அன்பார்ந்த இளைஞர்கள் மாணவர்களே

வருகிற செப்டம்பர் 28 – ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் 119 ஆவது பிறந்தநாள். தனது 23வது வயதிலேயே தாய் நாட்டுக்காக தூக்குமேடையை முத்தமிட்டு அந்த இளைஞன் தான் நமக்கு வழிகாட்டி. இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தங்கள் வாழ்வை தியாகம் செய்த எண்ணற்ற இளைஞர்களின் முன்னோடியாக தனது அரசியல் சித்தாந்த தெளிவின் மூலமாக  முன்நின்றவன் பகத் சிங். அன்றைய விடுதலைப் போராட்ட வீரர்கள் காங்கிரஸ் தலைமையில் “டோமினியன்” அந்தஸ்து கேட்டபோது, பகத் சிங் “இல்லை, அது போதாது. இந்தியா ஒரு விடுதலை பெற்ற, சோசலிச நாடாக மாற வேண்டும். இந்தியாவில் உள்ள சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் என்று கொள்கை தெளிவுடன் முழங்கினான். அதனால்தான் அவரின் கொள்கைப்பற்றை வெகுவாக பாராட்டினார் தந்தை பெரியார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த இந்தியா சுதந்திரமான நாடாக அறிவிக்கப்பட்டு 78 ஆண்டுகளும், குடியரசாக பிரகடனப்படுத்திக் கொண்டு  75 ஆண்டுகளாகும் ஆகிறது. பகத்சிங் கனவு கண்ட சமூக ஏற்றத்தாழ்வுகள் அற்ற இந்தியாவை அடைந்து விட்டோமா என்றால் இல்லை என்பதே எதார்த்தம். குறைந்தபட்சம் பகத்சிங் கனவு கண்ட திசையிலாவது நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.  நாட்டில் எட்டு வழி நெடுஞ்சாலைகள் குறுக்கும் நெடுக்கும் போகின்றன; புதிய ரயில்கள் ஓடுகின்றன; புதிய விமானங்கள் பறக்கின்றன செல்போன்கள், மடிக்கணினிகள் என மின்னணு பொருட்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும் நம்மவர்கள் நாடு முன்னேறி விட்டதாக நம்பிக்கை கொள்கின்றனர்.  இவையெல்லாம் வந்துள்ளது உண்மைதான். ஆனால் சாதிய வன்முறைகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சாதாரண அடித்தட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளும் தீர்ந்து விட்டனவா என்றால் நிச்சயம் இல்லை. மோடி அரசோ இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 5% தான் என்கிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 80 கோடி பேருக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டியதாக இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது என்பது மோடி அரசு சொல்வது அப்பட்டமான பொய் என்பதற்கு சான்று.

மாணவர்களே! இளைஞர்களே! பகத்சிங் பாதை அழைக்கிறது! நாடு நமது பேரழுச்சிக்குக் காத்திருக்கிறது!

2002 _2003 ஆம் ஆண்டின் போது இந்தியாவின் மேல் நிலையில் இருந்த ஒரு சதவீதம் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாட்டின் சொத்து மதிப்பில் 15.7 சதவீதமாக இருந்தது.  அது 2022 23 ஆம் ஆண்டில் இந்தியாவில் மேல் நிலையில் உள்ள உறுப்பினர்கள் சொத்து மதிப்பு 40 புள்ளி ஒரு சதவீதமாக பிரம்மிக்கத்தக்க அளவுக்கு உயர்ந்து விட்டது. அதே சமயம் இந்தியாவின் அடித்தட்டில் உள்ள 50% மக்களிடம் 6.4% அளவு சொத்துக்கள் மட்டுமே உள்ளன. கனிம வள கொள்ளை, பொருளாதரத்தை சுரண்டுவது, வங்கிகளை ஏமாற்றி கடன் வாங்குவது போன்றவற்றின் மூலம் ஒரு சதவீதத்தினர் நாட்டையே ஏய்த்து வருகின்றனர்.

மக்கள் வறுமையை போக்க கல்வி வேண்டும். அதற்குரிய வேலை வேண்டும். அது இரண்டுக்குமே வேட்டு வைத்து வருகிறது ஒன்றிய மோடி அரசு.  புதிய கல்விக் கொள்கை 2020 மூலம் கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் மோடி அரசு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வந்த உதவித்தொகைகளையும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு வழங்கி வந்த நிதியையும் வெட்டி வருகிறது. மாநில அரசுகள் சீர்திருத்தங்கள் மூலம் கல்வியை மேம்படுத்தம் என்றாலும் தனது அதிகாரத்தை கொண்டு தடுத்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டுக்கு மாணவர்களின் கல்விக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 2152 கோடியை தர மறுத்து திமிர்த்தனம் காட்டி வருகிறது. நீட் தேர்வை திணித்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்துள்ளது. ஒன்றிய அரசின் ஏஜென்ட் ஆன ஆளுநர் ரவி மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் நியமனத்தில் சிக்கல் ஏற்படுத்தி பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை முடக்கி வருகிறார். தமிழ்நாடு அரசும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு உரிய நிதியை ஒதுக்குவதில்லை.

இத்தனையும் மீறி கல்வி பயின்று வேலைக்கு செல்லலாம் என்று தேடினால் அரசு வேலைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. ஒன்றிய அரசில் மட்டும் ஏறத்தாழ 9 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மாநில அரசுகளும் இலட்சக்கணக்கில் பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளன. இது மட்டுமன்றி ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று சவடால் விட்டது மோடி அரசு. மாறாக, ஏற்கனவே சிறுகுறு நிறுவனங்களில் இருந்த வேலைகளை பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவற்றின் மூலம் இல்லாமல் செய்தது இதிலே லட்சக்கணக்கான வேலை பறிபோனது. தற்போது மோடியின் நண்பர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்கள் மீது விதித்த கூடுதல் வரிவிதிப்பு காரணமாக மீண்டும் சிறு குறு நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் திருப்பூர் பகுதியில் ஆடை உற்பத்தியும் வேலூர் சுற்றுப்பகுதியில் தோள் உற்பத்தியும் மரக்காணம் புதுச்சேரி சுற்று பகுதியில் இறால் உற்பத்தியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனால் லட்சக்கணக்கான பேர் வேலை இழுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், நன்கு பிடித்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களோ ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக வேலையை விட்டு அனுப்பப்படுகின்றனர். இந்த நிலைமையால் பியூன் வேலைக்கு ஆள் எடுத்தால் கூட ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர்.

படிக்க: பகத்சிங்குக்கு மரணம் இல்லை!

இத்தகைய வாழ்வாதார பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க சமூகத்தில் சாதிய வன்முறைகளும், ஆணவப் படுகொலைகளும் அதிகரித்து வருகிறது. ஆதிக்க சாதி சங்கங்களும், ஆர்எஸ்எஸ் சங்க பரிவாரம் இணைந்து சாதி மத ரீதியான பிளவுகளை கொடுமைப்படுத்துகிறது இதுவே நம் நாட்டின் தற்போதைய நிலையாக உள்ளது.

நமக்கு அருகாமையில் உள்ள இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளிலும் இத்தகைய பிரச்சனைகளை சந்தித்து வரும் இளைஞர்களும் மாணவர்களும் பெரும் போராட்டங்களை நடத்த களத்துக்கு வந்து விட்டனர். லட்சக்கணக்கில் வீதியில் திரண்டு போராட்டங்களை நடத்தி அரசுகளையே தூக்கி எறிந்துள்ளனர். நமது நாடும் அத்தகைய ஒரு எழுச்சியை மாணவர்கள், இளைஞர்களிடமிருந்து எதிர்பார்த்து காத்து இருக்கிறது. பிற நாடுகளில் நடந்த மாணவர், இளைஞர் எழுச்சிகள் சரியான அரசியல் அமைப்பு பார்வைஇன்றி முழு தீர்வு எட்டாமல் போய் உள்ளன. நாம் அதிலிருந்து பாடம் கற்று பகத்சிங் வழியில் அரசியல் சித்தாந்த தெளிவுடன் கூடிய புரட்சிகர அமைப்பில் இணைந்து ஒரு மாபெரும் எழுச்சியை கட்டமைக்க மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.

தேசிய கல்விக் கொள்கையை தூக்கியெறிவோம்!

கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட போராடுவோம்!.

அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள ஒப்பந்த முறையை ஒழித்துக் கட்ட போராடுவோம்!

வாரா கடன் வைத்திருக்கும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்க போராடுவோம்!

  • திருமுருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here