ள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் இதுவரை பலியாகியுள்ளார்கள். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் இதேபோல் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 23 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தில் மீண்டும் கள்ளச்சாராயம் மரணம். என்ன நடக்கிறது? யார் இதற்கு பொறுப்பு ஏற்பது?

இறந்தவர்கள் எல்லோரும் அம்பானி வீட்டு பிள்ளைகள் அல்ல. அன்றாடம் உழைத்து தன்னுடைய குடும்பத்தை வாழ வைத்தவர்கள், இன்று அந்த குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. கதறி அழும் குடும்பங்களின் குரல் இன்று மட்டுமல்ல என்றுமே இந்த அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் கேட்காது.

கள்ளக்குறிச்சியில் அமோகமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். கல்வராயான் மலையை ஒட்டியுள்ள பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு விற்பனையாவதாகவும் புதிய தலைமுறையின் செய்தி தெரிவிக்கிறது.

இப்போது நடந்த கள்ளச்சாராய மரணத்திற்கு காரணமான கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ள காவல்துறை அவரிடமிருந்த 200 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளது. ஆனால் இவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததே காவல்நிலையத்திற்கு பின்புறத்தில் தான் என்கிறார்கள். அருகிலேயே வட்டாச்சியர் அலுவலகமும் இருக்கிறதாம். ஆக மொத்தம் அதிகார வர்க்கத்தின் துணையோடு அமோகமாக சாராய விற்பனை நடந்து வந்துள்ளது.

இதுவரை 35 பேர் பலியாகியுள்ளார்கள். மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாததும் உயிரிழப்பிற்கு காரணம் என்கிறார்கள். இதனால் விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவமனையிலிருந்து மருந்துகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலர் உயர் சிகிச்சைக்காக சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் தமிழ்நாடு அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண குமாரை மாற்றியுள்ளது. இவர் தான் இது விஷ சாராய மரணமில்லை ஆய்வுசெய்து தான் சொல்ல முடியும் என்று அரசையும் அதிகார வர்க்கத்தையும் தப்பிக்க வைக்க முயன்றார். அதேபோல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மொத்தத்தையும் மாற்றியுள்ளது தமிழக அரசு.

கடந்த வருடம் விழுப்புரம் கள்ளச்சாராயம் மரணத்தில் 23 பேரை பலிக் கொடுத்த போதே இதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை கள்ளக்குறிச்சி சம்பவம் உணர்த்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களால் அரசுக்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தற்காலிக நடவடிக்கையை தேர்ந்தெடுக்கிறது. அந்த பகுதியில் செயல்படும் அரசின் உயர் அதிகாரிகளை மாற்றுவது அல்லது சஸ்பெண்ட் செய்வதும், விசாரணைக்கு உத்தரவிடுவதாக இருக்கட்டும் அல்லது நிவாரணத் தொகையை அறிவித்து குடும்பங்களின் வாயை அடைக்க முயல்வது என்று பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மக்களை திசைதிருப்புகிறது.

மரக்காணம் கள்ளச்சாராய மரணத்தின் போதே கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பாக வாரம் ஒரு முறை ஆய்‌வு செய்து திங்கட்கிழமை அறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆனது?

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளார்கள். அதிமுக ஆட்சிகாலத்தில் குட்கா விற்பனை கொடிகட்டிப் பறந்தது. அதற்கு எதிராக அரசியல் செய்த திமுக இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு கண்டுக் கொள்ளவேயில்லை. மாறாக கள்ளச்சாராயம், கஞ்சா என போதை வஸ்துக்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.

படிக்க: 

♦ கள்ளச்சாராய பலி: சீரழிந்த அரசு கட்டமைப்பே முதல் குற்றவாளி!

35 பேர் இறந்துப் போனதற்கு கள்ளச்சாராயம் மட்டும் காரணம் அல்ல. அவர்களுக்கு துணை போன காவல்துறை, மதுவிலக்கு பிரிவு உள்ளிட்ட அதிகார மையங்களும், திமுக அரசுமே முதன்மையான காரணம்.

அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாலோ அல்லது பணியிடைநீக்கம் செய்வதாலோ எதுவும் மாறப்போவதில்லை. இத்தனை பேரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக கேள்விக் கேட்பவர்களை மிரட்டுவது, எதிர்த்துப் போராடுபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வது என கூட்டாக செயல்படுகிறது. காவல்துறை கள்ளச்சாராய கும்பலுக்கு பாதுகாப்பா? மக்களுக்கா? என்றே கேள்வி எழுகிறது.

பல காலமாக கள்ளச்சாராயத்திற்கு எதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டன. கள்ளச்சாராயம் எங்கு விற்பனையானாலும் அதற்கு அந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகிகளை பொறுப்பாக்க வேண்டும். அவர்களை கண்காணிக்க மக்களின் கையில் அதிகாரத்தை அளிப்பதன் மூலமே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியும். மாறாக காவல்துறையை நம்புவது வீண்.

அரசின் அலட்சியத்தால் தான் 34 பேர் இதுவரை பலியாகியுள்ளார்கள். கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் குடும்பத்தை அரசே பராமரிக்க வேண்டும். அவர்கள் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். கள்ளச்சாரயத்தை ஒழிக்க மக்களின் கையில் அதிகாரத்தை அளிக்க வேண்டும்.

மாரிமுத்து

2 COMMENTS

  1. வரவேற்க வேண்டிய பதிவு. காவல்துறை மீது மட்டும் நடவடிக்கை போதாது. மாவட்ட ஆட்சியர் மாறுதல் என்பது மட்டும் போதாது. இது சம்பந்தப்பட்ட கிராமத் தலையாரி எனும் கிராம உதவியாளர், கிராம் நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், Z.D.T., தாசில்தார், ஆயத்துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சர் உட்பட அனைவரின் மீதும் கொலை வழக்குகள் பதிந்து உள்ளே தள்ள வேண்டும். நீங்கள் கூறியது போல நடுத் தெருவில் நிற்கும் இறந்தோரின் குடும்பங்கள் அனைத்தையும் அரசே தத்தெடுத்து பாதுகாக்க வேண்டும். உரிய
    தேவையான உதவிகள் அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும். இனி எக்காலத்திலும் இப்படிப்பட்ட சம்பவமே நடக்காது என்ற உத்திரவாதத்தை அளிக்கும் வகையில் அரசும், அதிகார வர்க்கமும் நாலு கால் பாய்ச்சலில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    • உங்களின் கருத்திற்கு நன்றி தோழரே. தொடர்ந்து ஆதரவையும் விமர்சனங்களையும் முன் வையுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here