இந்திய நாட்டு ‘மக்கள் நலனுக்காக’ மோடி ‘உலகம் சுற்றுவது’ போல, தமிழ்நாட்டு ‘மக்கள் நலனுக்காக’ தேர்தலை மையப்படுத்தி தமிழ்நாட்டை சுற்றி சுற்றி வருகிறார் எடப்பாடி. ஆம், “மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!”- என்பதுதான் எடப்பாடி & கோ- வின் இக்கால முழக்கம்.

ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இலக்கு நிர்ணயம் செய்து கூட்டத்தை கூட்டுவதற்கு பல லட்ச ரூபாய் செலவு செய்து பணப் பங்கீடு செய்கின்ற அசிங்கங்களை புதுக்கோட்டையில் பங்கு பிரிக்கின்ற பரபரப்பான வீடியோக் காட்சிகளை ஊடகங்களில் வெளிச்சப்படுத்தியதன் மூலமாக அறிந்தோம்.

கவின் ஆணவப் படுகொலை நடந்த எட்டே நாட்களில் நெல்லையில்
நயினார் நாகேந்திரன் மெகா விருந்து!

நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டு ரத்தக் கவுச்சி மறையும் முன் சரியாக எட்டே நாட்களில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘அமித்ஷா முன்னேற்றக் கழகத் தலைவர்’ எடப்பாடிக்கு மாபெரும் விருந்தளித்தார்.

விருந்து என்றால், உங்கள் வீட்டு விருந்து; எங்கள் வீட்டு விருந்தல்ல! 109 வகை உணவுகளுடன் நெல்லையில் ‘மெகா விருந்து’! நாகேந்திரன் இல்லத்தில் மாபெரும் அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டு, மேஜை, நாற்காலிகள் எல்லாம் (சற்றேறக்குறைய ‘அம்மா’வின் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு நடந்தது போல்) மிக மிக ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தார் நயினார். பாஜக – அதிமுக முக்கியப் புள்ளிகள் விருந்தில் பங்கேற்று மூக்கு முட்டத் திண்று முடித்துள்ளனர். கலந்து கொண்ட விருந்தினர்களில் அதிமுக தரப்பில் முக்கியமானோர்: எடப்பாடி, எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு, எம். ஆர்.விஜயகுமார், இசக்கி சுப்பையா, ராஜலட்சுமி, சண்முகநாதன் மற்றும் பெருங்கூட்டம்.

பாஜக தரப்பில்: நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, எல்.முருகன், பொன்னார், தமிழிசை, கேசவநாயகம் மற்றும் பெருங்கூட்டம்!

இதில் பூணூல் கூட்டமான எச்ச ராஜா & கோ எவரும் பங்கேற்றதாகத் தெரியவில்லை. சரிதான். சனாதனவாதிகளான அவர்கள் சூத்திரவாள் நயினார் நாகேந்திரன் வீட்டில் எப்படித்தான் சாப்பிட இயலும்? அவர்கள் புரிந்து கொண்டார்கள். சூத்திரர்-பஞ்சமர் மட்டும் தம்மை இழிவானவர்கள்தான் என்பதை காண்பித்துக் கொள்வதில் எப்பொழுதும் முன் நிற்பர்!

மோடியின் உலகம் சுற்றலும்; எடப்பாடி யின் தமிழகச் சுற்றலும்!
எடப்பாடி – நயினார் நாகேந்திரன்

தன்னுடைய செல்வச் செருக்கை பறைசாற்றவும், இதன் மூலமாக தான் மாபெரும் தலைவன் என்பதை காண்பித்துக் கொள்வதற்காக ‘ஆணவச்’ செறுக் குடன் நயினார் நாகேந்திரன் எடுத்துக்கொண்ட முன்னெடுப்பு தான் இந்த மெகா விருந்து. அசிங்கமாகவும், கேவலமாகவும் இவ்விருந்து அம்பலப்பட்டுப் போயிருக்கிறது.

சாக்கடைக்குப் பயந்து, மலத் தொட்டியில் வீழ்வதற்கு வாருங்கள் என்கிறது எடப்பாடி & கோ!

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது; விலைவாசி உயர்ந்துவிட்டது; விவசாயிகள் – தொழிலாளர்கள் – அரசு ஊழியர்கள் பெண்கள் , கொலைகள் என எல்லோரும் தாங்கிக் கொள்ளவே முடியாத அளவிற்கு இந்த திமுக ஆட்சியில் படாத பாடுபடுகிறார்கள். எனவே, ‘மக்களை மீட்போம்! தமிழகத்தை காப்போம்!’
என்று ஒவ்வொரு ஊராகச் சென்று வாயில் வந்ததை எல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி!?

யாரோடு சேர்ந்து கொண்டு? பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பாசச பாஜக – ஆர் எஸ் எஸ் – கொலைவெறித் தாக்குதல்களும் கலவரங்களும் நடத்துகின்ற, விலைவாசி உயர்வும் வேலையில்லா திண்டாட்டமும் பசி பஞ்சம் பட்டினியால் புலம் பெயர்களும் உச்சக்கட்டத்தில் இருப்பதற்கு காரணமான காவி க் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு இப்படிப்பட்ட முழக்கத்தை வைத்து ஆட்சி கட்டிலில் அமரத் துடியாய்த் துடிக்கிறார் எடப்பாடி.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் குறைபாடே இல்லையா? இருக்கவே செய்கின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால் பாஜகவின் வடமாநில அரசுகளோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு சற்று முன்னேற்றம்தான். ஏன், இன்று தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து தொண்டை கிழிய உரத்து முழங்கும் – முதல்வரையே அவன் – இவன் என ஒருமையில் இழிந்து பேசும் எடப்பாடி தமது நான்கரை ஆண்டு கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகள் என்னென்ன?

தூத்துக்குடியில் மக்கள் நல்வாழ்வை கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட போராடிய பொழுது போராளிகள் 15 பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது.
கேட்டால் நானே டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வெட்கமின்றி கூறியது.

ஓசி மொபைல் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக சாத்தான்குளம் ஜெயராஜ் – ஃபெனிக்ஸ் – தந்தை மகனை பொய்க் குற்றம் சுமத்தி காவல் நிலையத்திலேயே வைத்து அடித்து நொறுக்கிக் கொலை செய்தது போலீஸ். அப்போது எடப்பாடி, ஃபெனிக்ஸ மாரடைப்பால் இறந்தார் என்றும், ஜெயராஜ் சர்க்கரை நோயால் இறந்தார் என்றும் காவல் கண்காணிப்பாளர் எழுதிக் கொடுத்ததை அப்படியே வாந்தி எடுத்தார் எடப்பாடி. பின்பு மக்கள் போராட்டங்கள் வழியே கொலைக் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு, சிபிஐ சாரணைக்கு உட்படுத்தப்பட்ட விடயம் பழைய வரலாறு ஆகி விட்டது.

எத்தனை எத்தனையோ கொட்டடிக்கொலைகள் எடப்பாடி ஆட்சியிலும்…!

பொள்ளாச்சியில் மெகா பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் மட்டுமன்றி எண்ணற்ற பெண்கள் மீதான கொடுமைகள் எடப்பாடி ஆட்சியில்…!

விலைவாசி உயர்வும் வேலையில்லா திண்டாட்டமும் தங்கு தடையின்றி நீடித்துக் கொண்டே தான் இருந்தன.

ஒன்றிய பாசிச பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான நான்கு அவசர சட்டங்களை ஆதரித்து நாடாளுமன்றத்திலே வாக்களித்தது மட்டுமின்றி, அச்சட்டங்கள் விவசாயிகளுக்கு பெருத்த விடியலைத் தரப் போகிறது என்று சான்றிதழ் வழங்கியவர் தான் எடப்பாடி. டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் 750 பேர் மாண்டதற்கு வருத்தம் தெரிவிக்கவோ, மோடி அரசை கண்டிக்கவோ முன் வராதவர் தான் இந்த எடப்பாடி.

44 தொழிலாளர் தொடர்பான சட்டங்களை நான்கு சட்டங்களாக வரையறுத்து முடித்து தொழிலாளர்களுக்கு துரோகம் விளைவித்த மோடி அரசுக்கு ஆதரவாக நின்றவர் தான் எடப்பாடி.

இஸ்லாமியர் கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாழ்வுரிமையை இழக்கச் செய்யும் இந்திய குடியுரிமைச் சட்டத்தை ஈவிறக்கம் இன்றி பாராளுமன்றத்தில் பாசிச மோடி அரசு சட்ட முன் மொழிவு மசோதா கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அக மகிழ்ந்து ஆதரவளித்து வாக்களித்தவர்கள் தான் எடப்பாடி & கோ.

மும்மொழி கொள்கையை மோடி அரசு திணிக்கின்ற சூழலில் அதனை எதிர்க்க வக்கில்லை எடப்பாடிக்கு. தேசிய கல்விக் கொள்கையையும் எதிர்க்கத் துணி வில்லை எடப்பாடிக்கு.

தமிழ்நாட்டுக்குரிய பல்வேறு விதமான ஈவு நிதிகளை, இயற்கை பேரிடர் நிதிகளை தரத் தொடர்ந்து மறுத்து வரும் பாசிச மோடி அரசை எதிர்க்க எடப்பாடிக்கு வக்கில்லை.

அகழாராய்வு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியின் தொன்மையை மிக நீண்ட அறிக்கையாக ஒன்றிய அரசுக்கு அளித்த பின்பும் தமிழ்நாட்டிற்கு அந்தப் பெருமை போய் சேர்ந்து விடக்கூடாது என்பதனாலேயே அறிக்கையை திருப்பி விட்டு முடக்கிப் போட்டுள்ள பாசிச மோடியை எதிர்க்க துணிவில்லை எடப்பாடிக்கு.

மணிப்பூரில் 2023 மே முதல் பாசிச பாஜகவால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனை கண்டிக்க துப்பில்லை எடப்பாடிக்கு. இளம் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு மணிப்பூர் வீதிகளிலே பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டனர். அதைக் கண்டிக்கத் துப்பில்லை எடப்பாடிக்கு.

படிக்க: மணிப்பூர் கலவரம்: நெருப்பை அணையாமல் பாதுகாக்கிறது பாஜக!

காஷ்மீர் பெஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் மோடியின் உளவுத்துறையால் ஒன்றையும் கண்டறிய முடியவில்லை என்பதற்காக கண்டனம் தெரிவிக்க முடியவில்லை எடப்பாடி.

கொடநாடு கொலை வழக்குகள் சந்தி சிரிக்கின்றன.

எடப்பாடி உட்பட முன்னாள் அமைச்சர்கள், பினாமிகள் ஊழல்கள் தமிழ்நாடு முழுவதும் நாறிக் கிடக்கின்றன.

ஒன்றிய மோடி அரசின் சிஏஜி பட்டவரத்தனமாக அறிவித்த ஏழரை லட்சம் கோடி ஊழல் சந்தி சிரிக்கிறது. வாய் திறக்க மறுக்கிறார் எடப்பாடி.

ரஃபேல் விமானப் பேர ஊழல் குறித்து சம்பந்தப்பட்ட பிரான்ஸ் நாடே உண்மையைப் போட்டு உடைக்கின்ற பொழுது மோடி வாய் திறக்க மறுப்பார்தான். சேர்ந்தே வாயில் பிளாஸ்டிக் போட்டு ஒட்டிக் கொண்டார் எடப்பாடி, இழிவு இல்லையா?

நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை குழி தோண்டிப்
புதைத்து மடை மாற்றி விடும் பாஜகவின் அனைத்து பாசிச நடவடிக்கை
களுக்குத் துணை நிற்கிறது எடப்பாடி & கோ. உ.பி.,

ம.பி., ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத், உத்தரகாண்ட் என பல மாநிலங்களிலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக – தலித் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொலைகள் தாக்குதல்கள் / வீடுகள், மசூதிகள், தேவாலயங்கள் இடிப்பு குறித்து வாய் திறந்து இருப்பாரா எடப்பாடி?

மாணவ கண்மணிகளின் கொலைக்களமாக திகழும் நீட் ஒழிப்புக்காக களம் கண்டிருப்பாரா எடப்பாடி?

தேர்தல் ஆணையம் பாஜகவின் கை பானமாக ஆகி தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியலை (SIR) நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டு முதற்கட்டமாக பீகாரில் நடந்த இத் திருத்த பணியில் திட்டமிட்டே ஏறக்குறைய 70 லட்சம் வாக்காளர்களுடைய வாக்குரிமையைப் பறித்துள்ளதே தேர்தல் ஆணையமும் மோடி அரசும் இணைந்து நின்று… குறிப்பாக இஸ்லாமிய தலித் மற்றும் பழங்குடி இன மக்கள் வாக்குரிமைகள் கொத்துக் கொத்தாகப் பறிக்கப்பட்டுள்ளன. வாய் திறந்து பேசி இருப்பாரா எடப்பாடி?

தமிழ்நாட்டிற்கு வரும் பொழுது மட்டும் வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்து கொண்டு தமிழ் மொழிக்காகவும் தமிழர்களுக்காகவும் குடம் குடமாய் கண்ணீர் சிந்தும் – நாடகம் ஆடும் மோடி ஆளில்லா சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் இருபதில் ஒரு பங்கு கூட தமிழ் மொழிக்கு ஒதுக்க மறுக்கிறதே பாசிச பாஜக மோடி அரசு, இதைப் பற்றி வாய் திறந்து இருப்பாரா எடப்பாடி?

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே அடையாள அட்டை…. என்று எண்ணற்ற ‘ஒரே’- க்களை அறிவித்து ஒற்றை சர்வாதிகாரத்தின் கீழ் நாட்டை பாசிச புதைகுழிக்குள் அமிழ்த்தப் பார்க்கும் மோடிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்ற அரசியலாவது தெரியுமா எடப்பாடிக்கு?

படிக்க: ஒரே நாடு ஒரே தேர்தல்: திசைதிருப்பல் மட்டுமல்ல; பாசிச பாஜகவின் நீண்ட கால திட்டம்!

எப்படி தெரியும்? பாஜக-அதிமுக கூட்டணிப் பேரம் முடிந்தது எப்படி என்ற விவரம் நாடு பூராவும் சந்தி சிரிக்கிறதே.

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்ப்பதும், வராக்கடன் என அறிவித்து பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்வது குறித்து வாய் திறந்து இருப்பாரா எடப்பாடி?

எடப்பாடியின் சம்மந்தி மற்றும் தமது பினாமி ஈரோடு ராமலிங்கம் வீட்டில் மோடியின் கூட்டணி உறுப்பான அமலாக்கத்துறை ரெய்டு விட்டதும், இதில் தனது மகனும், தாமும், தமது கொள்ளை கூட்டமும் கூட சிக்கிச் சீரழிய வேண்டி வரும் என்பதை முற்றுணர்ந்த எடப்பாடி அமித் ஷா கூப்பிட்டதுமே ஓடோடிச் சென்று காலில் விழுந்து (‘சின்னம்மா’ சசிகலா காலை கவ்வி முதல்வர் நாற்காலியை பிடிக்க தரையில் படுத்துருண்டு ஊர்ந்து சென்றது போல்) அமித்ஷாவுடன் கைகட்டி வாய் பொத்தி கூட்டணி பேரத்தை முடித்துக் கொண்டது எவருக்குத்தான் தெரியாது?

ஆக இதுபோல் எண்ணிலடங்கா சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போனால் தனி ஒரு நூலாகத்தான் வெளியிடல் வேண்டும்.

–ஆக, இவ்வளவு அழுக்குகளையும் தன் முதுகில் சுமத்தி வைத்துக் கொண்டு ‘மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!’ – என்று பாசிச பாஜகவுடன் இணைந்து நின்று கொண்டு தன்மானம் இழந்து அரசியல் நடத்துவதற்கு எடப்பாடி முன் நின்று ‘களம்’ ஆடினாலும் உறுதியாக தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி & கோ-வைப் புறக்கணித்தே தீர்வர். தீர வேண்டும்.

ஏனெனில், இந்தியாவில் கார்ப்பரேட் – காவிப் பாசிசம் நிலை கொள்ள துடிக்கும் பொழுது பிரதான எதிரியான அந்த காவிக் கூட்ட – கலவரக் கொலைகாரக் கும்பலை வீழ்த்த அனைத்து ஜனநாயக சக்திகளும் தற்காலிகமாகவாவது ஒருங்கிணையவேண்டும்; களம் காண வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கக் முடியாது.

அதற்காக திமுகவிடம் குறைபாடுகளை இல்லை என்று சொல்ல முடியாது. நிறையவே இருக்கின்றன. திமுக சாக்கடை என்றால், பாஜக- அதிமுக- ‘மல’த் தொட்டி அல்லவா? ஆம், ‘சாக்கடை’க்கு பயந்து ‘மல’த் தொட்டியில் வீழ்ந்திட தமிழ்நாட்டு மக்களை அழைக்கிறார் எடப்பாடி!

தமிழக மக்களே, எச்சரிக்கையாக இருந்து இந்த பாசிச பாஜகவையும், அவற்றுடன் இணைந்த அதிமுக போன்ற புல்லுருவிகளையும் முறியடித்தே தீர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்வோம்!

ஆணவப் படுகொலைக்கு உள்ளான கவின் ரத்தக் கவுச்சி மறையும் முன், அந்த அப்பாவி இளைஞனின் குடும்பத்தினரின் கண்ணீர் சிந்துதல் அடங்கும் முன், 109 உணவு வகைகளுடன் எடப்பாடி கும்பலுக்கு மாபெரும் விருந்தளித்த
ஆதிக்க வெறி கொண்ட சங்கி கூட்டத் தலைவன் நயினார் நாகேந்திரன் கும்பலை அம்பலப்படுத்துவோம்! தோலுரிப்போம்!

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்திட ஒருங்கிணைவோம்!

ஜனநாயக கூட்டரசை நிறுவிட களம் காண்போம்!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here