வியட்நாம் படுகொலைகளும்: இன்னும் திருந்தாத வல்லரசும்!
ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை செய்த டயர் ஓய்வுக்குப் பின் லண்டனில் வாழ்ந்து மறைந்தார். அதே போல் இக்கொடூரங்களை செய்த வில்லியம் கேலியும் ஓய்வுக்குப் பின் நீண்ட நாட்கள் அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்தார்.

வியட்நாம் நாட்டிற்கு குடும்பத்தோடு பயணம் மேற்கொண்டோம். வழக்கமாக வியட்நாம் செல்லக்கூடியவர்களுக்கு அந்நாட்டை சுற்றிப்பார்க்க, அங்குள்ள சுற்றுலா நிறுவனங்கள் 10க்கும் மேற்பட்ட நகரங்களை பட்டியலிடுவார்கள் . அந்த நிறுவனங்களின் உதவி இல்லாமல் ஒரு பயணியைப் போல எப்போதும் பயணிக்கும் நாங்கள் சில குறிப்பிட்ட இடங்களை பார்க்க முடிவு செய்திருந்தே புறப்பட்டோம். அதில் ஒன்று தான் மைலாய் படுகொலைகள் என்று உலக மக்களால் அறியப்பட்ட சன் மய் எனும் ஒரு சிறிய கிராமம் ஆகும்.

மத்திய வியட்நாமில் குவாங் நை மாகாண நகரத்தின் வடக்கு விளிம்பிலிருந்து, தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், டிரா குக் ஆற்றின் இடது கரையில் கிழக்கே சா கோ கழிமுகத்திற்குச் செல்லும் ஒரு சாலை உள்ளது. குவாங் நை மாகாண நகரத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ள சிறிய கிராமம் தான் சன் மய். இந்நகரம் மத்திய வியட்நாமில் உள்ள டநாங்கிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் நாங்கள் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ச்சூலாய் எனும் இடத்திற்கு உள்ளூர் விமானம் மூலம் வந்திறங்கினோம். அங்கிருந்து வாடகை கார் மூலம் மை லாய் கிராமத்தை வந்தடைந்தோம். எந்த சுற்றுலா வாசிக்கும் இந்த இடம் தெரியாது. ஏன் எங்களை அழைத்துச் சென்ற ஓட்டுனர் ‘பாய்’ கூட முதல் முறையாக எங்களோடு தான் அவ்விடத்திற்கு வருவதாக சொன்னார். ஆனால் அங்கு சென்ற பின் ‘பாய்’ உணர்ச்சிவசப்பட்டார். உங்கள் மனதிலும் ஒரு மாற்றத்தை இந்தப்பயணம் கொடுக்கும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1945ல் செம்படைத் தோழர்கள் வியட்நாமின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ஹோசிமின் தலைமையிலானா கம்யூனிச வியட்நாம் நாடு என்றால், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் சும்மா இருக்குமா. வியட்நாமை வடக்கு தெற்கு என்று சூழ்ச்சி செய்து பிரித்தார்கள். தெற்கில் ஏகாதிபத்திய ஆதரவு பொம்மை அரசும், வடக்கில் சோசலிச அரசும் உருவானது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக இருந்த வியட்நாம் மக்கள், ஒன்றுபட்ட வியட்நாமிற்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தார்கள். அதைத் தடுக்க 1955 முதல் அமெரிக்கா தனது நேரடி இராணுவத்தை வியட்நாமிற்குள் அனுப்பியதோடு, ஒன்றுபட்ட வியட்நாமிற்காக போராடிய மக்கள் மீது போர் தொடுத்தது. 1975 வரை இருபது ஆண்டுகள் நடைபெற்ற அப்போரில் கடைசி வரை அமெரிக்காவால் வியட்நாம் மக்களை வெற்றி கொள்ளவே முடியவில்லை. இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டு வியட்நாம் நாட்டை விட்டு வெளியேறியது அமெரிக்கா.

இரண்டு உலகப்போர்களில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த வெடிகுண்டுகளை விட, வியட்நாமில் அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் அதிகம். அப்படி அவர்கள் செய்த கொடூரங்களில் ஒன்று தான் மைலாய் எனும் கிராமத்தில் நான்கு மணி நேர இடைவெளியில் அவர்களின் இராணுவம் செய்திட்ட நூற்றுக்கணக்கான படுகொலைகள் ஆகும்.

1968 மார்ச் 16ஆம் நாள் விவசாய விளைநிலங்கள் சூழ்ந்திருக்கும் மைலாய், சான் மை, போலுலி, ஃபூக்கே என்று அருகருகான கிராமங்கள் வழக்கம் போல விடியலை சந்தித்தன. அம்மக்களும் விவசாயப் பணிகளை செய்யப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் காலை 6.00 மணிக்கு வானில் சூரியனோடு, அமெரிக்க இராணுவ ஹெலிக்காப்டர்களும் வந்து இரங்கின. 13ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க இராணுவத்தை பார்த்துப் பழகிய வியட்நாம் மக்கள், அதைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போல தங்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிருந்தார்கள். அந்த ஊரைச் சேர்ந்த இளம் மற்றும் நடுத்தர வயது ஆண்கள் போராளிகளின் படையான “வியட்காங்”ல் செயலாற்றுவதால், பெரும்பாலான ஆண்கள் அவ்வூரில் அந்நேரத்தில் இல்லை. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆகவே இராணுவம் இம்மக்களை ஒன்றும் செய்யாது என்று நினைத்துக் கொண்டு இயல்பாக பணிகளை செய்து கொண்டிருந்தார்கள்.

நேரம் செல்லச்செல்ல அங்குள்ள விபரீதம் அம்மக்களுக்கு புரிந்தது. 13ஆண்டுகளாக தொடர்ந்து போரிட்டும் வியட்நாம் எனும் சின்ன நாட்டை வெற்றிகொள்ள முடியவில்லையே என்கிற விரக்தியிலும், பல நாட்களாக சொந்த நாட்டிற்கே செல்லாமலும், தங்கள் குடும்பங்களை பார்க்க முடியாமலும் போர் முனையிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறோம் என்கிற உளவியல் அழுத்தமும், அங்கிருந்த சூழலை மாற்றியது.

படிக்க:

 வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை
 செப்டம்பர் 2: வியட்நாம் விடுதலை தினம் மற்றும் தோழர் ஹோ சி மின் நினைவு தினம்.

அமெரிக்க இராணுவத்தினர் அந்த கிராமத்தில் “வியட்காங்” குழு இல்லை என்கிற உண்மை தெரிந்தவுடன் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் புறப்படவில்லை. பொதுமக்களை நோக்கி தாங்கள் தாக்குதல்களை தொடங்கினர். தாங்கள் வைத்திருந்த இயந்தரத் துப்பாக்கிகளால் நிராயுதபாணிகளாக நின்ற பொதுமக்களை நோக்கி சரமாரியாகச் சுடத் தொடங்கினர். சுட்ட இடத்திலேயே பலர் மாண்டு போனார்கள்.

பலரின் மரணத்தை கண்ணெதிரே கண்ட பெண்களும், குழந்தைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்த ஒரு குடிசை வீட்டில் போய் பதுங்கிக் கொண்டார்கள். தப்பித்துப் பதுங்கிய அம்மக்களை அமெரிக்க இராணுவம் அந்தக் குடிசை வீட்டிற்குள்ளே தீ வைத்து கொளுத்தியது. தன் குழந்தை பிழைக்கட்டும் என்று ஒரு தாய் குழந்தையை குடிசையிலிருந்து வெளியே வீசுகிறார். அந்தக்குழந்தையை அமெரிக்க இராணுவம் மீண்டும் தீயுக்குள் தூக்கி வீசியது. அருகில் இருந்த கால்வாயில் மட்டும் சுமார் 170பேர் பிணங்களாக கிடந்தனர். அந்தப் பிணக்குவியலுக்கு அடியில், தப்பித்த சிலர் பதுங்கி உயிரை பிடித்துக் கொண்டனர். அம்மக்களின் குடிதண்ணீர் தேவைக்கான கிணற்றில் சிலரை கொன்று வீசியிருக்கிறார்கள். அவர்கள் சுட்ட தோட்டாக்கள் கூட மனிதர்களைத் தாண்டி அருகில் உள்ள மரங்களில் சொருகி, இன்றைக்கும் அந்நிகழ்வின் சாட்சியாக இருக்கின்றது. அங்குமிங்கும் ஓடிய அம்மக்களின் கால் அச்சுகளும், அமெரிக்க இராணுவத்தின் பூட்ஸ் கால்களும் அந்த கிராமங்கள் முழுக்க விரவிக் கிடக்கிறது. வெறும் கொலைகள் போதாது என்று எண்ணிய அமெரிக்க இராணுவம் அங்குள்ள பெண்களை வல்லுறவு செய்து கொலை செய்தார்கள்.

காலை 6 மணிக்குத் தொடங்கி 10 மணிக்குள்ளாக அத்தனையும் நடந்து முடிகிறது. காலை 6 மணிக்கு வீசிய தென்றல் வாசம், 10மணிக்குள் பிணங்களின் துர்நாற்றமாக ஆகிவிட்டது. பிணக்குவியல்களுக்கு அடியில் மறைந்திருந்தும், ஹூயுக் தாம்சன் என்ற ஒரு மனிதாபிமானம் மிக்க இராணுவ அதிகாரி ஒருவர் முயற்சியாலும் சிலர் மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறார்கள். இறுதியாக அங்கு கொல்லப்பட்டு பிணக்குவியலாய் கிடந்த எளிய மக்கள் மட்டும் எவ்வளவு பேர் தெரியுமா? 504 பேர்கள். அதில் குழந்தைகள் 173, பெண்கள் 182 வயதானவர்கள் 60, நடுத்தர வயது ஆண்கள் 89.

அந்த நான்கு மணி நேரத்தில் என்ன நடந்ததோ, அவைகள் அனைத்தையுமே சுமார் 20 ஏக்கர் நிலத்தில் உயிர்ப்போடு காட்சிப்படுத்தியிருக்கிறது வியட்நாம் அரசு. எரிக்கப்பட்ட வீடுகள், கிணறு, கால்வாய், ஏன் மனிதர்களின் கால்தடங்கள் கூட அப்படியே ஆங்காங்கே இருக்குறது. அந்த அளவிற்கு நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் அந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்திலேயே ஒரு அங்காட்சியகம் இருக்கிறது. 504 பேரின் பெயரும் அவர்களின் வயதும் பொறிக்கப்பட்ட பெரும் கல்வெட்டு ஒன்றும் உள்ளே உள்ளது. அதில் 1 வயது முதல் 7 வயது வரை எத்தனையோ குழந்தைகளின் பெயர்கள் இருக்கின்றன. கொல்லப்பட்ட 504 பேரின் ஆன்மாவிற்கும் அஞ்சலி செலுத்துவதற்கு அம்மக்கள் ஒரு கோவிலை அவ்வளாகத்திற்குள் கட்டியிருக்கிறார்கள். அங்கு வரும் உள்ளூர் பொதுமக்கள், குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட், பிஸ்கெட், உடைகள், நோட்டு பேணாக்கள் என்று படையல் வடிவில் மலை போல பொருட்களை குவித்து வைத்துள்ளார்கள்.

இக்கொடூரத்தின் நினைவாக பெரும் நினைவுச் சின்னம் ஒன்று கருங்கல்லால் எழுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு இளம் பெண் இறந்த முதியவர் ஒருவரை மடியில் கிடத்தியபடி கிடக்க, இறந்த குழந்தையை ஒரு தந்தை கட்டியணைத்து அழ, இடையில் கண்ணீரோடு ஒரு வயதான பெண்மணி தன் இடது கையில் இறந்த குழந்தையையும், வலது கையை உயர்த்தி நாம் உறுதியாக வெற்றி கொள்வோம் என்று சொல்வது போல சிலை ஒன்றை வடித்திருக்கிறார்கள். அந்தச் சிற்பமே அங்கு வருவோரை உணர்ச்சி மேலெழச்செய்யும்.

எனக்கு அந்த வளாகத்திற்குள் நிற்கும் போது கீழ வெண்மணி நினைவுக்கு வந்தது. குழந்தைகளும், பெண்களும், வயதானவர்களும் என்று 44 பேர் ஒரே குடிசையில் வைத்து கொளுத்தியதோடு, வெளியே வீசப்பட்ட குழந்தையை மீண்டும் தீயுக்குள் தள்ளிக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடு கும்பலின் வக்கிர மனம் வந்து நிழலாடியது. வாச்சாத்தி நினைவுக்கு வந்தது. வாச்சாத்தியில் பெண்களை வன்புணர்வு செய்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த குடிநீரில் எரிபொருளை கலந்த வனத்துறையின் காவல்துறையின் அட்டூழியங்கள் கண்முன்னே வந்து போனது. ஜாலியன் வாலாபாக் நினைவுக்கு வந்தது. துப்பாக்கியில் குண்டுகள் தீரத்தீர சுட்ட ஜெனரல் டயரின் செயல்களைப் போல் இராணுவ வீரர் வில்லியம் கேலி செயல்லட்டிருக்கிறான். 1968 டிசம்பர் 25 கீழவெண்மணி சம்பவம் நடைபெற்றது. அதே ஆண்டு மார்ச் 16 வியட்நாம் மைலாயில் இக்கொடூரம் அரங்கேறியது. வாச்சாத்தி கொடூரம் வெளிவரவே இரண்டு ஆண்டுகள் ஆனது. அதே போல் இக்கொடூரம் வெளி உலகிற்கு தெரியவே இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. சைமர் ஹர்ஷ் எனும் அமெரிக்கப் பத்திரிகையாளரே அக்கொலையை வெளியே கொண்டுவந்தார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை செய்த டயர் ஓய்வுக்குப் பின் லண்டனில் வாழ்ந்து மறைந்தார். அதே போல் இக்கொடூரங்களை செய்த வில்லியம் கேலியும் ஓய்வுக்குப் பின் நீண்ட நாட்கள் அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்தார்.

அருங்காடைய வளாகத்தின் முடிவில் 20நிமிட ஆவணப் படம் ஒன்று காட்சிப்படுத்தப்படுகிறது. அந்த ஆவணப்படத்தில் அக்கொடூரத்தில் உயிர் பிழைத்த சிறுவன் “பாம் தாங் காங்’ பேசுகிறார். அவர்தான் இப்போது அந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர். அவரோடு உரையாடும் நபர் அந்தப் படுகொலைகளை செய்த குழுவில் இருந்த அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர். முதலில் இருவரும் தனித்தனியாக பேசுகிறார்கள். நிறைவாக இயக்குனர் அந்த இருவரையும் எதிரெதிரே அமர வைத்து பேச வைக்கிறார். அப்போது அந்த இராணுவ வீரர் அந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து மன்னிப்புக் கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் பாங் தாங் காங், “இந்தக் சம்பவத்தில் என் தாயை நான் இழந்தேன். ஒரே சகோதரியை இழந்தேன். மூத்த சகோதரனை இழந்தேன். எங்கள் மொத்த குடும்பத்தையே இழந்தேன். அவர்களை கொன்ற நீங்கள் என் எதிரே அமர்ந்திருக்கிறீர்கள். இப்போது உங்களை நான் வன்மையாக தாக்க வேண்டும். ஆனால் அதை நான் செய்ய மாட்டேன். எங்கள் வியட்நாம் சட்டம் அதை சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் நீங்கள் எனக்கு ஒன்று செய்ய வேண்டும். உங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நீங்கள் ஒன்றை சொல்லித்தர வேண்டும். அது அடுத்த நாட்டவர் மீது உங்கள் ஆதிக்கத்தை செலுத்தாதீர். போர்களை தொடராதீர் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார்.

உலகம் முழுக்க ஒடுக்குகிறவர்கள் ஒரு நேர் கோட்டிலும், ஒடுக்கப்படுகிறவர்கள் ஒரு நேர் கோட்டிலும் இருக்கிறார்கள். வியட்நாமில் இருந்த நாட்கள் முழுக்க “பாவிகளா… இவ்வளவு அழகிய நாட்டையா, இருபது ஆண்டு போர் நடத்தி ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தீர்கள். இந்த இனிமையான மக்களையா லட்சக்கணக்கில் கொன்று குவித்தீர்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது. இன்றைக்கும் கூட அமெரிக்கா அதையே செய்து வருகிறது. வெனிசுலா அதிபரை கடத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை சுற்றுலா நகராக மாற்றுவேன் என அத்துமீறுகிறது. மூன்றாம் உலக நாடுகளை பொருளாதார அச்சுரத்தலால் பணிய வைக்கிறது. கிரீன்லாந்து, கனடாவை அமெரிக்காவுடன் இணைத்து வரைபடம் வெளியிடுகிறது.

இந்த அத்துமீறல்களுக்கு எதிராக காங் சொல்வது போல் அமெரிக்கர்களே உங்களை நாங்கள் திருப்பி தண்டிக்கப் போவதல்தில்லை. ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஆதிக்கம் செலுத்தாத மனநிலையை கற்றுத்தாருங்கள் என்றே கேட்டுக் கொள்கிறோம். இல்லை என்றால் அந்த இராணுவ வீரரைப் போல் வரலாறு முழுக்க உங்கள் பிள்ளைகள் பலரிடம் மண்ணிப்புக் கேட்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம். வரலாறும் உங்கள் தலைமுறையை சும்மா விடாது.

  • களப்பிரன்

(நன்றி : இந்து தமிழ் திசை 06.02.2026)

இந்து தமிழ் திசையில் வெளியான கட்டுரையில் உள்ள சான் மை கிராத்திற்கு நேரில் சென்ற காணொளியை இணைத்துள்ளோம். வாய்ப்பிருந்தால் பார்க்கவும்.

1 COMMENT

  1. வியட்நாம் படுகொலைகளும்
    இன்னும் திருந்தாத வல்லரசும்!

    வியட்நாம் மைலாய் படுகொலைகள் குறித்து இந்த கட்டுரை அருமையாக உணர்வூட்டும் படி உள்ளது குறிப்பாக வியட்நாமில் மயிலாய் என்ற ஒரு அழகான கிராமம் அந்த கிராம மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் அமெரிக்கா ராணுவம் சுட்டுக் கொல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை விவரிக்கிறது குறிப்பாக 20 ஆண்டுகளாக வியட்நாமை ஆக்கிரமிக்க காத்துக் கொண்டிருந்த அமெரிக்கா தனது இயலாமையை இந்த கிராமத்து மக்களிடம் வெளிப்படுத்தி உள்ளது
    உதாரணமாக கீழ்வெண்மணி ஒரு படி நில்லுக்காக ஒரு கிராமத்தில் ஒரு வாலை குடிசைக்குள் 44 பேர் தீட்டு கொளுத்தப்பட்ட நிகழ்வும்
    ஜாலியன் வாலாபாக் ஜெனரல் டயர் துப்பாக்கிகள் தீவு வரை சுட்டுக் கொல்லப்பட்ட படைகலைகளும் இதற்கு இணையானது என தொகுக்கப்பட்டுள்ளது
    மொத்தத்தில் வேட்டாமை ஆக்கிரமிக்க அமெரிக்க எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த ஈவு இரக்கமற்ற படுகொலைகளை செய்துள்ளது

    வியட்நாம் சுற்றுலா செல்வதற்காக சில நிறுவனங்கள் உள்ளது ஆனால் அந்த நிறுவனங்களை நாடாமல் ஆறு பேர் கொண்ட ஒரு குழு இந்த கிராமத்தை பார்க்க வேண்டும் என்று சென்று தங்களுடைய அனுபவங்களையும் சொல்லி உள்ளார்கள் வேட்டாமை சேர்ந்த ஓட்டுநர் பாய்க்கே இந்த விவரம் போய் பார்த்த பிறகு தான் தெரிகிறது
    வியட்நாம் படுகொலை குறித்து தமிழ் இந்து கட்டுரையாக வெளிவந்ததை அருமையாக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது அதோடு கூட ஒரு காணொளி காட்சியையும் வெளியிடப்பட்டுள்ளது அந்த காணொளியில் வியட்னாமில் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த கிராமம் 20 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியமாக காட்சியளிக்கிறது அமெரிக்க ராணுவம் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் கண் முன்னால் காட்சி அளிப்பது போலவே துவக்கப்பட்டுள்ளது மிக அருமையான ஒரு பதிவு என்பதை இந்த காணொளி காட்டுகிறது
    தமிழ் இந்து கட்டுரை ஆசிரியருக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here