ள அனுமதியை ஏற்றுக்கொண்டு தலையால் இறக்குமதிகளை அதிகரித்து வருகிறது.
படிக்க:
♦ ஈரான் மீதான போரை நிறுத்து | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்
♦ ஈரான் மீது கொலை வெறியாட்டம்! இஸ்ரேல்-அமெரிக்கா-இந்தியா பாசிச கொலைகார கூட்டணி!
இந்த சூழலில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தலைவிரித்தாடத் துவங்கி உள்ளது. அரசாங்கமே புதிய சிலிண்டர்களை பதிவு செய்வதற்கு 15 நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். பெட்ரோல் பங்குகளில் பெரும் பணக்காரர்கள் பேரல் பேரலாக பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கி பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள்.
வசதி படைத்த பணக்கார குல கொழுந்துகள் வாகனங்களில் முழு டேங்கையும் நிரப்பிக் கொண்டு பிறருக்கு கிடைக்காத வண்ணம் வயிற்றில் அடிக்கிறார்கள். வணிக எரிவாயு உருளைக்கு பதிலாக வீடுகளில் பயன்படுத்தும் உருளைகளை ஒரு மடங்கு விலை அதிகமாக கொடுத்து வாங்கி வணிக நிறுவனங்கள் பயன்படுத்த தொடங்கி விட்டன.
இதனை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் மறியல்களும் நடந்து வருகின்ற சூழலில் இந்தியாவின் எண்ணெய் கப்பல் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரினை வழியாக செல்வதற்கு ஈரான் அனுமதி கொடுத்து இந்திய அடிமைகளின் முகத்தில் கரியை பூசி உள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, இந்தியக் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல ஈரான் அனுமதிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி, “ஆமாம், ஏனெனில் இந்தியாவும் நாங்களும் நண்பர்கள். இதை நீங்கள் சிறிது நேரத்தில் பார்ப்பீர்கள். ஏனெனில், ஈரானும் இந்தியாவும் நட்பு நாடுகள் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுக்குப் பொதுவான நலன்களும், பொதுவான எதிர்காலமும் உள்ளன.
இந்திய மக்களின் துன்பம் எங்கள் துன்பமே. அதுபோலவே எங்கள் துன்பமும் இந்திய மக்களின் துன்பம். இந்தக் காரணத்தினால், இந்திய அரசு எங்களுக்கு உதவுகிறது; நாங்களும் இந்திய அரசாங்கத்துக்கு உதவ வேண்டும். இந்தியாவில் உள்ள தூதர்களாகிய நாங்கள், இந்தப் பிராந்தியத்தில் எங்களுக்குப் பொதுவான எதிர்காலம் இருப்பதாக நம்புகிறோம். இந்தக் காரணத்தினால், ஈரானின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும், இந்திய அரசாங்கத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து வழிவகை செய்யுமாறு இந்தியாவில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசாங்கத்துக்கு எதிராகவும் ஈரான் போரில் தாக்கப்படுவதை ஆதரிக்கின்ற வகையிலும் நடந்து வருகின்ற இந்திய அடிமை ஆட்சியாளர்கள் மற்றும் சங்பரிவார கும்பல் இந்த அறிக்கைக்கு நேர்மையாக வெட்கி தலை குனிய வேண்டும். ஆனால் இதுவும் தங்களது ராஜதந்திர ரீதியிலான வெற்றி என்று பித்தலாட்டம் புரிந்து வருகின்றனர்.
ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்காவின் போர்வெறியை எதிர்த்து ஈரானுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொள்வோம். ஈரானில் உள்ள சிக்கல் மற்றும் பிற்போக்கு மதவாத ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்துகின்ற போராட்டங்கள் அனைத்தும் அங்கீகரிக்க தக்கவை தான் என்றாலும் தற்போதைய சூழலில் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசான இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்படுகின்ற போர்க்குணம் மிக்க எதிர் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உலக வரலாற்றில் பதியத்தக்கவை.
இன்னொரு புறம் ஒற்றை துரோகம் வல்லரசுக்கு எதிராக பல் துருவ வல்லரசை நிறுவ துடிக்கின்ற சீன ரஷ்ய கூட்டணியை ஒருபோதும் உலக மேலாதிக்கத்திற்கு அனுமதிக்க கூடாது என்பதையும் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தினிடமும், இந்திய பாட்டாளி வர்க்கத்திற்கும் எடுத்துச் செல்வோம்.
◾மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







