மு இக்பால் அகமது

2016 வர்தா பெரும்புயலில் அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு மக்கள் திண்டாடியபோது ஒரே ஒரு செல்பேசி நிறுவனத்தின் சமிக்ஞைகள் மட்டும் ஓரளவு வேலை செய்தன. அது பிஎஸ்என் எல்.

2004 சுனாமி பேரழிவுக்குப் பின் தகவல்தொடர்புத்தளத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை நோக்கில் ஒரு கொள்கையை பிஎஸ்என்எல் வரைந்தது. இமயம் முதல் குமரி வரையிலும் இந்தியாவின் தென்முனை ஆன நிக்கோபார் தீவு வரையிலும், அருணாச்சலப்பிரதேசம் முதல் குஜராத் வரையிலும், மேற்கு எல்லை ஆன லட்சத்தீவுகளிலும் அடிப்படை தொலைத்தொடர்பு கட்டமைப்பையும் கோபுரங்களையும் நிறுவியது பி எஸ் என்எல்தான். ஏனெனில் அது மக்கள் பணத்தில் உருவான, வளர்ந்த அரசின் பொதுத்துறை நிறுவனம். மிகத் தொலைவில், எல்லைப் புறங்களில், காடுகளில், மலை உச்சிகளில், இமயமலையில் மக்கள் தொகை மிகக் குறைந்த பகுதிகளிலும் தொடர்புக் கோபுரங்களை மக்கள் பணத்தில் நிறுவியது பிஎஸ்என்எல்தான். மேலும் நாட்டின் பாதுகாப்பு என்ற நோக்கில் தனியார் நிறுவனங்களையும் அவற்றின் தகவல்தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துவது அறிவார்ந்த செயலும் அல்ல.

கவனிக்க வேண்டியது என்னவெனில் TRAI ஒப்பந்தத்தின் கீழ், கம்பெனி வேறுபாடின்றி செல்போன் வாடிக்கையாளருக்கான தொலைபேசித் தொடர்பை தடையின்றித்தர அனைத்து கம்பெனிகளும் உடன்படவேண்டும். அதாவது லட்சத்தீவில் உள்ள ஒரு ஜியோ வாடிக்கையாளர், அவர் பகுதியில் ஜியோ கோபுரம் இல்லை என்றாலும் பிஎஸ்என்எல் கட்டமைப்பின் கோபுரம் வழியே தடையற்ற சேவையைப் பெறுவார். அந்தவகையில் நான் மேலே சொன்ன நிக்கோபார், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், லே, லடாக் பகுதிகளில் மக்கள் நலன்கருதி மக்கள் பணத்தில் நிறுவப்பட்ட பி எஸ் என் எல்கட்டமைப்பும் கோபுரங்களும்தான் அதிகம், சரியாகச் சொன்னால் லாப நோக்கம் மட்டுமே உள்ள தனியார் நிறுவனங்கள் இப்பகுதிகளில் கட்டமைப்போ கோபுரங்களோ அமைப்பதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு தம் வருமானத்தைப் பெருக்கிக்கொள்கின்றார்கள்.

வர்தா பெரும்புயலில் எனது தொலைபேசித் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் புயலுக்குப் பின் இரண்டு பிஎஸ்என்எல் இணைப்புக்கள் வாங்கினேன். அது 3ஜி. எனது அலுவலகத்தின் உள்ளே பி எஸ் என் எல் சமிக்ஞை மட்டுமே கிடைக்கின்றது. மற்றொரு தனியார் நிறுவன சிம்மில் சமிக்ஞை பூஜ்யமே.

அரசு நிறுவனங்களின் முதன்மைக் குறிக்கோள் சேவையே. வருமானமும் லாபமும் இரண்டாம் பட்சமே. பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களின் வரவு செலவுத்திட்டங்களால் செயல்படுத்தப்படுவதே அரசமைப்பு நிர்வாகம். ஒன்றில் நட்டம் எனில் மற்றொன்றில் லாபம் வரும். சரியாகச் சொல்வதெனில் அரசின் சேவைத் துறைகளில் நட்டம் என்ற சொல் நடைமுறைக்கு ஒவ்வாது. சேவை சேவைதான். சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் இடப்படும் முதலீடு, முற்றிலும் நாட்டு மக்களின் நலன், ஆரோக்கியமான வளமான அறிவார்ந்த எதிர்காலத்திற்கான அஸ்திவாரமே, இதில் செலவு, லாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பிஎஸ் என் எல்லும் அவ்வாறே.

தகவல்தொடர்பு என்பது மென்பொருள் நிறுவனங்களின் தொழில்சார் நடவடிக்கை மட்டுமே என்ற நிலை இல்லை. பள்ளிக் கல்வி தொடங்கி மக்களின் அனைத்து அன்றாட நடவடிக்கைகளும் இணையம் இன்றி இயங்க முடியாது என்ற நிலைதான் யதார்த்தம்.

இத்தகைய பின்னணியில் தகவல் தொடர்புத்துறையில் நாளொரு புதியவளர்ச்சியும் புதிய கருவிகளும் மென்பொருட்களும் அலையென அறிமுகம் ஆகும் சூழலில் 3ஜியைத் தாண்டி 4ஜிக்கு கூட பிஎஸ் என்எல்லுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால் 4ஜியை தாண்டி தனது நண்பரான அம்பானியின் ஜியோவுக்கு 5 ஜி அனுமதி வழங்குகிறார் வாய் வீச்சு வீரர் மோடி. பிஎஸ்என் எல்லின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப்பதில் பிஎஸ் என் எல்லை அழித்து அம்பானியின் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை நோக்கி மக்களைத் தள்ளுகின்றார். ஜியோ அறிமுகம் ஆன புதிதில் இலவசமோ இலவசம் என்று தெருவில் நின்று அம்பானி கூவிய போது அதனை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தவில்லை. மக்கள் ஜியோவை நோக்கி ஓடினார்கள். இப்போது எங்கே போனது ஜியோவின் இலவசம்? கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் வலைக்குள் சிக்க வைத்த பின் இலவசம் என்னும் குச்சிமிட்டாயை தூக்கி எறிந்தது ஜியோ.

இப்போது திடீரென பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி அனுமதியும் விரைவில் 5ஜி அனுமதியும் வழங்குவது என்பது பிஎஸ்என்எல் நலன்காக்க அல்ல. 4 ஜி, 5 ஜி ஆக தரம் உயர்த்தப்பட உள்ள பிஎஸ்என்எல்லின் அடிப்படைக் கட்டமைப்பையும் கோபுரங்களையும் 5ஜி சிக்னல் அனுமதிக்கப்பட்டுள்ள ஜியோ பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதே இதன் உள்நோக்கம். வேறு எதுவும் இல்லை. பிஎஸ்என்எல்லின் நலனோ வாடிக்கையாளர் நலனோ ஒரு துளியும் இல்லை. முழுக்கவும் பிரதமரின் உயிர் நண்பர்அம்பானியின் பாக்கெட்டை நிரப்புவது மட்டுமே குறிக்கோள்.

அதற்கான பணத்தையும் முதலீட்டையும் மக்கள் பணத்தில் உருவான பொதுச் சொத்தான பிஎஸ்என்எல்லில் இருந்து கொடுப்பதே மோடி அரசின் மோசடித்தனமான கொடுஞ்செயல்.

  • மு இக்பால் அகமது

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here