முகநூலில் ஒரு ரிசார்ட் விளம்பரத்தை பார்த்தேன். கோவைக்கு அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைகட்டியில், 70 ஏக்க பரப்பில், அற்புதமான ஆறுகள், அருவிகள், காடுகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஒரு ரிசார்ட் உருவாவதாகவும், ப்ளாட்டை முந்திக்கொண்டு விலைக்கு வாங்கலாம் என்றும் விளம்பரம் கண்ணை கவர்ந்தது.
இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் சமீப காலமாக கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் செய்திகள், யானைகள் வீடுகளையும், விளை நிலங்களையும், ரேஷன் கடைகளையும் சேதப்படுத்தும் செய்திகள் மனக்கண்ணில் வந்து போனது.
அதிகரிக்கும் மனித விலங்கு மோதல்!
மலையோர கிராமங்களிலோ, மலை மேல் உள்ள ஊர்களிலோ தற்போது மனித விலங்கு மோதல் அதிகரித்து வருவது முக்கிய பிரச்சினையாக அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
காலம் காலமாக மலை மேல் அடர்ந்த காடுகளில், பல்வேறு வகையான விலங்குகள் மனிதனைப் போலவே பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து தான் வருகின்றன. பழங்குடியின மக்களும் இதே வனங்களில் விலங்குகளோடு பெரும்பாலும் மோதல் இல்லாமல் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தும் வருகின்றனர்.
அப்படி இருக்க சமீபத்தில் தான் அடிக்கடி சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானைகள் ஊருக்குள் வருவதை பார்க்கிறோம்.
எங்கே தவறு நடக்கிறது? இதை தெரிந்து கொள்வது மக்கள் நலனில் அக்கறை காட்டும் நமக்கு முக்கியமானது.
அழகு ஆபத்தானது தான்!
மேற்குத் தொடர்ச்சி மலையில், குறிப்பாக நீலகிரியில் டீ எஸ்டேட்டுகள் பெருகி உள்ளன. அதற்கு இணையாக ஆனைகட்டி பகுதிகளில் ரிசார்டுகளும் பெருகியுள்ளன. பசுமை போர்த்திய மலைத்தொடரை, அடர்ந்த காடுகளை, அற்புதமான சுற்றுச்சூழலை அனுபவிக்க மேட்டுக்குடியினரும் நடுத்தர வர்க்கத்தினரும் விரும்பி படையெடுக்கும் இடமாகவே ஆனைகட்டி உள்ளது.
குடும்பமாக ஒரு நாள் தங்குவதற்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் என செலவழித்து மொத்தத்தில் ஒருநாள் பொழுது போக்கிற்கு ஒரு குடும்பத்திற்கு லட்சங்களில் செலவு செய்து தமது சுற்றுலாவை அனுபவிக்கின்றனர்.
இத்தகைய தொழில் போட்டியில் தற்போது நயிரா குழுமமும் களமிறங்கியுள்ளதைத்தான் நான் முதலில் குறிப்பிட்ட முகநூல் பதிவில் பார்த்தேன். ஆனைகட்டி பகுதியில் கண்ணை கவரும் பசுமை பொருத்திய அழகுதான் தற்போது வனவிலங்குகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. குன்னூர் ஊட்டி போன்ற இடங்களையும் விடவும் அதிக அளவிலான ரிசார்ட்கள் இங்குதான் உள்ளன.
தேயிலை, ரப்பர், காபி, ஏலக்காய் என மலைத்தொடரில் பயிர் வளர்த்து பணத்தை அள்ளும் எஸ்டேட் முதலாளிகள் ஒரு புறம் என்றால், மறுபுறத்தில் ரிசார்ட்டுகளை கட்டி, நீச்சல் குளங்களை அமைத்து, ஓடும் நீரில் ரெஸ்ட்டாரண்டுகளை மிதக்க விட்டு, விதவிதமாக நுகர வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து கல்லா கட்டும் ரிசார்ட் முதலாளிகள் மறுபுறம்.
படிக்க: வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டமும் கேள்விக்குறியாகும் பழங்குடிகளின் வாழ்க்கையும்!
இந்த இரு தரப்பினரும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிகரங்களை தமது விருப்பத்திற்கு கூறு போட்டு பங்கிட்டு கொண்டு வருகின்றனர்.
இவர்களின் லாப வெறிக்கு ஈடு கொடுக்க முடியாமல் வனவிலங்குகள் அலைபாய்கின்றன. தமது வாழ்விடங்களை பறிகொடுத்து விட்டு, தமது வலசை பாதைகளை இழந்து, தடம் மாறி சுற்றித் திரிகின்றன.
சாமானியனுக்குத்தான் சட்டமும் சகலமும் !
மலையடிவார கிராம மக்கள் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு மலை மேல் ஏறினாலே வனத்துறையினரின் கெடுபிடிகள் அமர்க்களப்படுகிறது.
வனத்திற்குள் ஆடு மாடு மேய்க்கவும், காய்ந்த சுள்ளிகளை பொறுக்கி வருவதற்கு கூட தடை போடும் சட்டங்கள் அமுலில் உள்ளன.
ஆனால் இந்த சட்டங்களோ, வனத்துறையினரின் கெடுப்பிடிகளோ, உழைப்பு மக்கள் மீது மட்டும்தான் ஏவப்படுகிறது.
வெளிப்படையாக சுமார் 70 ஏக்கர் பரப்பளவை வளைத்து போட்டு, அங்குள்ள மரங்களை வெட்டிவிட்டு புல்டோசர் கொண்டு நிரப்பி விட்டு, அதனூடாக ஆறுகள் செல்லும் என்றும், அந்த ஆற்றில் மிதக்கும் உணவகங்களை அமைத்து பரவசத்தை தர உள்ளதாகவும் வலையை விரிக்கின்றனர் கார்ப்பரேட்டுகள். சுற்றுலா பயணிகளுக்கு காடு அனுபவத்தை தர செயற்கை காடுகளை உருவாக்க உள்ளதாகவும் விவரிக்கின்றனர்.
நாம் சுள்ளிப் பொறுக்கவே தடை விதிக்கும் சட்டம், இயற்கையின் மீது புல்டோசர் கொண்டு தாக்குதல் தடுக்கும் இவர்கள் மீது பாயவில்லையே ஏன்? சட்டத்தை அமுல்படுத்தும் அதிகார வர்க்கம் மக்களுக்கானதாக இல்லையே.
பறி கொடுப்பதும் பலியாவதும் உழைக்கும் மக்களே!
கார்ப்பரேட்டுகளின் ஆக்கிரமிப்பால் வனவிலங்குகள் ஊருக்குள் இறங்குவதும், எதிர்ப்படும் மக்களை தாக்குவதும் தொடர்கதை ஆகிறது. இதற்கு யார் பொறுப்பேற்பது? யாரை தண்டிப்பது?
நம்மைக் கேட்டால் கார்ப்பரேட்டுகளையும், கார்ப்பரேட்டுகளின் சட்டபூர்வ ஆக்கிரமிப்பிற்கு துணை நிற்கும் வனத்துறையினரையும், அரசு உயர் அதிகாரிகளையும்தான் குற்றவாளிகளாக மக்கள் மன்றத்தில் நிறுத்தி தண்டிக்க விரும்புகிறோம்.
இயற்கையை, சுற்றுச்சூழலை, வன உயிர்களை நேசிக்கும், பாதுகாக்க விரும்பும் ஒவ்வொருவரும் மலை மீது தொடுக்கப்படும் தாக்குதலையும், நடத்தப்படும் ஆக்ரமிப்பையும், விரட்டப்படும் காட்டுவாழ் உயிரினங்களின் அவல குரல்களையும் காது கொடுத்து கேட்டு களம் இறங்க வேண்டும்.
மக்கள் களத்தில் இறங்காமல், கார்ப்பரேட்டுகளின் அடாவடித்தனத்திற்கு முடிவு கட்ட முடியாது. ஊருக்குள் வரும் விலங்குகளிடமிருந்து ஓடி ஒளியவும் முடியாது.
இளமாறன்








கட்டுரையை படிக்கும்போதே கோபம் கொப்பளிக்கிறது.