
2025 ஜூலை 28 தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ் என்ற பொறியியல் பட்டதாரி நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கவின் கொலையில் உச்சநீதி மன்றத்தில் பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரிய ஏ3 குற்றவாளி எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியின் மேல் முறையீடு நிராகரிக்கப்பட்ட பின்னரும் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.
இதுகுறித்து ஓரிரு நாட்களுக்கு முன்பு சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழக்கறிஞர் ப.பா. மோகன் பேட்டி அளிக்கின்ற பொழுது ‘இதில் சமூக நீதி பேசும் திராவிட மாடல் அரசின் – காவல்துறை யின் மிக மிக மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது; ஏ1 குற்றவாளி சுர்ஜித் தவிர மற்ற மூவரும் மீதும் புனையப்பட்ட வழக்கு என்பது மிக எளிதில் அவர்கள் பிணையில் வரும் அளவிற்கான பிரிவுகளிலேயே வழக்குப் பதியப்பட்டுள்ளது’ என்பதை உணர்ச்சி பூர்வமாக தோலுரித்தார். அனைத்திற்கும் காவல்துறையும் அரசாங்கமுமே காரணம் என்பதனையும் வெளிச்சம் போட்டுக் காண்பித்தார். அனைத்திற்கும் சமூகநீதி பேசும் திராவிட மாடல் அரசு/அதன் எடுபிடி காவல்துறைக்கே வெளிச்சம். இது அவமானத்தின் உச்சக் கட்டம்.
விழுப்புரத்தில் இளம் பெண் ஆணவப் படுகொலை…!
தென்கோடியில் கவின் மறைந்த ரத்தக்கரை மறையவில்லை; அதற்குள் இங்கே வட கோடியில் விழுப்புரம் மாவட்டத்தில் தேவ ஜெசிப்பிரியா என்ற 22 வயது பட்டியலின இளம் பெண் ஜனவரி 31 அன்று ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அழகப்ப சமுத்திரம் – நடுத்தெருவில் வசித்தவர் தேவ ஜெசிப்பிரியா (22). இவரது 3-வது வயதில் தாய் காலமாகிவிட்டார். சில ஆண்டுகளில் தந்தை அந்தோணி ராஜூம் காலமாகி விடுகிறார். பின்பு சிறுமி ஜெசி தனது பாட்டி ஜோஸ்வினா மேரி, அத்தைகள் பவள மேரி, ஆரோக்கிய செல்வி ஆகியோரின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார்.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை மைக்ரோ-பயாளஜி பட்டம் பெற்று, காஞ்சிபுரம் செல்போன் உறுதிப் பாகங்கள் தயாரிப்பு – பாக்ஸ்கான் நிறுவனத்தில் மாதம் ரூ.30000/- ஊதியத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ஒரே அண்ணன் ரிச்சர்ட் MSW படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் அவரும் பணி புரிந்து வருகிறார். இவர்கள் பட்டியலினபறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய குடும்பத்தினர் என்பதனால் கேடான ‘B.C. பதவி உயர்வு’ பெற்றவர்கள் இவர்கள்.
இந்நிலையில் ஜெசி கல்லூரி படிப்பு காலத்திலேயே விழுப்புரம் மாவட்டம், வளவனூர் வட்டம், சொர்ணாவூர் அருகில் உள்ள மேல் பாதி கிராமத்தைச் சேர்ந்தவனும் வன்னியர் சாதியைச் சேர்ந்தவனும், கலைக் கல்லூரி ஒன்றில் இருமுறை குற்றச்சாட்டுக்கு ஆளாகி கல்வியை இடை நிறுத்தம் செய்து கொண்டு வேலையில்லா வெட்டிப் பயலாக சுற்றி வந்தவனுமான வசந்தகுமார் என்பவன் வீசிய வலையில் சிக்கிவிட்டார் ஜெசி.
காதலுக்குத்தான் கண் -காது – மூக்கு என்று எதுவும் இல்லை என்பார்களே… அதுபோல விரைந்து பயணித்த அவர்களது காதல் கடந்த 2025 நவம்பரில் சென்னை கோவில் ஒன்றில் தாலி கட்டி திருமணம் செய்ததில் போய் முடிந்தது. ஒரு மாத காலம் வாழ்க்கை நன்றாகத்தான் நகர்ந்ததாம். ‘வெட்டிப் பயல்’ மாப்பிள்ளைக்கு திருமணம் செய்த பொழுது ஜெசி B.C.என்றுதான் நினைத்தானாம். பின்பு உண்மைச் சாதி தெரிந்தவுடன் கணவன் வசந்தகுமார், அவனது தந்தை முருகன், தாய் லட்சுமி, அண்ணன் பக்தவச்சலம் நால்வரும் சேர்ந்து சாதிய வன்கொடுமை, வரதட்சனை கொடுமைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்; தண்ணீர், தேனீர், உணவு அளிக்கக்கூட மறுத்துக் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜெசி காவல் நிலைய 100-க்குத் தொடர்பு கொண்டு கொடுமைகள் குறித்து புகார் செய்துள்ளார். வந்த போலீஸ்காரனிடம் ‘இது எங்கள் குடும்பப் பிரச்சனை; நாங்கள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வோம்; நீங்கள் போகலாம்..’ என்று வழி அனுப்பி விட்டார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள். இப்பொழுதுதான் தனது பாட்டி அத்தைகள் அண்ணன் அனைவரிடமும் கூறி கதறி அழுதுள்ளார் ஜெசி.
நகை பணம் கேட்டதைத் தருவதாக அண்ணன் ரிச்சர்ட் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்குள் எல்லாமே முடிந்து விட்டது. ஆம், கடந்த 2026 ஜனவரி 31 பகல் 12:30 மணியளவில் தூக்கில் தொங்கவிடப்பட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதாக அந்தப் பெண் வீட்டாருக்குத் தகவல் தெரிவித்தனர் — ஆணவச் சாதி வெறி அடங்காத வசந்தகுமார் குடும்பத்தினர்.
இப்படி கேவலமாக நடந்து கொள்ளும் காவல்துறை?
வளவனூர் காவல் நிலையத்தில் இக் கொலை தொடர்பாக புகார் சென்ற பொழுது வழக்கம்போல் மிக மெத்தனமாகக் கையாண்டது காவல்துறை. அதிலும் குறிப்பாக எஸ்.ஐ. பாலசிங்கம் பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டிப் பார்த்துள்ளார்.
படிக்க:
♦ கவின் ஆணவப் படுகொலை: ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற வழக்கு விசாரணை!
♦ கடலூரில் பெண் ஆணவப்படுகொலை? போராட்டக் களத்தில் மக்கள் அதிகாரம்
வழக்கை சந்தேக மரணம் என்று பதிவிட்டனர். நல்ல வேளையாக மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் ஜெஸ்ஸியின் குடும்பத்தாரையும் மக்களையும் அணிதிரட்டி போராட்டக் களம் கண்டனர்.’குற்றவாளிகள் நால்வரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்;ஆதிக்க சாதி வன்கொடுமை; வரதட்சணை கொடுமை; அதன் மூலமான கொலை..’ என்று வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அதுவரை உடலை பெற மாட்டோம் என உறுதியாக நின்றனர்.
காவல் ஆய்வாளர், டி.எஸ்.பி., ஏ டி எஸ் பி தினகரன், கோட்டாட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் கொடுஞ்செயலை விவரித்துக் கொண்டு சென்றனர் போராட்டக் களம் கண்ட அமைப்பினர் மற்றும் உறவினர்.
விசாரணை பெயரளவில் நீடித்துக் கொண்டே இருந்தது; போராட்டம் பின்னடையவில்லை. கொலைக்கான ஆதாரங்களை விசாரணை செய்து கண்டுபிடித்துக் கொள்ள வேண்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரே, ‘கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தாருங்கள்’ என்று கேட்டுள்ளார். அப்படியும் போராட்டக் குழுவினர் ஆதாரங்களை திரட்டிக் கொடுத்து உள்ளனர்.
இதற்கிடையில் விழுப்புரம் மருத்துவமனையில் இருந்த ஜெசி உடல் கடலூர் மருத்துவமனைக்கும், பின்பு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கும் அலைக்கழிக்கப்பட்டது.
போராட்டத்தின் உச்சமாக வளவனூர் காவல் நிலையத்தை மேற்கண்ட அமைப்புகள் ஆயிரம் பேர் மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஒரு வழியாக தொடர் போராட்டங்களின் விளைவாக குற்றவாளி வசந்தகுமார், அவன் தாய் லட்சுமி கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகப்பன் முருகன் தலைமறைவாகி விட்டானாம். அண்ணன் பக்தவச்சலம் வழக்கிலேயே சேர்க்கப்படவில்லை. இதுதான் தற்போதைய நிலை.
இதற்கிடையில் நெல்லைபேட்டையில் மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை..!
நெல்லை பேட்டை செக்கடி அனவரத விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ஆதிக்க சாதி குடும்பமான பட்சிராஜா – ரேவதி மகள் சிவமதி (19) நெல்லை கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த சிவமதியும் அதே பேட்டை கடசர் தெருவில் வசிக்கும் முருகன் மகன் ஆனந்த கிருஷ்ணனும்(ஏர்டெல் நிறுவன டீம் லீடர்) இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
தமது ஆதிக்க சாதி மகள் பட்டியலின பள்ளனைக் காதலிப்பதா? என்ற ஆதிக்க சாதி வெறியில் சிவ மதியை கடுமையாக மிரட்டியுள்ளனர். காதலன் ஆனந்த கிருஷ்ணனையும் மிரட்டியுள்ளனர். அனைத்தையும் மீறி காதல் ஜோடி பிப்ரவரி 6-ல் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்கிடையில் சிவமதி வீட்டில் கொடும் தொல்லை தரப்படுவதாகவும் தன்னை எந்த வகையிலேனும் கூட்டிச் சென்று தாலி கட்டுமாறும் காதலனிடம் சிவமதி கூறியுள்ளார். பிறகு ஃபோனையும் பெற்றோர் பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளனர். தன் பாட்டியின் ஃபோனில் இருந்து பேசிய சிவமதி தான் மிஸ்டு கால் கொடுப்பதாகவும் அத்தருணத்தில் உடனடியாக தன்னை அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். வீட்டில் தரும் துயரம் தாங்காமல் மாடியில் நின்று கதறி அழுதுள்ளார் சிவமதி. சாலையில் நின்ற காதலன் ஐந்து நிமிடத்தில் அழைத்துச் செல்வதாக சைகை காண்பித்திருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் சிவமதி பெற்றோராலேயே படுகொலை செய்யப்பட்டு, போலித்தனமாக உடல்நிலை சரியில்லை என்று கழுத்தில் காயத்துடன் கண்டியபேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவரோ சிவமதி ஏற்கனவே இறந்துவிட்ட செய்தியை தெரிவிக்க உடற் கூராய்வு செய்ய நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே காதலன் ஆனந்த கிருஷ்ணன் தான் கடைசியாக 3:30-க்கு மாடி மீது நின்ற சிவமதியை பார்த்ததாகவும், சைகையில் சில நிமிடங்களில் அழைத்துச் செல்ல வருவதாகவும் கூறிச் சென்ற நிலையில் தமக்கு 6 மணிக்கு சிவமதியின் இறப்புச் செய்திதான் கிடைத்ததாகப் புலம்புகிறார். மேலும் பல உண்மைகளை விவரித்து குறிப்பாக சிவமதியின் அனைத்து கல்வி ஒரிஜினல் சான்றிதழ்களும் தன்னிடம் இருப்பதாகவும், நாங்கள் உறுதியாக திருமணம் செய்ய இருப்பதை புரிந்து கொண்ட சிவமதியின் பெற்றோர் சிவமதியை ஆணவப் படுகொலை செய்து விட்டதாகவும், எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையில் உறவினர்களுடன் சென்று புகார் அளித்துள்ளார். உதவி கமிஷனர் இளவரசனை இது குறித்து விசாரிக்க மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
ஆக, தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் என்பது இந்த விஞ்ஞான யுகத்தில் அடுத்தடுத்து நடந்த வண்ணம் உள்ளன. சமூக நீதி பேசும் திராவிட மாடல் தமிழ்நாடும் வட மாநிலங்கள் போல் மாறி வருகின்றது. சமூக நீதி பேசும் திராவிட மாடல் திமுக அரசும் சரி; அதன் காவல்துறையும் சரி… இவ்விடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் தட்டிக் கழிக்கின்றன.
எனவே, கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அரசாங்கத்தையும் – காவல்துறையையும் வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுப்போம்…!
- நெல்லையில் கவின் கொலை வழக்கில் ஏ3 குற்றவாளி கிருஷ்ணகுமாரியை உடன் கைது செய்!
- ஏ1 குற்றவாளி சுர்ஜித்துக்கு இணையான வழக்கு பிரிவுகளில் ஏ2, ஏ3, ஏ4 குற்றவாளிகளுக்கும் வழக்குப் பதிவு செய்!
- குற்றவாளிகளை பாளையங்கோட்டை சிறையில் இருந்து வட மாவட்ட சிறைகளுக்கு உடனே மாற்று!
- ஆரம்பம் முதல் ஏ2, ஏ3 காவல் சார்ஆய்வாளர் குடும்பத்தினருக்கு சாதகமாக நடந்து வரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளை உடனே மாற்றி நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்து!
- விழுப்புரம் மாவட்ட தேவ ஜெசி பிரியா கொலை வழக்கில் ஏ4 குற்றவாளியாக பக்தவச்சலத்தையும் சேர்த்து நால்வரையும் ஆணவப் படுகொலை குற்றவாளிகளாக வழக்குப் பதிவு செய்!
- நெல்லை பேட்டை சிவமதி கொலை வழக்கில் அவரது பெற்றோர் தாய் மாமன் உட்பட அனைத்து குற்றவாளிகள் மீதும் ஆணவப் படுகொலை வழக்கில் எஃப் ஐ ஆர் பதிவு செய்!
- ஓட்டு பிச்சை எடுப்பதற்காக கொள்கைகளை அடகு வைக்காதே!
- ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் தட்டிக் கழிக்கும் போக்கை விடுத்து தனிச்சட்டம் இயற்று!
எழில்மாறன்







சாதி வன்கொடுமைகள் நாடு முழுவதும் நொடிக்குகொருமுறை அரங்கேறுகிறது.
அதேபோல சாதி ஆணவபடுகொலைகளும் சாதரணமாக நடக்கிறது.
அதுவும் பெரியார் மண் என்கிற தமிழ்நாட்டில்
என்பதுதான் கேலிகூத்தாக உள்ளது.
கட்டுரையாளர் தமிழகம் வட மாநிலம் போல மாறி வருகிறது என்பது உண்மையே இது சதவீதத்தில் வேண்டுமானால் கூட குறைய இருக்கலாம் ஆனால் சட்ட நடவடிக்கை சமூக நல்லிணக்க குழுக்கள் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டால் தான் ஒரளவு சாதி வன்கொடுமை ஆணவ படுகொலைகளை சரி செய்ய முடியும்.