“இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பாஜக கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், சிறு குறு முனைவர்களின் குடும்பங்களில் இருந்து புதிதாக கல்வி கற்பதற்கு உள்ள அடிப்படையை அடித்து நொறுக்கி வருகிறது” என்று விமர்சனங்களை வைத்து புரட்சிகர மாணவர் சங்கங்கள் போராடுகின்றன.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட சாதியால் சூத்திர, பஞ்சம சாதிகள் உழைப்பால் கூலி, ஏழை விவசாயிகள் மற்றும் அமைப்பு சாராத அரை பாட்டாளி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஒன்று இரண்டு தலைமுறைகளாக தான் குறைந்தபட்சம் ஆரம்பக் கல்விக்கு செல்கின்றனர்.
அதிலேயும் குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே மேற்படிப்பு என்று சொல்லக்கூடிய கல்லூரிகளுக்கு செல்கின்றனர் அதிலும் குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே ஆராய்ச்சி படிப்பு மற்றும் பல்வேறு வகையான உயர்கல்விகளுக்கு செல்கின்றனர் என்பது நமது இந்திய சமூகத்தின் நிலைமையாக உள்ளது.
இந்த சூழலில் ஒரு நூற்றாண்டு காலமாக போராடி பெற்ற கல்வி பெரும் உரிமையை ஆர்.எஸ்.எஸ் பாஜக சங் பரிவார கும்பல் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் முற்றாக ஒழித்துக் கட்டி வருகிறது.
இந்த லட்சணத்தில் தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற வெறியுடன் செயல்படுகின்ற ஆர்எஸ்எஸ் முகாமை சார்ந்த திருவாளர் அண்ணாமலை தமிழகத்தின் கல்வி நிலைமை பற்றி பல்வேறு பித்தலாட்டங்களை அவிழ்த்து விட்டுள்ளார்.
“தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான சாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன”. என்று திருவாய் மலர்ந்துள்ள திருவாளர் அண்ணாமலை யார்? “சாதிய சமூகம் இருக்க வேண்டும்; ஆதிக்க ஜாதிகள் மற்றும் பார்ப்பன கும்பல் அதிகாரத்தில் இருக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்கள் அவரவர் தலைவிதிபடி அவர்கள் அப்பன், பாட்டன் செய்து வந்த தொழில்களை செய்ய வேண்டும்” என்பதையே சனாதன தர்மம் என்று முன்னிறுத்துகின்ற ஆர்எஸ்எஸ் – பாஜக முகாமிலிருந்து வந்தவர்.
அது மட்டுமல்ல!. தமிழகத்தில் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கல்வியின் மீது ஆர்எஸ்எஸ் பாஜக மிகுந்த அக்கறையும், கரிசனையும் கொண்டுள்ளதைப் போல அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தையும் தனியாருக்கு அதுவும் குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுத்து வரும் ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவார அமைப்புகள், தமிழகத்தை வேட்டையாடுவதற்கு பல்வேறு பொய் பித்தலாட்ட செய்திகளை பரப்பி வருகின்றனர். அதில் இந்த கல்வி சம்பந்தமான செய்தியும் ஒன்று.
ஆனால் இதற்கு நேர் மாறாக நாடு தழுவிய அளவில் புதிதாக ஒரே ஒரு மாணவர் கூட சேர்க்கப்படாத பள்ளிகள் 8000 இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகமே செய்தி வெளியிட்டுள்ளது.
“கடந்த கல்வியாண்டில், நாடு முழுதும் 7,993 பள்ளிகளில் மாணவர்கள் யாரும் புதிதாக சேராத நிலையில், அங்கு 20,817 ஆசிரியர்கள் பணியில் இருந்தது கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2024 – 25ம் கல்வியாண்டில் நடந்த மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக, சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சகம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:
“கடந்த 2023 – 24ம் கல்வியாண்டில், நாடு முழுதும் 12,954 பள்ளிகளில் மாணவர்கள் யாரும் புதிதாக சேரவில்லை. கடந்த கல்வியாண்டில், இது குறைந்து 7,993 பள்ளிகளில் புதிதாக மாணவர்கள் சேர்க்கை நடக்கவில்லை. இருப்பினும், இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
தேசிய அளவில் அதிக மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம் 3,812 பள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாத மாநிலங்களில் 2,245 பள்ளிகளுடன் தெலங்கானா இரண்டாம் இடத்திலும், அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் (463 பள்ளிகள்) உள்ளது. இந்தப் பள்ளிகளில் தெலங்கானாவில் 1,016 ஆசிரியர்களும், மத்திய பிரதேசத்தில் 223 ஆசிரியர்களும் பணியில் உள்ளனர். இதுபோன்று உத்தரப் பிரதேசத்தில் 81 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் புதிதாக கல்வி கற்பதற்கு மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ள போதிலும் திட்டமிட்டே தமிழகத்தின் பெயரை சேர்க்காமல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை இந்து, தினமணி, தினமலர் உள்ளிட்ட பார்ப்பன கும்பல் அப்படியே வெளியிட்டுள்ளனர்.
படிக்க:
♦ தெரிந்தே புளுகும் RSS, BJP அண்ணாமலை பின்னால் ஓடாதே!
♦ கொண்டிமாடு அண்ணாமலைக்கு மூக்கணாங்கயிறு கட்ட வேண்டும்!
இந்த நிலைமையில் தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரம் பற்றி தமிழக அரசு ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்டு இருந்தது.
அந்த அறிக்கையின் படி “தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 4,00,364 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 76 ஆயிரம் கூடுதலாகும்.
இந்தக் கல்வியாண்டில் மழலையர் வகுப்பில் 32,807 பேர், முதலாம் வகுப்பு தமிழ் வழியில்-2,11,563 பேர், ஆங்கில வழியில் 63,896 பேர், 2 முதல் 8-ம் வகுப்பு வரை 92,098 பேர் சேர்ந்துள்ளனர்.”என்கிறது அந்த அறிக்கை.
சென்னை சென்ட்ரலிலும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு வட மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் சாரைசாரயாக வேலைக்கு வருகின்றனர்.
இவர்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நேரில் சென்று விசாரிக்கலாம். அதில் பெரும்பான்மையானவர்கள் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மேல் படிக்காதவர்கள் என்பது தான் உண்மை நிலவரம் ஆகும்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு படையெடுக்கின்ற வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞர்கள் பட்டாளம் பெரும்பான்மையாக கல்வியறிவு மறுக்கப்பட்ட சூத்திர, பஞ்சம சாதிகளை சேர்ந்தவர்கள் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.
உண்மை நிலவரங்கள் இவ்வாறு இருக்க தமிழகத்தின் கல்வி நிலைமை பற்றி பித்தலாட்டமான அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜக முகாமைச் சேர்ந்த அண்ணாமலை உள்ளிட்டவர்கள் ஒன்றிய அரசில் அதிகாரத்தில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற திமிர்த்தனத்துடன் வலம் வருகின்றனர்.
சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதியான சிபி ராதாகிருஷ்ணன் ஒரு ஆர் எஸ் எஸ் முழுநேர ஊழியர் என்பது மட்டுமின்றி கோவை கலவரத்தில் முன்னணி பங்கு வகித்தவர் என்பதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று அவரை வரவேற்பது, கட்டியணைப்பது என்ற இழிவான அரசியல் செய்கின்ற திமுக மற்றும் சிபிஎம் கட்சியினர் பாசிசத்தை பற்றி புரிந்து வைத்திருக்கும் லட்சணம் இவ்வளவு தான்.
இத்தகைய அமைப்புகளின் தலைமை பாசிசத்தை வீழ்த்தும் என்று அதன் கீழே செயல்படுகின்ற லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இனியும் நம்பிக்கொண்டிருந்தால் ஆர்எஸ்எஸ் – பாஜக முன்வைக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிசத்தை ஒருபோதும் வீழ்த்தவே முடியாது.
தமிழகத்தை எப்பாடு பட்டாலும் தேர்தலில் கைப்பற்றி விட வேண்டும் என்று மூர்க்கத்தனமாக செயல்படுகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் கோயபல்ஸ் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணி திரள வேண்டும் என்பதே இன்றைய காலகட்டத்தின் தேவையாக உள்ளது.
◾மருது பாண்டியன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







கல்விதான் சமூக மாற்றத்திற்கு அடிப்படை .
ஆனால் சங்க பரிவாரங்களோ நீ கல்வி கற்க கூடாது ,மனுதர்மம் சொல்லும் பிற்போக்குத்தனங்களை அமுல்படுத்தும் கூலி அடிமைக்காக இம் மக்களை வளர்க்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.
கல்வி பெற தொடர்ந்து போராடுவோம் கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்.
தமிழகத்தின் கல்வி நிலைமை குறித்து ஆர் எஸ் எஸ் அண்ணாமலையின் பொய் பித்தலாட்டம் !
அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை குறித்த புள்ளி விவரங்கள் தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்ற புள்ளி விவரத்தை மறைத்து அண்ணாமலை கோயா பல்ஸ் தனமாக தமிழக கல்வி குறித்து பொய்யான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்ற செய்தியும்
வடமாநிலங்களில் பீகார் ஒரிசா ஜார்கண்ட் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மாணவர்களுடைய எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது அரசுப் பள்ளிகளில் மாணவர்களுடைய எண்ணிக்கை சேர்க்கை இல்லாமல் ஜீரோவாக உள்ளது என்ற விவரத்தையும் இந்த விவரத்தை தெரிந்து கொள்ள வட மாநில தொழிலாளர்கள் தென் மாநிலங்களை நோக்கி பிழைப்புக்காக வரக்கூடிய அவர்களிடம் கல்வி தகுதி குறித்து கேட்டால் ஆர் எஸ் எஸ் பிஜேபியின் பொய் பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வரும்
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் சிபி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர் ஒரு ஆர் எஸ் எஸ் முழுநேர ஊழியர் கோவை குண்டுவெடிப்பில் பிரதானமாக செயல்பட்டவர் அவரை கட்டித் தழுவுவது வரவேற்பது திமுக சிபிஎம் சிபிஐ போன்ற பாசிச எதிர்ப்பு பேசும் இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது இவர்கள் எப்படி பாசிசத்தை வீழ்த்துவார்கள் என்ற கேள்வியும் சந்தேகமும் உள்ளது.
தமிழகத்தில் எப்படியாவது தேர்தலில் மூலம் ஆட்சியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கும் பிஜேபியை வீழ்த்த புரட்சிகர அமைப்புகள் ஓரனியில் திரள வேண்டிய அவசியம் உள்ளது என இந்த கட்டுரை உணர்த்துகிறது கட்டுரை ஆசிரியர் தோழர் மருது பாண்டியன் அவர்களுக்கு நன்றி.