“என் மண், என் மக்கள்” என்ற பெயரில் பாசிச கோமாளியான திருவாளர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியை பரப்புவதற்கு நடையாய் நடந்து கொண்டுள்ளார்.

அவ்வாறு போகும் வழியில் பிரபலத்தை தேடுவதற்காக அந்த ஊரில் உள்ள சிறப்பம்சங்கள், பிரச்சனைகள் ஆகியவற்றை பற்றி பேசி தானும், தான் சார்ந்து இருக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவும் அரசியல் செய்து கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்.

அந்த வகையில் நூறாவது தொகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு சென்றபோது அங்கிருக்கும் பெரியார் சிலை பற்றி கீழ்க்கண்டவாறு பிதற்றி உள்ளார்.

”ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியே அவர்கள் (திமுக) ஆட்சிக்கு வந்த பிறகு 1967ல் ஒரு பலகையை வைத்திருக்கின்றார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள், ஏமாளி. அதனால் கடவுளை யாரும் நம்பாதீர்கள் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரு கம்பத்தை வைத்து கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

இந்துக்கள் நாம் அமைதியான வழியிலே அறவழியில் வாழ்க்கை வாழ்பவர்கள். அதனால் இன்றைக்கு இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் இருந்து பாரதிய ஜனதா கட்சி உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது முதல் வேலையாக அந்த கம்பத்தை அப்புறப்படுத்தி ஆழ்வார்கள், நாயன்மார்கள் சிலைகள் அங்கே வைக்கப்படும். தமிழ்ப் புலவர்களின் சிலைகள் வைக்கப்படும். தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் சிலை அங்கே வைக்கப்படும்” என்பதுதான் அந்த பிதற்றல்..

“அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா” என்று ஒரு பழமொழி தமிழகத்தில் நிலவுவது உண்டு. அதுபோல தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, பெரியார் சிலையை அகற்றுவது என்று முடிவெடுத்து இருந்தால் அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை.

அது தமிழகத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் பெரியாருக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்புவதன் மூலம் தமிழகத்தில் நிலவும் பார்ப்பன எதிர்ப்பு மரபை உடைத்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். கலவரங்களின் மூலம் கட்சியைக் கட்டுவதிலும், பாரம்பரியமிக்க நினைவுச் சின்னங்களை தகர்த்தெறிவதிலும் ஆர்எஸ்எஸ் பாஜகவினர் பயங்கரவாத வழிமுறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை.

தந்தை பெரியார் என்றவுடன், “கடவுள் இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள்” என்று என் கடவுளர்களைப் பற்றி விமர்சித்தது மட்டுமே முன் நிறுத்துகிறது ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி. கடவுளின் பெயரால் சாதி, தீண்டாமை கொடுமைகளும், ஏற்றத்தாழ்வுகளும், ஆணாதிக்க வக்கிரங்களும், பெண்ணடிமைத்தனமும், மூடநம்பிக்கைகளும் பரப்பப்படுவதை கண்டித்து, இதற்கு அடிப்படையாக உள்ள கடவுளைப் பற்றி பெரியார் மறுத்து பேசினார். இது ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு பெரியாரை தனிமைப்படுத்த முயற்சிப்பது அயோக்கியத்தனம் என்பது மட்டுமின்றி ஆர்எஸ்எஸ்-ன் பகல் கனவு ஆகும்.

நாடு முழுவதும் பார்ப்பன இந்து மதத்தை எதிர்த்து போராடிய சமய, சமூக சீர்திருத்தவாதிகள் ஏதேனும் ஒரு வகையில் இந்து மதத்திற்கு உள்ளேயே ஒரு தீர்வை முன் வைத்தார்கள். விதிவிலக்காக பெரியார் போன்றவர்கள் மதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று கூறியதைப் போலவே, அவர் சார்ந்து இருந்த பார்ப்பன (இந்து) மதத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் சமரசமின்றி போராடினார்.

“இந்துக்களே ஒன்றுபடுங்கள்” என்று ஆர்எஸ்எஸ் கூச்சலிடும்போது சாதியற்ற இந்துக்கள் என்பதை முன் வைப்பதில்லை. மாறாக பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, அடிமைத்தனமாக கட்டுப்பட்டு போகின்ற, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளை சுமந்து நிற்கின்ற இந்துக்களை தான் ஒன்றுபடுங்கள் என்று கூறுகிறார்கள்.

இந்த பெரும்பான்மை இந்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பழங்குடி மக்கள், பல்லிகள் என்றும், பள்ளர்கள், பறையர்கள் என்றும் சக்கிலிகள் என்றும் இழிவுபடுத்தப்படுகின்றனர். இதனை மதக் கோட்பாடாகவும், மத நியதியாகவும் இந்து மதத்தின் புனித நூல் என்று கருதப்படும் பகவத் கீதை முதல் சாதி தீண்டாமையை நியாயப்படுத்தும் மனுதர்மம் வரை அனைத்தும் முன் வைக்கிறது.

இத்தனை இழிவுகளையும் சுமந்து கொண்டு இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் எந்த பெருமையும் இல்லை என்பதால் தான் இந்துக்களின் கடவுளர்களான விஷ்ணு, சிவன் ஆகிய இருவரின் அவதாரங்கள் என்று கருதப்படும் “ஶ்ரீ ரங்கநாதனையும் தில்லை நடராசனையும், பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?’ என்று நாகை அம்மையப்பன் என்ற கவிஞர் முன்வைத்தார்.

இதையும் படியுங்கள்: பெரியார் சிலை! தம்பிகளும் சங்கிகளும் கதறுவது ஏன்?

பல நூற்றாண்டுகளாக, சாதி தீண்டாமை கொடுமைகள் இந்த மண்ணில், கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது இதனால் அவற்றின் அடையாளமாக கருதப்படும், “ஸ்ரீ ரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள்” என்பது கருத்தியல் ரீதியிலாக அதனை தூக்கி எறிவதை குறிக்கிறது.

ஆனால் பெரியாரின் சிலை அப்படி அல்ல. பல நூற்றாண்டுகளாக சாதி, தீண்டாமை கொடுமையை சுமந்து கொண்டு இழிவுபடுத்தப்படும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தலை நிமிரச் செய்வதற்கு போராடிய மாமனிதனின் அடையாளம் என்பதால் அந்த சிலைகளை அகற்றுவோம் என்று துணிச்சலாக பேசுவது திமிர்த்தனமாகும். கேள்விக்கிடமற்ற பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட இந்து சாம்ராஜ்யத்தை நிறுவுவது தான் என்பதே அவர்களின் அறைகூவல்.

அவர்கள் ஒவ்வொரு முறையும் வெளிப்படையாகவே அறிவிக்கின்றார்கள். ஆனால் இந்து மத கொடுங்கோன்மையின் கீழ் அவதியுறும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இதைப் புரிந்து கொண்டு நிராகரிப்பதில் தான் உண்மையான சுயமரியாதையும் பகுத்தறிவும் உள்ளது.

“ஸ்ரீ ரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ” என முழங்குவோம்!

  • பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here