ந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசானது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதை நாம் அறிவோம். ஒன்றிய அரசின் கருவூலத்திற்கு தமிழகத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் போதும், தமிழ்நாட்டிற்கான பல்வேறு திட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவே நிதி வருகிறது. 9 – தாவது நிதிக்குழுவில் தமிழ்நாட்டுக்கு 7 % நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது 15 வது நிதிக் குழுவில் (2021-26) வெறும் 4 % மட்டுமே வருகிறது.

இதனால் தமிழ்நாட்டிற்கு 2.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. கல்வி, மொழி வளர்ச்சி, ரயில்வே, வெள்ள நிவாரணம் மற்றும் பல்வேறு மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து நிதியைக் குறைத்து வருகிறது ஒன்றிய அரசு. இதே போலத்தான் விளையாட்டுத் துறைக்கும் மிகக் குறைவாகவே நிதி வழங்குகிறது. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற படாடோப வரிசையில் “கேலோ இந்தியா” என்ற திட்டத்தை 2017 – ல் ஆரவாரமாக அறிமுகப்படுத்தியது ஒன்றிய அரசு.

கேலோ இந்தியா திட்டம் எதற்காக உருவானது?

கேலோ இந்தியா திட்டம் அறிமுகமானபோது “இன்றைய இந்தியாவின் விளையாட்டுத் திறனை உலகளாவிய தளத்தில் வெளிப்படுத்த வேண்டும். இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு உயர்மட்ட உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும் மற்றும் உயர்தர பயிற்சியை வழங்கவும் வேண்டும். இந்தியா ஒரு விளையாட்டு வல்லரசாக மாற வேண்டும் என்ற தனது கனவை இதன் மூலம் நனவாக்க முடியும். இந்தியாவை ஒரு சிறந்த விளையாட்டு நாடாக நிலை நிறுத்த வேண்டும்” என்ற நோக்கில்தான் தொடங்கப்படுவதாக சொல்லப்பட்டது.

நிதி ஒதுக்கீட்டில் கடுமையான பாரபட்சம்!

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 8 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 3,400 கோடியில் தமிழ்நாட்டிற்கு வெறும் 29.5 கோடி தான் கிடைத்துள்ளது. இதே போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம், தெலுங்கானா, கேரளா, பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கும் மிகக் குறைவானத் தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.

மாறாக பிஜேபி ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிராவிற்கு 87.4 கோடியும், மத்திய பிரதேசம் 94. 6 கோடி, ராஜஸ்தான் 107.33, உத்தரப்பிரதேசம் 500 கோடி மற்றும் குஜராத்திற்கு 606 கோடி என்ற பெரும் தொகை அளவிலும் நிதி பாரபட்சமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதை விட குஜராத்திற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பர்காத் சிங், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போன்றோர் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் நிலவுவதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். கேலோ இந்தியா நிதி ஒதுக்கீட்டில் குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 2 மாநிலங்கள் மட்டும் மூன்றில் ஒரு பங்கு நிதியைப் பெற்றுள்ளன.

அதிக நிதி ஒதுக்கி என்ன பயன்?

இவ்வளவு நிதியைப் பெற்றும் 2024 – ல் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்குக்கு குஜராத்தில் இருந்து 3 பேரும், உ.பி யில் இருந்து 7 பேரும்தான் அனுப்பப்பட்டனர். ஆனால் ஹரியானாவிலிருந்து 24 பேர் அனுப்பப்பட்டு, மூன்று தனி நபர் பதக்கங்களை வென்றனர். பஞ்சாபில் இருந்து அனுப்பப்பட்ட 19 பேரில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் பலர் இடம் பெற்றிருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து 13 வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

படிக்க: இந்தியா: ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் தோல்விகளில் இருந்து மீள்வது எப்படி?

விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பது நமது அனைவரின் விருப்பம். ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் மிகச் சிறிய நாடுகள் எல்லாம் பதக்கங்களை வெல்லும் (அள்ளும்) போது 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஓரிரு பதக்கங்களை மட்டுமே பெறும் அவல நிலையே தொடர்கிறது.

விளையாட்டுத் துறையிலும் விளையாடும் மோடி அரசு!

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறப்பாகவும், கூடுதல் திறனுடன் தமிழ்நாட்டு வீரர்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் கண்டு கொள்ளாமல் இருப்பதைப் போலவே விளையாட்டுத் துறையிலும் வேண்டுமென்றே புறக்கணிக்கிறது. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாத போதும், வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழ்நாடு அதிக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது.

ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் (MYAS) மூத்த அதிகாரி ஒருவர், “மாநில அரசுகள் அனுப்பும் திட்டங்கள் குறித்து மதிப்பீடு செய்த பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்கிறார். மற்றொரு அதிகாரி, “தற்போதுள்ள விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டுக்களை மேம்படுத்துவதற்கான மாநிலத்தின் அர்ப்பணிப்பு ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. தவிர இதில் அரசியல் சார்பு இல்லை” என்கிறார்.

ஆனால் இவர்கள் கூறுவது உண்மை அல்ல என்பது நடைமுறையை பரிசீலித்தால் எளிதில் விளங்கிவிடும். மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்பிய திமுக எம்.பி வில்சன், “பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த திட்டத்தின் கீழ் நிதியில் பெரும் பங்கைப் பெறுகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சொற்பத் தொகையே வழங்கப்படுகிறது” என சுட்டிக் காட்டினார். மேலும் தமிழ்நாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன விளையாட்டு அரங்கங்களை கட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசிடமிருந்து உரிய நிதி கிடைப்பதில்லை என்றார்.

படிக்க: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இந்தியா சாதிக்குமா?

2024-25 ஆம் ஆண்டு விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்ட நிதியாக 120 கோடி ஒதுக்க தமிழ்நாடு கோரியது. இதற்கான விரிவான அறிக்கையை MYAS – க்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட திட்டங்களில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் செயற்கை தடகளப்பாதை, பல்நோக்கு உட்புற அரங்கம், நீச்சல் குளம் மற்றும் செயற்கை ஹாக்கி புல்வெளி ஆகியவை அமைப்பதற்காக நிதி கோரி இருந்தோம். அதுவும் இதுவரை வந்தபாடில்லை.

தமிழ்நாட்டில் உள்ள உயர்மட்ட விளையாட்டு அரங்குகளில் கூட முக்கியமான வசதிகள் இல்லை. தமிழ்நாடு ஒரு நிரூபிக்கப்பட்ட திறமைகளின் மையமாக விளங்குகிறது. குறிப்பாக விரைவு ஓட்டம் மற்றும் தாண்டுதல்களில் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக வீரர்களை உருவாக்கி வருகிறது. இருப்பினும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதி இல்லாதது அவர்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

இவர்களின் நோக்கம் பதக்கம் வெல்வதா அல்லது தேர்தல் வெற்றியா?

இந்திய தடகள அணியின் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த், “தமிழகத்தின் முதன்மையான விளையாட்டு அரங்குகளில் ஒன்றான நேரு ஸ்டேடியத்தில் தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கான பிரத்தியேக பயிற்சி அறைகள் இல்லை. ஏற்கனவே நெரிசலாக உள்ள அறைகளையே பயன்படுத்த வேண்டி உள்ளது. பல தனியார் ஜிம்கள் வைத்திருக்கும் நவீன உபகரணங்கள் எதுவுமே இங்கு இல்லை” என்கிறார்.

இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட தொழில் முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் மாஸ்டர்கள் பயிற்சிக்கு வருகின்றனர். உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இல்லாததால் பலர் வெளிநாடுகளில் பயிற்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்காக பெரும் தொகையை செலவு செய்ய வேண்டி உள்ளது. தமிழ்நாட்டின் விளையாட்டு மையங்களில் நிதிப் பற்றாக்குறை இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

மாநிலத்தில் உள்ள கேலோ இந்தியா மையங்களில் உள்ள பயிற்சியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் பலர் வேலையை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கேலோ இந்தியா உண்மையில் விளையாட்டு வீரர்களை வலுவாக உருவாக்கும் முயற்சியில்தான் துவங்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

திறமைசாலிகளை உருவாக்கும் உத்வேகத்துடன் செயல்படும் மாநிலங்களுக்கு ஏன் உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை? நிபுணர் குழுவின் பரிந்துரைப்படிதான் நிதி ஒதுக்கீடு நடைபெறுவதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நோக்கில் நிபுணர் குழு உள்ளதா அல்லது தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஒன்றிய பாஜக அரசாங்கமானது அனைத்து துறைகளையும், அனைத்துத் திட்டங்களையும் தமது அரசியல் ஆதாயத்திற்காக மோசடியாக பயன்படுத்துகிறது. இந்த பாசிச கும்பலை ஆட்சியிலிருந்து அகற்றினால்தான் நடக்கின்ற அனைத்து அநியாயங்களுக்கும் முடிவு கட்ட முடியும். அதற்கான பணிகளைத் தீவிரமாக முன்னெடுப்போம்.

  • குரு

2 COMMENTS

  1. விளையாட்டுத் துறை உட்பட எதையும் விட்டு வைக்கவில்லை பாஜக காவி கும்பல். அனைத்திலும் ஓரவஞ்சனை தான். தமிழ்நாடு என்றாலே வேப்பெண்ணையை குடிப்பது போல் குமட்டுகிறது சங்பரிவார் பார்ப்பன இந்துத்துவ கும்பலுக்கு. அதனால் தான் கல்வி நிதி; பேரிடர் ஒதுக்கீடு நிதி உட்பட அனைத்திலும் தமிழ்நாட்டை ஓரம் கட்டுகிறது ஒன்றிய மோடி அரசு. விளையாட்டிலும் கூட பல்வேறு மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு ஓரளவு சிறந்து விளங்கினாலும், (சமஸ்கிருதத்திற்கும் – தமிழுக்கும் ஒதுக்கும் மலைக்கும் – மடுவுக்குமான வேறுபாடு போல்) பிற மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுப்பதும், தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுப்பதுமான நடைமுறையையே தொடர்ச்சியாக கையாண்டு வருகிறது ஒன்றிய அரசு. அந்த அடிப்படையில் கட்டுரையாளர் தோழர் குரு மோடி அரசின் முகத்திரையை கிழிப்பதோடு பாதிக்கப்படும் நம் போன்ற மாநிலங்கள் தம் உரிமைக்காக முனைந்து போராட வேண்டும் என்ற
    உணர்வினை ஏற்படுத்தி உள்ளார். வாழ்த்துக்கள்!

  2. இந்திய விளையாட்டு துறையில் மோடி அரசின் ஓரவஞ்சனை அப்பட்டமாக தனது தேர்தல் சுயநலத்திற்காக விளையாட்டுத்துரையின் நிதிகளை பயன்படுத்துகிறது பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிகமாக விளையாட்டு நிதி ஒதுக்குவதும் தனக்கு வேண்டாத தமிழகம் போன்ற பிற மாநிலங்களுக்கு இரண்டாம் பட்சமாகவும் பார்க்கப்படுவது இந்திய ஒற்றுமைக்கு இறையாண்மைக்கு எதிரானது செயல் பிஜேபி அரசை அனைத்து துறை சார்ந்த வல்லுநர்கள் விளையாட்டு வீரர்கள் ஓர் அணியில் திரண்டு பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் நாடு முழுக்க விளையாட்டுக்கான சமமான நிதி பகிர்வை ஒதுக்கிடை ஜனநாயக கூட்டரசு முகமே சாத்தியம் என்பதை நிரூபிப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here