2025 ஜூன் 27 அன்று சிவகங்கை-திருப்புவனம் அருகில் உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு தன் தாயுடன் ‘தரிசனத்திற்காக’ வந்ததாகக் கூறப்பட்ட திருமங்கலத்தைச் சேர்ந்த ‘பேராசிரியை’ நிகிதா தன் காரில் நகைகளை கழற்றி வைத்து விட்டு கோவிலுக்குச் சென்று வருவதற்குள் நகைகள் திருடு போய்விட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் அன்றே புகார் அளித்தார்.

இவரது தூண்டுதலின் பெயரில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக செக்யூரிட்டியாகப் பணியாற்றிய அஜித் குமார் என்ற அப்பாவி இளைஞர் தனிப்படை காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

அவரை காவல்துறை வாகனத்தில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற 5+1 காவலர்கள் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து ஜூன் 28-ல் கொடூரமான முறையில் சாகடித்து முடித்தனர்.  இச்சம்பவம் நடந்து 8 மாதங்களுக்கு மேல் உருண்டோடி விட்டன. நமது பழைய கட்டுரைகளும் பழையதாகவே ஆகிவிட்டன.

படிக்க: திருப்புவனம் –காவலாளி அஜீத் குமார் அடித்துப் படுகொலை! தமிழ்நாடு போலீசு படு அட்டூழியம்!

இவ்வழக்கினை தமிழ்நாடு அரசாங்கம் விசாரணைக்காக சிபிஐ வசம் ஒப்படைத்தது.

கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 8 மாதங்கள் நிறைவடைந்து விட்ட வேளையில் இவ்வழக்கு, 2026 மார்ச் 4-ல் மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி அசன் முகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராக புகார்தாரர் நிகிதா-வுக்கு ஏற்கனவே சமன் அனுப்பப்பட்டிருந்தது.

மடப்புரம் அஜித் குமார் படுகொலை! நிகிதாவை கைது செய்க!

நீதிமன்றத்தில் ஆஜரான நிகிதாவிடம் ‘நீங்கள் அளித்த புகாருக்கான குற்றம் நிகழ்ந்ததற்கு ஆதாரங்கள் இல்லை எனவும், உங்களுடைய புகாரை முடித்து வைக்க விரும்புவதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது; இதில் உங்களுடைய கருத்து என்ன…?’ என்று நீதிபதி அசன் முகமது கேள்வி எழுப்பினார்.

இதற்கு, ‘எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; தாராளமாக வழக்கை முடித்து வைக்கலாம்…’ என்று நகைத் திருட்டு புகார் அளித்த நிகிதா ‘கூலாக’ப் பதில் அளித்துள்ளார்.

உடனே நீதிபதி, ‘நிகிதா தனது கருத்தை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்‌.

படிக்க: மடப்புரம் அஜித் குமாரை கொன்ற போலீசின் மீதான கோபத்தை திசை திருப்பும் திமுக ஆதரவு யூ டியூபர்கள்!

மடப்புரம் அப்பாவி ஏழை இளைஞர் அஜித் குமார் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதற்கு நிகிதா காவல்துறையில் அளித்த புகாரே காரணம்.
அதுவும் பொய் புகார் என்பது தற்போது விசாரணையில் ஊர்ஜிதம் ஆகி உள்ளது. சிபிஐ-யின் முடிவை ஏற்பதாக நிகிதா தெரிவிக்கிறார். அப்படியானால் நகை திருடு போகவில்லை என்பதுவும் ஊர்ஜிதமாகிறது. அஜித்குமார் திருட்டுத்தனம் போன்ற எந்த ஒரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்பதுவும் ஊர்ஜிதமாகிறது.

ஆக, குற்றம் இழைக்காத அப்பாவி இளைஞரை குற்றவாளி என சிருஷ்டித்து அடித்தே கொலை செய்திருக்கிறார்கள் காவல்துறையின் காலிப்படையான சிறப்பு கூலிப்படை காவலர்கள்.

எனவே, தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அந்த 6 காவலர்கள் மட்டுமல்ல;
(அவர்களுக்கு எக்காரணத்தினாலும் ஜாமீன் வழங்கப்படவே கூடாது என்பது ஒரு புறம்) பொய்ப் புகார் அளித்த ஃபிராடுக்கார பேராசிரியை நிகிதாவும் குற்றவாளியே.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

எனவே, சிபிஐ விசாரணையில் நகை திருடு போனதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று அறிவித்த தருணத்திலேயே நீதிமன்றமும், காவல்துறையும் நிகிதாவை
கைது செய்ய முற்படல் வேண்டும் என்பதுவே சரியான – நீதியான நடவடிக்கைகளாக அமையும்.

ஏனெனில் பொய்ப் புகார் காரணமாகவே அப்பாவி இளைஞர் அஜித்குமார் அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கிறார். எனவே பொய்ப் புகார்தாரர் கண்டிப்பாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும். இவரது பழைய குற்றச்செயல்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

விவாக ரத்தான நிகிதாவின் முதல் கணவர் இவரது பிராடுக்காரத்தனம் பற்றி – அஜித்குமார் படுகொலை செய்யப்பட்ட தருணத்தில் புட்டு புட்டு வைத்த பல செய்திகளையும் அனைத்து தரப்பினரும் கருத்திற் கொள்ள வேண்டும்.

நீதிமன்றமும், சிபிஐ-யும், காவல்துறையும், அரசாங்கமும் இதனைச் செய்யுமா என்று எதிர்பார்ப்போம்…!

எழில்மாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here