
இந்தியாவில் பார்ப்பன சனாதன வெறியை நிலைநாட்டுகின்ற சமூக அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் – பாஜக உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் இதனை நைச்சியமாக இந்து ராஷ்டிரம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
பார்ப்பன (இந்து) மதம் எந்தக் காலத்திலும் பெண்களை சமத்துவமாக நடத்தியது இல்லை. வர்ண ரீதியில் மேலே உள்ள பார்ப்பன குடும்ப பெண்கள் துவங்கி உழைக்கும் பெண்கள் வரை அனைவரையும் இழிவுபடுத்துவதை பார்ப்பன மதம் பெருமையாகவே கருதிக் கொண்டுள்ளது.
பெண் கடவுளர்கள், பெண்களை பூமாதேவி என்றெல்லாம் போற்றிக் கொண்டிருந்தாலும் இந்து சனாதன தர்மத்தின் கீழ் பெண்களுக்கு ஒருபோதும் சமத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பெண்கள் தலைமை ஏற்று நடத்திய சமூக அமைப்பில் உருவான சாக்தம் என்ற சக்தி வழிபாடு பார்ப்பன மதத்தினரால் தின்று செரிக்கப்பட்டது.
சனாதன தர்மம் என்ற கேடுகெட்ட சித்தாந்தத்தை தலையில் தூக்கி சுமந்து வரும் ஆர்எஸ்எஸ் – பாஜக குண்டர் படையினர் சமீப காலத்தில் தமிழகத்தில் அரசியலில் களமாற்றுகின்ற பெண்களை இழிவாக பேசுவது, திரைப்பட நடிகைகளை கேடான முறையில் விமர்சிப்பது என்று ஆபாச வக்கிர உச்சகட்டத்தில் திளைக்கின்றனர்.
இந்த கும்பலின் சார்பில் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் என்று கௌரவமாக அழைக்கப்படுகின்ற பாசிச மோடி அமெரிக்காவின் ஜெப்ரி எப்ஸ்டைன் விவகாரத்தில் சிக்கிக் கொண்டு உள்ளார் என்பது அம்பலமாகி உலகளவில் நாறிக்கொண்டுள்ளது.
சிறுமிகளை கடத்தி கொண்டு சென்று பாலியல் தொழில் நடத்தி வந்த ஜெப்ரி எப்ஸ்டைன் என்ற புரோக்கருடன் இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடிக்கு என்ன தொடர்பு என்ற கேள்விக்கு சங்பரிவார கும்பல் வாயை திறப்பதில்லை. இந்தக் கேடுகெட்ட கும்பல் தான் அரசியலில் களமாடுகின்ற பெண்களை இழிவாக பேசுகின்றனர்.
கடந்த 13ஆம் தேதி தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை த்ரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வர வேண்டும் எனவும் விஜய் அவரது குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அவரது இந்த கேடுகெட்ட பேச்சின் காரணமாக அவர் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள சில்லறைக் கட்சித் தலைவர்களே இதனை கண்டிக்கின்ற அளவிற்கு அவரது கேடுகெட்ட நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது.
திரைப்பட இசையமைப்பாளரும் தமிழ் உணர்வாளருமான ஜேம்ஸ் வசந்தன், “அவர் தனது முகநூல் பக்கத்தில், “நயினார் நாகேந்திரன் அடிப்படையில் பண்பானவர்தான். தவறாகப் பேசக்கூடிய ஆளில்லை. ஆனால் அவர் சேர்ந்திருப்பது ஒரு அசிங்கக் கூடாரம். அது இப்படித்தான் மாற்றும் யாரையும். பன்றியோடு கன்று சேரும்போது, பன்றி வைக்கோல் தின்னக் கற்பதில்லை; கன்றுதான் “அதை” தின்னக் கற்கும் என்பது ஊர்மொழி. விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்க்கத் துணிவின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சையாகப் பேசுவது கொஞ்சம்கூட ஏற்புடையதல்ல. இதை ஒருத்தன் கூட ஒத்துக்கொள்ள மாட்டான்.”என்று பாசிச பாஜகவின் குணாம்சத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
படிக்க:
♦ உழைக்கும் மகளிர் தினம்: பெண்கள் மீதான சுரண்டலுக்கு முடிவுக் கட்டுவோம்!
♦ பெண்கள் ஆராய்ச்சி கல்வியை நோக்கி வருவதை தடுக்கும் மோடி அரசு!
இந்த ஆபாச பேச்சின் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் நாதன் கரூர் தொகுதியின் எம்பி ஆன ஜோதிமணி குறித்து ஆபாசமாக பேசியுள்ளார் அதனை கண்டித்து ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் “என்னைப் பற்றிப் பேசிய இந்த ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, வீடியோவை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான் இங்கு வெளியிடுகிறேன். அப்பொழுதுதான் சமூகம் இப்படிப்பட்ட அழுகிப்போன மனநிலை உள்ள ஆண்களுக்கு எதிராக காட்டமான எதிர்வினையாற்ற முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
நீண்ட நெடுங்காலமாக ஆணாதிக்க வக்கிரத்தின் கீழ் சமத்துவ உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்கள் சமீபத்தில் அரை நூற்றாண்டு காலமாக தான் அரசியலில் பங்கெடுக்க துவங்கியுள்ளனர். இவர்கள் தங்கள் விருப்பப்படி பல்வேறு கட்சிகளில் சேர்ந்து செயல்படுவதற்கு எந்த தடையும் இல்லை என்று பொதுவாக கூறப்படுகிறது என்றாலும் பாசிச பாஜகவின் பார்வையில் அரசியலுக்கு வருகின்ற பெண்கள் அனைவரும் கேடானவர்கள் என்ற கருத்தை அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பார்ப்பன மதத் தலைவரான சங்கராச்சாரி முதல் ஆர்எஸ்எஸ் பாஜகவை இயக்குகின்ற குருமூர்த்தி பார்ப்பான் வரை பெண்களின் மீது ஆணாதிக்க வக்கிரம் மற்றும் ஆபாச வக்கிர கண்ணோட்டத்தில் பேசுவது ஆகியவற்றை உள்ளடக்கியது தான் அவர்கள் முன்வைக்கின்ற சனாதனம் என்கின்ற கொடூரமான சித்தாந்தமாகும்.
எனவே, தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டு விட்டார்கள் என்று இதனை கடந்து போக முடியாது.
வடமாநிலங்களில் பெண்களை இழிவு படுத்தி பாலியல் வன்கொடுமை நடத்துகின்ற இந்த பயங்கரவாதிகள் தான் தமிழகத்தில் தற்போது காலூன்றுவதற்கு பெண்களின் மீது பல்வேறு அவதூறுகளையும் ஆபாச வக்கிற பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்து விட்டு உள்ளனர் என்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு உள்ள அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும். உண்மையான பெண்கள் சுதந்திரம் என்பது பெண்களின் விடுதலையில் தான் அடங்கியுள்ளது. ‘பெண் விடுதலையே மண் விடுதலை’ என்றும் முழங்குவோம். பெண்களுக்கு எதிராக ஆபாச வக்கிரத்தை கக்குகின்ற பாசிச பாஜக குண்டர் படையினரை வீதியில் வீழ்த்துவதற்கு தயாராவோம்.
- மாசாணம்
புதிய ஜனநாயகம் தினசரி







பெண்களை இழிவுபடுத்தும் பாசிச பாஜகவின் குண்டர் படை!
புதிய ஜனநாயகம் தினசரி கட்டுரை
மோடி (ஜெப்ரி எப்ஸ்டீன்) சிறுமிகளை கடத்தி நாட்டின் பிரதமர் முதல் தொழிலதிபர்கள் வரை பாலியல் ரீதியாக ஈடுபட்டுள்ளது அம்பலப்படுத்தும் கட்டுரையாகும் இந்தக் கட்டுரை இன்னும் விரிவான தகவலை சேகரித்து தனியாக ஒரு கட்டுரையாக எழுதலாம் என கருதுகிறேன்.
மேலும் தமிழகத்தில் பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் திரிஷா குறித்து அவதராக பேசிய வார்த்தைகளும் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் எம் பி ஜோதிமணி குறித்து அவதராக பேசியதும் சங்கராச்சாரியார் குருமூர்த்தி போன்ற பார்ப்பன வாசிஸ்டுகள் பெண்களை வர்ணாசிரம ரீதியில் இழிவு படுத்துகிறார்கள் அரசியலில் பெண்கள் தற்போது காலூன்றி தன்னம்பிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அரசியலில் ஈடுபடும் பெண்களை இழிவாகவும் கேவலமாகவும் பேசுவதை ஒருபோதும் தமிழக மக்கள் அனுமதிக்க கூடாது என்ற கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது .
கட்டுரை ஆசிரியர்
தோழர் மாசாணம்
அவர்களுக்கு நன்றி